திருச்செந்தூர் கோயில் அறநிலையத் துறை உதவி ஆணையர் சுப்பிரமணியப் பிள்ளை 1980-ம் ஆண்டு கோயில் வளாகத்திலேயே ஆளும் அ.தி.மு.க அறங்காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் விசாரணை கமிஷனின் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டது. அந்த அறிக்கை அரசுக்குச் சாதகமாக இல்லாததால், அதை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கிடப்பில் போட்டிருந்த நேரத்தில், அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி அந்த அறிக்கையைப் பத்திரிகைகளுக்கு வெளியிட்டார்.

அன்றைக்கு பால் கமிஷன் விசாரணை அறிக்கையை எதிர்க்கட்சி ரிலீஸ் செய்தது. இன்றைக்கு ஜெயலலிதா மரண மர்மத்தை விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனோ, விசாரணை முடிவதற்கு முன்பே தன்வசம் இருக்கும் ஆவணங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறது. மூச்சுத் திணறலுடன் ஜெயலலிதா பேசிய ஆடியோவை ஆறுமுகசாமி கமிஷன் வெளியிட்டதால், தூத்துக்குடி போராட்ட பரபரப்பு அமுங்கிப் போய்விட்டது. ஜெயலலிதாவின் கடைசிப் பேச்சு ஆடியோவுடன், ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் சேர்த்து ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது அரசியலுடன் முடிச்சுப் போடப்படுகிறது. ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை மறைக்கவே ஜெயலலிதா ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது’’ என ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் சொல்கிறார்கள். ‘‘ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்கும் ஆணையமே மர்மம் நிறைந்ததாக இருக்கிறது’’ என ஆறுமுகசாமி ஆணையத்தின்மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.

வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ!

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்ற வீடியோவை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய தினத்தில் தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் திடீரென வெளியிட்டார். உடனே, ஆறுமுகசாமி ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம், அண்ணா சதுக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். வெற்றிவேல்மீது வழக்கு போடப்பட்டது.

இப்படி விசாரணை கமிஷன் சார்பில் போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் இதுவரை நடந்ததில்லை. அந்தப் புகாரில், ‘ஆர்.கே.நகர் தேர்தல் நடக்கவுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில், தன்னிச்சையாக வீடியோவை வெளியிட்டிருப்பது விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் செயலாகும். உள்நோக்கத்துடன் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டுள்ளார். பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகாரில் சொல்லியிருந்தார்கள்.

ஆர்.கே. நகர் தேர்தல் பற்றிய அக்கறை தேர்தல் கமிஷனுக்கு இருக்கலாம், தப்பில்லை. அதுதொடர்பாகத் தேர்தல் கமிஷனே புகார் அளித்துவிட்ட நிலையில், அதுபற்றி விசாரணை கமிஷன் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், ஆறுமுகசாமி கமிஷன் புகார் கொடுத்தது. அந்தப் புகாரில் சொல்லப்பட்ட இன்னொரு விஷயம் முக்கியமானது. ‘வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ உண்மையானது அல்ல’ எனச் சொல்லியிருந்தது ஆணையம். அந்த வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்தாமலே ‘அது போலியானது’ என ஆணையம் எப்படி முடிவுக்கு வந்தது? இந்தக் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

சசிகலா Vs ஆணையம்!

ஆணையத்தில் பலர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது விசாரணை கமிஷன். ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் தொடர்பான அனைத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என அதில் சொல்லியிருந்தது. உடனே சசிகலா, ‘ஆணையத்தில் தனக்கு எதிராக அளித்த வாக்குமூலங்களை வழங்க வேண்டும். அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார். 22 பேரின் வாக்குமூலங்களை சசிகலாவுக்கு அனுப்பியதுடன், அவர்களைக் குறுக்கு விசாரணை செய்யவும் சசிகலா தரப்புக்கு அனுமதியளித்தது ஆணையம்.

அப்போது சில கேள்விகளையும் நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பியிருந்தார். ‘ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யாதது ஏன்? அந்த வீடியோவை ஆணையத்திடம் தராமல் தினகரனிடம் கொடுத்தது ஏன்? ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்தும் தெரிந்த ஒரே நபர் நீங்கள்தான். ஆணையம் அமைக்கப்பட்டதும் முதல் ஆளாக நீங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்க வேண்டும். அனைத்து உண்மைகளையும் சொல்வதற்கு நீங்கள் ஏன் முன்வரவில்லை?’ என சசிகலாவிடம் கேட்டிருந்தார் ஆறுமுகசாமி.

‘புகார் கொடுக்கும் அனைவரிடமும் ஆணையம் விசாரணை நடத்தி முடித்தபிறகு, இறுதியாக நாங்கள் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘போயஸ் இல்லத்தில் தொடங்கி ஜெயலலிதா மறைவு வரை என்ன நடந்தது என்ற அனைத்து விவரங்களும் சசிகலாவுக்குத் தெரியும். ஆனால், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டும், அவர் கால அவகாசம் கேட்டுத்தான் மனுக்களைத் தாக்கல் செய்கிறார். அவர் விசாரணை ஆணையத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறார்’ எனச் சொல்லி சசிகலாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார். ‘விசாரணையை முடிக்கும் முன்பே இப்படி என்மீது குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. விசாரணையை ஆணையம் சரியாக மேற்கொள்கிறதா என்கிற சந்தேகத்தை இது எழுப்புகிறது’ என்று சசிகலா தரப்பும் இந்தக் குற்றச்சாட்டை வெளிப்படையாக வைத்தது.

