Published:Updated:

`வட சென்னை’ தனுஷின் ரியல் மாஸ்டர் மரிய இருதயம்..! #CarromLegend

`வட சென்னை’ தனுஷின் ரியல் மாஸ்டர் மரிய இருதயம்..! #CarromLegend
`வட சென்னை’ தனுஷின் ரியல் மாஸ்டர் மரிய இருதயம்..! #CarromLegend

நன்றி 

மரிய இருதயம்..! 

`வடசென்னை’ டைட்டில் கார்டில் இந்தப் பெயரைக் கவனித்தீர்களா? அன்பு கேரக்டருக்கான இன்ஸ்பிரேஷன். அந்த நன்றிக்குரியவரைச் சந்திக்க பெரியமேடுநேவல் ஹாஸ்பிட்டல் சாலையை நோக்கிப் புறப்பட்டோம். `அதோ அந்த வீடுதான். வாசலாண்ட நின்னா ஒரு நாய் கொலைக்கும். உடனே அவர் எட்டிப் பார்ப்பாரு’ என, விநோதமாக அட்ரெஸ் சொன்னார் அங்கு மீன் விற்றுக்கொண்டிருந்த அக்கா. அவர் கை நீட்டிய இடத்தில் பாழடைந்த ஒரு போலீஸ் பூத் இருந்தது. அதற்கு எதிரே இருந்தது மரிய இருதயத்தின் வீடு. இல்லை, அகாடமி. இல்லை இல்லை மேலே வீடு, கீழே அகாடமி.

கப்பலில் ஊக்குப் போட்டு சரக்கு எடுத்துவிட்டு, கையில் பைனாகுலருடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் ராஜன், வழியில் கோலி விளையாடிக்கொண்டிருக்கும் சிறுவர்களைப் பார்த்துச் சொல்வார்... `கோலி ஆடாதீங்கடா... போர்டு ஆடுங்க..!’ கேரம்போர்டில் ஸ்டேட் சாம்பியனாகி விட்டால் சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை கிடைக்கும்; வாழ்க்கைத் தரம் உயரும் என்பது ராஜன் நம்பிக்கை. போர்டு ஆடுவதில் கில்லியான `அன்பு’ நேஷனல் சாம்பியன் ஆகவில்லை. ஆனால், `அன்பு’க்கு (தனுஷ்) போர்டு ஆடக் கற்றுக்கொடுத்த மரிய இருதயம் ஒரு வேர்ல்டு சாம்பியன். ஒருமுறை அல்ல இருமுறை. 

``வெற்றிமாறன் நம்ம ஃப்ரெண்ட். ரெண்டு பேரும் பீஜன் ஃபேன்ஸியர்ஸ் (pigeon fanciers). ராஜான்னு ஒரு வாத்தியார். அவர்தான் என்னை, `இவர் கேரம்ல வேர்ல்டு சாம்பியன்’னு சொல்லி வெற்றிமாறன்ட்ட அறிமுகப்படுத்தி வெச்சார். விசாரிச்சுட்டு, `ஒருநாள் இதைப் (கேரம்) பத்தி பேசுவோம்னு’ சொன்னார். அதுக்கப்புறம் அடிக்கடி ரெண்டு, மூணு மணி நேரம்லாம் பேசியிருக்கோம். புறாவைப் பத்தியும், கேரம் பத்தியும்..!’’ 

தனுஷை எப்ப மீட் பண்ணிங்க...?

ஒருநாள் திடீர்னு வெற்றிமாறன் போன் பண்ணார்.

`சொல்லுங்க டைரக்டரே’

`நீங்க இங்க வரமுடியுமா? தனுஷக்கு கிளாஸ் எடுக்கணும்’

அதுக்கென்ன... தாராளமா பண்ணிரலாம்.  

அசைவுகளின் நுணுக்கம் தெரிந்தவனுக்கே கேரம் கை கூடும். போர்டுக்கு பக்கவாட்டில் நிற்கும் ரெஃப்ரி தலையைச் சொரிவது கூட, பிளேயருக்கு டிஸ்ட்ராக்ஸனை ஏற்படுத்தும். சுண்டுதல் மட்டுமல்ல உடம்பு நகர்தலும் முக்கியம். நகர்தல் மட்டுமல்ல கால்களை தரையில் ஊன்றுவதும் முக்கியம். பாக்கெட்டுக்கு வலது பக்கம் இருக்கும் காயினைப் போட வேண்டுமெனில், உடம்பு அதற்கு எதிர்ப்புறம் நகர வேண்டும். இப்படி, `வட சென்னை’யில் மெய்யாலுமே போர்டு ஆடுறவர் போல மாறியிருப்பார் தனுஷ். மாற்றியிருப்பார் மரிய இருதயம். 

