மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நானும் விகடனும்! - 45

நானும் விகடனும்
பிரீமியம் ஸ்டோரி
News
நானும் விகடனும் ( விகடன் டீம் )

இந்த வாரம் : ஓவியம் ஜெயராஜ்படம் : எம்.உசேன்

##~##

''எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் இருக்கிறது.  அப்போது நாங்கள் மதுரை வடக்கு வெளி வீதியில் இருந்தோம். என் அக்கா கிறிஸ்டின் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டு இருந்தார். தெற்கு மாசி விதியில் இருக்கும் அவருடைய தோழி மீனாட்சியின் வீட்டில் ஏகப்பட்ட இதழ்கள் வாங்குவார் கள். மீனாட்சியின் வீட்டுக்குச் சென்று புத்தகம் இரவல் வாங்கி வரச் சொன்னால், வீட்டில் என்னைத் தவிர மற்ற அனைவரும் தலைமறைவாகிவிடுவார்கள். ஆனால், நான் அப்போதே வரைவதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்ததால், விகடன் வாங்கி வருவதற்காகவே முந்திக்கொண்டு ஓடுவேன்.

மீனாட்சி அக்கா வீட்டில் இருந்து விகடனுடன் கிளம்பினால் வீடு வந்து சேர இரண்டு மூன்று மணி நேரம் பிடிக்கும்.ஆங்காங்கே நின்று நிதானமாக எல்லா ஓவியங்களையும் பார்த்துக்கொண்டே நிற்பேன். 'இவனைப் பார்த்துக் கத்துக்கங்கடா’ என ஓவிய ஆசிரியரே வகுப்பில் என்னை உதாரணம் சொல்லிப் பாராட்டும் தகுதியை எனக்குள் அப்போது வளர்த்தது விகடன்தான்!  

காலப்போக்கில் ஆசைப்பட்டபடியே ஓவியன் ஆனேன். சென்னைக்கு வந்ததும் 'குமுதம்’, 'தினமணி கதிர்’ என்று எல்லாப் பத்திரிகையிலும் என் ஓவியங்கள் இடம்பெறத் தொடங்கின. ஆனாலும், 'விகடன்ல கூப்புடலயே’ என்ற வருத்தம் மறையவில்லை. அப்போது ஒரு நாள் திடீரென விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த ராவ் என்னைச் சந்தித்தார். 'ஜெயராஜ் நல்லா படம் வரையிறார். படம் புதுசா, அழகா இருக்கு. ஏன், விகடனுக்கு வரைய மாட்டாரா? அவர் ஓய்வா இருந்தா சந்திக்கலாமா’ என வாசன்

நானும் விகடனும்! - 45

அவர்கள் கேட்டதாக என்னிடம் தெரிவித்தார் ராவ்.

இதற்குத்தானே காத்திருந்தேன் என்று உடனடியாகக் கிளம்பினேன். இனிமையாகப் பேசி வரவேற்ற வாசன், கே.ஜே.மகாதேவன் எழுதிய 'என்றும் உங்கள்’ தொடர் கதைக்கு வரையச் சொன்னார். விகடன் வரலாற்றில் எடுத்த எடுப்பில் ஒரு தொடர்கதைக்கு ஓவியம் வரையும் வாய்ப்பு அநேகமாக எனக்குத்தான் வழங்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு குளத்தில் தவறி விழப்போகும் ஹீரோயினை ஹீரோ தாங்கிப் பிடிப்பதாக வெளியான அந்த ஓவியத்தைப் பார்த்துவிட்டு 'சூப்பர்ப்’ என்று வாசன் அவர்கள் சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது.

ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்த மணியன் எழுதிய 'இளந்தளிர்’ தொடருக்கு நான் வரைந்த ஓவியக் கோடுகள் ஃப்ரெஷ்ஷாக இன்றும் மனதில் உள்ளன. அன்றும் இன்றும் ஜோக்குகளுக்கு விகடன் கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எந்தப் பத்திரிகையிலும் காணக் கிடைக்காதது!

எனக்கும் ஜோக் கதைகள் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தன. பிரமாதமான ஜோக்குகளை அட்டையில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தது விகடன்.  

