வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

கிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து!

கிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து!
பிரீமியம் ஸ்டோரி
News
கிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து!

புதிய திசைகள் ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

‘`கையெழுத்தைப் பற்றிப் படிக்கிற ‘கிராபாலஜி’ கோர்ஸ் பற்றி இங்கு பலருக்கும் தெரியவில்லை. அதில் வெற்றியாளராகப் பயணித்துக்கொண்டிருக்கும் என் அறிமுகம், மக்களுக்கு அந்தத் துறை மேல் நம்பிக்கை கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்’’ என்கிறார் பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப்பெண் சுசித்ரா தருண். தென்னிந்தியாவின் பிரபல கிராபாலஜிஸ்ட் (Graphologist).

``பெரிய முதலீடு எதுவும் தேவையில்லாத, ஆனால், லட்சக்கணக்கில் வருமானம் தரக்கூடிய இத்துறை பெண்களுக்குச் சிறப்பாகக் கைகொடுக்கும்'' என்கிறவர், அதைப் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

கிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து!

‘`என் அப்பாவின் பூர்வீகம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சுவாமிமலை. நான் வளர்ந்தது பெங்களூரில். சிறு வயதிலேயே தந்தையை இழந்தேன். நடுத்தரக் குடும்பங்களுக்கே உரிய பல சவால்களை எதிர்கொண்டு வளர்ந்தேன். பன்னாட்டு நிறுவனத்தில் பல வருடங்கள் பணிபுரிந்தேன். திருமணத்துக்குப் பின் மூன்று முறை கருச்சிதைவுக்கு ஆளாகி மன உளைச்சலால் அவஸ்தைப்பட்டேன். புது வாழ்வைத் தொடங்க, கையெழுத்து ஆராய்ச்சி கோர்ஸ் படித்தேன்’’ என்கிறவர், அந்த கோர்ஸின் இயல்பை விளக்குகிறார்.

கிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து!

‘`ஒருவரின் கையெழுத்தை அது அவருடையதுதானா என்று அடையாளம் காணவும், அந்தக் கையெழுத்தின் அடிப்படையில் அதை எழுதிய நேரத்தில் அவருடைய மனநிலையை ஆராயவும், கையெழுத்தின் மூலம் ஒருவரின் குணங்களை மதிப்பிடவும் செயல்படக்கூடிய துறையே கிராபாலஜி. அந்தக் கோர்ஸை முடித்த நான், 2014-ம் ஆண்டு `இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹேண்டு ரைட்டிங்' (handwritingiih.com) என்ற பயிற்சி அமைப்பைத் தொடங்கினேன். இதுவரை  இதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் படித்துப் பயனடைந்துள்ளனர். இப்போது கர்நாடகாவின் பல நகரங்களிலும் பயிற்சி மையங்களை நடத்திவருகிறேன். கிராபாலஜி கோர்ஸுடன், நாங்கள் கையெழுத்து சீர்திருத்தப் பயிற்சிகளும் அளிக்கிறோம். இந்தப் பயிற்சிகள், மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை மற்றும் நடத்தையிலும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த கைகொடுப்பதால்,  நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது’’ என்கிற சுசித்ரா, கர்நாடக நீதிமன்ற வழக்குகளில் கையெழுத்துப் புலனாய்வாளராகவும் ஆலோசகராகவும் பணிபுரிகிறார். ஒரு வழக்கு குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘`நீதிமன்றத்தில் விவாகரத்து கோரிய கணவர் ஒருவர், தன் மனைவிக்குத் திருமணத்தை மீறிய உறவிருப்பதாக கூறியதுடன், அந்த ஆணுக்கு அவர் எழுதிய கடிதங்களை ஆதாரமாகவும் கோர்ட்டில் சமர்ப்பித்தார். கடிதங்களைப் புலனாய்வு செய்ததில், அவை ஆணின் கையெழுத்தை ஒத்திருப்பதை அறிந்தேன். இதை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு முன், விவாகரத்து கேட்ட கணவரை என் அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தேன். நேரடியாக விஷயத்துக்கு வராமல், பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் வசிக்கும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட தெருவுக்கு வழி கேட்டேன். என் மேஜையில் இருந்த பேப்பரில் ரூட் மேப்பை அவர் எழுதிக் காட்டினார். அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த காதல் கடிதங்களையும், என் அலுவலகத்தில் எழுதிய பேப்பரையும் ஆய்வு செய்து, அந்தக் கடிதத்தில் இருப்பது அவருடைய கையெழுத்தே... ஸ்ட்ரோக்குகளை மாற்றி எழுதியிருந்தார் என்பதை ஆய்வு செய்து அவர் தன் மனைவி மீது அபாண்டமாகப் பழி சுமத்தியதை ஆதாரங்களுடன் நிரூபித்தேன்’’ என்கிறவர், பயிற்சி மையங்கள், வழக்கு புலனாய்வுகள், பயிற்சிப் பட்டறைகள் என இந்தத் துறையில் வருமானம் பார்க்கிறார்.

‘`கூடிய விரைவில் தமிழகத்தில் பயிற்சிப் பட்டறைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். மாணவர்களுக்குப் புதிய திசைகளைக் காட்ட வேண்டும்’’ என்கிறார்.

கையெழுத்தால் தலையெழுத்து மாறட்டும்!