Published:Updated:

பெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது!

பெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது!
பிரீமியம் ஸ்டோரி
பெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது!

மதுரை மாநகர ஊழல்

பெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது!

மதுரை மாநகர ஊழல்

Published:Updated:
பெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது!
பிரீமியம் ஸ்டோரி
பெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது!

துரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரே லைசென்ஸ் எண்ணில் பல பெட்டிக்கடைகளுக்கு அனுமதி வழங்கியது உள்பட இதில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதன் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் பல கோடி ரூபாய் ‘வருமானம்’ பார்த்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த ஊழல் குறித்து ஏராளமான ஆதாரங்களைத் திரட்டிவைத்துள்ளார், காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினரான செய்யது பாபு. அவரிடம் பேசினோம்.

பெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது!

‘‘சாலையோரங்களிலும், அரசு அலுவலகங்களுக்கு அருகிலும் பெட்டிக்கடைகள் நடத்துவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் லைசென்ஸ் வழங்குகிறார்கள். மாற்றுத்திறனாளிகள், ஏழைகள், சாலையோர வியாபாரிகள் உள்பட பலரும் விண்ணப்பித்து இந்தக் கடைகளைப் பெறுகிறார்கள். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மனது வைத்தால்தான், லைசென்ஸ் கிடைக்கும். மதுரையில் எங்கு பார்த்தாலும் மாநகராட்சி அனுமதி பெற்ற பெட்டிக்கடைகள் ஆக்கிரமித்து வருவதைத் தொடர்ந்து கவனித்து வந்தேன். மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இந்தக் கடைகள் அதிகமாகச் செயல்பட எப்படி அனுமதிக்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தது. மதுரை மாநகராட்சி எல்லைக்குள் எத்தனை கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளன என்கிற விவரத்தைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு கேட்டிருந்தேன். அதற்கு அவர்கள் மொத்தம் 507 சாலையோரக் கடைகள், அனுமதிபெற்றுச் செயல்படுவதாகத் தெரிவித்து, கடைகளுக்கான அனுமதி சான்று நகல்களையும்,  அவற்றின் உரிமையாளர்கள் விவரங்களையும் அனுப்பியிருந்தார்கள். அதைப் பார்த்து எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. காரணம், என் கணக்கெடுப்பில் மாநகராட்சி எல்லைக்குள் ஆயிரம் கடைகளுக்கு மேல் இருக்கும். சாலையோரங்களில் சிறு ஆக்கிரமிப்பையும் உடனே அகற்றிவிடும் அதிகாரிகள், இத்தனை கடைகளுக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்ற சந்தேகம் வந்தது. லைசென்ஸ் இல்லாத கடைகளுக்கு மின்வாரியத்தினர் மின் இணைப்பு எப்படி வழங்கினார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

அவர்கள் கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ஒரே கடையின் அனுமதி எண்ணில் மற்றொரு நபருக்கு வேறொரு பகுதியில் கடை கொடுத்துள்ளனர். ஒரே லைசென்ஸ் எண்ணை வைத்து மூன்று கடைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளனர். உதாரணமாக, கலெக்டர் அலுவலகப் பகுதியில் மூன்று கடைகளுக்குத்தான் லைசென்ஸ் கொடுத்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வழங்கியுள்ளனர். ஆனால், அங்கோ 18 கடைகள் உள்ளன. இதில்தான் அதிகாரிகள் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டியுள்ளனர். கடையை ஷிப்ட் செய்ததாகக் கூறிப் புதிய கடைகளை உருவாக்கியுள்ளனர். மாநகராட்சி உதவி கமிஷனர் கையெழுத்திட்டு லைசென்ஸ் தருவதால், மின் வாரியத்தினரும் மின் இணைப்பு கொடுத்துவிடுகிறார்கள். இப்படி போலியான லைசென்ஸ் கொடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை உருவாக்கி, ஒரு கடைக்கு ஐந்து லட்ச ரூபாய் வீதம் வசூலித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது!

பல லைசென்ஸ்களில் மாநகராட்சி சீல் இல்லை; கையெழுத்தும் இல்லை. எல்லாவற்றிலும் மோசடி செய்துள்ளனர். சாதாரண கடை ஒதுக்குவதிலேயே பல கோடி பார்த்திருக்கிறார்கள் என்றால், மாநகராட்சியின் பெரிய பெரிய திட்டங்களில் எவ்வளவு பார்த்திருப்பார்கள்! சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாநகராட்சி ஆணையர், உள்ளாட்சித் துறை செயலாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பிய புகாரைத் தொடர்ந்து, விஜிலென்ஸ் எஸ்.ஐ-யான புஷ்பலதா என்னிடம் விசாரணை நடத்தினார். அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தை நாட உள்ளேன்’’ என்றார்.

மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சிலரின் சொத்து மதிப்பு, பல நூறு கோடிகளைத் தாண்டிச் சென்றுவிட்டதாகவும், சில அதிகாரிகள் வணிக வளாகங்களையும் கல்லூரிகளையும் கட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ‘‘ஆணையராக யார் வந்தாலும், அவர்களைக் கீழேயுள்ள அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து விடுவதால், மாநகராட்சியில் ஊழலை ஒழிக்க முடியவில்லை’’ என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள் சிலர்.

பெட்டிக்கடை லைசென்ஸ் விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் அனிஷ் சேகரிடம் கேட்டதற்கு, ‘‘இந்த விவகாரம் இதுவரை என் கவனத்துக்கு வரவில்லை. உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன். முறைகேடுகள் பற்றி என்னிடம் நேரில் வந்து புகார் தெரிவிக்கலாம்’’ என்றார். 

- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism