Published:Updated:

பரபர சென்னை தீபாவளியன்று எப்படி இருந்தது... பெசன்ட் நகர் டு தி.நகர் ஒரு விசிட்!

பரபர சென்னை தீபாவளியன்று எப்படி இருந்தது...  பெசன்ட்  நகர் டு தி.நகர் ஒரு விசிட்!
பரபர சென்னை தீபாவளியன்று எப்படி இருந்தது... பெசன்ட் நகர் டு தி.நகர் ஒரு விசிட்!

எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் சென்னை நகரம், பண்டிகைகளின்போது பரபரப்பு குறைந்து ஆசுவாசம்கொள்கிறது. பேருந்துகளிலும் புகைவண்டிகளிலும் சொந்த ஊருக்கு மக்கள் சென்றுவிட, தீபாவளியன்று சென்னையின் பரபரப்பான ஏரியாக்களுக்கு விசிட் அடித்தோம். 

ஈரம் நிரம்பிய காற்றினுள்ளே நுழைந்து இளம் வெயிலில் நனைந்தபடி பெசன்ட் நகர் கடற்கரையில் ஜாக்கிங் செல்லும் ஒரு கூட்டம். தீபாவளி என்பதால், ஜாக்கிங்கையும் மறந்துவிட்டார்கள்போல! யாரும் இல்லாமல் வெறுமையைச் சுமந்துகொண்டு நின்ற அந்தச் சாலையின் மீது காலைக் கடலின் அமைதியானது எதிரொலித்துக்கொண்டே இருந்தது. அலைகள் வழக்கம்போல கரைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தன.

கரைகளில் நின்று அலைகளுடன் விளையாடிவிட்டு அப்படியே மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். புத்தாடை அணிந்துகொண்டு குதூகலமான மகிழ்ச்சியுடன் கோயில் நிரம்பியிருந்தது. எனினும், கோயிலுக்கு வெளியே வழக்கமான அதன் கலையை இழந்தே நின்றது மயிலாப்பூர் என்றுதான் கூற வேண்டும். வழக்கமாக, புத்தகங்கள் நிறைந்து கிடக்கும் திருவல்லிக்கேணி தெருக்கள்கூட, நேற்று வெறுமையாக இருந்தன. சில ஹோட்டல்களும் பூக்கடைகளும் மட்டுமே திறந்து இருந்தன.

எலெக்ட்ரானிக் தெருவாகவே மாறி நிற்கும் ரிச்சி தெருவுக்குச் சென்றோம். 10 மணிக்கெல்லாம் திறந்து, நடக்கக்கூட இடம் இல்லாமல் இருக்கும் குட்டிக்குட்டித் தெருக்களில் இருக்கும் கடைகள்கூட, வெகுநேரமாகியும் திறக்காதிருப்பது ஆச்சர்யத்தைத் தந்தது. தெருமுனையில் இருக்கும் ஜாங்கிரி கடைக்காரரிடம் ``என்னண்ணா, கடை எல்லாம் திறக்காதா?'' என்று கேட்டோம். ``சில கடைகள் திறக்கும். தீபாவளியில, எல்லாரும் ஊருக்குப் போயிருப்பாங்க'' என்றார். குட்டிக் குட்டிக் கடைகள் நிரம்பியிருப்பது ரிச்சி ஸ்ட்ரீட் என்றால், பெரிய பெரிய தெருக்கள் நிரம்பியிருப்பது, பாரிஸ். அப்படியே பாரீஸுக்குச் சென்றோம். அங்கும் பேரமைதி!

அதுவரை தீபாவளிக் கொண்டாட்டத்தையே நாங்கள் பார்க்கவில்லை என்றுதான் கூறவேண்டும். பாரீஸிலிருந்து கிளம்பும்போதுதான் பார்த்தோம். வாழ்க்கையில் எதுவுமே இல்லாதவனின் உலகம் சின்னச் சின்ன விஷயங்களால் வரும் மகிழ்ச்சியால் நிரப்பப்படுகிறது. சாலையோரம் இருக்கும் மக்களின் கொண்டாட்டம் அத்தகையதுதான்.

ஜார்ஜ்டவுன் மசூதியின் முன்பு அமர்ந்திருந்த பெண்ணும் ஒரு சிறுவனும்

``அம்மா, உனக்கு புடிச்ச கலர்ல சட்டை வாங்கியிருக்கேன். நல்லாயிருக்கா?''

