Published:Updated:

அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!

அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!

மத்திய அரசு நிறுவனமே பாதை மாறும் அவலம்

அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!

மத்திய அரசு நிறுவனமே பாதை மாறும் அவலம்

Published:Updated:
அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!
பிரீமியம் ஸ்டோரி
அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!

னியார் நிறுவனங்கள் பலவும் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு பணிகளை ‘அவுட்சோர்சிங்’ முறையில் வேறு நிறுவனங்களுக்குக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளன. இதேபாணியில், மத்திய அரசின் நிறுவனமும் செல்வது கடலூர் மாவட்டத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார்மயத்தை நோக்கிப் பயணிப்பதால் இங்கு பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனம், லாபகரமாக இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிவருகிறது. காமராஜர் முதல்வராக இருந்தபோது, மிகவும் பின்தங்கிய இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக, 1956-ம் ஆண்டு என்.எல்.சி ஏற்படுத்தப்பட்டது. திறந்தவெளி நிலக்கரி சுரங்கம் மற்றும் முதல் அனல்மின் நிலையம் ஆகியவை அப்போது உருவாக்கப்பட்டது. 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அனல்மின் நிலையத்தில் தற்போது 4,990 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ராஜஸ்தான், ஒடிஷா எனப் பிற மாநிலங்களிலும் கால் பதித்துள்ளதால், ‘என்.எல்.சி இந்தியா’ என இது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 1,300 கோடி லாபம் ஈட்டும் இந்த நிறுவனம் இந்தியாவின் பெருமைகளில் ஒன்று.

அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!

இந்த நிறுவனம் உருவாவதற்காக, தாங்கள் பிறந்து வாழ்ந்த கிராமங்களையும், வீடுகளையும், நிலங்களையும் பலர் இழந்துள்ளனர். நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. இன்று, நிரந்தரத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வேண்டுமென்றும், ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டுமென்றும் போராட வேண்டிய நிலை உள்ளது. பணி நிரந்தரம் கேட்டு, சுமார் 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

என்.எல்.சி நிறுவனத்தில் அவுட்சோர்சிங் முறை கொண்டுவரப்பட்டுள்ளதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வேலை என வாக்குறுதி வழங்கப்பட்டது. அதுவும் நிறைவேற்றப்படவில்லை. தங்களுக்கு மாதத்தில் 26 நாள்கள் பணி வழங்கிவந்த நிர்வாகம், அதை 15 நாள்களாகக் குறைத்துவிட்டதாக சோகத்துடன் தெரிவிக்கின்றனர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். போராட்டமே வாழ்க்கையாக இருக்கும் என்.எல்.சி  ஒப்பந்தத் தொழிலாளர்கள், இப்போது அவுட்சோர்சிங் முறையால் கதிகலங்கிப் போயுள்ளனர். முதல் சுரங்க விரிவாக்கத்தில் பி.ஜி.ஆர் மற்றும் மகாலட்சுமி போன்ற நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பணி மாற்றம் மற்றும் பணிக் குறைப்பைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய ஒப்பந்தத் தொழிலாளர்களில் ஏழு பேர் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத் தலைவர் வேல்முருகன், ‘‘நிரந்தரத் தன்மையுள்ள வேலைகளை நிரந்தரத் தொழிலாளர்கள்தான் செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையால் வேலையில் தரம் இருக்காது; உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்; விபத்துகள் நிகழும். எனவே, என்.எல்.சி நிர்வாகம் அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு 01.01.2017-ல் போட வேண்டிய ஊதிய மாற்று ஒப்பந்தம் இதுவரை போடப்படவில்லை. அதிகாரிகளுக்கும் பொறியாளர்களுக்கும் மட்டும் ஊதிய உயர்வு போடப்பட்டுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு வழங்கிய பஞ்சப்படியைக்கூட, நிர்வாகம் வழங்க மறுக்கிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப் படவில்லை. அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவுட்சோர்சிங் முறைதான் காரணம். எனவே, அதைக் கைவிட வேண்டும்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!

