Published:Updated:

``கடல்நீர்தான் மாசுக்குக் காரணம்!" - ஸ்டெர்லைட்டின் மறுப்பும், சில கேள்விகளும்

ஸ்டெர்லைட் இதற்கு முன்புவைத்த வாதங்களுக்கே முழு முரணாக இருக்கிறது தற்போதைய பதில்கள்.

``கடல்நீர்தான் மாசுக்குக் காரணம்!" - ஸ்டெர்லைட்டின் மறுப்பும், சில கேள்விகளும்
``கடல்நீர்தான் மாசுக்குக் காரணம்!" - ஸ்டெர்லைட்டின் மறுப்பும், சில கேள்விகளும்

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையில் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் அங்கு ஆர்சனிக், நிக்கல் போன்ற தனிமங்கள் கலந்திருப்பது தெரியவந்தது. ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையைத் தவிர அந்தப் பகுதியிலுள்ள வேறு எங்கிருந்தும் இந்த நச்சுத் தனிமங்கள் நிலத்தடி நீரில் கலந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அங்குள்ள வேறு எந்தத் தொழிற்சாலையும் ஆர்சனிக், நிக்கல் போன்ற கழிவுகள் வெளியேறாது. அது குறித்து கடந்த வாரம் விகடன் டாட் காமில் கட்டுரை வெளியானது. இதற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது. அது இதோ.

``ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, தொடங்கப்பட்ட நாள் முதல் பூஜ்ய திரவ வெளியீடு (zero liquid discharge) முறையைப் பின்பற்றி வருகிறது. எனவே, இங்கிருந்து எந்தவித மாசுபட்ட நீரும் வெளியேற வாய்ப்பு இல்லை. அங்குள்ள நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு எங்கள் ஆலை காரணமாக இருக்காது. இது கடந்த 2011-ம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன ஆய்வின்போது, மனுதாரர் வைகோ மற்றும் நித்யானந்தன் ஜெயராமன் ஆகியோரும் அதில் இடம் பெற்றிருந்தனர்.

சிப்காட் தொழிற்சாலை பகுதியான அங்கு தெர்மல் தொழிற்சாலை, உரம், செயற்கை கரிம ரசாயன தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்கு, அபாயகரமான ரசாயனப் பொருள்களைக் கையாளும் தொழிற்சாலைகள் என 655 ஹெக்டேர் நிலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் குறித்து மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கை, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலை மூலம் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது என்று கூறுவது தவறானது என்று தெரிவித்துள்ளது.

தேசிய புவியியல் ஆய்வு மையத்தின் 2006-07 அறிக்கையில் மின் கடத்தல் (Electrical conductivity), மொத்த கரைசல்கள் (Total Dissolved solids), குளோரைடு, சோடியம், ஆர்சனிக், ஈயம், நிக்கல் என்னும் வெள்ளை உலோகம், கேட்மியம், இரும்பு, மங்கனீசு மற்றும் தாமிரம் போன்ற தனிமங்கள் கடல்நீர் மூலம் நிலத்துக்குள் புகும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2001-ம் ஆண்டு மே மாதம் கடல்நீர் மாதிரியைச் சேகரித்து செய்த ஆய்வில் மேற்கண்டவை உயர் மதிப்பு மிக்கது என்று தெரிவித்துள்ளது."

மேற்கண்ட மறுப்பைத் தெரிவித்திருக்கும் ஸ்டெர்லைட் நிறுவனம், இன்னும் சில கேள்விகளுக்கும் விடை சொல்லவேண்டியிருக்கிறது. அவை இதோ.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு 2017-ம் ஆண்டு ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதில் zero liquid discharge ஒழுங்காக நடத்தப்பட வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளது. அதற்கும் முன்பு 2011 முதலே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  zero liquid discharge-ஐ முறையாகச் செய்ய வேண்டுமென்று ஸ்டெர்லைட்டைக் கண்டித்துக் கொண்டிருந்தது. 2011 தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவன (NEERI) ஆய்வின்போது தலைகீழ் சவ்வூடுபரவலில் (Reverse Osmosis) உருவாகும் உப்புக் கழிவுகளைச் சட்டத்துக்கு விரோதமாக 18 குழிகளை வெட்டி அதில் கொட்டி வைத்திருந்தது தெரியவந்தது. 2001-02 ஆண்டுகளில் தொழிற்சாலையிலிருந்து வெளியான கழிவுகள் சீனா-வீனா கம்மாய், கழுதைக் குட்டைகளுக்குச் சென்று ஒட்டுமொத்த நீர்நிலைகளையுமே பாதித்து மீன்கள் இறந்து, அந்த நீர்நிலைகளில் தண்ணீர் பயன்படுத்துவதே நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தொழிற்சாலை வளாகத்தில் விழக்கூடிய கழிவு நீர் மட்டுமின்றி மழைநீர் உட்பட ஒவ்வொரு சொட்டும் கையாண்டு வெளியே போகவிடாமல் பயன்படுத்த வேண்டும். ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் நீர்தேக்கப்பகுதி எவ்வளவு? நாளொன்றுக்குப் பெய்யக்கூடிய சராசரி அளவுக்குத் தகுந்த அளவில் இருக்கிறதா? ஒரு நாளில் பெய்யக்கூடிய அதிகபட்ச மழை அளவு வைத்தே அந்த நீர்த்தேக்கப் பகுதியை அமைக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளில் பெய்யும் மழையை வைத்து அனுமானித்து அமைக்க வேண்டும். அதன்படி ஸ்டெர்லைட் அனுமானித்திருப்பது 70 mm. தூத்துக்குடியில் கோடைக்காலமான மார்ச் மாதத்திலேயே அதிகபட்சமாக 200 mm மழை அளவு பதிவாகிறதே? எனில் 70 mm கணக்கு வைத்து ஸ்டெர்லைட் அமைத்திருக்கும் நீர்த்தேக்கம் சேகரிப்பதுபோக மீதம் தேக்கிவைக்க வழியில்லாமல் வெளியேறித்தானே தீரும்.

