Published:Updated:

`எம்.ஜே அக்பரால் வல்லுறவுக்கு ஆளானேன்!’ - பெண் பத்திரிகையாளரின் கடிதம்

"எனது பதின்வயது மகளுக்கும், மகனுக்கும் சேர்த்தே இதை எழுதியிருக்கிறேன். யாராவது அவர்களைச் சுரண்ட நினைத்தால், அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதியிருக்கிறேன்."

`எம்.ஜே அக்பரால் வல்லுறவுக்கு ஆளானேன்!’ - பெண் பத்திரிகையாளரின் கடிதம்
`எம்.ஜே அக்பரால் வல்லுறவுக்கு ஆளானேன்!’ - பெண் பத்திரிகையாளரின் கடிதம்

மகளுக்கும் மகனுக்கும் சேர்த்தே உண்மையைச் சொல்கிறேன் - பாஜக அமைச்சர் மீதான பிரபல பெண் பத்திரிகையாளரின் #Metoo கடிதம்

வாஷிங்டனில் இயங்கிவரும் National Public Radio நிறுவனத்தின் தலைவர் பல்லவி கோகாய், எம்.ஜே.அக்பர் குறித்த பாலியல் குற்றச்சாட்டை `வாஷிங்டன் போஸ்ட்'டில் எழுதியிருப்பதன் தமிழாக்கம்.

"நான் அறிந்த எம்.ஜே.அக்பர், `ஏஷியன் ஏஜ்' செய்தித்தாளின் முதன்மை ஆசிரியர்; அறிவுபூர்வமான பத்திரிகையாளர். என்னை இரையாக்குவதற்கு அவரது அந்தப் பதவியையும் பயன்படுத்திக்கொண்டார். இனி நான் பகிரவிருக்கும் சம்பவங்கள், எனது வாழ்வின் துயர நினைவுகள்; 23 வருடமாகச் சொல்ல முடியாமல் தேக்கிவைக்கப்பட்ட நிஜங்கள்.

இரண்டு வாரத்துக்கு முன்பு என் வீட்டில் இருந்தபோது, பல வருடத்துக்கு முன்பு எம்.ஜே.அக்பரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், அவருக்கு எதிரான பாலியல் புகார்களைப் பதிவுசெய்துவருகிறார்கள் என்னும் செய்தியைக் கடக்க நேர்ந்தது. அக்பர், இந்தியாவின் வெளியுறவுத் துறையின் ஜூனியர் அமைச்சராகி இருக்கிறார்; உலகத்தின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுக்கும் உயர் அதிகாரியாக இருக்கிறார். இளம் பெண்களின் உரிமைகளை முன்னேற்றுவதாகக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சியின் உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.

எனக்கு தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. இந்தியாவில் இருக்கும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இருவரை அழைத்தேன். எம்.ஜே.அக்பர் எனக்களித்த வலியையும், மன அழுத்தத்தையும் இருபது வருடத்துக்கு முன்பே என்னை விரும்பும் அந்த இரு நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டேன். அதே சமயத்தில்தான், இந்த விஷயத்தை என் கணவரிடமும் பகிர்ந்துகொண்டேன். 

அப்போது எனக்கு 22 வயது. ஏஷியன் ஏஜில் நான் பணியாற்றச் சென்றிருந்தபோது, என்னைப்போன்றே பலரும் அங்குப் பெண்கள்தான். அவர்கள் அப்போதுதான் தங்களின் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தார்கள். பத்திரிகைத் துறையின் அடிப்படைகூட அப்போது எங்களுக்குத் தெரியாது. டெல்லியில் அக்பர் தலைமையின்கீழ் பணிபுரிவது எங்களுக்குப் பெருமையாக இருந்தது. இரு முக்கிய அரசியல் புத்தகங்கள் எழுதியவரும், முதன்மைப் பத்திரிகை ஆசிரியருமாக அவர் அப்போது மிகப் பிரபலம். பத்து வருடத்துக்குள் `சண்டே' செய்தித்தாளையும், `டெலிகிராஃப் டெய்லி' தினசரியையும் வெற்றிகரமாக உருவாக்கியிருந்தார். சர்வதேச இதழான `ஏஷியன் ஏஜ்'ஜை அப்போதுதான் அவர் தொடங்கியிருந்தார்.

40-களில் இருந்த அக்பர், அவருடைய மிகக் கூர்மையான பத்திரிகைத் துறை திறன்களை அவருடன் பணியாற்றுபவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எங்களின் அச்சிட்ட சில பக்கங்களைக் கசக்கிக் குப்பையில் எறிவதும், தன் மாண்ட் பிளாங்க் சிவப்பு மையால் தவறுகளைச் சுழிப்பதும் எங்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும். எங்களில் யாராவது ஒருவரை, அவரது குரலை உயர்த்தித் திட்டாத நாள் இல்லை. அவருடைய தரத்துக்கு மிக அரிதாகத்தான் எங்களால் எழுத முடிந்தது.

