Published:Updated:

மூன்றாம் உலகப் போர்

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

##~##

மிலி வந்துவிட்டாள்.

 கருத்தரங்கம் தொடங்கிவிட்டது காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில். பந்தயமிட்டுக்கொண்டு முன்னேறின பரபரப்பும் சுறுசுறுப்பும். ஒன்றோடொன்று கைகுலுக்கிக்கொண்டன படித்த அவசரங்கள். முன்னொரு கருத்தரங்கில் மாட்டிக் கழற்றிய கோட்டு சூட்டுகள் செலாவணியாகத் தொடங்கிவிட்டன மீண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விட்டுவிடுதலையாகாத சிட்டுக்குருவியாய்ச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான் சின்னப்பாண்டி.

பொதுவாகக் கருத்தரங்கென்பது அரங்கு நிறையாத இரங்கல் கூட்டம் என்றே அறியப்படும்; அல்லது அறிவுஜீவிகள் ஆடுகின்ற விடைத்த புலமை விளையாட்டு என்றே கருதப்படும். முற்றிலும் மாறுபட்டிருந்தது நிலைமை அன்று மட்டும். அனைத்திந்தியக் கருத்தரங்கம் அனைத்துலகக் கருத்தரங்கமாய் மாறிப்போனதில் எமிலியின் வருகைக்குக் கணிசமான பங்கு உண்டு.

துணைவேந்தர்களும், விஞ்ஞானிகளும், பேராசி ரியர்களும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களும் அமர்ந்திருந்த மேடையில், எமிலியும் இருந்தாள் ஒரு நட்சத்திர நந்தவனமாய்.

அது வரைக்கும் அவளது அறிவை மட்டுமே வியந்த மாணவர்கள் இப்போது அவள் அழகை ஆராதிக்கிறார்கள்.

மூன்றாம் உலகப் போர்

தங்கப் பாறையைக் குடைந்து செய்த சிற்பச் சிலை அவள். அழகின் முட்டையை இளமை அடைகாத்துப் பொரித்த கிளிக் குஞ்சு. ரோஜாவின் உள்ளிதழில் தங்கம் தடவிய நிறம். அதில் மின்னலை உறையவைத்து முலாம் பூசிய பளபளப்பு. கடைந்து செய்த கத்தியாய் நாசி. விளைந்த தேன் பாய்ந்து கனிந்த அதரங்கள்.

பூரணத்தில் ஊறிய நிலா அவள் பொன் முகம். கதவு இடுக்கு வழியே சொர்க்கம் பார்க்கும் அனுபவம் முற்றும் ஆடை மூடாத அவள் முன்பாரங்கள். அட்லாண்டிக் கடல்காரிக்கு அரபிக் கடல் மார்பகங்கள். சூரியகாந்திச் செடி யில் இளநீர் காய்த்ததுபோல் என்று சொன்னால் சொன்னவனுக்கும் சொர்க் கம் கிடைக்கும்.

''இடை சிறுத்ததால் தனம்    பெருத்ததோ

தனம் பெருத்ததால் இடை  சிறுத்ததோ''

ஷேக்ஸ்பியர் செயங்கொண்டானாகி இருப்பான் இன்றிவளைக் கண்ணுற்றிருந்தால்.

நெற்றியில் சரிந்து விழும் பொன் கூந்தலை அவள் இடக் கையால் இடறிச் சரிசெய்யும் அழகுக்குக் கணிசமான ரசிகர்களைப் பெற்றுவிட்டாள் அமர்ந்த ஐந்தாம் நிமிடத்தில். அடுத்து நிலா தனது கை தூக்கி எப்போது முகில் விலக்குமென்று காத்திருக்கத் தொடங்கிவிட்டார்கள் முதிரா இளைஞர்களும் முதல்நரை விழுந்தவர்களும்.

கால் மேல் காலிட்டு வேறு அமர்ந்திருந்தது அந்த அமெரிக்கச் சுதந்திரம்.

அவள் வளைவில் எழுதித்தான் வைக்கவில்லை அபாய வளைவு என்று.

