Published:Updated:

சுப.வீ, சீமான், திருமுருகன் காந்தியின் சிறுவயது தீபாவளி அனுபவங்கள்!

அவர்களுக்கும் ஒரு தீபாவளி அனுபவம் கண்டிப்பாக இருந்திருக்கும். அதைப்பற்றி அவர்களிடம் கேட்டோம். சுவாரஸ்யமாக அந்த ஞாபகங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

சுப.வீ, சீமான், திருமுருகன் காந்தியின் சிறுவயது தீபாவளி அனுபவங்கள்!
சுப.வீ, சீமான், திருமுருகன் காந்தியின் சிறுவயது தீபாவளி அனுபவங்கள்!

புத்தம்புது ஆடைகள், பலகாரங்கள், பட்டாசுகள் என தீபாவளியன்று எல்லா வீடுகளிலும் கொண்டாட்டம் களைக்கட்டும். அதிலும் குழந்தைகள், தீபாவளி வருவதற்கு பத்து இருபது நாள்களுக்கு முன்பாகவே தயாராகிவிடுவார்கள். உடை தொடங்கி வெடி வரைக்கும் பெரிய பட்டியல் வைத்திருப்பார்கள். வாங்கியப் பொருள்களை ஒவ்வொரு நாளும் ஆசை ஆசையாகப் பார்த்து ரசிப்பார்கள். 
வயது அதிகமாகி கல்லூரியில் படிக்கும் காலத்தில், சினிமா, நண்பர்கள் எனக் கொண்டாட்டத்தின் வடிவம் மாறும். காலப்போக்கில் குடும்பம், குழந்தைகள் என்றானபிறகு கொண்டாட்டத்தின் தீவிரம் குறைந்துபோகும். இதுதான் இயல்பு. 

வயது முதிர்வின் காரணமாக தீபாவளியின் மீதான ஈர்ப்பு குறைந்தவர்கள் ஒருவகை. அரசியல், கொள்கை போன்ற காரணங்களால் தீபாவளி கொண்டாட்டத்தைத் தவிர்ப்பவர்கள் இன்னொரு வகை. 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் எனத் தற்போதைய அரசியல் களத்திலேயே அதற்குப் பலரை உதாரணமாகச் சொல்லமுடியும்.
ஆனாலும், அவர்களுக்கும் ஒரு தீபாவளி அனுபவம் கண்டிப்பாக இருந்திருக்கும். அதைப்பற்றி அவர்களிடம் கேட்டோம். சுவாரஸ்யமாக அந்த ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். 

சுப.வீரபாண்டியன்

``தீபாவளி, பொங்கல் போன்ற நாள்களில் என் பெரிய அண்ணன் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிடுவோம். எங்கள் குடும்பத்தினர் நாற்பது, ஐம்பது பேர் ஒன்றுகூடிப் பல மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். நான் தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகன். தீபாவளியன்று வெளியாகும் எம்.ஜி.ஆர் படங்களை தவறாமல் பார்த்துவிடுவேன். எம்.ஜி.ஆர் படம் வெளிவராமல் இருந்தால் மட்டுமே மற்ற நடிகர்களின் படங்களைப் பார்ப்பேன். இப்போதும் கூட திரைப்படங்களின் மீதான ஆர்வம் குறையவில்லை. கடைசியாக 96, பரியேறும் பெருமாள் திரைப்படங்கள் பார்த்தேன் இரண்டு படமும் மிகவும் பிடித்திருந்தது. வரும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் `சர்கார்' படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

என் தந்தையார் 1930 -களிலிருந்தே பெரியாரிடம் இருந்தவர். கருத்தியல் ரீதியாகச் சிறுவயதிலிருந்தே எனக்கு தீபாவளி மீது உடன்பாடில்லை. ஆரம்பத்தில் தீபாவளி வாழ்த்துச் சொல்லும் என் நண்பர்களுடன் விவாதம் செய்வேன். இப்போது அப்படியெல்லாம் செய்வதில்லை. சிரித்துக்கொண்டே கடந்துவிடுவேன். கொண்டாடும் யாரும் எதற்காகக் கொண்டாடுகிறோம் எனத் தெரிந்து கொண்டாடுவதில்லை. விடுமுறைக் கொண்டாட்டமாக மட்டுமே கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டுமே என்று விட்டுவிடுவேன். ``

சீமான்:

``இளையான்குடிச் சந்தையிலிருந்து `அப்பா எப்படா ஆடையும், பட்டாசும் வாங்கி வருவார்' என விடிய விடியக் காத்திருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. நண்பர்களுடன் சேர்ந்து விடுமுறைக் காலங்களில் தேன் எடுத்து விற்றும் வயலில் களையெடுத்தும் பணம் ஈட்டி பட்டாசு வாங்கியதும் ஞாபகம் இருக்கிறது. 

யார் பெரிய வெடி வெடிப்பது என நண்பர்களுக்குள் போட்டி நடக்கும். அம்மா சுடுகிற பணியாரத்தை இப்போது நினைத்தாலும் இனிக்கும். இளையான்குடி திரையரங்குகளில் இரண்டாவது வெளியீடுகள்தான் வரும். ஒரு தீபாவளியன்று `தூங்காதே தம்பி தூங்காதே' படம் பார்த்தேன். பரமக்குடி, ராம்நாடு என நெடுந்தூரம் பயணம் செய்தும் திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். அரசியல் புரிதல் ஏற்பட்ட பின்னர் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்திக்கொண்டேன்''

திருமுருகன் காந்தி :

`` சின்ன வயதில் தீபாவளியை நினைத்தாலே மனது இனிக்கும். காரணம், அப்பா வாங்கித்தரும் புத்தாடைகள். தீபாவளி, பொங்கலின்போதுதான் வீட்டில் புத்தாடைகள் எடுத்துத்தருவார்கள். என்ன மாதிரியான உடை வாங்கலாம் எனப் பெரிய விவாதமே நடக்கும். நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். வீட்டில் பலகாரம் செய்வதற்கு அம்மாவுடன் கடைக்குப் போய் பொருள்கள் வாங்குவது,  பட்டாசுகளைக் காயவைத்ததை எல்லாம் இப்போது நினைத்தாலும் இனிக்கிறது. தீபாவளிக்கு அடுத்த நாள் மட்டும்தான் ஸ்கூலுக்கு கலர் ட்ரெஸ்ஸில் போகமுடியும். தினமும் யூனிபார்ம் உடையில் சென்றுவிட்டு, அந்த ஒருநாளில் மட்டும் கலர் ட்ரெஸ்ஸில் போகும்போது மகிழ்ச்சியாக இருக்கும். 

பிளஸ் டூ படிக்கும்போது, தீபாவளியன்று `குணா' படத்துக்குச் சென்றது நினைவில் இருக்கிறது. நான் கமல் ரசிகன். அவர் நடித்த படங்கள் எதையும் தவிர்ப்பதில்லை. பாலகுமாரனின் எழுத்துகளையும் விரும்பி வாசிப்பேன். அப்பா பெரியாரிஸ்ட்டாக இருந்தாலும் சிறுவயதில் எங்கள் கொண்டாட்டங்களைத் தடுத்ததில்லை. கல்லூரிக் காலம் வந்து அரசியல் புரிதல் ஏற்பட்ட பின்னர் தீபாவளி மீதான ஈர்ப்பு போய்விட்டது. என் மகளையும் நான் வற்புறுத்துவதில்லை. அவளின் கொண்டாட்டத்தைத் தடுப்பதில்லை. சரியான வயது வரும்போது அவர்களாகவே புரிந்துகொள்வார்கள்.''