அவருடைய மொழிப் பயன்பாட்டையும் வாசகங்களையும் பார்த்து வியந்து, அவரைப்போலவே நானும் எழுதவேண்டும் எனப் பலமுறை நினைத்திருக்கிறேன். அவர் பலமுறை திட்டியபோதும் வாங்கிக்கொண்டேன். 23 வயதில், ஏஷியன் ஏஜ்ஜின் op-ed பக்கத்தின் ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். பெரிய எழுத்தாளர்களுக்கும், ஜஸ்வந்த் சிங், அருண் ஷோரி, நளினி சிங் போன்ற முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் அழைப்புகள் என் மூலமாகத்தான் சென்றன. அந்தச் சிறு வயதில் அது எனக்கு மிகப்பெரிய பொறுப்பாக இருந்தது.

நான் மிகவும் நேசித்த என்னுடைய கனவு வேலைக்கு, மிக விரைவாகவே பெரிய விலை கொடுக்கவேண்டியிருந்தது. என் தோழி துஷிதாவால் இப்போதுகூட அந்தச் சம்பவங்களை நினைவுகூர முடியும். 1994-ம் ஆண்டு கோடைக்காலம் முடிந்திருந்தது. அலுவலகத்தில் அவரது அறைக்குள் நான் நுழைந்தேன். அறைக்கதவு எப்போதும் மூடியபடிதான் இருக்கும். என்னுடைய op-ed பக்கத்தின் தலைப்பு வரிகள் மிகச் சிறப்பாக இருந்ததாக உணர்ந்து பெருமைகொண்ட நேரம் அது. எனது முயற்சியைப் பாராட்டிக்கொண்டிருந்த அவர், சட்டென என்னை முத்தமிடத் தொடங்கினார். குழப்பத்துடன், அவமானத்துடன், நொறுங்கி அலுவலகத்திலிருந்து வெளியேறினேன். அன்று என் முகம் எப்படியிருந்தது என துஷிதாவுக்குத் தெரியும். அவளிடம் மட்டும்தான் அந்த விஷயத்தை நான் பகிர்ந்துகொண்டேன்.

சில மாதம் கழித்து இரண்டாவது சம்பவம் நடந்தது. மும்பையில் நடக்கவிருந்த இதழ் தொடக்கப் பணிக்கு உதவுவதற்கான வேலை எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. லே-அவுட்டுகளைப் பார்ப்பதற்காக தாஜ் ஹோட்டலில் அவரது அறைக்கு என்னை அழைத்திருந்தார். என்னை முத்தமிடுவதற்கு அவர் அருகில் வந்தபோது, அவரைத் தள்ளிவிட்டேன். ஓட முயன்றபோது, என் முகத்தில் நகங்களால் கீறினார். ஓடிவரும்போது கீழே விழுந்து எழுந்து ஓடி... என் தோழியிடம் இதை விவரித்தேன்.

மீண்டும் டெல்லிக்கு வந்தபோது, அவருடன் இணக்கமாக இல்லாமல்போனால் என்னை எனது வேலையிலிருந்து வெளியேற்றப்போவதாகச் சொல்லியிருந்தார். நான் ராஜினாமா செய்யவில்லை.

பல பத்திரிகையாளர்களுக்கு முன்னதாகவே 8 மணிக்கு நான் அலுவலகத்துக்கு வந்துவிடுவேன். மற்ற பத்திரிகையாளர்கள் உள்ளே வரும்போது 11 மணிக்கு என்னுடைய பக்கம் தயாராக இருக்கவேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது. அலுவலகத்திலிருந்து வெளியே சென்று வேலைசெய்வதற்கும், இவரிடமிருந்து தப்பிப்பதற்கும் அதுதான் சரியான வழியாக இருக்கும் என நினைத்திருந்தேன். பாம்பே சம்பவத்துக்குப் பிறகு, டெல்லியிலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி இருந்த ஒரு குக்கிராமத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. இளம் ஜோடியை, கிராம மக்களே சேர்ந்து தூக்கில் தொங்கவிட்டிருந்தார்கள். திருமணம் செய்துகொண்ட இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். ஜெய்ப்பூரில் வேலை முடிவதாக இருந்தது. இந்தச் செய்தியைக் குறித்து விவாதிப்பதற்காக, டெல்லியிலிருந்து மிகவும் தள்ளியிருந்த ஜெய்ப்பூரில் இருக்கும் அவரது விடுதிக்கு வருவதாக அக்பர் சொல்லியிருந்தார். 