தவறி விழுந்த கைக்குட்டையை மறு கணமே குனிந்து எடுத்துக்கொண்டாள் எமிலி. ஆனால், மீண்டும் எடுத்துக்கொள்ளவே முடியவில்லை அதே தருணம் தவறி விழுந்த சில வாலிபர்களின் இதயங்களை.

மூன்றாம் உலகப் போர்

கிறிஸ்துவப் பெண்களைத்தான் இப்படி அழகாகப் படைத்துத் தொலைப்பாயா பிரம்மா என்று சபையில் இதயம் புழுங்கிப்போனார் ஓர் இந்துத்துவவாதி.

தமிழ்த் தாய் வாழ்த்து.

எமிலியை எழுந்து நிற்கச் சொல்லி சாடை காட்டினான் சின்னப்பாண்டி.

வழக்கம் போல் சோகமானதொரு தொனியில் வரவேற்புரையும் உணர்ச்சியை ஒழித்துக் கட்டிய நேர்த்தியான நேர்த்திக்கடன்களும் ஓய்ந்த பிறகு கழுத்தில் கிடந்த சந்தனச் சுருள் மாலையைக் கழற்றாமலேயே ஒலி பெருக்கி முன்னால் உயரப் பிரசன்னமானாள் எமிலி.

''வண்க்கம்...''

தப்பான தமிழுக்குக் கரவொலி அறுவடை செய்தாள். அவள் இருமினாலும் தும்மினாலும் கை தட்டத் தயாராகிவிட்டார்கள் இளைஞர்கள்.

''வண்க்கம் என்ற ஒலிக் கூட்டில் எனக்கு வெல்கம் என்று கேட்கிறது. இரண்டு சொற்களும் ஓசையிலும் பொருளிலும் ஒன்றுபோல் திகழ்வது, தற்செயலானது என்றாலும் சந்தோஷம் தருவது.

நான் இந்தியாவை நேசிக்கிறேன். காரணம், இந்த உலகத்தின் ஒவ்வோர் அணுவையும் நேசிக்கிறேன். உலகம், உயிர்களைச் சார்ந்திருக்கிறது. உயிர்கள், உணவைச் சார்ந்திருக்கின்றன. உணவு, விவசாயம் சார்ந்திருக்கிறது. இந்தியா, விவசாயத்தைச் சார்ந்திருக்கிறது.

இந்தக் கருத்தரங்கில் இந்திய விவசாயத்திற்குச் சில கேள்விகள் காத்திருக்கின்றன. இன்று உலக விவசாயத்தின் நாற்பது விழுக்காட்டு நிலங்கள் ஈனும் சக்தியை இழந்திருப்பதாக அறியவருகிறோம். அதில் இந்திய நிலங்களும் அடங்கும். இந்திய விவசாயம் இறங்கு முகத்தில் இருக்கிறது என்பதற்காக வருத்தப்படுவோர் வரிசையில் நானும் இருக் கிறேன்.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஆஸ்தி ரேலியாவுக்குப் பஞ்சாப் கோதுமையை ஏற்றுமதி செய்த இந்தியா, இன்று ஆஸ்திரேலியாவிடம் இருந்து இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது. இந்த விவசாய வீழ்ச்சிக்குப் புவி வெப்பமாதல் ஒரு பெருங்காரணம் என்பதை நீங்கள் புறந் தள்ளிவிட முடியாது. 2004-இல் தெற்காசிய நாடுகளை இடம்மாற்றிப் போட்ட சுனாமிக்கு, வெப்ப நிலை மாற்றமும் புவிச் சூடும் பெரும் துணைக் காரணங்கள் என்பதை நாம் நிராகரித்து விட முடியாது.

ஓர் உணவுப் பஞ்சத்துக்குள் இந்த உலகம் நுழையப்போகிறது. நான் என் பேச்சைத் தொடங்கி இரண்டு நிமிடங்கள் ஆகின்றன. இந்த இரண்டு நிமிடங்களில் ஊட்டச்சத்துள்ள உணவின்மையால் 20 குழந்தைகள் இறந்து முடிந்திருக்கின்றன.

