Published:Updated:

நாஸோ ஃபில்டர்களுக்கு டெல்லியில் எகிறும் மவுசு! #NasoFilters

முகத்தை மூடும் மாஸ்க்குகளுக்குப் பதிலாக வந்திருக்கும் நாஸோ ஃபில்டர்களுக்குத் தொடர்ந்து மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ஃபில்டரில் என்ன விசேஷம்?

நாஸோ ஃபில்டர்களுக்கு டெல்லியில் எகிறும் மவுசு! #NasoFilters
நாஸோ ஃபில்டர்களுக்கு டெல்லியில் எகிறும் மவுசு! #NasoFilters

``என்னது பட்டாசு வெடிச்சா கேஸா?!" என்று அந்தச் செய்தியைச் சுற்றிய பேச்சுதான் தீபாவளி முடிந்து இன்றைக்கும் ஃபேஸ்புக் டைம்லைனில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ``நாங்க ஒரு நாள் பட்டாசு வெடிக்கறத கொறச்சுக்கிட்டா மட்டும் வருசம் முழுக்க ஏற்படுற காத்து மாசு கம்மியாகவா போகுது?" என்பதைப் போன்ற கேள்விகளை நாம் இந்தச் சில நாள்களில் பல இடங்களில் கடந்து வந்திருக்கக்கூடும். இந்தப் பிரச்னையை நாம் சற்று ஆழமாக உணர்ந்து கொண்டால், அது நமது நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்தி வரும் தாக்கத்தின் பிரதிபலிப்பு இது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் மரணங்களுக்கான ஐந்தாவது மிகப்பெரிய காரணி என்று வர்ணிக்கும் அளவுக்கு காற்று மாசுபாடு தற்போது விஸ்வரூபம் எடுத்துவிட்டது. குறிப்பாக நமது தேசத்தின் தலைநகரான டெல்லி, காற்று மாசுபாட்டின் தரவுகளில் ``உலகின் மோசமான நகரம்" எனும் பெரும் பெயரினை பெற்று அதிலும் தலைநகராக விளங்குகிறது. இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் காற்று மாசுபாட்டினால் டெல்லி படும்பாடு தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிக்கத் தவறாது. அந்தளவுக்குத்தான் இந்தப் பிரச்னையில் மக்களின் பங்களிப்பு இருக்கிறது.

டெல்லிக்கும் மாசுபாட்டுக்குமான பந்தம்

தேசத்தின் தலைநகர் ஆகிவிட்ட காரணத்தாலோ என்னவோ, டெல்லியில் உள்ள மனிதத் தலைகளின் எண்ணிக்கை என்றோ எகிறிவிட்டது. அதன் காரணம் தொட்டு அங்கு ஏற்பட்டுவிட்ட தொழில் துறையின் வளர்ச்சி, வாகனங்களின் வளர்ச்சி என அனைத்து `தி சோ கால்டு' வளர்ச்சிகளும், கூட்டு வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் மாசுபாட்டையும் சேர்த்து வளர்த்துவிட்டுவிட்டன. அதன் விளைவாக ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். காற்று மாசுபாட்டினால் ஏற்படும் இது போன்ற பாதிப்புகளின் விலையை உணர்ந்த டெல்லி அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்துவதற்கு தனியார் வாகனங்களின் மீது தடை, அனல் மின் நிலையத்துக்கு மூடுவிழா, கட்டுமானப் பணிகளின் மீது தடை, கட்டுப்பாடான வாகனப் போக்குவரத்து எனப் பல முயற்சிகளை எடுத்தும், பெரிதாகப் பலன் ஏதுமில்லை. காரணம், இந்தப் பிரச்சனையின் முன்னுரைக்கான எல்லையென்பது டெல்லியையும் கடந்து பஞ்சாப், ஹரியானா என்று சுற்றியுள்ள மாநிலங்களிலும் நீண்டிருக்கிறது.

ஆண்டுக்கு மூன்று முறை டெல்லியில் காற்றின் தரம் தாழ்வதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக குளிர் காலங்களில் காற்றில் கலக்கும் மாசுபாடு, பனியுடன் பிணைந்து ஸ்மாக் (smog) என்று கூறப்படும் மிகவும் மோசமான நிலையை எட்டிவிடுகிறது. இதற்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் எரியூட்டப்படும் வேளாண் கழிவுகள். நெற்கதிர்களை இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்த பிறகு, நிலத்தில் தங்கி விடும் சுள்ளிக்கட்டைகளை அகற்றுவதற்கு விவசாயிகள் அதிகபட்சமாகப் பயன்படுத்துவது ஒரு லிட்டர் டீசலும், ஒரு தீப்பெட்டியும்தான். கொழுந்து விட்டெரியும் அந்த நெருப்பு உண்டாக்கும் புகை, அதில் கலந்துவிட்ட நுண்துகள்கள், காற்றின் திசையோடு பயணித்து, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இறுதியில் டெல்லியின் மேற்பரப்புக்குச் சுற்றுலா வந்து தங்கிவிடும். இது குறித்து ஓரிரு நாள்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மீது குற்றம் சுமத்த, அதற்கு பதில் அளித்திருந்த பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், கெஜ்ரிவால் அரசின் செயல்பாட்டை வசை பாட, அது சிறிய வாய்க்கா தகராறாகவே மாறிப்போனது.

