Published:Updated:

அம்பானிக்காக சுடப்பட்ட ‘அவ்னி புலி’ - கொந்தளித்த ராஜ் தாக்கரே

அம்பானிக்காக சுடப்பட்ட ‘அவ்னி புலி’ - கொந்தளித்த ராஜ் தாக்கரே
News
அம்பானிக்காக சுடப்பட்ட ‘அவ்னி புலி’ - கொந்தளித்த ராஜ் தாக்கரே

அம்பானிக்காக சுடப்பட்ட ‘அவ்னி புலி’ - கொந்தளித்த ராஜ் தாக்கரே

``13 பேரின் உயிரைப் பறித்த அவ்னி புலி சுட்டுக் கொல்லப்பட்டது அம்பானிக்காகதான்'' என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தக்கரே குற்றம்சாட்டியுள்ளார். 

மகாராஷ்ட்ரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா காட்டுப் பகுதியையொட்டி சில கிராமங்கள் உள்ளன. காட்டுக்குள் வரும் மனிதர்களை 6 வயது பெண் புலி ஒன்று தொடர்ந்து தாக்கி வந்தது. இந்தப் புலிக்கு இரண்டு குட்டிகளும் இருந்தன. வனத்துறையினர் இந்தப் புலிக்கு அவ்னி என்று பெயரிட்டிருந்தனர். புலிகள் ஒருமுறை நரமாமிசத்தைப் புசித்துப் பழகிவிட்டால் அவை உயிர்க்கொல்லிகளாக மாறித் தொடர்ந்து மனிதர்களைக் குறிவைத்து வேட்டையாடப் பழகிவிடும். கடந்த 2016-ம் முதல் 2018 ஆகஸ்ட் மாதம் வரை 13 பேரை தாக்கிக் கொன்றுள்ளது அவ்னி புலி. இதனால் அந்தக் கிராம மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் அவ்னி புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் அதன் குட்டிகளை உயிருடன் பிடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து 200 பேர் கொண்ட குழு மூன்று மாதங்களாக ட்ரோன் மூலம் தேடி கடந்த 2-ம் தேதி இரவு புலியை சுட்டுக் கொன்றதாக அறிவிக்கப்பட்டது. அவ்னி சுடப்பட்டதற்கும் வனத்துறையினருக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல விலங்குகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், புலி தாக்கியதாகச் சொல்லப்பட்ட 13 பேர்களில் 5 பேரின் உடலில் அவ்னியின் டி.என்.ஏ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவரது உடலில் அதே பகுதியில் வசித்த மற்றொரு ஆண் புலியின் டி.என்.ஏ இருந்தது. அதேவேளையில் அக் ஷார், அவ்னியை சுட்டுக் கொன்றபோது வனத்துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் யாரும் உடன் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் வனத்துறை அவ்னியை உயிரோடு பிடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவ்னி புலியை சுட்டுக் கொன்றதுக்கு பல்வேறு அரசியல் காரணங்கள் இருப்பதாக அரசியல் கட்சியினர் பலர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இதுபற்றி மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, `` யாவத்மால் பகுதியில் நடைபெற்று வரும் அனில் அம்பானியின் தொழிற்சாலை திட்டத்துக்காகவே அவ்னி புலி சுட்டு கொல்லப்பட்டுள்ளது. புலியைக் கொன்றது மகாராஷ்டிராவில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க அரசும் யாவத்மால் மாவட்ட நிர்வாகமுமே. கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக புலி கொல்லப்பட்டுள்ளது. புலி தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் 13 பேரை நினைத்து மிகவும் வருத்தமாகவே உள்ளது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் உலகம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் காட்டுப் பகுதியை ஆக்கிரமித்து அந்த இடங்களில் வீடு கட்டிக்கொள்வதால்தான் விலங்குகள் மனிதர்களைத் தாக்குகின்றன. இருப்பினும் அந்தப் புலியைக் கொல்வதற்கான அவசியமே இல்லை” என தெரிவித்துள்ளார். 

மேலும், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அனில் அம்பானி தரப்பினர், யாவத்மால் பகுதியில் அம்பானிக்கு எந்தத் திட்டமும் தொழிலும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளனர். அவ்னி புலி கொலை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் புது அதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.