`சுண்டுற விரலைப் படுக்க வைச்சி ஆடக் கூடாது, நேராதான் வெச்சி ஆடணும்; இப்டிப்போட்டா அது தள்ளி போகும்; திரும்பி உட்காரணும்; பாடி மூவ்மென்ட்; கால் நகர்வு, பார்வைனு சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தேன். தனுஷும் ஷார்ப். ரொம்ப சீக்கிரமே கத்துக்கிட்டார்’- என மரிய இருதயம் சொன்னது எந்தளவு உண்மை என்பதை, ஜெயிலில் செந்திலுடன் அன்பு போர்டு விளையாடியதை உன்னிப்பாகக் கவனித்திருந்தால் தெரியும். Thumbing, Scissoring எல்லாம் அவ்ளோ ப்ரொஃபஷனல். கச்சிதம்.

`ஓவரா இருக்கே... ஜெயில்ல கேரம் விளையாட விடுவாங்களா என்ன?’ 

``எல்லாரும் இப்படித்தான் கேக்குறாங்க. ஜெயில் இங்க (சென்ட்ரல் அருகே) இருந்த வரைக்கும் அடிக்கடி டோர்னமென்ட் நடக்கும். நாங்க டிஸ்ட்ரிக்ட் அசோஸியேஷன்காரங்க அங்க போயி, டோர்னமென்ட்டை நடத்திக் கொடுப்போம். லாசர் அண்ணன், டில்லி பாபு இவங்கதான் சீஃப் கெஸ்ட்டா போயி ப்ரைஸ் கொடுத்துட்டு வருவாங்க. நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இதைப் பண்ணோம். `வட சென்னை’ ஜெயில் சூட்டிங்ல கேரம் பிளேயர்ஸைப் போட்டா நல்லா இருக்கும்னு, எங்க பிளேயர்ஸை அனுப்பி வைச்சோம்’ என, வட சென்னை ஏரியாவில் கேரம் கோலோச்சிய கதையைச் சொன்னார் மரிய இருதயம். 

பெரியமேடு, வியாசர்பாடி, புளியந்தோப்பு, சிந்தாதிரிப் பேட்டை, வண்ணாரப் பேட்டை ஏரியாவில் பிறந்தவர்களின் பால்யம், கேரம் இல்லாமல் விடிந்திருக்காது. ஆக, பெரிய மேடுவில் பிறந்த மரிய இருதயம் சின்ன வயதிலேயே கேரம் ஆடக் கற்றுக்கொண்டது பெரிய விஷயமில்லை என்றாலும், போர்டு ஆடுவதையே அவர் ஒரு தொழிலாக பாவிக்க காரணம் லாஸர். `எல்லார் வீட்டுலயும் இருக்கிறது மாதிரி, எங்க வீட்டுலயும் போர்டு இருந்துச்சு. 1972 -73-ல வி.லாசர் நேஷனல் சாம்பியன். அவர் என் சொந்தக்காரர். ஒருநாள் ஃபங்ஷனுக்கு அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். வீடு முழுக்க டிராபி. `இதெல்லாம் எதுக்கு வாங்குனது’னு கேட்டேன். அவர் `கேரம்ல வாங்குனதுன்னு சொன்னார். கேரம்ல கூட இவ்வளவு இருக்கானு சொல்லிட்டு, அன்னியிலருந்து தீவிரமா போர்டு ஆடுனேன்’’ எனச் சொல்லும் மரிய இருதயத்தை, அவரது தந்தை ஆரம்பத்தில் `போர்டு’ ஆட  அனுமதிக்கவில்லை. நாளடைவில் பெரிய அளவில் ஜெயிக்க ஆரம்பித்ததும், பையனைப் பற்றிய பேப்பர் கட்டிங்குகளை ஆர்வமாக சேகரிக்கத் தொடங்கி விட்டார் அவரது தந்தை.

