வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

வேறு எந்த உறவும் வேண்டாமே! -  டாக்டர் ரேகா

வேறு எந்த உறவும் வேண்டாமே! -  டாக்டர் ரேகா
பிரீமியம் ஸ்டோரி
News
வேறு எந்த உறவும் வேண்டாமே! -  டாக்டர் ரேகா

சலங்கை... சேவை... ஆ.சாந்தி கணேஷ்

‘`பகவான் நம்மளைப்  படைச்சதே நம்மால முடிஞ்சளவுக்கு சிலர் முகத்துலயாவது சிரிப்பை வரவைச்சுப் பார்க்கணும்கிறதுக்குதான். அதைத்தான் நாட்டியம் வழியா நான் செஞ்சுக்கிட்டிருக்கேன். ஏழ்மையின் கொடுமையை அனுபவிச்சதனால, ஏழைக்  குழந்தைகளின் முகங்களில் ததும்பும் புன்னகை எவ்வளவு அற்புதமானதுன்னு எனக்குப் புரியும்'' - நெகிழ்ச்சியாகத் தொடங்குகிற ரேகாவின் கதையில் திருப்பங்கள் பல உண்டு.

‘`அம்மா ஜெயலக்ஷ்மி குடும்ப நிர்வாகி. அப்பா ராகவனுக்கு பேக்கரி பிசினஸ். அதற்காக பாலக்காட்டுல இருந்த நாங்க பெங்களூருக்கு ஷிஃப்ட் ஆனோம். அம்மா பாடும்போதெல்லாம் நான் ஆட ஆரம்பிக்க, என்னை மூன்றரை வயசுல குரு பத்மினி ராமச்சந்திரனிடம் பரதம் கத்துக்க அழைச்சுட்டுப் போயிருக்காங்க. அஞ்சு வயசுக்கப்புறம்தான் டான்ஸ் கத்துத்தர முடியும்னு சொன்ன குரு, நான் ஆடினதைப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டு கிளாஸ்ல சேர்த்துக்கிட்டாங்களாம். நாலரை வயசுலேயே புஷ்பாஞ்சலி, வர்ணம், தில்லானா, பதம்னு முக்கால் மணி நேரம் புரோகிராம் பண்ணியிருக்கேன்’’ என்று ஆச்சர்யப்படுத்துகிறவர், அப்பா பிசினஸில் சரிந்த கதையையும், அதனால் தான் ஆசை ஆசையாகக் கற்றுக்கொண்டிருந்த பரத வகுப்பு நின்றுபோன கண்ணீர்ப் பக்கங்களையும் மெள்ளப் புரட்ட ஆரம்பித்தார்.

வேறு எந்த உறவும் வேண்டாமே! -  டாக்டர் ரேகா

‘`அப்போ எனக்குப் பத்து வயசு. எங்கப்பா நிறைய பேருக்குக் கடனுதவி பண்ணியிருந்தாரு. தவிர, ஸ்கூல், ஹாஸ்பிடல், ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள் மாதிரியான இடங்களுக்குத் தினமும் எங்க பேக்கரியில இருந்து 5,000 பன், 1,000 பிரெட்னு இலவசமா அனுப்புவாரு. அப்பாவின் சக்திக்கு மீறி அவர் செஞ்ச உதவிகள் நிதி நிலைமையை இறுக்க ஆரம்பிச்சது. ஆனாலும், அப்பா தானதர்மங்களை விடவேயில்லை. இதுக்கு இடையில, கடன் வாங்கினவங்க அவரை ஏமாத்த, எல்லா சொத்துகளையும் ஒவ்வொண்ணா இழக்க ஆரம்பிச்சோம். கடைசியா, மாளிகை மாதிரி இருந்த வீட்டையும் இழந்து, ஒரேயொரு ரூம் இருக்கிற வாடகை வீட்டுக்குக் குடி போனோம். மகாராணி மாதிரி இருந்த எங்கம்மா வாரக்கூலியா வேலைக்குப் போனாங்க. ஒருவேளைச் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருக்கோம். பல நாள் கேழ்வரகுக் கஞ்சிதான். பணம் கட்ட முடியாததால, பரத வகுப்பு நிறுத்தப்பட்ட அன்னிக்கு சலங்கைகளை நெஞ்சோடு அணைச்சுக்கிட்டு விடிய விடிய அழுதது இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு.

அந்தப் பத்து வயசுல, என் மனசுக்குள்ள ஒரு வைராக்கியம் வந்துச்சு. நான் ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சு, ஏழைக் குழந்தைகளுக்கெல்லாம் நாட்டியம் கத்துக் கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டேன். ‘நிருத்ய தர்ம டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ நாட்டியப்பள்ளி ஆரம்பிக்கிறதுக்கு அதுதான் காரணம்’’ - மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ரேகா.

வேறு எந்த உறவும் வேண்டாமே! -  டாக்டர் ரேகா

ரேகாவின் அப்பா நஷ்டத்தில் இருந்து மீள ஆரம்பித்ததும், மூன்று வருடங்களாக ஒலிக்க மறந்திருந்த சலங்கைகளை மீண்டும் பாதங்களில் கட்டியிருக்கிறார் ரேகா. இந்த முறை பரதத்துடன் கேரளாவின் பாரம்பர்ய நடனமான மோகினியாட்டத்திலும் ஆர்வம்காட்டி, இரண்டு நடனங்களிலும் அடுத்தடுத்து டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறார்.  தன் 17-வது வயதிலேயே நாட்டியப்பள்ளியை ரேகா ஆரம்பித்ததுதான் ஹைலைட். ``நாட்டியம் மட்டுமே என் முழுநேரப் பணியா இருக்க முடியும்னு தோணிச்சு. அப்பாவும் அம்மாவும் அதுக்கு சம்மதிச்சது என் பாக்கியம்’’ என்பவரின் முகத்தில் உற்சாகக் குமிழ்கள் பொங்கி வழிகின்றன.

‘`நாட்டியம் கத்துக்க ஆசைப்படற ஏழைக் குழந்தைகளைக் கட்டணம் இல்லாம என் பள்ளியில சேர்த்துக்கிட்டேன். கூடவே ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ் குழந்தைகளையும்...'' என்கிறவர், ‘`இதுவரை ஹெச்.ஐ.வி பாதித்த  35 குழந்தைகளுக்கு நாட்டியம் கத்துக்கொடுத்திருக்கேன். ஒரு தடவை ரெண்டு குழந்தைங்க, கொஞ்ச நாளா கிளாஸுக்கு வரலை. சம்பந்தப்பட்டவங் களிடம் விசாரிச்சப்போ, அவங்க இறந்துட்டதா சொன்னாங்க. அப்படி  ஒரு சூழல்ல இருக்கிற அந்தக் குழந்தைங்களை, எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குச் சந்தோஷமா வெச்சுப்பேன்’’ என்கிற ரேகா,  இந்தக் குழந்தைகளுக்கு நாட்டியம் சொல்லித் தருவதற்காகவே, தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்கிற உறுதியுடன் இருக்கிறார். ‘முப்பது வயதிலேயே இவ்வளவு பெரிய முடிவை எடுக்க வேண்டுமா?’ என்றால், ‘`என்னைப் பார்த்தாலே துள்ளிக்கிட்டு ஓடி வர்ற இந்த குழந்தைங்களுக்கும் எனக்கும் நடுவுல வேறு எந்த உறவும் வேண்டாமே...’’  - மெல்லிய குரலில் தீர்மானமாகப் பேசுகிற டாக்டர் ரேகா, இப்போது நம் கண்களுக்கு ரேகா அம்மாவாகத் தெரிந்தார்!