Published:Updated:

இருளை அதன் போக்கில் விடுங்கள்... தானாக விடிந்துவிடும்! #MotivationStory

இருளை அதன் போக்கில் விடுங்கள்... தானாக விடிந்துவிடும்! #MotivationStory
இருளை அதன் போக்கில் விடுங்கள்... தானாக விடிந்துவிடும்! #MotivationStory

வாழ்க்கையில் எல்லோருக்குமே இக்கட்டான சூழ்நிலைகள் வந்தே தீரும். ஆனால், அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல், சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால், ஐந்து நிமிடம் உட்கார்ந்து யோசித்தால், எத்தகைய பிரச்னைகளையும் எதிர்கொண்டு, வெல்ல முடியும் என்பதற்கு இந்தக் கதை ஓர் உதாரணம்!

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப மனித மனமும் மாறிக்கொண்டே இருக்கும். `இதுவும் கடந்து போகும்’ என்று நினைத்து, செயலில் மட்டுமே கவனம் செலுத்தினால், எத்தகைய இடர்களையும் களையமுடியும். 
எப்படி?

ஒரு நாட்டில் பெருங்கோபமும் பேரன்பும் கொண்ட மாமல்லன் என்ற அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஆலோசனைகள் தந்து, சிறப்பான ஆட்சியை நடத்துவதற்கு அமைச்சர்களும் இருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறப்பாகச் செயலாற்றி வந்தனர். குணசீலன் என்பவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். எதிரிகளின் தாக்குதலைத் தடுப்பது, பிற நாடுகளில் நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கண்காணிப்பது, ஒற்றர்கள் மூலம் முன்கூட்டியே நாட்டில் ரகசியமாக உலவும் புரட்சிக் குழுக்களைக் கண்டறிந்து, கட்டுப்படுத்துவது, புதுப் புது போர்க் கருவிகளை உருவாக்குவது, காலாட்படை, தேர்ப் படை, யானைப் படை, விற்படை, குதிரைப் படை உள்ளிட்ட ஐந்துவித படைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என 24 மணி நேரமும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய புகழ், பக்கத்து நாடுகளிலும் எதிரொலித்தது. எல்லோரும், அரசன் மாமல்லனிடம், அவரது அமைச்சரின் திறமையை வியந்து பாராட்டி வந்தனர். 

அவ்வப்போது அரசனும் அவரை அழைத்து, பாராட்டி, பொற்காசுகளைப் பரிசளித்து வந்தார். அமைச்சரவையில் இருந்த சிலருக்கு இது எரிச்சலூட்டியது. அவரை, ஏதேனும் ஒரு விஷயத்தில் சிக்க வைத்துவிட வேண்டுமெனச் சதித்திட்டம் தீட்டினர். அவர்களுடைய திட்டம் ஒருநாள் செயலுக்கு வந்தது. `அமைச்சர் குணசீலன் நாட்டில் அமைதியைக் குலைத்து, புரட்சி செய்து, ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளார்’ என்று வதந்தியைப் பரப்பி, அரசனை நம்ப வைத்தனர்.

சில நேரங்களில் உண்மை உதவாது. அது குணசீலன் விஷயத்திலும் நடந்தது. எவ்வித விசாரணையுமின்றி, அமைச்சருக்கு மரண தண்டனை விதித்து அரசன் உத்தரவிட்டான். ஆனால், இவ்வளவு காலம் தனக்கு விசுவாசமாக இருந்ததால் ``அவரின் கடைசி ஆசை என்னவென்று கேட்டு, அதைப் பூர்த்திசெய்துவிட்டு தண்டனையை நிறைவேற்றுங்கள்’’ என்று கட்டளையிட்டான். 
அரசனின் உத்தரவுப்படி, குணசீலனைக் கைதுசெய்து, தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர். தூக்கிலிடுவதற்கு முன்பாக, ``உங்களுடைய கடைசி ஆசையை அரசர் நிறைவேற்றச் சொல்லியிருக்கிறார். அது என்னவென்று சொல்லுங்கள்...’’ என்று சிறை அதிகாரி கேட்டார். அப்போது குணசீலன், ``வீட்டில் ஒரு குட்டிப் புலியை வளர்த்து வருகிறேன். அதைப் பறக்க வைக்க வேண்டும் என்பது என் ஆசை’’ என்றார்.

``புலி பாயத்தானே செய்யும். எப்படிப் பறக்கும்?’’ என்று சிறை அதிகாரி கேட்டார். ``நீண்ட நாள்களாகப் பயிற்சி கொடுத்து வருகிறேன். என்னால் முடியும். கொஞ்சம் அவகாசம் வேண்டும்’’ என்றார் அமைச்சர்.

இந்த விஷயத்தை அரசரிடம் எடுத்துச்சென்றால், தனக்குப் பிரச்னை ஏற்பட்டுவிடும் என பயந்தார் சிறை அதிகாரி. அதனால், ``அவரின் ஆசை நிறைவேறும் வரை... அவரைக் கண்காணியுங்கள். பிறகு, தூக்கிடலாம்’’ என்று சொல்லி, அவரைத் திரும்பவும் வீட்டுக்கே அனுப்பிவிட்டார். கணவன் திரும்பி வந்ததைக் கண்டு, அவரது மனைவி சந்தோஷமடைந்தாள். அன்றிரவு, ``மரண தண்டனையிலிருந்து எப்படித் தப்பித்தீர்கள்?’’ என்று கேட்டாள்.

``தண்டனையிலிருந்து தப்பிக்கவில்லை... தள்ளிப்போடப்பட்டிருக்கிறது’’ என்றார். மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. ``கொஞ்சம் விளக்குங்களேன்...’’ என்றாள். நடந்ததைச் சொன்னார். ``அது எப்படிச் சாத்தியம்?’’ என்று வியப்போடு கேட்டாள். ``அரசருக்கு வயதாகிவிட்டது. அதனால், எனது முயற்சி வெற்றியடைவதற்கு முன்பே அவர் மரணித்துவிடலாம். அல்லது, இன்னும் சில மாதங்களில் அவர் மனம் மாறி, என்னைத் தண்டனையிலிருந்து விடுவிக்கலாம். இல்லையென்றால்,  புரட்சிப் படையினர் வந்து, என்னை மீட்கலாம்.  இது எதுவும் நடக்கவில்லையென்றால், ஒருவேளை புலி பறக்கலாம்!” என்றார். மனைவி வாயடைத்து நின்றாள்!

நீதி: பிரச்னைகளைக் கண்டு கலங்காதீர்கள்... தள்ளிப்போடுங்கள்... வெற்றி உங்களுக்கே!