ஒரு போலீஸ் அதிகாரி தன் மகனைத் தூக்கிவைத்துக்கொண்டு, 'அட, திருட்டுப் பயலே, கள்ளப் பயலே’ என்று கொஞ்சும் என் ஜோக்கைப் பார்த்து விட்டு, 'ஜாக்கிரதையா, உள்ள புடிச்சுப் போட்டுடப் போறாங்க’ என தமாஷ் பண்ணி னார் மணியன்.  

விகடன்தான் என் அடையாளம். ஒரு முறை எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்துச் சென்றார் மணியன். 'இவர்தான் ஓவியர் ஜெயராஜ்’ என அறிமுகப்படுத்தியதும் கை கொடுத்து வரவேற்ற எம்.ஜி.ஆர்., 'உங்க ஓவியங்களை நிறையப் பார்த்திருக்கேன். ஆனா, இப்பத்தான் உங்களை நேர்ல பார்க்கிறேன்’ என்று என் பல ஓவியங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

விகடனில் என் ஓவியங்களைப் பார்த்துவிட்டு என்னைச் சந்தித்த இயக்குநர் ஸ்ரீதர்,  'படத்தின் பெயர் 'காதலிக்க நேரமில்லை’. படம் தொடர்பாக எல்லாத் தினசரிகளிலும் ரெண்டு பக்கத்துக்கு விளம்பரம் தர்றோம். உங்க படங்கள் தான் அந்த விளம்பரங்களை அலங்கரிக்கணும்’ என்று சொல்லிக் கிளம்பிவிட்டார்.  

இரண்டு நாட்கள் யோசித்து ஒரு படப்பிடிப்புத் தளத்தில் நடைபெறும் சம்பவங்களை ஓவியமாக வரைந்தேன். கோணல் மாணலாக படத் தலைப்பை எழுதினேன். பெரிய அளவில் பாராட்டுதல் களைக் குவித்தன அந்த விளம்பரங்கள். அந்தப் பரிசோதனைக்கான துணிச்சலையும் அனுபவத்தையும் எனக்கு அளித்தது விகடன்தான்!  

திரைப்பட உலகத்தை மையமாக வைத்து சுஜாதா எழுதிய 'கனவுத் தொழிற்சாலை’ நாவலுக்குப் படம் வரையச் சொல்லி என் வீட்டுக்கே வந்து நின்றார் வாசன் அவர்களின் மகன் எஸ்.பாலசுப்ரமணியன். இதைத் தொலைபேசியிலோ அல்லது அலுவலகத்துக்கே என்னை வரவழைத்து அவர் சொல்லிஇருக்கலாம். ஆனால், ஒரு கலைஞனை  மதித்து நேரில் வந்து நின்றதுதான் பாலு சாரின் பெருந்தன்மை!

சுஜாதாவின் எழுத்துக்களுக்கு ஓவியம் வரைவது ஒரு சுகமான அனுபவம். சில எழுத்தாளர்களின் கதைகளுக்கு ஓவியம் வரைய மிகச் சரியான சிச்சுவேஷனைத் தேட வேண்டி இருக்கும். ஆனால், சுஜாதாவின் சிறுகதை, நாவல் என அவரின் படைப்புகளின் ஒவ்வொரு பாராவிலும் அழகான சிச்சுவேஷன்கள் இருக்கும். சுஜாதாவும் என் ஓவியங்களுக்கு மிகச் சிறந்த ரசிகர். ஸ்கர்ட், டி-ஷர்ட், ஜீன்ஸில் இடம்பெறும் என் ஓவியப் பெண்கள் தத்ரூபமாக இருப்பதாகச் சொல்வார். 'ஏன் ஜெ. இப்புடி வரையுங்களேன்...’ எனத் தன் நினைவில் உள்ள ஸ்ரீரங்கம் பெண்களின் ஆடை வடிவமைப்புபற்றியும் அழகிய குறிப்புகள் கொடுப்பார்!

சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும்-மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையேயான ஒரு கிரிக்கெட் போட்டியின்போது, எனக்கு முதல் வகுப்பு டிக்கெட் எடுத்துக்கொடுத்து, வீரர்களை நேரடியாக வரைந்து தரச் சொன்னார்கள். கவாஸ்கர், பிஷன் சிங் பேடி எனப் பல வீரர்களை வரைந்தேன். தன்னை வரையக் கூடாது என நவாப் பட்டோடி என்னுடன் வாக்குவாதம் செய்ததும், தாராளமா வரைஞ்சுக்குங்க என கேரி சோபர்ஸ் வெகுநேரம் போஸ் கொடுத்து அமர்ந்திருந்ததும், பட்டோடியின் மனைவி ஷர்மிளா தாகூரை அவருக்குத் தெரியா மல் வரைந்ததும் இன்றும் பசுமையான நினைவுகள்.

விகடனில் பரபரவென வரைந்துகொண்டு இருந்த நேரம். ஒரு சின்ன விபத்தில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு, முழங்கையில் இருந்து உள்ளங்கை வரை மாவுக்கட்டு போட்டுப் படுத்திருந்தேன். படம் வரைய முடியாத சூழல். விகடனில் இருந்து தொலைபேசி அழைப்பு. எதிர்முனையில் பாலு சார். 'ஜெ... மூணு மாசமோ, நாலு மாசமோ நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க. ஆனா, விகடனில் இருந்து மாசா மாசம் வரும் சன்மானம் தொடர்ந்து வரும். இது சலுகை அல்ல. நல்ல கலைஞனுக்கு, உங்கள் திறமைக்கு, வித்தைக்கு... விகடன் தரும் மரியாதை!’ என்றார். அதேபோல் தான் அப்பென்டிக்ஸ் அறுவைச் சிகிச்சை முடித்து ஓய்வில் இருந்தபோதும்!

மூன்றாம் தலைமுறையாக இப்போதைய நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனிடமும் கலைஞர்களை மதிக்கும் பண்பைப் பார்க்கிறேன். நான் தற்போது உள்ள கோடம்பாக்கம் வீடு விற்பனைக்கு வந்த நேரம். அதை வாங்க என்னிடம் பெரும் தொகை குறைந்தது. 'விகடன்ல நிறைய படம் வரைஞ்சிருக்கல்ல. அவங்ககிட்ட போய்க் கேளு... தருவாங்க!’ என்றார்கள் நண்பர்கள். வார்த்தைகளால் விவரிக்க முடியாத தயக்கத்துடன் விகடன் அலுவல கம் சென்றேன். சுற்றிவளைத்து நான் ஏதேதோ

நானும் விகடனும்! - 45

பேசிக்கொண்டு இருப்பதை உணர்ந்த சீனிவாசன் சார்... 'சார், இது உங்க ஆபீஸ். தயங்காமச் சொல்லுங்க!'' என்று என் தயக்கத்தைக் களைந்தார். விவரத்தைச் சொன்னதும், 'அவ்வளவுதானே... உங்களுக்கு எவ்வளவு வேணுமோ... வாங்கிட்டுப் போங்க!'' என்று உதவியாளரை அழைத்து, 'யப்பா, ஜெயராஜ் சாருக்கு ஒரே செக்கா கொடுப்பா’ என்றார். வாழையடி வாழையாக வரும் இந்த அன்புதான் விகடன் ஸ்பெஷல். அன்று இருந்த விகடன் இன்று விகடன்களாகத் தழைத்துச் செழித்து வர, படைப்பாளிகளிடத்தில் விகடன் நிறுவனம் காட்டும் இந்த அன்பு, ஆதரவு, அந்நியோன்யமும் காரணம்!

இன்று எனக்கு 70 வயது. அன்று இரவல் வாங்கி விகடனைப் படித்த அக்கா கிறிஸ்டினுக்கு இன்று 80 வயது. அன்று சனிக்கிழமை வந்த விகடன் இன்று வியாழக்கிழமையே வருகிறது. ஆனால், அதை எதிர்நோக்கிக் காத்திருந்த எங்கள் எதிர்பார்ப்பும் ஆர்வமும் இன்றும் அப்படியே இருக்கிறது!''