வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அவளுக்குச் சிரிக்கவே உரிமையில்லையே! - ஊர்வசி

அவளுக்குச் சிரிக்கவே உரிமையில்லையே! - ஊர்வசி
பிரீமியம் ஸ்டோரி
News
அவளுக்குச் சிரிக்கவே உரிமையில்லையே! - ஊர்வசி

எனக்குள் நான் எழுத்து வடிவம் : ஆர்.வைதேகி

வெள்ளந்தியான புன்னகையிலும் வெறும் பார்வையிலுமே மற்றவர் களைச் சிரிக்கவைப்பவர் நடிகை ஊர்வசி. திரையில் சார்லி சாப்ளினின் பெண் உருவாகத் தெரிபவர், நிஜத்தில் பாசக்கார அம்மா; நேசக்கார மனைவி.  பாப்பிலோன் முதல் ஐதீகமாலா வரை எல்லாம் வாசிக்கிறார். மொழி, இலக்கியம், ஆன்மிகம் என எதைப் பற்றியும் பேசுகிறார். வைக்க இடமின்றி விருதுகளால் நிறைந்திருக்கிறது அவர் வீட்டின் வரவேற்பறை. அவற்றில் பல, வருடம் தவறாமல் வரிசைக்கட்டி நிற்பவை.

நம்முடனான ஒன்றரை மணி நேர உரையாடலில், ஓராயிரம் முறை தன் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் வாசலை எட்டிப்பார்த்திருப்பார். எந்த ஊரிலும், எந்த வயதுக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் குறித்த கவலையும் கோபமும் அவரின்  பேச்சில் தெறிக்கின்றன.

ஊர்வசியின் மறுபக்கம் பிரமிப்பானது. சிரிக்க வைப்பவருக்குச் சிந்திக்கவைக்கவும் தெரிந்திருக்கிறது. நிறைய பேசுகிறார்...

அவளுக்குச் சிரிக்கவே உரிமையில்லையே! - ஊர்வசி

ஊர்வசியானது எப்படி?

எந்தக் கஷ்டமும் இல்லாமல் நடிகை ஆனவள் நான். டீச்சர் கனவோடு வளர்ந்த சராசரி நடுத்தரக் குடும்பத்துப் பெண் நான். உலகத்திலேயே உயர்ந்தவர் ஆசிரியர் என்பது என் எண்ணம். என் அக்கா நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்குத் துணையாகப் போனேன். அக்கா அப்போது மலையாளப் படங்களில் பயங்கர பிஸி. அவரால் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார். ஒரு மாதம் கழித்து, `உங்ககூட வந்த பொண்ணுக்கு ஒரு கேரக்டர் இருக்கு...’ என அக்காவுக்கு போன். விளையாட்டாக அந்தப் படத்தில் நடித்தேன். அடுத்து நூறு படங்களில் நடித்து முடித்த பிறகும்கூட என் டீச்சர் கனவு கலையவில்லை. இனிமேல் பள்ளிக்கூடம் போக முடியாது என்பதை உணரவே, எனக்கு நூறு படங்களுக்கு மேலானது. ஒவ்வொரு படம் பண்ணும்போதும், அதை முடித்ததும் மீண்டும் ஸ்கூலுக்குப் போகலாம் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அது நடக்கவில்லை.