``நல்லாருக்கு. உனக்குப் புடிச்சிருக்கா?''

சட்டையைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே அவர்களது உரையாடல் நீண்டது. அம்மா, அந்தச் சிறுவனைக் கட்டியணைத்து முத்தமிட்டு ``அடுத்த தீபாவளிக்குப் பட்டாசும் வாங்கித் தர்றேன்'' என்றாள்.

இப்படியாக, இவர்கள் கொண்டாட்டம் செல்ல, மற்றொரு புறம் சிறுவர்கள் பிஜிலி பட்டாசை கையில் வைத்து வெடித்துக்கொண்டிருந்தனர். ``கையில வெச்சு வெடிக்காத...'' என்று சாலையோரக் குடிசைக்குள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்க ``போம்மா, இதுதான் கெத்து. கம்மினிரு’ என்று தனது தீபாவளி உலகுக்குள் நுழைந்துவிட்டான் அந்தச் சிறுவன். சிறுவர்களின் முகங்கள் பட்டாசுகளாலும் புது துணிகளாலும் கிடைத்த ஆனந்தப் பரவசத்தை வெளிகாட்ட, அம்மா-அப்பாக்களின் மனம் மகிழ்ந்தது அவர்கள் முகங்களில் தெரிந்தது.

வால்டாக்ஸ் சாலையில் போலீஸ்காரர்கள் நிறைய பைக்குகளைப் பிடித்து நிறுத்தியிருந்தனர். வழக்கம்போல வசூல்வேட்டையாக இருக்குமோ என்று அருகில் சென்றோம். ஹெல்மெட் போடாதவர்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி அறிவுரை கூறி வழியனுப்பிவைத்தனர். வால்டாக்ஸ் சாலை முதல் வியாசர்பாடி பாலம் வரை, சாலை வெறுமையுடன் எங்களைத் தாங்கிக்கொண்டு நீண்டது. இதுவரை பயணித்த பகுதிகளுக்கு நேர் எதிராக வடசென்னை பகுதிகளைக் காணலாம். ராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை என எல்லா இடங்களிலும் வெடித்துச் சிதறிய பட்டாசுகளின் பேப்பர்கள் சாலைகள் எங்கும் பரவிக்கிடந்தன. கலர்ஃபுல்லான ஆடைகளுடன் கூட்டமாகக் கும்மாளமிட்டுக்கொண்டிருந்தனர் பலர். ராயபுரம் பகுதி, மற்ற பகுதிகளைவிட கலகலப்பாகவே இருந்தது.

நெரிசல் இல்லாத மீன் மார்க்கெட், இறைச்சி வாங்க வரிசையில் நிற்கும் மக்கள், பிரேக் தி ரூல்ஸ் என்று பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருக்கும் சின்னச் சின்னச் சிறுவர்கள், ஒவ்வொரு ஷோவுக்கும் சரவெடிகளை வெடித்துத் தள்ளிய விஜய் ரசிகர்கள் என்று அமர்க்களமாக இருந்தது. 

பிரபலமான மால்கள், கோயம்பேடு பேருந்துநிலையம் என எல்லாமே காலியாகவே இருந்தன. மால்கள் தீபாவளிக்காக பல அலங்கார விளக்குகளோடு ஜொலித்தாலும், வேஷ்டி, சட்டை, பட்டுச்சேலை கட்டிக்கொண்டு காதலர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டு சுற்றித்திரிந்தாலும் மால் அதன் கலகலப்பை இழந்தே இருந்தது. தியாகராய நகர் தன்னுடைய வழக்கமான சென்னை வாடிக்கையாளர்களை வைத்து தப்பித்துக்கொண்டது. பரபரப்பான  உஸ்மான் சாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.  

டிராஃபிக் இல்லாத சாலைகள், திறக்காத ஹோட்டல்கள், யாரும் இல்லாத பேருந்துகள், கூட்டமே இல்லாத ரயில்கள் என, எங்கு சென்றாலும் சென்னை வழக்கத்துக்கு மாறாகவே இருந்தது. சென்னையைச் சுற்றி வந்தால், உண்மையிலேயே இது சென்னைதானா... இன்று தீபாவளிதானா என்ற சந்தேகமே வந்துவிடும் அளவுக்குப் பேரமைதி.