மூக்கோடு ஒன்றிவிட்ட மாஸ்க்குகள்

முன்னர் குறிப்பிட்டது போல இந்த ஆண்டுக்கான புகை வெள்ளம் டெல்லியின் வானத்தை ஏற்கெனவே மூழ்கடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமையே டெல்லியில் காற்றின் தர அளவீடு மிகவும் மோசமான நிலையைச் சுட்டிக்காட்டியது. இது தீபாவளிக்குப் பிந்தைய நாள்களில் மேலும் மோசமடையும் அபாயமும் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மக்களும் மாஸ்க்குகளை மறந்து வீடுகளை விட்டு வெளியே வருவதே இல்லை. டெல்லியின் தற்போதைய நிலை குறித்து நம்மிடம் விவரித்த தமிழக மாணவர் ரிச்சர்ட், ``டெல்லியில இருக்க ஷாதிப்பூர்லதான் நான் ரூம் எடுத்து தங்கியிருக்கேன். அங்கிருந்து எங்க காலேஜுக்கு 20 நிமிஷம் பஸ்ல ட்ராவல் பண்ணிதான் போகணும். வெளிய போனாலே மாஸ்க் போடணும்ங்கிற நிலைமை, கடைக்குப் போனாலும் சரி, காலேஜ்க்குப் போனாலும் சரி. காலைல பஸ் ஸ்டாப்க்குப் போய் நின்னா என்ன வண்டி வருதுன்னு கூடத் தெரியாது, அவ்ளோ புகையா இருக்கும். பக்கத்துல யார் நிக்குறான்னு கூட தெரியாது. 

இது வருஷம் முழுக்க இருக்க நிலைமை இல்ல. இந்தப் பிரச்னை இந்த வருடம் அக்டோபர் கடைசிலதான் ஆரமிச்சது. மாலை ஒரு 5 மணிக்கெல்லாம் கும் இருட்டாயிடும். சொல்லப்போனா, சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல கண்ணு தெரியாதுங்கிற கவுண்டமணி காமெடி மாதிரிதான் இங்க எல்லாரோட நிலைமையும்", என்று சற்றுப் புன்னகைத்தவரிடம் உடல் ஆரோக்கியம் சார்ந்து கேட்ட போது, ``எனக்கு இங்க வர்றதுக்கு முன்னாடியே சைனஸ் பிரச்னை இருந்துச்சு. இங்க வந்த பிறகு, அடிக்கடி உடம்பு சரியில்லாம ரொம்பவும் அவதிப்பட்டு இருக்கேன். இங்க ஆஸ்துமா, கண் பிரச்னை, சுவாசம் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையும் இல்லாத ஆட்கள பாக்குறதே கஷ்டம். இப்போ இருக்க நிலைமையைப் பாத்தா உயிரோட ஊர் வந்து சேந்தா போதும்டா சாமினு இருக்கு", என்றார்.

நுண்துகள்களை தடுக்கும் நாஸோ ஃபில்டர் (Naso filter)

மாசுபாட்டின் உற்பத்தியை உடைக்கத் தகுந்த கருவிகளை அறிஞர்கள் கட்டமைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், நுகர்வோர் முனையில் அதாவது மாசுகலந்த காற்றை சுவாசிக்கும் மக்களின் நலனுக்காகவும் பல கண்டுபிடிப்புகள் வரவேற்புக்காக வரிசையில் நிற்கின்றன. அப்படிப்பட்ட வரிசைகளைக் கடந்து, தனது கண்டுபிடிப்பினால் மக்களுக்கு சுவாசிக்க தகுந்த காற்றை வழங்கும் ஒரு பெரும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த முன்னாள் ஐஐடி (IIT) மாணவர் பிரத்திக் ஷர்மா. நானோ கிளீன் (Nano Clean) எனும் தன்னுடைய தொடக்க நிறுவனத்தின் மூலம் இளம் தொழிலதிபராக முன்னேறியுள்ள பிரத்திக், அவரது படைப்பான நாஸோ ஃபில்டர்ஸ் பற்றியும், டெல்லியின் நிலை பற்றியும் கூறுகையில், ``டெல்லியில் மாசுபாடு எதிர்பார்த்ததைப் போலவே மிகவும் மோசமாக இருக்கிறது. PM2.5 என்று சொல்லப்படக்கூடிய நுண்துகள்களின் அளவு, மீட்டர் கருவிகள் அதனை அளவிடும் எல்லையைக் கடந்து எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பாதிப்புகளின் தாக்கத்தை என்னுடைய தாயின் ஆஸ்துமா வழி நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன். அப்போதுதான் எனது தாயாரைப் போல இரவும் பகலும் இதனால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் தூண்டுதல் என்னுள் ஏற்பட்டு, நாஸோ ஃபில்டர்ஸை நோக்கிய எனது பயணத்தைத் தொடங்கினேன்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் சந்தைக்கு வந்துள்ள எங்களது நாஸோ ஃபில்டர்ஸ் மற்ற முக மாஸ்க்குகளைப் போல முழு முகத்தையும் மறைக்காது மற்றும் சீக்கிரமாக சோக்கும் ஆகிவிடாது. நானோ தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்படும் இந்த ஃபில்டர்கள், நாசித் துவாரத்தில் ஒரு மெல்லிய திரை போன்று செயல்பட்டு 95 சதவிகிதத்துக்கும் அதிகமான PM 2.5 நுண்துகள்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை. 10 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஃபில்டரினால், டெல்லிவாசிகள் மத்தியில் எங்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதுவும், அக்டோபர் நவம்பர் போன்ற மாசுக் காலங்களில், விற்பனையின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊக்கத்தினை மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு உரமாக்குவோம்", என்றவரது குரலில் தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதினை வென்ற பெருமிதத்தையும் உணரமுடிந்தது.

சுத்தமான காற்றுக்குக் கூட மனிதர்கள் சிரமப்படும் கதைகளை இனி புனைவுகளில் தேட வேண்டாம்; நம் தலைநகர் குறித்து வரும் செய்திகளிலேயே அதிகம் பார்க்கமுடியும்.