மண்ணையும் விண்ணையும் நாம் பாதுகாக்காவிடில், புதைக்க ஆளற்றுப் போகும் தேசங்களை நம் காலங்கள் கடக்க நேரிடும்.

பொருந்தாத விகிதத்தில் கூடிக்கொண்டே போகிறது புவிச் சூடு. 2,100-ல் உலகின் சராசரி வெப்ப நிலை 1.40 டிகிரி செல்சியஸில் இருந்து 5.8 டிகிரி செல்சியஸாக உயரக்கூடும்.

வெப்ப நிலை ஏற்றத்தாழ்வுகளால் பசிபிக் பெருங்கடலில் ஒரு காற்றுப் பிழை நேரப்போகிறது. கிழக்கு மேற்கு என்று வீசிவந்த காற்று, மேற்கு கிழக்கு எனக் கட்சி மாறப்போகிறது. காற்றுப் பிழையால் நேரும் காலப் பிழையால், மேற்கு பசிபிக் மட்டும் பெருமழை பெறப்போகிறது. தெற்காசியாவையும், இந்தியாவையும், ஆப்பிரிக்காவையும் மழை மறுக்கப்போகிறது அல்லது சுருக்கப்போகிறது. புவிச் சூடு என்ற பூதம் இந்த பூமியை விழுங்காதிருக்க ஒரு காரணத்தை இந்தக் கருத்தரங்கம் கண்ட டையுமா? மேலும்...''

அவள் பேச்சைத் தொடருவதற்குள், 'மன்னிக்க வேண்டும்’ என்று இடித்தது ஒரு பெருங்குரல். குரல் நோக்கித் திரும்பியது கூட்டம். தலைப்பாகை, தாடி பார்த்துத் திடுக்கிட்டது.

ஓ... உத்தம் சிங்!

லூதியானா பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர்; கருத்தரங்குகளின் கலகக்காரர்; எதிராளியின் பதிலைவிடத் தன் கேள்விகளையே நேசித்துக்கொண்டுஇருப்பவர். தகரப் பெட்டிக்குள் ஒலிக்கும் கூழாங்கல் குரலில் அவர் ஆரம்பித்தார்:

''அமெரிக்க விருந்தாளிக்கு என் வாழ்த்து. புவிச் சூடு குறித்த உங்கள் கருத்தில் நான் மாறுபடுகிறேன். ஆங்கிலத்தில் சொல்லப்படுவதால் உங்கள் பொய்கள் அழகாக இருக்கின்றன. ஆனால், உண்மை ஆங்கிலத்தைவிட அழகானது. புவி வெப்பம் என்பது பொய்யின் விஸ்வரூபம். வளர்ந்த நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் மீது விடுக்கும் விஞ்ஞான மிரட்டல். சூடும் குளிர்ச்சியும் பூமியின் குணங்கள் - இருளும் ஒளியும் போல. மாறுதல் ஒன்றுதான் பூமியின் மாறாத தன்மை. மாறிக்கொண்டு இருக்கும் வரைதான் பூமி உயிரோடு இருக்கும். இழந்த ஒவ்வொன்றும் பூமியால் ஈடுகட்டப்படும். தன் முரண்களைச் சமன்செய்துகொள்ளும் சாமர்த்தியம் உள்ளது பூமி. சொல்லுங்கள், புவி வெப்பம் என்பது விஞ்ஞானிகளின் கற்பனையா, இல்லையா?''