வட சென்னை ஏரியாவில் யார் கேரம் போர்டில் ஆர்வமாக இருந்தாலும் அவர்களை வளர்த்தெடுப்பதில் முக்கியமானவர் கபீர்தாஸ். மரிய இருதயம் அவர் பாசறையில் இணைந்தார். பங்காரு பாபு, எஸ்.ஆனந்தன் இருவரும் அவருக்குப் பயிற்சி கொடுத்தனர். 16 வயதிலிருந்து சீரியஸாக கேரம் ஆடத் தொடங்கிய மரிய இருதயம், தன்னை ஜாம்பவனாக வளர்த்துக்கொண்ட இடம் `போர்டு டூம்’. யெஸ்...`வட சென்னை’-யில் வரும் அதே போர்டு ரூம். அங்குதான் பதக்கம் பெற்றோர், பதக்கம் பெறாதோர், சீனியர் எனப் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கும். அங்கிருந்துதான் அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறுவார்கள்.

``அப்போலாம் போர்டு ரூம் ரொம்ப இருக்கும். போர்டு ஆடுறவங்க மட்டுமல்ல, குடிச்சிட்டு வர்றவங்க, ரவுடிங்க, அங்கதான் தஞ்சமாவாங்க. அவங்களை விரட்டவும் முடியாது. அதனால, போலீஸ் கரெக்ட்டா டார்கெட் போட்டு, அங்கதான் வருவாங்க. போலீஸ் கெடுபிடி ஜாஸ்தியானதுக்குப் பிறகு, போர்டு ரூம்லாம் குறைஞ்சிருச்சு. இப்பலாம் அகாடாமிதான் இருக்கு. மாவட்ட அசோஸியோசனோட ரிஜிஸ்டர் பண்ணி இருக்கும். அந்த ரிஜிஸ்ட்ரேஸனை காமிச்சா போலீஸ் ஒண்ணும் சொல்லாது.’’ மரிய இருதயத்தின் அகாடமி முன், `Chennai district assosiation Affiliated to Tamilnadu Carrom Association’ என்ற வாசகம் கதவில் ஒட்டப்பட்டிருந்தது. 

``போர்டு ரூம்ல ரொம்ப பெட்டிங் ஆடுவோம். இங்க பெட்டிங்ல எங்கிட்ட தோத்த வெங்கடேஷ், ஆல் இண்டியா இன்விடேஷன் டோர்னமென்ட்ல வின் பண்றாரு. அதைப் பார்த்து `உங்கிட்ட இங்க தோத்தவன் அங்க வின் பண்ணும்போது, நீ ஏன் அங்க கலந்துக்க கூடாதுன்னு’ கபீர்தாஸ் என்னைத் திட்டினார். அதுக்கப்புறம்தான் ஸ்டேட் லெவல் டோர்னமென்ட்ல கலந்துகிட்டேன். இரண்டாவது ரவுண்ட்ல டில்லி பாபு கூட ஆடுற மாதிரி `டிரா’ அமைஞ்சிருச்சு. அவர்தான், முதன்முதல்ல தமிழ்நாட்டுக்கு கேரம்ல நேஷனல் சாம்பியன் வாங்கிக் கொடுத்தவர். அந்த டிரா பார்த்ததும், `காசு கட்றது வேஸ்ட்டு. நாம வீட்டுக்குப் போலாம். எப்டியும் ரெண்டாவது ரவுண்டு தோத்துருவோம்னு சொன்னேன்.’ என் ஃபிரண்டுதான் `இப்டியெல்லாம் பார்த்தா விளையாட முடியாது. நீ விளையாடு’ன்னு சொன்னான். அவர் சான்ஸ்ல அவர் ஜெயிக்கிறாரு. என் சான்ஸ்ல நான் ஜெயிக்கிறேன். அவ்ளோ ஃபைட். கடைசியில அவர் ஜெயிச்சிட்டார். அதுக்கப்புறம் 15 முறை அவர்கிட்ட தோத்துருக்கேன்.’’ எனச் சொல்லும் மரிய இருதயம், கஸ்டம்ஸில் வேலைக்குச்  சேர்ந்தபின் டாப் கியரில் பயணித்தார்.  

