Published:Updated:

`கிராண்ட் மாஸ்டர் ஆகணும்!' - ஆசிய பாரா செஸ் சாம்பியன் ஜெனிதா

`கிராண்ட் மாஸ்டர் ஆகணும்!' - ஆசிய பாரா செஸ் சாம்பியன் ஜெனிதா
`கிராண்ட் மாஸ்டர் ஆகணும்!' - ஆசிய பாரா செஸ் சாம்பியன் ஜெனிதா

``மூன்று வயதில் வேறு மருத்துவமனைக்கு மாற்ற முயன்றபோது, `மாற்றினால் உங்கள் மகள் இறந்துவிடுவாள்' என்றார் மருத்துவர். நாங்கள் மொத்தமாக இடிந்துபோயிருந்த காலம் அது. ஆனால், இன்று எங்களின் அடையாளம், மகிழ்ச்சி எல்லாமே எங்கள் மகள்தான்'' என்றபடி நெகிழ்ச்சியோடு வரவேற்றார் சமீபத்தில் நடந்த ஆசிய பாரா செஸ் போட்டியில் தங்கம் வென்ற ஜெனிதாவின் தந்தை.

உடலிலும் மனதிலும் வலிமை இருந்தால் மட்டுமே விளையாட்டுத் துறையில் சாதிக்க முடியும். அதிலும் பெண்ணாக, அவர் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தால் பற்பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். மூன்று வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட போதிலும், முடங்கிவிடாமல் சாதனைகளை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினார் `இன்டர்நேஷனல் செஸ் மாஸ்டர்' ஜெனிதா. தன்னம்பிக்கையும் உழைப்பும் நிறைந்த அந்தப் பயணத்தில், தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாகச் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் செஸ் போட்டியில் `சாம்பியன்' பட்டம், சமீபத்தில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் எனப் பதக்க வேட்டை நடத்தியுள்ளார்  ஜெனிதா. 

திருச்சி பொன்மலைப்பட்டியில் வசித்துவரும் அவரைச் சந்தித்தேன்.

``விளையாட்டுத் துறை மீது ஆர்வம் வந்தது  எப்படி?"

``என் தந்தை ஓர் ஆசிரியர். அவர், விளையாட்டுத் துறையில் மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு சாதித்தார்கள் என்பதை விளக்கும் `வில் ஆஃப் ஸ்டீல்' என்ற பாடத்தை தன் மாணவர்களுக்கு நடத்திக்கொண்டிருந்தார். அவரின் பாட விளக்கம் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்தது. அதன் அடிப்படையில் எனக்குப் பிடித்த செஸ் விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். முதன்முதலாகத் திருச்சி கேம்பியன் பள்ளியில் நடைபெற்ற போட்டியில், முதல் பரிசு பெற்றேன். கடுமையான பயிற்சிக்குப் பிறகு, மாவட்ட - மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றேன். அந்தப் பயணம், தற்போது பாரா போட்டி வரை வந்துள்ளது. பயணம் தொடரும்."

``பள்ளி , கல்வி  வாழ்க்கை பற்றி..?"

``மாற்றுத்திறனாளியாக இருப்பதால் பள்ளி வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தேன். பல பள்ளிகள் மாறும் சூழல் ஏற்பட்டது. மாடி வகுப்பறைகளுக்குச் செல்வது கடினம். கழிவறைக்குச் செல்வதில் சிக்கல். அனைத்து செயல்களுக்கும் ஒரு துணை தேவையாக இருந்தது. சில பள்ளிகள் உதவின. பல அலட்சியப்படுத்தின. இதுபோன்ற சிக்கல்களால் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்தே கல்வி கற்றேன். தற்போது நான் ஒரு பி.காம் பட்டதாரி."

``மாற்றுத்திறனாளியாக விளையாட்டுத் துறையில் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், போராட்டங்கள்?"

``நிறைய. அவற்றையெல்லாம் தாண்டித்தான் வரணும். இந்தியாவைப் பொறுத்தவரை, போட்டி நடைபெறும் இடங்களில் சாய்தள மேடை (ட்ராம்ப்) வசதி பெரும்பாலான இடங்களில் இருப்பதில்லை. சென்னை, டெல்லி உள்ளிட்ட வளர்ந்த நகரங்களில்கூட அவை இல்லை. பெரும்பாலான போட்டிகள் மாடித் தளங்களில் நடைபெறுவதால் என்னைத் தூக்கிச் செல்லவேண்டியதாக உள்ளது. இது மிக முக்கியமான சிக்கல். இதனாலேயே பெரும்பாலானோர் போட்டிகளுக்கு வருவதில்லை. அதுமட்டுமின்றி சக்கர நாற்காலிகள் செல்லும் அளவுக்குக் கழிவறைகள் அமைக்கப்படுவதில்லை.

போக்குவரத்து அடுத்த பிரச்னை. ரயில் நிலையங்களில் நடைமேடை வசதி சில இடங்களில் இல்லை. பல நேரங்களில் நான் மட்டும் சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில்கூட பாரா போட்டிகளுக்கு 40 வீரர்கள் சென்றோம். ஆனால், விமானநிலையத்தில் இரண்டு சக்கர நாற்காலிகள் மட்டுமே இருந்தன. இதுபோன்ற பிரச்னைகள் வெளிநாடுகளில் அவ்வளவாக இல்லை. சாய்தள மேடையை எல்லா இடங்களிலும் அமைத்துள்ளனர். எங்கு வேண்டுமானாலும் எளிதில் சென்று வரலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை ஏற்படுத்தித் தருவதில், இந்தியா இன்னும் மேம்பட வேண்டும்."