வெளிப்படையான விசாரணை இல்லை!

ஆணையத்திடம் தன் வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்திருந்தார் சசிகலா. ‘ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும்முன் போயஸ் கார்டனில் நடந்தது என்ன, ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள், அப்போலோவில் ஜெயலலிதாவைச் சந்தித்தவர்கள் யார் யார்’ எனப் பல விவரங்களை அதில் தெரிவித்திருந்தார் சசிகலா. இந்த விஷயங்கள் ஜூனியர் விகடனிலும், ஓர் ஆங்கில நாளிதழிலும் மட்டும் வெளியாகின. உடனே ‘சசிகலா பிரமாணப் பத்திரத்தில் கூறியதாக வெளியான தகவல்கள் தவறானவை’ என ஆணையம் மறுப்பு வெளியிட்டது. ‘ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர், நிலோபர் கபில் போன்றவர்கள் பார்த்ததாகக் கூறப்படுவதும் தவறு. சசிகலா தரப்பை நியாயப்படுத்தும் வகையில் பத்திரிகைகளுக்குத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்றது ஆணையம்.

இதுவும் விசாரணை கமிஷன் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்று’ என்கிறார்கள் மூத்த அதிகாரிகள். ‘‘முன்பு ‘சசிகலா தரப்பை நியாயப்படுத்தும் வகையில் பத்திரிகைகளுக்குத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று சொல்லி ஆணையம் மறுப்பை வெளியிட்டது. இப்போது, ஆணையமே ஜெயலலிதா பேசிய ஆடியோவையும் உணவுக் குறிப்பையும் வெளியிட்டது எதற்காக?’’ எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சசிகலா தரப்பினர்.

உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரையில் நடக்கும் விசாரணைகளைப் பத்திரிகையாளர்கள் பார்த்து, நேரடியாக செய்தி சேகரிக்கலாம். தமிழகத்தில் நடந்த எத்தனையோ விசாரணை கமிஷன்களின் விசாரணையில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏன்... ராஜீவ் காந்தி படுகொலை சதி மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட வர்மா மற்றும் ஜெயின் கமிஷன்களில்கூட பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஆறுமுகசாமி ஆணையத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பன்னீரும் கோமளாவும்!

ஆணையம் அமைக்கப்பட்டதும், தலைமைச் செயலக சட்டத் துறையில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த பன்னீர்செல்வம் என்பவர், ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். சில நாள்களிலேயே திடீரென அவரை மாற்றி விட்டு, சட்டத் துறையின் இன்னொரு துணைச் செயலாளரான கோமளாவை நியமித்தார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அழுத்தம்தான் இதற்குக் காரணம் என்று சலசலப்பு எழுந்தது. ஆணையத்தின் அத்தனைப் பணிகளையும் பார்ப்பது செயலாளர்தான். ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராக இருக்கும் பாபுவின் மனைவிதான் கோமளா. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர் பாபு. சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபோது, இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் கமிஷனில் பன்னீர்செல்வம் மனு அளித்தார். இந்த மனுவை அளித்த வக்கீல்கள் பட்டியலில் பாபுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகத் தேர்தல் கமிஷனில் பாபுவும் வாதாடினார். இதனால்தான், கோமளா விசாரணை ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையெல்லாம் பார்க்கும்போது ஆணையத்தின் செயல்பாடுகள் பற்றிக் கேள்விகள் எழுகின்றன’’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.

நோ ரியாக்ஷன் அமைச்சர்கள்!

‘‘ஜெயலலிதா பேசிய ஆடியோ மற்றும் உணவுக் குறிப்புகளை டாக்டர் சிவகுமார் ஜனவரி மாதத்திலேயே ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அப்போதே அவற்றைப் பதிவுசெய்யாமல், இப்போது பதிவு செய்திருப்பது எதற்காக?’’ என சசிகலா தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

‘ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்’ என்று சொல்லி தர்ம யுத்தம் நடத்தினார் பன்னீர்செல்வம். அமைச்சர்களும் பொங்கினார்கள். அதனால்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டபோது, ஜெயலலிதா மர்ம மரணம் பற்றித் தாங்கள் சொன்ன விஷயங்களுக்கு நேரெதிராக வீடியோ இருந்ததால், அமைச்சர்கள் உடனே எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்போது வெளியான ஆடியோவும் ஜெயலலிதா உணவுக் குறிப்பும் பன்னீர்செல்வமும் அமைச்சர்களும் சொன்ன குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்குகின்றன. தாங்கள் சொன்ன குற்றச்சாட்டு பொய்யானாலும் பரவாயில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பரபரப்பு அமுங்கினால் சரி என்பதுபோல இப்போது அமைச்சர்களிடம் நோ ரியாக்ஷன்.

- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி