Published:Updated:

``அப்பா திரும்பவும் உயிர்த்தெழுவார்!" - கலங்கும் குமரிமுத்து மகள்

``அப்பா திரும்பவும் உயிர்த்தெழுவார்!" -  கலங்கும் குமரிமுத்து மகள்
``அப்பா திரும்பவும் உயிர்த்தெழுவார்!" - கலங்கும் குமரிமுத்து மகள்

இந்த அம்மா தினம் ஒருதடவையாவது வந்து தன்னோட மகளைப் பாத்துட்டுப் போயிடும். கடவுள் இந்த அம்மாவோட குழந்தைய மட்டுமாவது விழித்தெழ வச்சா நல்லாருக்கும்னுகூட சிலநேரம் தோணும்...

டைந்துபோன ஒற்றைச் சிலுவையை தாங்கிக் கொண்டிருக்கும் எளிமையான கல்லறைகளும் பளிங்குக் கற்களால் ஆன அலங்காரக் கல்லறைகளுமாக நிறைந்திருக்கிறது சென்னை, மயிலாப்பூரில் உள்ள செயின்ட் மேரிஸ் மாநகராட்சிக் கல்லறைத் தோட்டம். ஆங்காங்கே ஜெபக் குரல்கள் ஒலிக்கின்றன. சிலர் கல்லறைகளைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர், மலர்தூவி மெழுகுவத்தி ஏற்றி தங்கள் உறவின் நினைவுகளை மீட்டெடுக்கிறார்கள். இன்று சகல ஆன்மாக்கள் தினம் (all souls day).

கல்லறைத் தோட்டத்தின் இறுதிப்பகுதியில் வித்தியாசமாக இருக்கிற அந்தக் கல்லறை நம் கவனத்தை ஈர்க்கிறது. பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட அந்தக் கல்லறையின் மேலே வரையப்பட்டிருக்கிற முகம் நமக்கு மிகவும் பரிட்சயமாக இருக்கிறது. நடிகர் குமரிமுத்து!

தன்  ‘டிரேட் மார்க்’ சிரிப்புடன் ஓவியமாக அந்தக் கல்லறையில் உறைந்திருக்கிறார். 'கலைமாமணி, கலைச்செல்வம், கலைவாணர் , சுவிசேஷகர் குமரிமுத்து' என்று நிறைவுற்றிருக்கிறது பெயர்ப்பலகை. 

கல்லறைக்கு எதிரில் குமரிமுத்துவின் மனைவி புண்ணியவதியும் மகள் கவிதாவும் கண்ணீருடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். கவிதா கலக்கமான குரலில் பேசுகிறார். 

``எங்களுக்குப் பூர்வீகம் நாகர்கோவில். 16 வயசுலயே அப்பா நடிக்கச் சென்னைக்கு வந்துட்டாரு. இங்கே எம்.ஆர்.ராதாவோட நாடக கம்பெனில சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சாரு. கொஞ்ச வருஷத்துல அவரு சொந்தமா 'குமரி ஸ்டேஜ்'னு ஒரு நாடகக் கம்பெனி ஆரம்பிச்சார். அதுக்கு அப்புறம்தான் அவருக்கு சினிமாவுல வாய்ப்பு கிடைச்சுது. அப்பா நடிச்ச முதல் படம் 1968-ம் வருஷம் வந்த `பொய் சொல்லாதே’. அதுக்கு அப்புறமா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு பல மொழிகள்ல 900-க்கும் அதிகமான படங்கள்ல நடிச்சிருக்காரு. 

அவர் கடைசியா நடிச்ச படம் வில்லு. படத்துல நடிக்கிற நேரம் போக மீதி நேரங்கள்ல பிரசங்கம் செய்வாரு. இதனால அவருக்கு கடுமையா எதிர்ப்பு வந்துச்சி. 'சினிமாவுல நடிச்சிக்கிட்டே பிரசங்கம் பண்றான் பாரு'னு நிறையபேர் பேச ஆரம்பிச்சாங்க. அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுளுக்கு சேவை செய்யணும்கிறதுக்காக ஒரு கட்டத்துல சினிமாவுல நடிக்கறதையே விட்டுட்டாரு. முழு நேரம் கடவுளுக்கு சேவை செய்யத் தொடங்குனாரு. காலைல நாலு மணிக்கு உக்காந்து பைபிள் படிக்க ஆரம்பிச்சிருவார். கடவுள் நம்பிக்கைக்கு அப்புறமா அப்பா நம்புனது கல்வியைத்தான். அதனால எந்தக் குழந்தைக்காவது படிக்க வசதி இல்லைன்னா, உடனே பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டுடுவாரு. அவரால படிச்சவங்க நெறைய பேர் இருக்காங்க. ஒரு கை கொடுக்கறத இன்னொரு கைக்குத் தெரியாமப் பாத்துக்கிட்டாரு எங்கப்பா. அவரு உயிரோட இருந்தவரை அவர் செஞ்ச நல்ல காரியங்கள் எங்களுக்குத் தெரியாது. இறந்ததுக்கு அப்புறம்தான் நாங்களே அவரைப்பத்தி தெரிஞ்சிக்கிட்டோம். ரோட்டுல பிச்சைக்காரங்களைக்கூட ‘தர்மவான்கள்’னுதான் அப்பா கூப்புடுவாரு. அந்த அளவுக்கு அவர் தர்மத்தையும், கடவுளையும் நம்புனாரு. இறந்துபோனவங்க திரும்பவும் உயிர்த்தெழுவாங்கன்னு பைபிள்ல சொல்லியிருக்கு. அந்த மாதிரி அப்பா திரும்பவும் உயிர்த்தெழுந்து எங்கக்கிட்ட வந்துடமாட்டாரான்னு எங்க மனசு ஏங்குது" கவிதா கண் கலங்கி அழத்தொடங்குகிறார். 