அந்த அறையில் எவ்வளவு முயன்றும், தாக்கியும் அவருடைய பலமே அதிகமாக இருந்தது. எனது உடைகளைக் கிழித்து வன்புணர்வுக்குள்ளாக்கினார். போலீஸில் புகார் அளிப்பதற்குப் பதிலாக அவமானத்தை எனக்குள் மேலும் மேலும் நிரப்பிக்கொண்டிருந்தேன். யாரிடமும் இதைப் பற்றி நான் பேசவில்லை. யாராவது என்னை நம்புவார்களா? நான் எதற்காக அந்த அறைக்குச் சென்றேன் என, என்னைத்தான் நான் நொந்துகொண்டேன்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவரது பிடி என்மேல் இறுகிக்கொண்டே போனது. எந்த நம்பிக்கையுமற்று நான் உணர்ந்த வேளையில் அதற்கு மேலும் அவருடன் என்னால் சண்டைபோட முடியவில்லை. மீண்டும் மீண்டும் என்னை மன அழுத்தத்தில் தள்ளிக்கொண்டிருந்தார். சில மாதத்துக்கு பாலியல் ரீதியாகவும், வார்த்தைகள் மூலமாகவும், உணர்வுபூர்வமாகவும் என்னைச் சுரண்டிக்கொண்டிருந்தார். என் வயதையுடைய ஆண் பத்திரிகையாளர்களுடன் நான் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தால், செய்தி அறைக்குள்ளேயே உரத்த குரலில் கத்துவார். மிரட்சியான நாள்கள் அவை. அப்போது ஏன் நான் அவரை எதிர்த்துப் போராடவில்லை? என் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் நான் போராட்டக்காரியாகவே இருந்திருக்கிறேன். எதற்காக அன்றைக்கு அவரது அதிகாரத்துக்காக நான் பயந்து நடுங்கினேன் என இப்போது விவரிக்க முடியவில்லை. என்னைவிட மிகவும் பலம்வாய்ந்தவராக அவர் இருந்த காரணத்தாலா? நடந்திருக்கவே கூடாத அந்த நிலையை நான் கற்பனைகூட செய்துபார்த்திருக்காத காரணத்தாலா? வேலையை இழந்துவிடுவேன் என்னும் காரணத்துக்காகவா? தொலைதூரத்தில் வாழ்ந்த எனது நேர்மையான பெற்றோரிடம் இதைச் சொல்ல பயந்த காரணத்துக்காகவா? தெரியாது. ஒன்று மட்டும் தெரியும். என்னையே நான் வெறுத்துக்கொண்டிருந்தேன்; கொஞ்ச கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருந்தேன்.

வெகுதூரமாகச் சென்று பணிபுரியக்கூடிய செய்திகளாகப் பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருந்தேன். டிசம்பர் 1994-ம் ஆண்டு தேர்தல். செய்திகளைச் சேகரித்துக்கொண்டிருந்தேன். கர்நாடகச் செய்திகளையும் சேகரித்துக்கொண்டிருந்தேன். மாநில அரசியல் கட்சித் தலைவர்கள், பேரணி, கிராம மக்கள் எனப் பலரை நேர்காணல் செய்தேன். அன்றைய அரசியல் நிலவரப்படி எந்தக் கட்சி வெற்றிபெற இருக்கிறது என்பதன் சரியான கணிப்பை வெளியிட்ட ஒரே பத்திரிகையாளர் நான்தான். அதற்குப் பிறகு அமெரிக்காவுக்கோ, லண்டன் அலுவலகத்துக்கோ என்னை அனுப்புவதாகச் சொல்லியிருந்தார் அக்பர். இரண்டு நாடுகளுக்கும் செல்வதற்கான விசா என்னிடம் இருந்தன. அன்றோடு இந்தக் கொடுமை முடிவுக்கு வரப்போகிறது என நினைத்தேன். ஆனால், எந்த அலுவலகத்துக்குச் சென்றாலும், அங்கு வரும்போதெல்லாம் என்னைப் பயன்படுத்திக்கொள்வதில் அவர் குறியாக இருந்தார்.

