வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

புதைந்து கிடந்த புன்னகைகள்!

புதைந்து கிடந்த புன்னகைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
புதைந்து கிடந்த புன்னகைகள்!

சிரிக்கும் பூக்கள் ஆர்.வைதேகி்

திர்கொள்கிற மனிதர்கள் தொடங்கி, எக்கச்சக்கமாக எடுத்துத் தள்ளும் செல்ஃபி வரை எல்லாவற்றுக்கும் சிரிக்கிறோம். ஆனால், எந்தப் புன்னகையிலும் நிஜம் இருப்பதில்லை. சிரிப்பு என்பது, மனதுக்குச் சம்பந்தமில்லாத சம்பிரதாய மாகவே இருக்கிறது இன்று. `கடைசியாக எப்போது மனம்விட்டுச் சிரித்தோம்?’ என்ற பதில் தெரியாத கேள்வி, அநேகமாக எல்லோர் மனங்களிலும் இருக்கும். இந்த நிலையில், உயிரும் உணர்வும் சுமந்த புன்னகையை மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்கிறார் நவீன் கவுதம் என்கிற இளைஞர்.

அடிப்படையில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரான நவீனின் அடையாளம், விவசாயம். ஆர்வமோ புகைப்படக்கலை. `சுயம்’ என்கிற பெயரில் இவர் எடுக்கும் புன்னகைப் படங்கள், பெண்மைக்கு மரியாதை செய்பவை.

``திருவாரூர் பக்கத்துல இருக்கிற நீடாமங்கலம் எனக்குச் சொந்த ஊர்.  கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு ஐ.டி வேலையில இருந்தேன். குடும்பச் சூழலால அந்த வேலையைத் தொடர முடியலை. இப்போ, அப்பாகூட சேர்ந்து விவசாயம் பண்ணிட்டிருக்கேன். அப்பா ஃபிலிம் கேமராவுல போட்டோ எடுக்கிறதைப் பார்த்து வளர்ந்திருக்கேன். அப்பவே எனக்கும் அந்த ஆர்வம் ஒட்டிக்கிச்சு.

2012-ல எனக்குனு தனியா கேமரா வாங்கி பிராக்டிஸ் பண்ணிட்டிருந்தேன். `சென்னை வீக் எண்டு க்ளிக்கர்ஸ்’னு ஒரு குரூப் இருக்கு. அதன் உறுப்பினர்கள் எல்லாரும் வார இறுதி நாள்ல ஏதாவது ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து வாக் போவாங்க. `கேமரா இருக்கு... போட்டோகிராபி கத்துக்கணும்’னு நினைக்கிறவங்களுக்கான பயிற்சிக் களம் அது. இப்படி எடுக்கிற படங்களை வருடத்துக்கு ஒருமுறை சென்னையில லலித்கலா அகாடமியில காட்சிக்கு வைப்பாங்க. அதைப் பார்த்து நானும் அவங்களோடு இணைஞ்சு கிட்டேன்.  வெளியிடங்களுக்குப் பயணப்பட்டு நிறைய படங்கள் எடுக்க ஆரம்பிச்சேன்.

புதைந்து கிடந்த புன்னகைகள்!

இன்ஸ்டாகிராம் பிரபலமாக ஆரம்பிச்சதும் `இன்ஸ்டா ஃபெஸ்ட்’னு ஒரு போட்டிக்கான அறிவிப்பு வந்தது. நாமாகவே ஒரு சப்ஜெக்ட்டைத் தேர்ந்தெடுத்து, 30 நாள்களுக்கு அது சம்பந்தமா தினமும் ஒரு போட்டோ போடணும். போன வருஷம் `கடல் காதலன்’ என்ற தலைப்புல மெரினா பற்றிய படங்களை எடுத்தேன். சமீபகாலமா கிராமங்களுக்கு அதிகம் பயணம் பண்ணிட்டிருக்கேன். அங்கே இருக்கிற மக்களோடு பேசறதும் பழகுறதும் மனசுக்குப் பிடிச்ச விஷயமா இருக்கு.

இந்த வருஷம் போட்டிக்கான தலைப்பைப் பற்றி யோசிச்சிட்டிருந்தப்போ, வண்ணதாசனின் கவிதை ஒண்ணு ஞாபகத்துக்கு வந்தது.

`தானாய் முளைத்த செடி என்கிறார்கள்
யாரோ வீசிய விதையிலிருந்து தானே’


- இந்தக் கவிதைதான் எனக்கான இன்ஸ்பிரேஷன்.

பெண்களும் அப்படித்தான் சுயம்புகளாக இருக்காங்கனு தோணுச்சு. நான் சந்திச்ச பல பெண்களையும் அப்படித்தான் பார்த்திருக்கேன். அம்மா உள்பட என் வீட்டுப் பெண்களும் சரி, வழிப்போக்கர்களாக நான் சந்திச்ச பெண்களும் சரி, மாபெரும் மனதைரியத்துடன் எல்லாவற்றையும் கடந்து வருபவர்களாகவே இருக்காங்க. அந்தப் பெண்மைக்கு மரியாதை சேர்க்கிற வகையில் `சுயம்பு’ என்ற தலைப்பில் 30 நாள்களும் தினமும் ஒரு பெண்ணின் புன்னகையைப் பதிவு செஞ்சேன்’’ - நீண்ட நெடும் அறிமுகம் சொல்கிற நவீன், அந்த 30 நாள்களோடு இந்தப் புன்னகைப் பதிவை நிறுத்திக் கொள்ளாததுதான் ஹைலைட்.

