Published:Updated:

``கவிதைக்காக ஹெச்.ராஜா, கஸ்தூரி கொடுத்த நெருக்கடி பெரிது!" - கவிஞர்  மனுஷ்யபுத்திரன் #LetsRelieveStress

``கவிதைக்காக ஹெச்.ராஜா, கஸ்தூரி கொடுத்த நெருக்கடி பெரிது!" - கவிஞர்  மனுஷ்யபுத்திரன் #LetsRelieveStress
``கவிதைக்காக ஹெச்.ராஜா, கஸ்தூரி கொடுத்த நெருக்கடி பெரிது!" - கவிஞர்  மனுஷ்யபுத்திரன் #LetsRelieveStress

``கவிதைக்காக ஹெச்.ராஜா, கஸ்தூரி கொடுத்த நெருக்கடி பெரிது!" - கவிஞர்  மனுஷ்யபுத்திரன் #LetsRelieveStress

வீனத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக கவிதை தளத்தில் தீவிரமாக எழுதி வருபவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். சமூகப் பிரச்னைகளையொட்டி அவரிடமிருந்து வெளியாகும் எதிர்வினை கவிதைகள் சமூக ஊடகங்களில் பெரும் கவனம் பெருகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, தொடர்ந்து மக்கள் பிரச்னைகளைப் பேசி வருபவர். `நீராலானது', `அதீதத்தின் ருசி', `பசித்த பொழுது', `சூரியனுக்கு அருகில் ஒரு வீடு', `அருந்தப்படாத கோப்பை', `தித்திக்காதே' என அவரது கவிதைத் தொகுதிகளில் பட்டியல் நீளமானவை. வாழ்க்கையில் தனக்கு நெருக்கடியான, மனஅழுத்தம் தந்த தருணங்கள் குறித்து, இங்கே மனம் திறக்கிறார். 

``சமூகப் பிரச்னைகள் தருகிற மன அழுத்தம் என்பது வேறு. அதை எழுதுவதால் ஏற்படுகிற நெருக்கடிகள் என்பது வேறு. சமூக, அரசியல் பிரச்னைகளை மையமாக வைத்து மிக அதிகக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். அவற்றைத் தனியாக அரசியல் பிரச்னைகள் என்றோ, சமூகப் பிரச்னைகள் என்றோ நான் பார்ப்பதில்லை. அது என்னை நேரடியாகப் பாதிக்கிறது. என்னுடைய அந்தரங்க விஷயங்கள் எப்படி என்னை உலுக்குகின்றனவோ, அதற்குச் சிறிதும் குறையாமல் அந்தப் பிரச்னைகளால் மிகப் பெரிய சஞ்சலத்துக்கும் நிம்மதியின்மைக்கும் ஆளாகிறேன். அதனுடைய ஒரு விளைவுதான் என் கவிதைகள். அப்படி மிகக் கடுமையான பல கவிதைகளை எழுதியிருக்கிறேன்.

சில கவிதைகள், சோஷியல் மீடியாக்களில் டிரெண்டிங் ஆகியிருக்கின்றன. கவிதைகளை `டிரெண்டிங்' செய்ய முடியும் என்கிற போக்கே, நான் எழுதிய சில கவிதைகளால்தான் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். உதாரணத்திற்கு, `வாணிஶ்ரீ கவிதைகள்'. கவிஞர் இசையின் ஒரு கவிதையையொட்டி, அதற்கு எதிர்வினையாக, என்னுடைய கவிதை `டிரெண்டிங்' ஆனது. பெண்ணியம் சார்ந்து, கடுமையான விமர்சனங்கள்கூட முன்வைக்கப்பட்டன. அதை விவாதத்திற்கான ஒரு பொருளாகத்தான் எடுத்துக்கொண்டேன். ஒரு கவிதை எப்படியெல்லாம் புரிந்துகொள்ளப்படும் என்பதைப் பற்றிய பெரிய அனுபவமாக அது எனக்கு இருந்தது. 

`பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்' என்கிற கவிதை, காஷ்மீரில் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆஸிபா என்கிற சிறுமி பற்றிய ஒரு கவிதை என, நிறைய சொல்ல முடியும். கஸ்தூரி என்கிற கதாபாத்திரத்தை வைத்து எழுதிய ஒரு கவிதைக்காக நடிகை கஸ்தூரி என்னிடம் கோபித்துக்கொண்டார். பொதுவாக எல்லாவற்றிலும் பொறுப்பற்ற முறையில் சமூக அபிப்ராயங்களை முன் வைக்கக்கூடிய கதாபாத்திரம் அது. அந்தக் கவிதைக்கு கஸ்தூரி ஆற்றிய எதிர்வினை கவிதை சமூக வலைதளங்களில் பரவலாக வந்தது. அது எனக்குச் சற்று வருத்தமாகக்கூட இருந்தது. ஏனென்றால், தனிப்பட்ட எந்தத் தாக்குதல்களையும் அப்படி நான் மேற்கொண்டது கிடையாது. 