ஒரு வழியாக, புரசை ரெக்ரேஷன் கிளப் சார்பில் நடந்த போட்டியில் லாசரை முதன்முறையாக வென்றார் மரிய இருதயம். அந்த டோர்னமென்ட் முடிவில் வெற்றி பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பாயின்ட் கிடைக்கும். லாஸர், டில்லி இருவரும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்க, மூன்றாவது வந்த மரிய இருதயத்துக்கு நேஷனல்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. 1979-ல் முதன்முறையாக நேஷனல்ஸில் பங்கேற்ற அவர், பதக்கம் வெல்ல முடியவில்லை. ஆனால், அவருடன் பயணித்த, லலிதா குமாரி டீம் ஈவன்ட், டபுள்ஸ் பிரிவில் வெற்றிபெற்றிருந்தார். லலிதா குமாரி அப்போது கஸ்டம்ஸில் பணிபுரிந்தார். இந்த வெற்றிக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு அவரது சீனியர்களிடம் காண்பித்தபோது அவர்கள், `பசங்க யாராவது கேரம் பிளேயர்ஸ் அப்பாயின்ட்மென்ட் பண்றதுக்கு இருக்காங்களா?’ எனக் கேட்டிருக்கிறார்கள். லலிதா, மரிய இருதயத்தின் பெயரைப் பரிந்துரைத்தார்.

கஸ்டம்ஸில் இன்டர்வியூ, சர்டிஃபிகேட் வெரிஃபிகேஷன் முடிந்த மறுநாளே வேலை கொடுத்து விட்டார்கள். 1979 - 1991 வரை கஸ்டம்ஸில் இருந்த மரிய இருதயம், 1981- 1994 வரை தொடர்ந்து 14 முறை ஸ்டேட் சாம்பியன் பட்டம் வென்றார். 90-களில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கேரம் பிளேயர்களுக்கு வேலை கொடுக்கத் தொடங்கியது. மரிய இருதயம் அங்கு மாறினார். அதை நியாயப்படுத்தும் விதமாக ஒவ்வொருமுறை அவர் பதக்கம் வென்றபோதும், பதவி உயர்வு வழங்கி கெளரவித்தது இந்தியன் ஏர்லைன்ஸ். முதன்முறையாக உலகச் சாம்பியன் வென்றதும் சூப்பர்னன்ட். அடுத்து 2 முறை தேசிய சாம்பியன் வென்றதும் சீனியர் சூப்பர்னன்ட். 1995-ல் மீண்டும் வேர்ல்டு சாம்பியன் ஆனதும் துணை மேலாளர். அர்ஜுனா விருது வாங்கியதும் மேனேஜர் என எல்லா காயினையும் பாக்ஸுக்குள் தள்ளி விட்டார்.

இன்று வரை கேரமில் அர்ஜுனா விருது வாங்கிய ஒரே நபர் மரிய இருதயம் மட்டுமே. `அர்ஜூனா விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நான் விளையாடிய காலத்தில் இருந்த ஸ்டேண்டர்டை விட டில்லி, லாசர் விளையாடும்போது தரம் நன்றாக இருந்தது. அவர்கள் இரண்டு முறை நேஷனல் சாம்பியன் வென்றவர்கள். இவர்கள் தவிர்த்து, ஐந்து முறை நேஷனல் சாம்பியன் வென்ற மும்பையைச் சேர்ந்த சுபாஷ் காம்லேவும் பெஸ்ட் பிளேயர். அவர்களுக்கெல்லாம் இந்த விருதுகள் கிடைக்கவில்லை. நான் வேர்ல்டு  சாம்பியன் என்பதால் அர்ஜூனா விருது கிடைத்தது. அவர்கள் காலத்தில் வேர்ல்டு சாம்பியன்ஷிப் இல்லை என்பது துரதிர்ஷ்டம்’’ என சீனியர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார். 

ஒரு காலத்தில் சென்னைதான் `கேரம் கோட்டை’யாக இருந்தது. 1988-ல் இன்டர்நேஷனல் கேரம் ஃபெடரேஷன் தொடங்கியது. அப்போது இன்டர்நேஷனல் ஃபெடரேஷன், ஆல் இண்டியா கேரம் ஃபெடரேஷன், தமிழ்நாடு கேரம் ஃபெடரேஷன் என எல்லாமே சென்னையில்தான் இயங்கின. ஆனால், முன்புபோல இப்போது தமிழ்நாடு ஆதிக்கம் செலுத்துவதில்லை. அதை மெருகேற்றுவதற்காகவே `மரியா கேரம் இன்டர்நேஷனல் அகாடாமி’ தொடங்கப்பட்டுள்ளது. 