என்.எல்.சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் வெங்கடேசன், ‘‘13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகிறோம். எங்களின் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்காததால், நீதிமன்றத்தை அணுகினோம். ‘பணி மூப்பு அடிப்படையில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 10,632 பேருக்கான பணிமூப்புப் பட்டியலை வெளியிட்டு, ‘காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என நிர்வாகம் கூறியது. பின்பு 4,313 பேர் இன்கோ சர்வ் சொசைட்டியில் சேர்க்கப்பட்டு, 234 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். புதிய யூனிட்டில் எங்களைப் பணி நிரந்தரம் செய்து அமர்த்துவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால், அவுட்சோர்சிங் முறையில் வெளிமாநிலத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தி வருகிறது நிர்வாகம். இதனால், எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ-வான சபா.ராஜேந்திரன், ‘‘என்.எல்.சி நிறுவனத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபடுகிறது. இப்படிப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவரும் கடலூர் மாவட்ட  மக்களுக்கு, அடிப்படை வசதிகளை என்.எல்.சி நிர்வாகம் செய்துதர வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. வீடு, நிலம் கொடுத்தவர்களுக்குப் பணி வழங்கப்படாததால், விரிவாக்கப் பணிக்காக மேலும் நிலம் கையகப்படுத்துவதில் நிர்வாகத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு அனைத்துச் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.

இந்த விவகாரம் குறித்து என்.எல்.சி-யின் மனித வளத்துறை இயக்குநர் விக்கிரமனிடம் பேசினோம். அவர், “என்.எல்.சி-யில் 14 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்களும், 13 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு சட்டப்படி வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறோம். ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப நிரந்தரப் பணி வழங்கி வருகிறோம். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மத்திய அரசு நிர்ணயித்ததை விட, 75 சதவிகிதம் அதிகமாக ஊதியம் வழங்கி வருகிறோம். அவர்களுக்கு மைன்ஸ் சட்டத்தின்படி இன்சூரன்ஸ், இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி, பணிக்கொடை, அவர்களின் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் என எங்குமில்லாத அளவுக்கு வழங்கி வருகிறோம்.

அச்சுறுத்தும் அவுட்சோர்சிங்!

முதல் சுரங்க விரிவாக்கத்தில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியை என்.எல்.சி நிறுவனம் பயன்படுத்துவதில்லை. அது முழுவதும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கும், வேறு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. நம் தொழிலாளர்களை வைத்து நிலக்கரியை உற்பத்தி செய்யும்போது, உற்பத்திச் செலவு அதிகமாக உள்ளது. அதனால், நிலக்கரியைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை. எனவே, அங்கு மட்டும் அவுட்சோர்சிங் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால், உற்பத்திச் செலவு குறைகிறது. இதனால் அங்கு பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்று, அவர்கள் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர். அவர்களோ, பழைய இடத்திலேயேதான் வேலை செய்வோம் என கூறுகின்றனர். இதுதான் பிரச்னை. புதிய அனல்மின் நிலைய கட்டுமானப் பணிக்கு வட மாநிலத் தொழிலாளர்களைப் பயன்படுத்துகிறோம். தமிழகத்தில் கட்டுமானப் பணி, சாலைப் பணி போன்றவற்றுக்கு வடமாநிலத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். பின்னர், பராமரிப்புப் பணிக்கு இப்பகுதியில் உள்ள தொழிலாளர்களைத்தான் பயன்படுத்துவோம். நிரந்தரத் தொழிலாளர்களுக்கான ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, தொழிற்சங்கங்களுடன் நல்ல முறையில் சென்றுகொண்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நல்ல முறையில் முடிந்துவிடும்” என்றார். 

ஊருக்கெல்லாம் ஒளி தரும் என்.எல்.சி தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டும் இருண்டு கிடப்பது சாபமா?

- ஜி.சதாசிவம்
படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism