Published:Updated:

VR46 ராஸியின் க்ராஷ்... மார்க் மார்க்யூஸ் வின்னர்... மலேசிய மோட்டோ ஜிபி அனுபவம்!

முயற்சிசெய்தால் முதலிடம் நிச்சயம் என்ற நம்பிக்கையும் இருந்தது. எனவே, வெறித்தனமாக பைக் ஓட்டினேன். ரேஸில் 2-வது இடத்துக்கு வந்துவிட்டாலும், 16-வது லேப் வரை எனக்கு முன்னே ராஸி இருந்தார்.

VR46 ராஸியின் க்ராஷ்... மார்க் மார்க்யூஸ் வின்னர்... மலேசிய மோட்டோ ஜிபி அனுபவம்!
VR46 ராஸியின் க்ராஷ்... மார்க் மார்க்யூஸ் வின்னர்... மலேசிய மோட்டோ ஜிபி அனுபவம்!

ங்களை தற்போது ஒரு பைக் ரேஸராகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் இந்த வருடத்தின் மோட்டோ ஜிபி சாம்பியனாக இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். குவாலிஃபையர் முடிவில் முதலிடத்தில் இருந்து ரேஸைத் தொடங்கும் நேரத்தில், உங்களுக்கு 7-வது இடத்திலிருந்து ரேஸைத் தொடங்குமாறு பெனால்ட்டி வழங்கப்பட்டால், உங்களின் மனநிலை அப்போது எப்படி இருக்கும்?

இந்நேரத்தில் 'ரேஸில் அதிக ரிஸ்க் எடுக்காமல், முடிந்தவரை போடியம் ஏறுவதற்கு முயல வேண்டும்' என்பதே பெரும்பான்மையானோரின் முடிவாக இருக்கும். ஆனால், சமீபத்தில் மலேசியாவின் செபாங் சர்க்யூட்டில் நடைபெற்ற மோட்டோ ஜிபி ரேஸில், முன்னே சொன்ன இதே நிலையில்தான், Repsol ஹோண்டா ரேஸிங் டீமின் மார்க் மார்க்யூஸ் இருந்தார். 

பைக் ரேஸில் காலடி எடுத்துவைத்த 6 சீஸனில் இவர் 5-ல் சாம்பியன்ஷிப் வென்றிருப்பதுடன், இந்த நடப்பு சீஸன் முடிவதற்கு இன்னும் ஒரு ரேஸ் இருக்கிறது (நவம்பர் 18 - வாலென்சியா). ஆக போட்டியாளர்களைவிட முன்னிலையில் இருந்தாலும், அந்தக் கடினமான சூழலைத் துணிவுடன் எதிர்கொண்டார் மார்க். ஆம், ரேஸ் தொடங்கி 5 லேப்கள் முடிந்த நிலையிலேயே, 7-வது இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேறிவிட்டார்! ஆனால், மலேசிய மோட்டோ ஜிபியை முதலிடத்திலிருந்து தொடங்கிய Movistar யமஹா அணியின் வாலன்ட்டினோ ராஸி, 16 லேப்கள் வரை அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார்.

ஆனால், 16-வது லேப்பின் முதல் திருப்பத்தில் அவர் திடீரென க்ராஷ் ஆனது, பின்னால் இருந்த மார்க் மார்க்யூஸுக்கு உதவிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இதனால் நடப்பு சீஸனில் அவர் தனது 9-வது வெற்றியைப் பெற்றதுடன் (ஒட்டுமொத்தமாக மோட்டோ ஜிபியில் 70-வது வெற்றி), இந்த வெற்றியால் ஹோண்டாவுக்கு 24-வது Constructor சாம்பியன்ஷிப்பும் கிடைத்திருக்கிறது.

செபாங் சர்க்யூட்டில் நடைபெற்ற மலேசியன் மோட்டோ ஜிபி ரேஸ் குறித்து, 25 வயதான மார்க் மார்க்யூஸிடம் கேட்டபோது, '7-வது இடத்திலிருந்து ரேஸைத் தொடக்கியதால், மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்தேன். எனவே அதிகமாக ரிஸ்க் எடுத்தால்தான், போடியம் ஃப்னிஷாவது பெறமுடியும் என்பதை முதலிலேயே உணர முடிந்தது. ஆனால், முயற்சிசெய்தால் முதலிடம் நிச்சயம் என்ற நம்பிக்கையும் இருந்தது. எனவே, வெறித்தனமாக பைக் ஓட்டினேன். ரேஸில் 2-வது இடத்துக்கு வந்துவிட்டாலும், 16-வது லேப் வரை எனக்கு முன்னே ராஸி இருந்தார். அவரும் வெறித்தனமாக பைக் ஓட்டிக்கொண்டிருந்தார். நான் சில திருப்பங்களில் மயிரிழையில்தான் க்ராஷ் ஆகாமல் தப்பினேன்.

ரேஸ் டிராக்கின் தட்பவெப்பநிலை மற்றும் பைக் ஆகிய இரண்டுமே எனக்குச் சாதகமாக இல்லையென்றாலும், இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி' என்றார். இவர் மோட்டோ ஜிபி உலகில், ரேஸின்போது க்ராஷ் ஆகாமல் தப்பிப்பதிலும் பெயர்பெற்றவர். சுமார் 1.03 லட்சம்பேர், இந்தப் போட்டியை நேரில் கண்டு களித்ததை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 16-வது லேப் வரை, முதலிடத்தில் இருந்த வாலன்ட்டினோ ராஸிக்கும் - இரண்டாவது இடத்திலிருந்த மார்க் மார்க்யூஸுக்கும் இடையே 1 விநாடி வித்தியாசம் இருந்தது. 

ஆனால், மார்க்கின் ரசிகர்கள் நிரம்பியிருந்த பகுதியை ராஸி கடந்து சென்றபோது, அவர்கள் ஆர்ப்பரித்தது வியப்பாகவே இருந்தது. ஏனெனில், அவர் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு, மலேசியாவில் தனது முதல் வெற்றியைச் சுவைப்பதற்காகக் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்தார். இது Free Practice மற்றும் Qualifier-ல் எதிரொலித்தது. மேலும், ரேஸை முதலிடத்தில் இருந்து தொடங்கிய நிமிடத்தில் இருந்தே, நீண்ட நாள்களுக்குப் பிறகு அவரிடமிருந்து மிகச் சிறந்த திறன் வெளிப்பட்டது. 16-வது லேப் வரை எல்லாமே அவருக்குச் சரியாக இருந்தது என்றாலும், முதல் திருப்பத்தில் வழக்கத்தைவிட அதிகமாகவே பைக்கை வளைத்ததால், அவர் க்ராஷ் ஆக நேரிட்டது.

26 ரேஸ்களுக்குப் பிறகு முதல் வெற்றியைப் பெறும் ராஸியின் கனவும் அத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது; அதுவும் தனது ரசிகர்கள் இருந்த பகுதிக்கு அருகே அந்தச் சம்பவம் நடந்ததுதான் முரண். அதுவரை கரகோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த ராஸியின் ரசிகர்கள், அதிர்ச்சியில் உறைந்துபோய் திடீரென அமைதியாகிவிட்டார்கள்! ரேஸின் இறுதியில் ராஸி 18-வது இடத்தையே பெறமுடிந்தது. என்றாலும் அவர் மோட்டோ ஜிபி ரசிகர்களின் மனதில் என்றுமே முதலிடத்தில்தான் இருக்கிறார்! அது ரேஸ் முடிந்த பிறகு, அவர் தன் ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு வந்தபோது நிரூபணமானது. 

இப்படி திடுக் திருப்பங்களுடன் பரபரப்பாக நடந்துமுடிந்த மலேசியன் மோட்டோ ஜிபியில், நெகிழ்ச்சியான ஒரு விஷயமும் நடந்தது. ஆம், மான்ஸ்ட்டர் யமஹா Tech 3 அணியைச் சேர்ந்த 24 வயதே நிரம்பிய ஹாஃபீஸ் சையஹிரின் (Hafizh Syahrin), உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் மண்ணின் மைந்தனாகக் களமிறங்கினார். Free Practice-ல் முதல் பத்து இடங்களில் இருந்த அவர், Qualifier-ல் கடைசி இடத்தையே பிடித்தார். எனவே 23-வது இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கினாலும், முதல் லேப்பின் முடிவிலேயே 12-வது இடத்துக்கு விறுவிறுவென முன்னேறிவிட்டார்; பின்னர் ரேஸின் இறுதியில் 10-வது இடத்தைப் பிடித்த ஹாஃபீஸ் சையஹிரின், மிகவும் உணர்ச்சிகரமாகக் காணப்பட்டார்.

ரேஸ் தொடங்குவதற்கு முன்பு டிராக்குக்கு வெளியே கேட்டின் அருகே நின்றுகொண்டிருந்த தன் தந்தையைக் கட்டிப்பிடித்து அழுததைப் பார்க்க முடிந்தது. மேலும் ரேஸ் முடிந்த பிறகு, டிராக்கில் இறங்கி மண்டியிட்டு, தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது க்ளவ்ஸ் இரண்டையும் அவர்களை நோக்கி மகிழ்ச்சிப் பெருக்கில் எறிந்தார்! இவர் ‘Rookie of the Year' விருதைப் பெறுவதற்கான சாத்தியம் அதிகரித்திருக்கிறது.

படங்கள்: Moto GP