Published:Updated:

காணாமல் போன சிலைகள் - பொன். மாணிக்கவேலிடம் சிக்கிய கோயில் நிர்வாகிகள்

காணாமல் போன சிலைகள் - பொன். மாணிக்கவேலிடம் சிக்கிய கோயில் நிர்வாகிகள்
காணாமல் போன சிலைகள் - பொன். மாணிக்கவேலிடம் சிக்கிய கோயில் நிர்வாகிகள்

திருச்சி மாவட்டத்தில் பல்லவர் கால பழைமை வாய்ந்த  திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில் சிலைகளைத் காணவில்லை என நாடகமாடிய கோயில் நிர்வாகிகளை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் பொறி வைத்துப் பிடித்திருப்பது, திருச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

திருச்சி மாநகருக்கு வடமேற்கில் சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் கரூர்-திருச்சி சாலையில் முக்கொம்பு அருகில்  உள்ளது திருப்பாராய்த்துறை. இங்குத் திருஞானசம்பந்தர், அப்பரடிகள், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயக் குரவர்களாலும், அருணகிரிநாதராலும் பாடல் பெற்ற கோயில் திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பாள் உடனுறை தாருகாவனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுமார் 1,600 வருடங்கள் பழைமையான கோயில் என்றும் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. மேலும் இங்குள்ள தலவிருட்சமான பராய் மரம். மருத்துவ குணமுடையது, கேன்சர் எனப்படும் புற்றுநோய் வந்தால், உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை குறையும் என்பார்கள். ஆனால், இந்த பராய் மரம், உடலின் செல்களைப் பெருக்கும் ஆற்றல் உடையது என்று நம்பப்படுகிறது. அதனால் இங்கு வந்து தரிசனம் செய்துவிட்டுப் போனால், புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக நம்பிக்கை நிலவுகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ள இந்தக் கோயிலில், கானாடுகாத்தான் நாகப்ப செட்டியார் என்பவர், கடந்த 1904 -ம் ஆண்டு, சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் கோயிலை புதுப்பித்துக் கொடுத்ததுடன், 31 ஐம்பொன் சிலைகளும் செய்து வைத்தார். அப்போது இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

இந்த நிலையில், இந்தக் கோயிலில் இருந்த சுமார் 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான அங்காளம்மன், சண்டிகேஸ்வரர், போகசக்தி அம்மன் ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளை கடந்த 2017-ம் ஆண்டு முதல் காணவில்லை என கோயில் அர்ச்சகர் கூறியதாக கூறப்படுகிறது. அதையடுத்து அப்போது நடந்த கோயில் தேரோட்டத் திருவிழாவுக்காக பக்தர்கள் சிலர் வேறு ஒரு சண்டிகேஸ்வரர் சிலையை வைத்து திருவிழாவை முடித்தனர். 

அதையடுத்து காணாமல் போன சண்டிகேஸ்வரர் சிலை குறித்து, கோயில் செயல் அலுவலர், அனந்தகுமார் ராவ், ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனாலும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து,  இந்தப் புகார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலிடம் அளிக்கப்பட்டது.

அதன் பிறகே, திருச்சி ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் திருப்பராய்த்துறைக்கு நேரில் வந்து  கோயிலில் ஆய்வு செய்தனர். அதேபோல், கடந்த ஜூன் மாதமும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கோயிலுக்குள் இருந்த மேலும் 2 சிலைகள் காணாமல் போனது தெரியவந்தது. போலீஸாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, இந்தச் சிலை விவகாரத்தில்  அதே ஊரைச் சேர்ந்த பரம்பரைக் கணக்காளராக பணிபுரிந்து வரும் சுந்தரம் அய்யங்காரின் மகன் கண்ணன், அறநிலையத் துறை சார்பில், பூக்கட்டி கொடுக்கும் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த திருப்பராய்த்துறை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ராமநாதன்,  கோயில் செயல் அலுவலரும், அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகனுமான அனந்தகுமார் ராவ் உள்ளிட்டோர்  நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் வந்தது.

விசாரணை முடிவில், ராமநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ராமநாதன் கைது செய்யப்பட்டு கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அய்யப்பன்பிள்ளை  முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். ராமநாதனை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்தச் சிலைகள் கொள்ளை வழக்கில், மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறிவரும் நிலையில், கோயில் செயல் அலுவலரும், அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகனுமான அனந்தகுமார்ராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு செய்துள்ளதாகவும், ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவர் கடுமையான  புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிலைக் கடத்தல் விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

சிலைக் கடத்தல் வழக்கில் சிலையை காணவில்லை எனப் புகார் கொடுத்தவர்களே, பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் வலையில் சிக்கியிருப்பது திருச்சி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பல கோயில்களில் சிலைகள் காணவில்லை என்றும், அந்தச் சிலைகள் குறித்தும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் கண்டுபிடித்து தரவேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.