என் வீட்டில் எல்லோருமே நடிகர்கள்தான். எனக்கோ எழுத்தில்தான் ஆர்வம். மலையாளப் பட ஜாம்பவான்களான திலகன், நெடுமுடி வேணு, மம்மூட்டி, மோகன்லால், சுகுமாரி போன்றோர் நடிப்பின் மீதுகொண்ட நேசத்தை உணர்ந்த பிறகுதான் எனக்கும் அது புரிய ஆரம்பித்தது. `உலகத்துலேயே டப்பாவுல சோறு கட்டி எடுத்துட்டுப் போகாத வேலை நம்ம வேலைதான். முன்கூட்டியே சம்பளமும் கொடுத்து, தங்குற இடம், சாப்பாடுனு எல்லாம் இலவசமா கொடுக்கிற வேலை இது மட்டும்தான்’ என மனோரமா ஆச்சி ஒருமுறை சொன்னார். அதை உணர்ந்த பிறகு நடிப்பு எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. நடிகையாகிவிட்டால் மெள்ள மெள்ள ஸ்க்ரிப்ட் எழுதவும், டைரக்ட் பண்ணவும்கூட முயற்சி செய்யலாம் என நினைத்தேன். அந்தச் சமாதானம்தான் என்னை நடிப்பில் நிலைக்கவைத்தது. இன்றுவரை தொடர்ந்து ஒரு மாதம்கூட படம் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்ததாக ஞாபகமில்லை. மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் என ஏதோ ஒரு மொழியில் பிஸியாவே இருக்கிறேன்.

நடிப்பில் நகைச்சுவை இயல்பாக வந்ததா?

ஆரம்பத்திலிருந்தே சோகமான கதாபாத்திரங்களைத் தவிர்த்து பாசிட்டிவாக நடிப்பதில் கவனமாக இருந்திருக்கிறேன். எனக்கு நகைச்சுவை வரும் என நினைத்துகூடப் பார்த்ததில்லை. பயங்கர இன்ட்ரோவெர்ட் நான். நடிப்பில் கொஞ்சம் நகைச்சுவை கலந்து நடிப்பதை ஸ்ரீதேவி மட்டும்தான் முயன்றார்.  அப்படி நடித்தால் என்ன என, நானும் ஒன்றிரண்டு படங்களில்  முயன்றேன். அதைப் பார்த்துவிட்டுச் சிலர் அப்படிப்பட்ட ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பித்தனர். சக நட்சத்திரங்களும் டைரக்டர்களும் அதற்கேற்றபடி அமைந்தார்கள்.

கமல் சாருடன் நடிக்கும்போது அது தனியே ஸ்பெஷலாகத் தெரியும். அவரது டைமிங் சென்ஸ் அடுத்தவர்களையும் இன்ஃப்ளூயன்ஸ் பண்ணும். `மைக்கேல் மதன காம ராஜன்’ வரும் வரை நான் காமெடி செய்வேன் என யாருக்கும் தெரியாது. அதன் பிறகு  அப்படிப்பட்ட கேரக்டர்கள் வரிசையாக வந்தன. நகைச்சுவை கேரக்டர்களில் நடிப்பவர்களுக்கு முதுமை தெரியாது. புத்தர், தன் கடைசிக்காலத்தில் நகைச்சுவையாகப் பேசும் நபராக மாறினாராம். சிரிக்கும்போதும் சிரிக்கவைக்கும்போதும் நம் உடலில் உள்ள செல்கள் இளமையாகின்றன. கோபம், அழுகை என வேறு எந்த உணர்வையும் பொது இடத்தில் வெளிப்படுத்தலாம். ஆனால், நகைச்சுவை அப்படியல்ல. ஹ்யூமரும் செக்ஸும் மிக ஜாக்கிரதையாக வெளிப்படுத்த வேண்டிய உணர்வுகள். நம்மைப் பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் மட்டுமே இந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.

அவளுக்குச் சிரிக்கவே உரிமையில்லையே! - ஊர்வசி

நவரசங்களில் ஹாஸ்யத்துக்கு மட்டும் ஏன் அப்படியோர் இடம்? அது மிகப்பெரிய ஆயுதம், கேடயம்.  ஜாக்கிசான் படங்களில் ஆக்‌ஷன் இருந்தாலும் அதிலுள்ள நகைச்சுவைதான் குழந்தைகளை ஈர்க்கும். சங்கீதமும் ஹாஸ்யமும் சர்வதேச மொழிகள். நகைச்சுவை என்பது, தானாக வருவது. எனக்கான நகைச்சுவைக் களம் என் வீடுதான். அம்மாவின் நகைச்சுவை உணர்வு அபாரமாக இருக்கும். தான் உயிருடன் இருக்கும்போதே மகளைப் பறிகொடுக்கும் சோகத்தையெல்லாம் கடப்பது என்பது சாதாரணமானதல்ல. என் அம்மா அப்படியொரு திட மனுஷி. அவரிடம் எப்போதும் ஹாஸ்யத்துக்குக் குறைவிருக்காது.

சினிமாவில் இன்றைய நகைச்சுவையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரியாலிட்டி ஷோஸ் மூலம் நிறைய திறமையாளர்கள் வருகிறார்கள். ஆனால், அவர்களையும் அறியாமல் ஒரு தவறு செய்கிறார்கள். கையாலாகாதபோது அப்பா பெயரைக் கைத்தடியாகப் பயன்படுத்துவது மாதிரி!

கறுப்பாக இருப்பது காமெடியா? பெரும்பாலான மக்கள் கறுப்பாக இருக்கும் நாடு நம்முடையது. கறுப்பு நிறமும் குண்டான தோற்றமும் நகைச்சுவைக்குரிய விஷயங்களா?

அந்த மாதிரியான நகைச்சுவையில் எனக்கு  உடன்பாடில்லை. அதனால்தான் பல சேனல்களிலும் காமெடி நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாகக் கூப்பிட்டும் நான் போகவில்லை. நகைச்சுவை என்பது சிந்திக்கவும் வைக்க வேண்டும். கசப்பு மருந்தை இனிப்பாகக் கொடுக்க நகைச்சுவை அவசியம். நல்ல நகைச்சுவை என்பது குழந்தையை ரசிப்பது போல இருக்க வேண்டும்.

நகைச்சுவை நடிப்பில் பெண்களுக்கான வெற்றிடம் தொடர்வது ஏன்?

பெண்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்டது. அவளுக்குச் சிரிக்கவே உரிமையில்லையே! பிறகு எங்கே சிரிக்கவைப்பது? தெருவில் ஒரு பெண் சத்தமாகச் சிரிப்பதைப் பார்த்தால் `என்ன இவ அடக்கமே இல்லாம சிரிக்கிறா?’ என்று நானே கேட்கிறேன். அவளுடைய சிரிப்பு என்பது அதிகபட்சமாகப் பக்கத்துவீட்டுப் பெண் முதல் மீன் விற்கிற பெண் வரை போகும். அவ்வளவுதான். நான்கு ஆண்களை அழைத்து வைத்துக்கொண்டு நான் காமெடியாகப் பேசிக்கொண்டிருந்தால், என் கணவருக்குப் பிடிக்குமா? பெண்களுக்குச் சிரிக்கும் சுதந்திரத்தை ஆண்கள் பல காலமாகக்  கொடுக்கவேயில்லை. பெண்கள் நகைச்சுவை செய்வதில் அவர்களுக்கு நிறைய எல்லைகள் உண்டு. ஆண்கள் உபயோகிக்கும் வார்த்தைகள், அவர்களால் செய்ய முடியும் பாடிலாங்வேஜ் போன்றவற்றை பெண்களால் செய்ய முடியாது.

என்னுடன் நடிக்கும் ஆண் என்னைவிட ஜூனியர் ஹீரோ என்றாலும், அவன் எதிரே வரும்போது நான் தன்னிச்சையாக எழுந்துகொள்கிறேன். அதே மரியாதையை ஒரு பெண்ணுக்குக் கொடுப்பதில் எனக்குத் தயக்கமிருக்கிறது. இதைத் தவறு என நாம் உணர வேண்டும். பெண்களே பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் காலம் வந்தால்தான் நீங்கள் குறிப்பிடுகிற நகைச்சுவை வெற்றிடம் மாறும்.

இழப்புகளிலிருந்து எப்படி மீள்கிறேன்?

சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு?

கே.பாலசந்தரின் பாராட்டு!


இன்னும் நிறைய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் ஊர்வசி, அடுத்த இதழில்...