``எந்தப் பெண்ணையும் அத்தனை சுலபத்துல சிரிக்க வெச்சுட முடியாது. `பல்லு தெரியுற மாதிரி சிரிங்க’னு சொன்னா வெட்கப்படுவாங்க. அதையும் தாண்டி வெளிப்படும் போலித்தனமில்லாத அந்தச் சிரிப்பு, எனக்கு ரொம்பப் பிடிச்சது.  இந்த மாதிரி முகங்களைத்தான் போட்டோ எடுக்கணும்னு எனக்கு நான் எந்த இலக்கும் வெச்சுக்கலை. பார்க்கிற பெண்கள் எல்லார்கிட்டயும் போட்டோ எடுக்கலாமானு கேட்பேன். சிலர் சம்மதிப்பாங்க. சிலர் ஆர்வமிருந்தாலும் தயங்குவாங்க. பக்கத்துல உள்ள வேற பெண்களை போட்டோ எடுத்து அவங்க கிட்ட காட்டும்போது அந்தத் தயக்கம் கொஞ்சம் மாறி, சம்மதிப்பாங்க.

புதைந்து கிடந்த புன்னகைகள்!

பலரும் மனசுவிட்டுப் பெருசா சிரிச்சுடு வாங்க. ஆனாலும், அந்தப் படங்களைக் காட்டும்போது அவங்களுக்கெல்லாம் லைட்டா சிரிச்ச படங்கள்தான் பிடிச்சிருக் கும். பல்லு தெரியுற சிரிப்பை அவங்க விரும்பறதில்லை’’ - புன்னகையில் பிஹெச்.டி-யே முடித்தவராகச் சொல்கிறார்.

``வெறும் 30 நாள்கள் முயற்சியா தொடங்கினதுதான். ஆனாலும், அந்த முயற்சி என்னை ரொம்பவே மாத்தியிருக்கு. நான் முன்பைவிட மகிழ்ச்சியான மனுஷனா மாறியிருக்கேன்கிறதுதான் உண்மை. அந்த அனுபவமும் மகிழ்ச்சியும் நான் சந்திக்கிற பெண்களின் புன்னகையும் அவங்களுடைய வாழ்க்கைக் கதைகளும்தான் இந்த முயற்சியைத் தொடர்ந்து செய்ய வெச்சிருக்கு’’ - நெகிழ்ந்து சொல்பவருக்கு ஒவ்வொரு புகைப்படமும் ஒரு நினைவோவியம்.

``மலைக்கிராமம் ஒன்றில் ஒரு பெண்ணை போட்டோ எடுத்தேன். `போட்டோவுக் கெல்லாம் நிக்க மாட்டேன்’னு சொல்லிட்டு நகர்ந்துட்டாங்க. நானும் அவங்ககூடவே பேசிட்டு நடந்து போனேன். கஷ்டப்பட்டு கன்வின்ஸ் பண்ணி ஒரே ஒரு போட்டோ எடுத்துக் காட்டினேன். அது அவங்களுக்குப் பிடிச்சிருச்சு. அந்தக் கிராமத்துல வீட்டு வாசல்லதான் கல்யாணங்கள் நடக்குமாம். மரக்கிளைகளில் தோரணம் கட்டி, எல்லாப் பெண்களும் தலைநிறைய கலர் கலரா பூ வெச்சுக்கிட்டு, குங்குமப் பொட்டுடன் இருப்பாங்க. ஆனா, போட்டோவெல்லாம் எடுக்கிற வழக்கமில்லை. அந்தப் பெண்ணுக்கு நான் எடுத்ததுதான் வாழ்க்கையின் முதல் போட்டோவாம்!

பல பெண்களுக்கும் போட்டோன்னாலே மேக்கப்பெல்லாம் போட்டுக்கிட்டு ரெடி யாகணும்கிறதுதான் மனசுல பதிஞ்சிருக்கு. `நான் அசிங்கமா இருக்கேன். என்னைப்போய் போட்டோ எடுக்கிறேன்னு சொல்றியே’னு கேட்டவங்க அதிகம். அப்படியெல்லாம் இல்லைனு புரியவெச்சு, யதார்த்தமா எடுக்கிற படங்களும் அழகா இருக்கும்னு எடுத்துக்காட்டினாத்தான் நம்புறாங்க.

புதைந்து கிடந்த புன்னகைகள்!

நின்னா செல்ஃபி, உட்கார்ந்தா செல்ஃபினு நாமெல்லாம் சலிக்கச் சலிக்க போட்டோ எடுக்கிறோம். ஆனா, கிராமத்துப் பெண்கள் பலருக்கும் போட்டோங்கிறதே புதுசுதான். அதுலயும் எடுத்ததை உடனே பார்க்கிறதுங்கிறது புதுமையான அனுபவமா இருக்கும். சின்னக் குழந்தையில் தொடங்கி பாட்டி வரைக்கும் பெண்கள் எல்லோருக்கும் நிறைய கவலைகளும் பிரச்னைகளும் இருக்கு. அதையெல்லாம் முகத்துல காட்டிக்காம, அன்றாட வேலைகளுக்கான தடைகளா நினைக்காம இயங்கிட்டிருக்காங்க. அவங் களுக்குள்ள புதைஞ்சுகிடந்த புன்னகையை வெளிப்படுத்துற சின்ன முயற்சியாதான் இதைச் செய்றேன்.

பெண்கள் எல்லோரும் அழகானவர்கள் தாம். அவர்களின் சிரிப்பும் மகிழ்ச்சியும் இன்னும் அழகானவை.  அதை அவங்களுக்கு நிரந்தரமாக்க முடியலைன்னாலும் என் மூலமா ஒரு நாளாவது அவங்களைச் சிரிக்க வைக்கிறதை சந்தோஷமா செய்றேன்’’ - மனதிலிருந்து பேசுகிறார் மகிழ்ச்சியின் மீட்பர்.