``கபீர்தாஸ் இறந்த அன்னிக்கி அவர் நண்பர் எங்கிட்ட, `அப்டியே விட்ரக் கூடாது. நீதான் எதாவது பண்ணணும்’னு சொன்னார். அப்படி ஆரம்பிச்சி, வந்த பொண்ணுதான் ரேவதி. ஃப்ரெண்டோட பொண்ணு. சும்மா வேடிக்கை பார்க்க வந்தாங்க. ஆர்வம் இருந்துச்சு. ட்ரெய்னிங் கொடுத்தோம். 1995-ல அவங்களும் வேர்ல்டு சாம்பியன்’’ எனச் சொல்லும்போதே அவருக்கு அவ்வளவு பெருமிதம். மரிய இருதயம், ரேவதி, லலிதா குமாரி எனப் பத்துக்கும் மேற்பட்டோர் `போர்டு’ விளையாடி பணி நியமனம் பெற்றுள்ளனர். 

ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருக்கும் அதே டெம்ப்ளேட் கதைதான் என்றாலும், மரிய இருதயத்தின் கதை கொஞ்சம் விசித்திரமானது. `1982-ல கல்யாணம் பண்ணேன். என் மனைவி பேரு ஃபிலோமினா. எனக்கு எல்லாமே அவதான். காலையில் 4 மணிக்கு எழுப்பிவிட்டு பிராக்டீஸ் போகச் சொல்வா. முந்துன நாள் மேட்ச் போயிட்டு வந்து லேட் நைட் படுத்தாலும், காலையில 4 மணிக்கு எழுப்பி விட்ருவா. 2012-ல இங்க இங்கனதான் (பக்கத்திலேயே கை காட்டுகிறார்) ஒரு ஆக்சிடென்ட். கண்ணெதிர்லயே உயிர் போயிடுச்சு’’ -சொல்லும்போதே கலங்குகிறார். ``எனக்கு அம்மாவும் இல்லை. எனக்கு 3 வயசு இருக்கும்போது இறந்துட்டாங்க. எனக்காக வந்தவளும் இல்லை. நான் பெத்தவளும் இல்லை. ஆறு வயசுலயே இறந்துட்டா’’ - என அவர் தேம்பும்போது, நமக்கும் கண் கலங்கியது.

மரிய இருதயத்துக்கு நான்கு மகன்கள். `மூத்தவன் இங்க வொர்க் பண்றான்’ என ஏதோ ஒரு கம்பெனியைச் சொன்னார். இரண்டாவது பையன்..., மூனாவது பையன்... என வரிசையாகச்  சொல்லி விட்டு, `கடைசி பையன் போர்டு ஆடுறான். நேஷனல்ஸ் விளையாடியிருக்கான்’ எனப் பெருமையாகச் சொல்லிவிட்டு, கேரம் போர்டு போலவே வடிவமைக்கப்பட்டிருந்த அந்தக் கடிகாரத்தைப் பார்த்தார். மணி 4. பிளேயர்கள் பிராக்டீஸுக்கு வரும் நேரமிது.

``எஸ்.எஸ்.எல்.சி படிச்சிருந்தேன். அந்தப் படிப்புக்கு, ஏதாவது வேலையும் கிடைச்சிருக்கும். நாலு பேரு மாதிரி நானும் நல்லா சம்பாதிச்சிருப்பேன். வீடும் வாங்கியிருப்பேன். இந்நேரம் ரிட்டையர்டும் ஆயிருப்பேன். போர்டு ஆடுனதால பேர் கிடைச்சிருக்கு. அர்ஜூனா அவார்டு கிடைச்சிருக்கு. நம்மளால கேம் டெவலெப் ஆயிருக்கு. எனக்கு வாழ்க்கை கொடுத்த கேமுக்கு திருப்பிச் செய்யுற நேரம் இது. முன்ன மாதிரியே சென்னையை கேரம் கோட்டையா மாத்தணும்!’’

உணர்வுகள் மேலெழ இருக்கையைவிட்டு எழுந்து நன்றி சொன்னேன்!

``நன்றி 

மரிய இருதயம்!’’