வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா? -  அனுராதா காந்தி 

வாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா? -  அனுராதா காந்தி 
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா? -  அனுராதா காந்தி 

ஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம் மருதன்

முகத்தைவிடப் பெரிய கண் ணாடியை அணிந்துகொண்டு எந்நேரமும் புத்தகமும் கையுமாக இருக்கும் இந்தப் பெண், கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு பேராசிரியராகவோ, ஆய்வாளராகவோ, எழுத்தாளராகவோ மாறக்கூடும் என்றே அவரை அருகிலிருந்து கண்டவர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். அனுவும்கூட, எல்லோரும் விரும்பியதுபோல ஓர் இளம் அறிவுஜீவியாகத்தான் உருபெற்றுக் கொண்டிருந்தார். பிறகு எப்படி அவர் திசை மாறிப்போனார்?

அனுராதா காந்தி என்றோ, அனுராதா கண்டி என்றோ அவர் பெயர் இன்று உச்சரிக்கப்படுகிறது. நெருங்கியவர்களுக்கு, அனு. பிறந்தது 28 மார்ச் 1954 அன்று. அம்மா குமுத் ஷன்பக் ஒரு குஜராத்தி. அரசியல் மற்றும் பொதுப்பணிகளில் அக்கறைகொண்டவர். அப்பா கணேஷ், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்; மும்பை உயர் நீதிமன்றத்தில் செல்வாக்குமிக்க வழக்குரைஞராகப் பணியாற்றியவர். `அனு பிறந்தவுடன் மானசீகமாக நாங்கள் எங்கள் குழந்தையைப் புரட்சிக்கு அர்ப்பணித்துவிட்டோம்' என்று தன் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதுகிறார் கணேஷ். இந்த இருவர் மட்டுமல்லர்; அனுவின் அம்மா வழி மாமா அத்தைகள் என, குடும்பத்தில் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். அனுவின் பெற்றோர் திருமணம் செய்துகொண்டது மும்பையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்தான்.

`அனு உற்சாகமான ஒரு குழந்தை. ஆற்றல்மிக்கவள் என்பது அவளைப் பார்க்கும்போதே தெரிந்துவிடும்' என்கிறார் குமுத் ஷன்பக். அமைதியான சுபாவம் என்றாலும் கோபமும் வரும். விலங்குகளை யாராவது துன்புறுத்தினால் கொதித்துப்போய்விடுவாள். வீட்டுவேலை செய்பவர்களை, தொழிலாளர்களை, ஏழைகளை யாராவது பரிகசித்தால் வெடித்துவிடுவாள். `அக்காதான் எனக்கு உலகப்பார்வையைக் கற்றுக்கொடுத்தார்' என்கிறார் அனுவின் சகோதரர் சுனில் ஷன்பக். `நான் விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அனு எனக்கு நீளநீளமான கடிதங்கள் எழுதியனுப்புவார். தன்னைச் சுற்றி நிகழும் ஒவ்வொன்றையும் கூர்ந்து அவதானித்து விரிவாக அலசுவது அவர் வழக்கம்' என்கிறார் சுனில். பின்னாளில் சுனில் குறிப்பிடத்தக்க ஓர் இடதுசாரி நாடகாசிரியராக உயர்ந்ததற்கு அனுவின் பங்களிப்பு முக்கியமானது.

வாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா? -  அனுராதா காந்தி 

1970-களின் தொடக்கத்தில் அனு மும்பையின் புகழ்பெற்ற எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் சமூகவியல் படித்துக்கொண் டிருந்தபோது, மகாராஷ்டிராவின் கிராமப் புறப் பகுதிகள் மோசமான பஞ்சத்தை எதிர்கொண்டன. பசியிலும் பட்டினியிலும் வாடி மரித்த ஏழை மக்களின் கதைகளைக் கேள்விப்பட்டுத் திடுக்கிட்டுப்போனார் அனு. சக மாணவர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார். பஞ்சம், மனிதர்களை என்னவெல்லாம் செய்யும் என்பதை முதன்முறையாக அனு உணர நேர்ந்தது. எலும்பும் தோலுமாகச் சுருங்கிக்கிடந்த உடல்கள் அவரை அதிரச் செய்தன என்றால், அந்நிலையிலும் மரணத்தை எதிர்த்து அவர்கள் நடத்திய போராட்டம் அனுவுக்கு உத்வேகமூட்டுவதாக இருந்தது. வாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா?