லண்டன் அலுவலகத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது கோப நடவடிக்கைகளை நினைத்துப்பார்க்கிறேன். என்னுடன் பணிபுரிந்த மற்றவர்கள் அங்கிருந்து சென்றதும், மேசை மீது இருந்த கத்தரி முதல் கையில் கிடைத்த எல்லாவற்றையும் வைத்து என்னை அடித்துத் துன்புறுத்தினார். அலுவலகத்திலிருந்து தப்பித்து ஹைட் பார்க்கில் ஒரு மணி நேரம் மறைந்திருந்தேன். அடுத்த நாள் என் தோழி துஷிதாவிடம் இதைச் சொல்லியிருந்தேன். என் அம்மாவிடமும் சகோதரியிடமும் சில விஷயங்களைப் பகிர்ந்தேன். என்னை வீட்டுக்குத் திரும்பச் சொல்லிவிட்டார்கள்.

உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக துண்டு துண்டானேன். லண்டனிலிருந்து நான் வெளியேற வேண்டும் என எனக்குத் தெரிந்துவிட்டது. துஷிதாவைத் தவிர, இவை அனைத்தும் தெரிந்த மற்றொரு தோழி சுபர்ணா. அவர்களிடம், இந்தத் துயரங்களிலிருந்து ஓடிவிடப்போவதாகச் சொல்லியிருந்தேன். அமெரிக்காவுக்கு வெளிநாட்டின் செய்திப் பிரதிநிதியாகப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அங்கு, அதே நிறுவனத்தைச் சேர்ந்த என்னைவிட மூத்த ஆசிரியர்கள் இருவர் இருந்தனர். ஆனால், அக்பர் என்னை மீண்டும் பாம்பே அலுவலகத்துக்குப் போகுமாறு உத்தரவிட்டிருந்தார். 

அந்த முறை நான் வெளியேறிவிட்டேன். ஒரு நல்ல விஷயத்துக்காக...

நியூயார்க்கின் `டெளவ் ஜோன்ஸி'ன் இரவுப்பணி செய்தி உதவியாளர் பணி, எனக்குக் கிடைத்தது.

இன்று நான், ஓர் அமெரிக்க குடிமகள்; ஒரு மனைவி; ஒரு தாய். பத்திரிகைத் துறையின் மீதான எனது காதலை, கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வை மீட்டெடுத்தேன். எனது சொந்த உழைப்பும், முயற்சியும், உறுதியும் டெளவ் ஜோன்ஸிலிருந்து, `பிசினஸ் வீக்' பத்திரிகைக்கு இடம் மாற்றியது. பிறகு யு.எஸ்.ஏ டுடே. அதன்பிறகு சி.என்.என். இன்று நான் நேஷனல் பப்ளிக் ரேடியோ நிறுவனத்தின் தலைவர். எந்த வேலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் வன்முறைக்கு ஆளாகத் தேவையில்லை என்பது எனக்கும் தெரியும்.

இத்தனை வருடமாக நான் அக்பரைப் பற்றிப் பேசவில்லை. அக்பர், சட்டத்துக்கு மேல்நிலையில் இருக்கிறார். நீதி அவருக்குப் பொருட்டல்ல என்பதும் தெரியும். அவர் செய்த எந்தக் குற்றத்துக்கும் அவர் எதையும் விலையாகக் கொடுக்கப்போவதில்லை என நினைத்தேன்.

இரண்டு வாரத்துக்கு முன்பு, அக்பர் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் மீதான புகார்களை `அடிப்படையற்றது, மோசமானது' என்று கூறியிருக்கிறார். புகார் அளித்த பத்திரிகையாளர்கள் மீது அவதூறு வழக்கு பதிவுசெய்திருக்கிறார். இன்று இதைப் பேசுவதால், எனக்கு எந்த நன்மையும் விளைந்துவிடப்போவதில்லை. சொல்லவேண்டுமென்றால், என்னை நேசிக்கும் மனிதர்களுக்கு மேலும் இது வலியைத்தான் கொடுக்கப்போகிறது.

அக்பர் போன்ற பெரும்பலம் படைத்தவர்களால் இரையாக்கப்படும் பெண்கள் எப்படி உணர்வார்கள் என்பது தெரிந்ததால்தான், நான் இதை எழுதுகிறேன். உண்மையைப் பேசுவதற்காக வெளியே வந்திருக்கும் அனைவருக்காகவும் இந்த உண்மையைப் பேசியிருக்கிறேன். எனது பதின்வயது மகளுக்கும் மகனுக்கும் சேர்த்தே இதை எழுதியிருக்கிறேன். யாராவது அவர்களைச் சுரண்ட நினைத்தால், அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதியிருக்கிறேன். எனக்கு இந்தச் சம்பவங்கள் நடந்து 23 வருடம் கழித்து, அந்த இருளிலிருந்து எழுந்து வந்திருக்கிறேன். அவர்கள் என்னை வரையறுப்பதற்கு மாறாக, நான் தொடர்ந்து முன்னேறுவேன்."