Published:Updated:

ஜெசி என்னும் மரியாதை மனுஷி !

ஜெ.முருகன்

##~##

ஜெசி - சமூகம் ஒதுக்கினாலும் சாதித்துக் காட்ட முடியும் என்பதற்கான நம்பிக்கை அடையாளம்!

திருநங்கையான இவர் நடத்தும் டீக்கடைதான், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்களின் ரிலாக்ஸ் சென்டர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அம்மா... கடையைப் பார்த்துக்கம்மா!'' என்றபடி பேச ஆரம்பித்தார் ஜெசி. ''பாசமான அப்பா, அம்மா, அரவணைக்க அண்ணன்னு சந்தோஷமான குடும்பம்தான் சார். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் பெண்மை தலைதூக்க ஆரம்பிச்சுது. இதை வீட்டுக்குத் தெரியாம மறைச்சுட்டேன். ஆனா, ஒரு கட்டத்துக்கு மேல பள்ளிக்கூடத்தில் மறைக்க முடியலை.  படிப்பையும் தொடர முடியலை.  8-ம் வகுப்பைப் பாதியோடு முடிச்சுட்டு மூணு வருசம் வீட்லதான் இருந்தேன். அண்ணனுக்குக் கல்யாணம் முடிய,  அப்பாவும் காலமாக, குடும்பப் பொறுப்பு என் மேல் விழுந்தது. அப்போதான் இந்தக் கடைவெச்சேன். என்னைப்போல திருநங்கைகளின் அறிமுகம் கிடைக்க, அவர்களுடன் சேர்ந்து சேலை அணிந்து கடைகளுக்குச் சென்று வசூல் செய்யத் தொடங்கினேன். இது என் அம்மாவுக்குத் தெரிஞ்சதும் என்னை மோசமாகத் திட்டி னாங்க. அவமானத்தில் துடிச்சுப் போயிட் டேன்.  தோழிகளின் உதவியுடன் புனேவுக்குச் சென்றேன்.  உள்ளுக்குள் பெண்மையை வைத்துக்கொண்டு வெளியில் ஆணாக என்னால் எப்படி இருக்க முடியும்?

ஜெசி என்னும் மரியாதை மனுஷி !

புனேயில் பெண்ணாக மாறினேன். அங்கே எல்லாரும் என்னை அன்பா நடத்தினாங்க. அங்கு சென்ற ஐந்தாவது நாளிலேயே எனக்குப் பிறந்த நாள் வந்தது.  எல்லோரும் பல பரிசுப் பொருட்களுடன் வாழ்த்த... அப்போதான் நான் வாழ்க்கையின் உச்சகட்ட சந்தோஷம் அடைந்தேன். 'இந்தச் சமுதாயம் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை ஏற்றுக்கொண்ட இதுதான் இனிமேல் என்  சமூகம்’னு முடிவெடுத்து அவங்களோடவே வாழ்ந்தேன்.

திருநங்கைகளுக்கான உலகம் மும்பை என்று  சொல் லப்பட்டாலும் உண்மையில் புனேதான் எங்களைப் போன்றவர்களின் சொர்க்கம். புனே மக்கள் எங்களைக் கடவுளாக நினைத்து கடைக்குச் சென்றவுடன்மரியாதை யாக நடத்துவார்கள். எதிர்காலத்தைப் பற்றிய எந்தக் கனவுகளும் இல்லாமல் நிகழ்காலத்தில் கிடைக்கும் சிறுசிறு சந்தோஷங்களில் மட்டுமே என்னைப் போன்றவர்களின் வாழ்க்கைக் கரைந்துகொண்டு இருக்கும்.

ஜெசி என்னும் மரியாதை மனுஷி !

இதற்கு இடையில் சொந்த ஊருக்குப் போகணும் அம்மாவைப் பார்க்கணும்னு நினைப்பு வர... என் தோழிகள் மூலமா அம்மாவைத் தொடர்புகொண்டேன். அம்மா என்னை ஏத்துக்கலை. நான் புனேயிலேயே வாழ்ந்தேன். ஒரு நாள் தோழிகள் மூலம்  என்னைத் தொடர்புகொண்ட அம்மா, உடைந்து அழ ஆரம்பித்தார். 'நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை. உடனே புறப் பட்டு வந்து என்கூடவே  இரு’ன்னாங்க. சந்தோஷமா ஊருக்கு வந்ததும் கடையை நான் கவனிச்சுக்க ஆரம்பிச்சேன். அம்மா என்னை ஏத்துக்கிட்டதும், உறவினர்கள் என் அம்மாவை ஒதுக்கிட்டாங்க. ஒரே தெருவில் இருந்தும் எங்கள் முகத்தைக்கூட அவங்க பார்க்கலை.  நான் அவங்ககிட்ட ஒரே ஒரு கோரிக்கை மட்டும்வைக்கிறேன். நான் ஏதாவது தப்பான  தொழில் செய்யிறேனா? என் மேல் இருக்கிற வெறுப்பை ஏன் என் அம்மா மேல் கொட்டுறீங்க? நான் செத்துப்போனாலாவது என் அம்மாக் கிட்ட  பேசுவீங்களா?'' என்று கண்கலங்கி யவர், கனத்த குரலுடன் தொடர்ந் தார்.

ஜெசி என்னும் மரியாதை மனுஷி !

''இந்தக் கடைக்கு வரும் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் மிகவும் கனிவோடும் மரியாதையோடும்தான் நடந்துக்கிறாங்க.   எப்படியாவது அம்மாவுக்காக ஒரு வீடு கட்டணும். முன்னெல்லாம் நான் கடை களுக்கு வசூலுக்குப் போகும்போது,  'கை காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு, ஏதாவது வேலை செய்ய வேண்டியதுதானே’னு திட்டுவாங்க. அவங்களை எல்லாம் நான் ஒண்ணு கேட்கிறேன்... எங்களுக்கு யார் வேலை கொடுக்கிறாங்க? திருநங்கைனு தெரிஞ்சதும் அசிங்கத்தைப் பார்க்கிற மாதிரிதானே பார்க்கிறாங்க? சரி... இப்போ நான் சொந்தமாக் கடைவெச்சு இருக்கேன். என் கடைக்கு வர்ற பலர், நான் திருநங்கைனு தெரிஞ்சதும்  ஏதாவது ஒரு காரணம் சொல்லிட்டு பக்கத்துக் கடைக்கு ஏன் போறீங்க?''

ஜெசியின் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?