அச்சடித்த புன்னகை மாறாமல் அவர் கேள்வியை உள்வாங்கிக்கொண்ட எமிலி இப்போது பேசலானாள்:

''உங்கள் கேள்வியை நான் மதிக்கிறேன்; ஆனால், ரசிக்கவில்லை. ஆங்கிலத்தில் சொல்லப்படும் அழகான பொய்கள் என்றீர் கள் என் உரையை. பொய்களுக்குத்தான் மொழி தேவை; உண்மைகளுக்கல்ல. ஓர் உண்மை சொல்லுகிறேன் உங்களுக்கு. சமன்செய்துகொள்ளும் சக்தியை பூமி இழந்துவிடுமோ என்பதுதான் என் கவலை. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகச் சூடு 0.74 டிகிரி செல்சியஸ் கூடியிருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளில் இப்படிச் சூடு கூடியது இல்லை பூமி. வெப்பத்தைக் குறைக்க வேண்டும் என்கிறேன் நான்; கருத்தரங்கின் வெப்பத்தைக் கூட்டியிருக்கிறீர்கள் நீங்கள். நன்றி.''

கருத்தரங்கத்தின் வெற்றிடத்தைக் கைதட்டல் நிரப்பியது.

''என் பெயர் ரீமா கங்கோபாத்யாய'' என்றது இன்னொரு திடீர்க் குரல். அந்தப் பருத்திப் புடவை மீது பாய்ந்தன எல்லாக் கண்களும்.

''கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேளாண் விஞ்ஞானி நான். எனக்கொரு கேள்வி. புவி வெப்பமாகிறது என்பது உண்மை. ஆனால், அதற்கு மனிதர்கள் காரணம் இல்லை என்பது இன்னொரு பேருண்மை. பூமி என்பது ஓர் உயிரி என்றார் விஞ்ஞானி ஜேம்ஸ் லவ்லாக். அது தன்னைத்தானே வடிவமைத்துக்கொள்ளும் தகுதி மிக்கது என்றும் சொன்னார். அதனால் புவி வெப்பம் பூமியைப் பாதிக்கும் என்று நான் நம்பத் தயாராக இல்லை. புவிச் சூடு என்பது அறிவுஜீவிகளின் பிழைப்புக்கான இன்னொரு தலைப்பு.''

எமிலி பதில் சொல்லத் தொடங்கும் முன் ஓர் இடதுசாரிக் குழு எழுந்தது.

மூன்றாம் உலகப் போர்

''மனிதர்கள்தான் பூமியைச் சுடவைக்கிறார்கள் என்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், எரிசக்தி எரித்து கரியமில வாயுவால் ஓசோன் கூரை கிழிக்கும் பட்டியலில் ஆறாம் இடத்தில்தான் இருக்கிறது இந்தியா; முதல் இடத்தில் இருக்கிறது அமெரிக்கா. நீங்கள் அறிவுறுத்த வேண்டியது அமெரிக்காவுக்குத்தான். இந்தியாவுக்குஅல்ல.''

இடதுசாரிகள் இதயத்தில் இருந்துதான் சொன்னார்கள். அதனால் கருத்தரங்கில் பல பேருக்கு 'திடீர் நாட்டுப் பற்று’ தீப்பற்றி எரிந்தது.

''இந்தியாவை இழிவு செய்யாதே!''

''அமெரிக்கப் பெண்ணே... திரும்பிப் போ!''

ஆங்காங்கே வெடித்தன 'ஆயத்த’ கோஷங் கள்.

ஒரே குழப்பம்... காந்தி கிராமத்தில் கோட்சே புகுந்த மாதிரி. தன் தடம் இறங்கிக் கூச்சலின் பள்ளத்தாக்கில் கவிழ்ந்துவிட்டது கருத்தரங்க ரயில்.

''நான் கேள்வி கேட்க அல்ல, பதில் சொல்லவே ஆசைப்படுகிறேன்.'' அத்தனை கூச்சலுக்கு மத்தியிலும் மெத்தப் பணிவாக... ஆனால் அழுத்தமாக ஒலித்தது ஓர் அந்நியக் குரல்.

அந்த வித்தியாச மனிதனின் உடல் மொழியால் ஈர்க்கப்பட்ட துணைவேந்தர், ''நீங்கள் மட்டும் மேடைக்கு வரலாம்'' என்று அதிகாரபூர்வமாக அழைத்தார்.