கல்லறையிலிருந்து நாம் நகரும்போது மேரி என்ற வயதான பெண் மண்ணாலான கல்லறையைப் பார்த்தபடி அழுதுகொண்டிருக்கிறார். அவரது கதையை அருகே நின்றவர் நம்மிடம் சொன்னார்.

``இவங்களுக்கு வயித்துல குழந்தை முழுசா வளர்ச்சி அடையுறதுக்கு முன்னாடியே பிறந்திருச்சு.குழந்தையக் காப்பாத்த என்னென்னவோ முயற்சி செஞ்சாங்க அந்த அம்மா. ஆனா, அவங்களால முடியல. கடைசியில இறந்துபோயிடுச்சி. அதுக்கு அப்புறம் அவங்களுக்கு கடவுள் குழந்த பாக்கியத்தைக் கொடுக்கல. இறந்த குழந்தை திரும்பவும் உயிர்த்தெழுந்து வரும்னு நம்பிக்கிட்டு இருக்காங்க. எல்லாரும் வருசத்துல ஒருநாள் வந்து கல்லறையை சுத்தம் செஞ்சு வழிபடுவாங்க. ஆனா, இந்த அம்மா தினம் ஒருதடவையாவது வந்து தன்னோட மகளைப் பாத்துட்டுப் போயிடும். கடவுள் இந்த அம்மாவோட குழந்தைய மட்டுமாவது விழித்தெழ வச்சா நல்லாருக்கும்னுகூட சிலநேரம் தோணும்” என்று அவர் கூறியபோது அவரது கண்களில் நீர் நிறைந்திருந்தது. 

கிறிஸ்தவத்தில் ஒரு நம்பிக்கை உண்டு. ஆன்மாவானது உடலை விட்டுப் பிரிந்த பிறகு சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடைப்பட்ட இடமாகச் சொல்லப்படும் உத்தரிக்க ஸ்தலத்தில் துயரப்பட்டுக் கொண்டிருக்குமாம். அவர்கள் அந்த உத்தரிக்க ஸ்தலத்தில் துயரப்படாமல் சொர்க்கத்தைச் சென்றடைய கர்த்தரின் அருள் பெறவே, கல்லறைத் திருநாளன்று இறந்தவர்களுக்காக ஜெபம் செய்து, மெழுகுவத்தி ஏற்றிவைத்து வழிபடுகிறார்கள். இவர்கள் ஏற்றும் மெழுகுவத்தி வெளிச்சம் உத்தரிக்க ஸ்தலத்தில் அவர்களுக்கு வழிகாட்டும் என்று நம்புகிறார்கள். 

மரணம் பற்றியும், மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றியும் அறியும் ஆவல் மனிதக் குலத்துக்கு எப்போதுமே உண்டு. மனிதன் புவியில் வாழும் வாழ்க்கையையும், அவனது மேலுலக வாழ்க்கையையும் தொடர்புப்படுத்துவது மரணம் ஒன்று மட்டுமே. அதனால்தான் அது எப்போதும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. மனிதன் வாழும்போது அறத்துக்கும் கடவுளுக்கும் அஞ்சி வாழ்கிறானோ இல்லையோ... ஆனால், மரணத்துக்குப் பிறகான வாழ்க்கையை நினைத்து நிச்சயம் கவலைப்படுகிறான். மரணத்துக்குப் பிறகு மேல் உலகத்தில் கிடைக்கும் தண்டனையைப் பற்றிக் கலங்காமல் வாழும்போதே அறத்தையும், தர்மத்தையும் செய்துவிட்டு மண்ணுலகை விட்டு மீள்வோம்..!

அடுத்த கட்டுரைக்கு