``அரசிடமிருந்து உதவிகள் கிடைக்கின்றனவா?"

``ஆரம்பக்காலத்தில் தந்தைதான் செலவு செய்துகொண்டிருந்தார். இந்திய, சர்வதேச அளவிலான போட்டிகளுக்குச் செல்லும்போது பலமுறை கடன் வாங்கிச் சென்று கலந்துகொள்ளவேண்டிய சூழல் இருந்தது. சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற பிறகு, 2015-ம் ஆண்டு முதல் அரசிடமிருந்து தொடர்ந்து உதவிக் கிடைத்துவருகிறது."

``கிராமப்புற விளையாட்டு வீரர்களுக்கு உள்ள சிக்கல்கள் என்னென்ன?"

``நகர்ப்புறத்தில் வசிப்போருக்கு அனைத்துவிதமான உதவிகளும் எளிதில் கிடைத்துவிடுகின்றன. சதுரங்கத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன்...  சென்னை போன்ற பெருநகரத்தில் வாழ்வோருக்குப் பயிற்சியாளர்கள், போட்டிகளைப் பற்றிய தகவல் என மிக எளிதில் கிடைத்துவிடுகின்றன. ஆனால், கிராமப்புற வீரர்களுக்கு அப்படியல்ல. ஒரு மாற்றுத்திறனாளியாக நகரத்தில் உள்ள பயிற்சியாளர்களிடம் சென்று பயிற்சி பெறுதல் என்பது, அவ்வளவு சுலபமல்ல. இணைய வசதி மூலம் பயிற்சி மேற்கொள்ளலாம். எனினும், அதற்கான கட்டணங்கள் அதிகளவில் உள்ளன. சிற்றூர்களின் தெருக்களை நோக்கி வாருங்கள், அதிகமான திறமைசாலிகள் கிடைப்பார்கள். வீரர்களைத் தேடவேண்டியது, கிராமங்களில்தான்."

``உங்களுடைய லட்சியம்?"

``கிராண்ட் மாஸ்டர்."

``ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி அனுபவம் பற்றி..."

``ஒலிம்பிக், ஆசிய போட்டிகளில் எல்லாம் செஸ் இல்லை. இப்போதுதான் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால், பாரா போட்டிகள் எங்களுக்கும், இனிவரும் செஸ் விளையாட்டு வீரர்களுக்கும் நல்ல வாய்ப்பு. தங்கப்பதக்கம் ஜெயிக்க வேண்டும் என்பது ஆசை. இரண்டு தங்கம் எதிர்பார்த்தேன். ஒன்றுதான் ஜெயிக்க முடிந்தது. ஒன்று வெள்ளிப்பதக்கம் ஆகிவிட்டது. ஆனாலும், 4 பதக்கங்கள் வென்றது மிகுந்த மகிழ்ச்சியே."

``மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் சார்பாக அரசிடம் வைக்கும் பரிந்துரைகள் என்னென்ன?"

``சாய்தள வசதி அடிப்படையான ஒன்று. அதைப் போட்டிகள் நடக்கும் அனைத்து இடங்களிலும் அமைக்க வேண்டும். இதனாலேயே பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் விளையாட வருவதில்லை. தற்போது விளையாட்டுப் போட்டிகள் அதிகளவில் நடக்கின்றன. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் வருடத்துக்கு ஒன்றிரண்டுதான் நடைபெறுகின்றன. அதை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் ஊக்கம்பெறவும், எங்களை மேம்படுத்திக்கொள்ளவும் முடியும். அதேசமயம், பொருளாதார வசதியை ஏற்படுத்தித் தரவேண்டியதும் அவசியம். திறமையான பல வீரர்கள், வறுமை காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். கிராமப்புற வீரர்களுக்குத் தேவையான உதவிகளையும் அவர்களுக்கான வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்."

``உங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?" 

``நிச்சயம் உங்கள் எல்லோருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதை இந்த உலகுக்குத் தெரியப்படுத்துங்கள். முதலில் ஊக்கத்தோடு வெளியே வாருங்கள். `மற்றவர்களுக்கு ஏன் கஷ்டம் தரணும்' என்ற எண்ணத்தைக் கைவிட்டு, பிடித்தத் துறையில் முன்னேற உழையுங்கள். உங்கள் உழைப்பும் முயற்சியும் நிச்சயம் வெற்றியைத் தரும். களம், உங்களுக்காகக் காத்திருக்கிறது.

ஆசியப் போட்டிகளில் 500 வீரர்களுக்குமேல் கலந்துகொண்டு 64 பதக்கங்கள்தான் வென்றனர். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா போட்டிகளில் 198 வீரர்கள் கலந்துகொண்டு 72 பதக்கங்கள் வென்றனர். இது ஒரு நல்ல முன்னேற்றம். நம் அரசு இன்னும் பல மேம்பாட்டு முயற்சிகளைக் கவனமுடன் மேற்கொண்டால், இந்த வெற்றி இன்னும் அதிகரிக்கும்" என்றார் ஜெனிதா.

வீட்டில் தவழ்ந்தபடி வலம்வந்தாலும், ஜெனிதாவின் புகழ் இந்தியாவெங்கும் உயர்ந்து பறந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தின் தங்க மங்கைக்கு வாழ்த்துகள்.