அந்த மஞ்சள் மனிதன் மேடைக்கு வந்தான்; உடலைத் தட்டை செய்து சபையை வணங்கி னான்.

சுடு மணலில் விழுந்த ஒற்றை மழைத் துளியாய்ச் சட்டென்று வற்றிப்போனது சப்தம்.

''என் பெயர் இஷிமுரா - ஜப்பானியன். விஞ்ஞானம் படித்த ஒரு விவசாயி மகன். அண்மைச் சுனாமியில் தாய்-தந்தை இழந்தவன். ஆனால், அனாதை அல்ல. புத்தரோடு நான் இருக்கிறேன்; என்னோடு புத்தரும் இருக்கிறார். பேரரறிவாளர்களே..! என் ஆங்கிலத்தில் பிழை இருக்கலாம்; கருத்தில் இருக்க முடியாது என்று நம்புகிறேன். என் தாய் மொழியில் நான் பேசுவது எனக்கு ஜப்பானில் சைக்கிள் ஓட்டுவது மாதிரி; ஆங்கிலத்தில் பேசுவது இந்தியாவில் நான் கார் ஓட்டுவது மாதிரி. என் மொழியை நிராகரித்துவிட்டுக் கருத்தை ஏற்றுக்கொள் ளுங்கள்.

அந்த அழகிய அமெரிக்கப் பெண்ணின் கருத்துகளுக்கு நீங்கள் இன்னும் கொஞ்சம் காது கொடுத்திருக்கலாம். நீங்கள் மறுத்தது எமிலியின் கருத்தை அல்ல; அவள் வயதை. இதே கருத்தை ஒரு மூதாட்டி முன்மொழிந்து இருந்தால், நீங்கள் வழிமொழிந்திருக்கக் கூடும்.

கருத்து ஒரு தீப்பொறி. அது யாரிடம் இருந்தும் பற்றலாம். தீக்குச்சிகள் உரசிப் பற்றாமலும்போகலாம்; மூங்கில்கள் உரசியும் மூண்டுவிடலாம். தீக்குச்சிக்கு மட்டுமே சொந்தம் இல்லை நெருப்பு; தீக்கடைக் கோல்களுக்கும்தான். உங்களில் யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. ஆனால் உண்மை வலித்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

புவி வெப்பமாதல் பொய் என்ற கூற்றை மென்மையான வார்த்தைகளால் வன்மையாக மறுக்கிறேன். கொல்கத்தா சீமாட்டியின் கேள்விக்கு ஒரு பதில் வைத்திருக்கிறேன். பூமி ஓர் உயிரி - அது தன்னைத்தானே சமன்செய்துகொள்ளும் தகுதிமிக்கது என்று ஜேம்ஸ் லவ்லாக் சொன்னது உண்மைதான். ஆனால், அது மாஜி உண்மை. அந்த வரம்புகளைத் தாண்டி பூமி வெகு தூரம் போய் விட்டது என்று அப்புறம் சொல்லி இருப் பதும் அவரேதான்.

துருவப் பனிகள் உருகப் பத்தாயிரம் ஆண்டுகள் ஆகுமென நம்பினார் லவ்லாக். ஆனால் பனிப் பாறைகளில் விழுந்த விரிசல், கடைசியில் அவர் நம்பிக்கையிலும் விழுந்து தொலைத்தது. 1.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை வரைக்கும்தான் சமன்செய்துகொள்ளும் சக்தி படைத்திருக்கும் பூமி. அது 2 டிகிரி செல்சியஸை எட்டிவிட்டால், எதிர்ப்புச் சக்தியை இழந்துவிடும். பூமியின் கிரீடம் மட்டும் அல்ல; கபாலம்கூடக் கழன்றுவிடும். இந்தியாவின் வடக்கே பயணித்துவிட்டுத் தெற்கு நோக்கித் திரும்பி இருக்கிறேன். புவிச் சூடு இந்தியாவை எப்படி எல்லாம் தடம் மாற்றிப்போட்டு இருக்கிறது என்பதற்குச் சான்று சொல்கிறேன்.

