வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

நான் அடிச்சா தாங்க மாட்ட! -   ஆர்த்தி நிதி  

நான் அடிச்சா தாங்க மாட்ட! -   ஆர்த்தி நிதி  
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அடிச்சா தாங்க மாட்ட! -   ஆர்த்தி நிதி  

சக்தி கு.ஆனந்தராஜ்

மெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி இளம் பெண் ஆர்த்தி நிதி. சில ஆண்டுகளுக்கு முன்பு எடை குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்லத் தொடங்கியவர், இன்று அமெரிக்காவின் தேசிய அளவிலான பளுதூக்கும் (Powerlifting) வீராங்கனையாக மிளிர்கிறார். “வணக்கம்” - புன்னகையுடன் வீடியோ காலில் பேசத் தொடங்குகிறார் ஆர்த்தி.

ஆர்த்தி - ஓர் அறிமுகம்?

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட என் பெற்றோர், படிப்புக் காக அமெரிக்கா வந்தாங்க. பிறகு கல்யாணம் முடிஞ்சு இங்கேயே குடியுரிமை வாங்கி செட்டில் ஆகிட்டாங்க. நான் நியூஜெர்ஸி மாகாணத்தில் வெயின் நகரத்தில் பிறந்து வளர்ந்தேன். அஞ்சு வயசுல பரதநாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சேன். பத்தாவது படிக்கிறப்போ அரங்கேற்றம் செய்தேன். பிறகுதான் ஃபிட்னஸ் மற்றும் பவர்லிஃப்ட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

டான்ஸிலிருந்து பவர்லிஃப்ட்டிங்?

ப்ளஸ் ஒன் போனதும் படிப்பில் அதிக கவனம் செலுத்த டான்ஸிலிருந்து பிரேக் எடுத்தேன். அப்போ எடை கூடினதால, ப்ளஸ் டூ படிக்கும்போது ஜிம் போக ஆரம்பிச்சேன். அப்படியே உடற்பயிற்சியில் எனக்கு அதிக ஈடுபாடு வந்தது. அப்போ, பவர்லிஃப்ட்டிங்கில் பெண்களின் பங்களிப்பு குறைவா இருந்ததை உணர்ந்தேன். இந்தத் துறையில் கவனம் செலுத்தணும்னு முடிவெடுத்தேன். காலேஜ் போனதும் அதுக்கான நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்கினேன். அந்த நேரத்தில் ‘பார்பெல்’ என்ற ஃபிட்னஸ் சங்கத்தில் பிரசிடென்ட்டா இருந்தேன். சங்கத்தில் இருந்த பலரும் என்னை ஊக்கப்படுத்தினதாலே போட்டிகளில் கலந்துக்கத் தயாரானேன்.

நான் அடிச்சா தாங்க மாட்ட! -   ஆர்த்தி நிதி  

பவர்லிஃப்ட்டிங் சாதனைகள்?

சிறிய அளவிலான போட்டிகள்ல இருந்து வெற்றிகளைத் தொடங்கினேன். 2016-ம் ஆண்டு ‘யுஎஸ்ஏ ரா நேஷனல் சாம்பியன்ஷிப்’ போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, என் 19 வயதில் சாம்பியன் ஆனேன். கடந்த மார்ச் மாதம் நடந்த ‘அர்னால்டு ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்டிவல்’ நிகழ்ச்சியில், ‘புரோ சேலஞ்ச்’ பளுதூக்கும் போட்டியில் என் எடையைவிட மூன்று மடங்கு அதிக எடையைத் தூக்கித் தங்கப்பதக்கம் பெற்று சாம்பியன் ஆனேன். அடுத்து ஏப்ரல் மாதம் நடந்த ‘யுஎஸ்ஏ நேஷனல் ஆல் யுனிவர்சிட்டி சான்பியன்ஷிப்’ போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றேன். மகளிர் பிரிவு மட்டுமல்ல... இருபாலினத்தவர் பிரிவு போட்டிகள்லயும் கலந்துட்டிருக்கேன். சமீபத்துலதான் இண்டஸ்ரியல் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சேன். அடுத்து வேலைக்குப் போகப் போறேன்.

பளுதூக்கும் போட்டிகளில் பெண்களின் பங்களிப்பு எந்தளவுக்கு இருக்கிறது?

முன்னெல்லாம் இந்தத் துறை ஆண்களுக்கானதாகவே பார்க்கப்பட்டு வந்தது. இப்போ இதில் பெண்களின் பங்களிப்பு படிப்படியாக அதிகரிச்சுட்டு வருது. ஆண்களைப் போலவே பெண்களும் கட்டுடலுடனும் பலமிக்கவர்களாகவும் இருக்க ஆசைப்படுறாங்க. வெளியிடங்கள்ல பிறரால் ஆபத்து நேரும்போது, ஆணின் உதவியை எதிர்பார்ப்பதைவிட, பெண்கள் தாங்களே தங்களைத் தற்காத்துக்க உடல்பலம் அவசியம் தேவை. கராத்தே, ஜூடோ கத்துக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்று அதிகரிச்சுட்டுவருது. அதேபோல ஃபிட்னஸ், பவர்லிஃப்ட்டிங்கிலும் பெண்களின் ஆர்வம் அதிகரிக்கணும். அப்போது, ‘என்னால் எந்தத் துறையிலயும், எந்த வேலையையும் சிறப்பா செய்ய முடியும்’கிற நம்பிக்கை நிச்சயம் வரும். எந்த விஷயத்தையும் தைரியமாக அணுகும் குணம் வரும். பலத்தை வெளிப்படுத்த மட்டுமில்லாம, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும் இந்தச் சாதனைகள் நமக்கு கிரெடிட் வாங்கிக் கொடுக்கும்.

தற்காப்புக்காக நீங்கள் யாரையாவது அடித்த அனுபவம் உண்டா?

அப்படி ஒரு சூழல் இதுவரை அமையலை (சிரிக்கிறார்). அந்தச் சூழல் ஏற்பட்டால், என் பலத்தை நிச்சயம் முழுமையாக வெளிப்படுத்துவேன். காலேஜ்ல பெண்களைக் கிண்டல் பண்றதுக்கென ஒரு குரூப் பசங்க இருப்பாங்க. ஆனா, அவங்க என்னைப் பார்த்தால் கொஞ்சம் பயப்படுவாங்க. என் ஃப்ரெண்ட்ஸை கிண்டல் பண்ணவும் பயப்படுவாங்க. அந்தவகையில் என் காலேஜ்ல நான் கெத்தா இருந்தேன். வெளியிடங்கள்லயும் அப்படித்தான். இப்படி என் தலைமேல எப்பவும் ஒரு குட்டி கிரீடம் வெச்ச மாதிரி என்னை உணர வைக்கிற பவர்லிஃப்ட்டிங்கில் இன்னும் பல சாதனைகள் செய்யணும்!