ஆனால், மிகப் பெரிய நெருக்கடி, பிரச்னை என்று சொல்ல வேண்டுமென்றால், சமீபத்தில் நடந்த `ஊழியின் நடனம்' என்கிற கவிதைக்காக, தவறான, மோசமான வியாக்கியானத்தை ஹெச்.ராஜா கொடுத்தார். அதனால் எனக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டது.  

`என் மீது எல்லா ஊர் காவல்நிலையங்களிலும் புகார் கொடுக்க வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டது. என் அலைபேசி எண் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு, எனக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அப்போதுதான், `இன்றைக்குக் கருத்துச் சுதந்திரத்தின் மீது எவ்வளவு பெரிய கண்காணிப்பும், ஒடுக்குமுறையும் இருக்கிறது' என்று எனக்குத் தோன்றியது. இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் நடக்கிறபோது இரண்டு விளைவுகள் ஏற்படும். ஒன்று, நேரடியாக உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை அடைவீர்கள். எதிர்பாராத இடங்களில் எதிரிகள் உருவாவார்கள். இதுதான் அவர்களுடைய நோக்கம். உங்களைத் தனிமைப்படுத்துவது. உங்களைப் பற்றிய எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குவது. இவையெல்லாம் நேரடியான நெருக்கடிகள். 

நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுகிறபோது, உங்களுடைய மத அடையாளம் சார்ந்து ஒரு பிம்பம் கட்டமைக்கப்படும். அந்த அலுவலகத்தில் இருக்கும் எளிய மதநம்பிக்கை கொண்டவர்கள் உங்களிடமிருந்து விலகிப்போக ஆரம்பிப்பார்கள், அந்நியப்பட ஆரம்பிப்பார்கள். அவர்களால் ஒரு கவிதையின் நுட்பத்தைப் புரிந்துகொள்ளமுடியாது. அதேபோல, மற்றொன்று, உளவியல்ரீதியான நெருக்கடி!

உளவியல்ரீதியாக என்னை நெருக்கடிக்கு ஆளாக்க முடியாது என்றாலும்கூட, மறுபுறம், பொதுவாக ஒரு படைப்பாளி இந்த மாதிரி தொடர்தாக்குதலுக்கு ஆளாகிறபோது, அடிப்படையான ஒரு பிரச்னை எழும். அது, ஒரு எழுத்து எங்குச் சாத்தியம்... ஒரு படைப்பாற்றல் எங்குச் சாத்தியம் என்பதே!

சுதந்திரம் இருக்கும் இடத்தில்தான் நல்ல படைப்பு என்பது சாத்தியமாகும். நீங்கள் எதை எழுதினாலும், அது மிகப் பெரிய அளவுக்கு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அர்த்தம் கொள்ளப்படும் என்றால், உங்களுக்குள் ஒரு சுயதணிக்கை நடைபெற ஆரம்பித்துவிடும். அதன் விளைவாக, நீங்கள் வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை வெளிப்படுத்துவதிலும் மாற்றம் வரும். பிறகு, ஏன் இதை எழுத வேண்டும்... இதைத் தவிர்த்துவிடலாமே என்று, உங்களையும் அறியாமல், ஒரு இடத்துக்கு அது கொண்டுபோய் நிறுத்தும். இது ஒரு படைப்பாளிக்கு அவனது படைப்பாற்றல் சார்ந்து, அவனது இயல்பின் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறை. அந்த வன்முறைக்கு அவன் மனம் பலியாகிவிட்டால், அந்தப் படைப்பாளி மெள்ள அழிய ஆரம்பித்துவிடுகிறான்.

ஏனென்றால், எல்லாவற்றையும் கேள்வி கேட்பது, எல்லாவற்றைப் பற்றியும் உரையாடுவது என்பதிலிருந்துதான் படைப்பாளியின் ஆளுமை எழுச்சி பெறுகிறது. இந்த ஆளுமையின் மீது, ஒரு தாக்குதலை நீங்கள் தொடுக்கிறபோது... அதை வெகுசில படைப்பாளிகளே எதிர்த்து நிற்பார்கள். பலர், தம்மளவில் சுருங்கிப்போய்விடுவார்கள். இந்தியாவில் தொடர்ச்சியாகப் பல படைப்பாளிகளுக்கு இது நடக்கிறது. படைப்பாளிகளின் பிம்பத்தை அழிப்பது... அல்லது மோசமான பிம்பத்தை உருவாக்குவது... கடைசியாகப் படுகொலை செய்வது என்று, இன்றைக்கு மத அடிப்படைவாதத்தினுடைய தாக்குதல், சிந்தனையாளர்கள், கலைஞர்களின் மீது நிகழ்த்தப்படுகிறது!"  

அடுத்த கட்டுரைக்கு