•  உத்தரகாண்ட்டிலும் இமாச்சலப் பிரதேசத்திலும் பனியும் மழையும் குறைந்ததால், 9,000 அடியில் விளைந்த ஆப்பிள் தோட்டங்கள் 12,000 அடிக்கு மலையேறிவிட்டன.

•  எங்கள் நாட்டில் யாருமே நினைக்கவில்லை - இமயமலை அடிவாரத்தில் மின் விசிறிகளுக்கான சந்தை ஒன்று தோன்றும் என்று.

• மழைக் காலம் ஏப்ரலுக்கு மாறிப்போனது. அதை அறியாமல் வழக்கமாய்ப் பூக்கிற ஆப்பிள் மலர்கள் மழையால் துடைக்கப்பட்டுவிடுகின்றன - தென்னிந்தியாவின் மாந்தோப்பு மலர்களைக் காலம் தப்பிய மழை கழுவிவிடுவது மாதிரி. பயிர்களில் தங்கம் வளர்க்கும் பஞ்சாபில் ஒரு டிகிரி வெப்பம் கூடியதில் 4.5 மில்லியன் டன் குறைந்து விளைகிறது கோதுமை.

•  வடக்கே கோதுமை - தெற்கே நெல் இதுதான் இந்தியாவின் தானியக் கலாசாரம். நூறு நாட்களில் நான்கு பருவங்கள் வேண்டும் தமிழ்நாட்டு நெல்லுக்கு. ஒரு மழை - ஒரு குளிர் - ஒரு பனி -  ஒரு வெப்பம் என்ற நான்கு பருவங்கள் நிலைகொண்டு உள்ளன ஒரு நெல்மணியில். ஆனால், புவிச் சூட்டில் பருவங்கள் மாறிப்போனதில் தலை சுற்றிப்போனான் தமிழ்நாட்டு விவசாயி. கடைசியில் மனிதனுக்கு நட்ட நெல் மாட்டுக்கும் தேறவில்லை.

•  மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில்இருந்து வருகிறேன். என்னை மன்னிக்க வேண்டும் - என் இதயத்தைப் பிடித்துக்கொண்டு இதைச் சொல்லுகிறேன். உணவுஇல்லாதவன் செத்துப்போன தேசங்களைப் பார்த்திருக்கிறேன். உணவு தருகிறவன் செத்துப்போவதை இங்குதான் பார்க்கிறேன். வெடித்த பருத்திக்கு விலை இல்லை என்ப தனால், தற்கொலை செய்துகொண்டார்கள் விதர்பா விவசாயிகள். ஏன் விலை இல்லை? உலக வர்த்தக அமைப்பின் புதிய கொள்கை கள் உறிஞ்சிவிட்டன அவர்கள் உயிரை. வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயிகளுக்குக் கொடுத்த மானியத்தால் சர்வதேசச் சந்தை யில் சரிந்துவிட்டது பருத்தி விலை. விலை இல்லாத இந்தியப் பருத்தி வெடிக்கும்போதே கறுப்பாக வெடித்தது. அது ஆயிரக்கணக்கில் விவசாயிகள் உயிரைக் குடித்தது. கடைசியில் இந்தியாவில் வழங்கப்பட்ட குறைந்த மானியம் பயன்பட்டது மரணச் செலவுக்கு.

•  இந்தியா மட்டுமல்ல உலகமே புவிச் சூட்டில் உருகத் தொடங்கிவிட்டது. இதோ என் கைத் தொலைபேசியில் பதிவாகிஇருக்கும் உலக உண்மைகளைச் சொல்லப் போகிறேன் உங்களுக்கு.

•  2050-ல் இன்னும் 23 கோடி மக்கள் புதிதாக வரப்போகிறார்கள் பூமிக்கு. ஆனால், மூன்று சதவிகிதமாக இருந்த உலக தானிய உற்பத்தி இன்று ஒரு சதவிகிதமாகக் குறைந் திருக்கிறது.

•  உணவுப் பிரச்னைதான் இங்கு உயிர்ப் பிரச்னை என்று எமிலி சொன்னதில் என்ன பிழை? ஆப்பிரிக்காவின் மண்ணின் வளம் இப்போது வீழும் விகிதத்தில் விழுந்துகொண்டே போனால், 2025-ல் 25 சதவிகித மக்களுக்கு உயிரை ஒட்டிவைக்க ஒரு பருக்கை இருக்காது.

•  புவிச் சூடு ஆண்டுக்கு மூன்று லட்சம் மக்களைக் கொன்றுவிட்டுப் போகிறது.

•  85 கோடி மக்கள் ஊட்டச்சத்து இல்லாமல் வாழ்கிறார்கள் உயிரைப் பிடித்து.

•  உலகத்தின் 10 கோடி மக்கள் கடல் மட்டத்தில் இருந்து மூன்று அடி உயரத்தில் தான் வாழ்கிறார்கள்.

•  இப்போதுள்ள கடல் மட்டம் மூன்று அடி கூடினால், வங்கதேசத்தில் ஏழு கோடி மக்கள் இடம்பெயர நேரிடும். புவிச் சூடு கட்டுப்படுத்தப்படாவிட்டால், இது நேரவே நேரும்.

•  எமிலி மொழியில் சொல்வதானால், இயற்கைக்கு எதிராக மனிதன் தொடுத்துவிட்ட மூன்றாம் உலகப் போர் மூண்டுவிட்டது.

• ஆயுதங்கள் தலைமை தாங்கும் மூன்றாம் உலகப் போர் மூண்டிருந்தால், மானுடம் இருக்காது. இப்போது மூண்டிருக்கும் இந்த மூன்றாம் உலகப் போரை நிறுத்தாவிட்டால், மண்ணகம் இருக்காது.

அன்பு கூர்ந்து விழித்துக்கொள்ளுங்கள்; அதற்கு முன் இந்த அழையா விருந்தாளியை மன்னித்துக்கொள்ளுங்கள்.''

மீண்டும் உடம்பைத் தட்டையாக்கி வணங்கினான் இஷிமுரா.

ஓர் அனிச்சைச் செயலாக ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது. கலகம் செய்தவர்களும் கைதட்டிக்கொண் டார்கள் ஓசையில்லாமல். ஒரு புலி போல் தாவி மேடை ஏறினான் சின்னப்பாண்டி. இஷிமுராவைக் கட்டியணைத்துச் செந்தூக் காகத் தூக்கினான்.

''என்னை உயரமாக்கிவிட்டீர்கள்'' என்றான் இஷிமுரா.

''உயர்த்தாமலே நீங்கள் உயர்ந்தவர்தான்'' என்றான் சின்னப்பாண்டி.

''இருவரும் சேர்ந்து என்னைக் குட்டையாக்கிவிட்டீர்கள்'' என்றாள் எமிலி.

மூன்றாம் உலகப் போர்

அரங்கம் கரவொலியால் நிரம்பி வழிந்துகொண்டிருந்த வேளையில், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களின் காதுகளோடு எதையோ கலந்துரையாடிக்கொண்டிருந்த துணைவேந்தர், கரவொலி தேய்ந்தடங்கத் தொடங்கியபோது ஒலிபெருக்கியோரம் ஒதுங்கினார்.

''ஓர் இனிய அறிவிப்பு. ஆட்சி மன்றக் குழுவின் அனுமதியோடு இதை அறிவிக்கிறேன். எமிலியும் இஷிமுராவும் அவர்களால் முடியும் வரை அல்லது அவர்கள் விசா முடியும் வரை எங்கள் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியர்களாகப் பணியாற்றலாம். இந்தக் கருத்தரங்கம் முடிவதற்குள் முறையான ஆணை வழங்கப்படும்.''

மீண்டும் கரவொலி திரண்டது.

சின்னப்பாண்டி - எமிலி - இஷிமுரா மூவரின் உதடுகளிலும் ஒரே புன்னகை ஓடி முடிந்தது.

- மூளும்