`வளமும் வறட்சியும் அருகருகில் வளர்ந்து கொண்டிருப்பது ஒருவரையும் சங்கடப்படுத்துவதில்லை. இருப்பவர்களின் கரம் சற்றே நீண்டு சென்றால் போதும், இல்லாமை மறைய ஆரம்பித்துவிடும். ஆனால், அவ்வாறு நடப்பதில்லை. அது வேறு உலகம்; எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று நாகரிக நகரம் குற்றவுணர்வின்றி செல்வத்தைப் பெருக்கிக்கொண்டுபோகிறது' என்கிற யதார்த்தம் அனுவுக்குப் புரிந்தது. இந்த உணர்வு தோன்றியதும் அனுவின் புலன்கள் கூர்மையடைந்தன. மகாராஷ்டிரா மட்டுமல்ல; உலகமே கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில்தான் தள்ளப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது. அமெரிக்காவில் வியட்நாம் போருக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். முதலாளித்துவம், நுகர்வுக் கலாசாரம், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் வீரம் செறிந்த தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இசை, பாடல், எழுத்து ஆகிய கலை வடிவங்களைக்கொண்டு மாணவர்கள் அதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் கொடுத்த குரல், அந்நாட்டைக் கடந்து உலகம் முழுவதிலும் எதிரொலித்தது. சீனா, கலாசாரப் புரட்சியால் குலுங்கிக்கொண்டிருந்தது. இந்தப் பின்னணி அனுவின் சிந்தனைகளை முற்றிலுமாக ஆக்கிரமித்துக்கொண்டன. அநீதியை, ஏற்றத்தாழ்வை, அடிமைத்தனத்தை, அடக்குமுறையை எதிர்த்து எளிய மக்கள் போராடும்போது மாணவர்களும் அறிவுஜீவிகளும் அவர்கள் பக்கம் நிற்க வேண்டும். அது அவர்களுடைய சமூகக்கடமை என்பதை இந்த நிகழ்வுகள் அவருக்கு உறுதிசெய்தன. அடித்தட்டு மக்கள் ஒன்றுசேர்ந்து குரல் உயர்த்தும்போது பெரும்பலமிக்க அதிகாரவர்க்கம் அஞ்சி நடுங்குவதை அனு கண்டார்.

நக்ஸல்பாரி போராட்டம், காந்தம்போல அனுவைப் பற்றிக்கொண்டது. ஆயிரக்கணக் கான மாணவர்கள் தங்கள் படிப்பையும் எதிர்காலக் கனவுகளையும் கைவிட்டுவிட்டுக் கிராமங்களுக்கு அணிவகுத்துச் சென்று மக்கள் பின்னால் திரண்டதை அவர் கண்டார். ஒரு மாணவர் இயக்கத்தோடு இணைந்து செயல்படும் வாய்ப்பு அமைந்தது. அவர்களுடன் சேர்ந்து டெல்லியில் உள்ள சேரிப்பகுதிகளில் சுற்றித் திரிந்தார் அனு. மகாராஷ்டிர கிராமப்புறம் பஞ்சத்தின் கோரமுகத்தை வெளிப்படுத்தியது என்றால், டெல்லி சேரிகள் சாதி என்னும் கொடூரமான அமைப்பின் முழு உருவத்தையும் அனுவுக்கு வெளிப்படுத்தின. ஏழ்மையை ஒழித்தால் போதாது, சாதிப் பாகுபாடுகளையும் ஒழித்தால்தான் பெரும்திரளான மக்களுக்கு விடுதலை சாத்தியப்படும் என்பதை அனு உணர்ந்தார். இடதுசாரி அரசியல் நூல்கள் அவருக்கு அறிமுகமானது இந்த வேளையில்தான். அனுவின் அடுத்தகட்ட பயணத்துக்கு மார்க்சியம் ஒரு கைவிளக்காகத் திகழ்ந்தது.

இதற்கிடையில் சமூகவியல் துறையில் எம்.பில் பட்டம் பெற்று, கல்லூரிப் பேராசிரியராக மாறினார் அனு. பாடத்திட்டத்தைக் கடந்து விரிவாகவும் அழகாகவும் வகுப்புகள் எடுத்த அனு, மாணவர்களுக்குப் பிடித்த பேராசிரியராக இருந்ததில் வியப்பேதுமில்லை. மற்றோர் அறிவுஜீவியும் நக்ஸல்பாரி போராளியுமான கோபாட் காந்தியைக் காதலித்து மணம் செய்துகொண்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையிலிருந்து நாக்பூருக்கு இருவரும் குடிபெயர்ந்தனர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார் என்றாலும், அரசியலும் களப்பணிகளும் அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தன. பகுதிநேரப் போராளியாக இருப்பது சாத்தியமில்லை என்பது புரிந்ததும் முழுக்கவே தன்னை இயக்கத்திடம் ஒப்படைத்தார் அனு.

அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் இருவரையும் அனு கற்றிருந்தார் என்பதால் இந்தியாவின் தனித்துவமான பிரச்னையான சாதி, உலகம் தழுவிய பிரச்னையான வர்க்கம் இரண்டையும் அவரால் தனித்தனியாகவும் ஒருங்கிணைத்தும் புரிந்துகொள்ள முடிந்தது. ஒருபக்கம் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பெண்ணிய முகமாகவும் தலித்திய முகமாகவும் அனு இருந்தார் என்றால், இன்னொரு பக்கம் தலித்தியத்தின் மார்க்சிய முகமாகவும் மார்க்சியத்தின் பெண்ணிய முகமாகவும் அவரால் பிரகாசிக்க முடிந்தது. நூல்களிலிருந்து திரட்டிக்கொண்ட ஒளியை பஸ்தார், தண்டகாரண்யா போன்ற இருள் நிறைந்த கானகப் பிரதேசங்களுக்கு எடுத்துச்சென்று பரப்பியதைப்போல, களப்பணியில் கிடைத்த அனுபவங்களைக் கற்றறிந்த பிரிவினருக்குக் கொண்டுசென்று சேர்த்தார். அந்த வகையில், இரு வேறாகப் பிளவுண்டு கிடந்த இரு உலகங்களையும் ஒருங்கிணைக்கும் அசாத்தியமான ஒரு பெருமுயற்சியில் அனு தன்னைக் கரைத்துக்கொள்ள ஆரம்பித்தார்.

பேனாவை வலுவான ஓர் ஆயுதமாக மாற்றியமைத்தன அனுவின் மெலிந்த விரல்கள். தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பது எப்படி? இந்திய ஜனநாயகம் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக ஏன் இல்லை? தேர்தல் அரசியலைக்கொண்டு ஏன் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை? இந்த அரசு யாருக்கான அமைப்பாக நடைமுறையில் இருக்கிறது? நம் அரசியல் தலைவர்கள் கட்டமைத்த நிறுவனங்களால் ஏன் ஏற்றத்தாழ்வைச் சரிசெய்ய முடியவில்லை? ஏன் சாதியை அகற்ற முடியவில்லை? ஏன் கிராம-நகர இடைவெளியைக் குறைக்க முடியவில்லை? அரசால் முதலாளித்துவத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லையா, அல்லது இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறார்களா? சிறு பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்விதழ்கள், பழங்குடிகளுக் கான வகுப்பறைக் குறிப்புகள் என அனு விரிவான பல தளங்களில் மராத்தி, இந்தி, ஆங்கிலம் மூன்றிலும் தொடர்ச்சியாக எழுதினார். Scripting the Change என்னும் தலைப்பில் அவருடைய எழுத்துகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதி பின்னாள்களில் வெளிவந்தது.

அனு போன்ற படித்த, மேல்தட்டு பெண்ணால் நம்மோடு இணைந்திருக்க முடியுமா என்னும் சந்தேகம் நக்ஸல்பாரி இயக்கத்துக்கு மட்டுமல்ல, பழங்குடி மக்களுக்கும் தொடக்கத்தில் இருக்கத்தான் செய்தது. ஆனால், அனு இரு தரப்பினரையும் தன்னுடைய தன்னலமற்ற சேவைகளின் மூலமும் அதே குழந்தைத்தனமான புன்னகையின் மூலமும் ஒருசேர வென்றெடுத்தார். `நான் கற்றுக்கொடுப் பதற்காக வரவில்லை, உங்களிடமிருந்து கற்கவே வந்திருக்கிறேன்; எனக்கு உங்கள் மொழியை முதலில் கற்றுக்கொடுங்கள்' என்று கோண்டு பழங்குடிப் பெண்களின் கரங்களைப் பற்றிக்கொண்டார் அனு. மற்ற நேரங்களில் இயக்கத் தோழர்களுக்கும் ஆர்வமுள்ள பழங்குடி மக்களுக்கும் அரசியல் வகுப்புகள் எடுத்தார்.

1997-ல் மற்றொரு பஞ்சத்தை அனு காணவேண்டியிருந்தது. இந்தமுறை பஸ்தாரில் நூற்றுக்கணக்கான பழங்குடி மக்கள் பசியால் உயிரிழந்தனர். அதே பகுதியில் வசித்த செல்வந்தர்களின் கிடங்குகளில் தானியங்கள் நிரம்பி வழிந்தபோது, அனுவின் தோழர்கள் அவற்றைக் கைப்பற்றி பழங்குடிகளுக்குப் பிரித்தளித்ததையும் அனு கண்டார். `இதுதான் நீதியா?' என்று கேட்பவர்களுக்கு, `இந்தக் காடு பற்றியும் தெரியாது, நீதி பற்றியும் தெரியாது' என்று நினைத்துக்கொண்டார் அனு.
மலேரியாவின் பிடிக்குள் அனு மீண்டும் மீண்டும் சென்று திரும்பிய காலகட்டமும் இதுவேதான். பத்து கிலோ வரை எடை குறைந்தது. அனுவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும் என்பதால், கையெழுத்துப் பிரசுரங்களையும் அரசியல் முழக்கங்களையும் அவரை எழுதவைத்துதான் தோழர்கள் வாங்கிச் செல்வார்கள். இப்போது அனுவால் ஒரு சொல்லைக்கூட எழுத முடியாமல் போனது. அரசால் தேடப்படும் ஒரு பயங்கர வாதியாக அனுவும் கோபாட் காந்தியும் மாறியதும் அப்போதுதான். ஒருமுறை பலத்த துப்பாக்கிச் சண்டைகளுக்கு மத்தியில் உயிரைக் கையில் பிடித்தபடி அனு தப்பியோடி வரவேண்டியிருந்தது. துடிப்புடன் ஓடிக்கொண்டிருந்த அனுவால் முதல் மாடியில்கூட ஏற முடியாத நிலை ஏற்பட்டபோது, `நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்' என்று உடனிருந்தவர்கள் கூறினர். `என்னைப் படுக்கையில் முடக்கிவிடாதீர்கள் தோழர்களே!' என்று புன்னகைத்து மறுத்துவிட்டார் அனு.

`இடையில் சில நேரம் அனு என்னை நாடி வருவாள். உட்காரவைத்து அவள் தலைமுடியைப் பிரித்து எண்ணெய் தடவி வாரிவிடுவேன். ஒருகட்டத்துக்குமேல் அவள் வருவதும் நின்றுபோய்விட்டது' என்று நினைகூர்ந்தார் அனுவின் அம்மா. `அனுவுக்கு திடீரென வயதாகிவிட்டதைப்போல ஓர் உணர்வு. உடல் பெருத்துப்போனது. ஆனால், குழந்தைத்தனமான அவள் முகம் மட்டும் மாறவேயில்லை' என்கிறார் கோபாட் காந்தி. இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் மத்திய கமிட்டி உறுப்பினர்களில் ஒருவராக அனு உயர்த்தப்பட்டார். நோய், ராணுவம் இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தார் அனு. ஏதேனும் உதவி அல்லது சந்தேகம் கேட்டு `அனு, அனு' என்று குழந்தைகளும் பழங்குடிப் பெண்களும் முடிவற்று அவரைத் தேடி வந்துகொண்டே இருந்தார்கள்.

ஒருகட்டத்தில் ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்குப் பெருங்காய்ச்சல் அனுவை வீழ்த்தியபோது, சாக்குப்போக்கு எதுவும் சொல்லாமல் மும்பை மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக்கொண்டு தனது ரத்த மாதிரியையும் கொடுத்துவிட்டு வந்தார் அனு. இந்தமுறை அவரைத் தாக்கியிருப்பது உயிர்க்கொல்லி மலேரியா என்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அனுவை எச்சரிக்க விரும்பிய மருத்துவமனை, அவர் அளித்திருந்த செல்பேசி எண்ணை மீண்டும் மீண்டும் முயன்று ஓய்ந்துவிட்டது. அனுவை அவர்களால் தொடர்புகொள்ளவே முடியவில்லை. காரணம், பாதுகாப்புக் காரணங்களுக்காக அனு அன்று மருத்துவமனையில் கொடுத்திருந்தது தவறான ஓர் எண். தன் பெயரையும்கூட அவர் மாற்றித்தான் அளித்திருந்தார்.

2008 ஏப்ரல் 11 அன்று ஒரு சருகுபோல அனு தளர்ந்து சரிந்தபோது, தோழர்கள் அவரை அள்ளி எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. மறுநாள் தனது 54-வது வயதில் அவர் இறந்துபோனார்.