தொழிற்சாலைகளில் அபாயகரமான கழிவுகளைச் சேமித்து வைக்கக்கூடிய கிடங்கு, Slag storage yard போன்ற பகுதிகளிலிருந்து வடிந்துவரும் நீர் வெளியே போகக்கூடாது என்பது சட்டம். அதை முதல் நாளிலிருந்தே செய்துவருவதாகச் சொல்கிறது ஸ்டெர்லைட். ஆனால், 2018 வரை 70 mm மழைநீரைச் சேமித்து வைக்கத்தான் ஆலையில் வசதியுள்ளது. அப்படியிருக்க மீதம் மழைநீர் தேக்கி வைத்திருக்கும் கழிவுகளோடு கலந்து அடித்துக்கொண்டு வெளியில்தானே வந்தாக வேண்டும். அப்படியிருக்க  zero liquid discharge என்பதன் அர்த்தமென்ன? 

2011 NEERI ஆய்வு முடிவுகளில் ராடான் என்ற ஒருவகை வாயு கன மீட்டருக்கு 23 பெக்கரல் இருப்பதாகப் பதிவாகியுள்ளது. (Exposes from Phosphoric acid industry and rock phosphate import). அதன் அளவு விகிதத்தை அணுசக்தித் துறை இதுவரை வகுக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) சர்வதேச அளவில் அது சராசரியாக ஒரு கன மீட்டருக்கு அதிகபட்சம் 5-15 பெக்கரலே இருக்கலாம் என்றுள்ளதே? அதோடு வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அதிக அளவில் ஃப்ளோரைடு கலந்திருப்பதாகச் சொல்கிறதே?

சிப்காட்டில் 652 ஹெக்டேர்களில் பல தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்தக் கழிவுகளை அவர்கள் வெளியேற்றியிருக்கலாம் என்று ஸ்டெர்லைட் கூறுகிறது. அதில் தெர்மல் தொழிற்சாலை இருக்கிறது. அதுவும் ஸ்டெர்லைட்டைச் சேர்ந்ததே. அதிலிருந்து வெளியேறியிருந்தால் அதற்கும் ஸ்டெர்லைட்தானே பொறுப்பு? காணப்பட்ட மாசு காரணிகள் எல்லா இடத்திலும் வரக்கூடியவை கிடையாது. ஆர்சனிக், துத்தநாகம், ஃப்ளோரைடு போன்றவை இருந்தால் மட்டுமே அதற்கு ஸ்டெர்லைட் பொறுப்பு. அவைதான் ஸ்டெர்லைட் மூலம் மாசு ஏற்பட்டதாகக் கூறுவதற்கான ஆதாரங்கள். NEERI ஆய்வுமுடிவுகளிலேயே இந்த மூன்றுதான் ஸ்டெர்லைட்டால் வெளியாகக் கூடியவை. அவை இல்லாததால் ஸ்டெர்லைட் மீது குற்றமில்லை என்று சொல்லப்பட்டிருந்தது. பசுமைத் தீர்ப்பாயத்திலும் இந்நிறுவனத்தின் வாதத்தின்போது மாசுபாட்டுக் காரணிகளில் இந்த மூன்றும் இல்லை, அதனால் எங்கள் மீது குற்றமில்லை என்றுதான் வாதிட்டார்கள். இப்போது மத்திய நிலத்தடி நீர்வாரிய ஆய்விலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்விலும் அவை இருப்பதாகத் தெரியவந்துள்ளது. முன்னர் இவை இருந்தால்தான் நாங்கள் காரணமாக இருக்கமுடியும், அவை இல்லை அதனால் நாங்கள் காரணமில்லை என்று சொன்ன ஸ்டெர்லைட், இப்போது அந்த மாசு காரணிகளில் அந்தத் தனிமங்கள் இருப்பது தெரிந்ததும் மறுக்கிறதே?

2006-ல் பதிவான மாசு காரணிகளில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை உற்பத்தியில் வெளியாகும் மேற்கூறிய கழிவுகள் இல்லையென்று வருகிறது. 2018-ல் அந்த மாசு காரணிகளில் இந்தக் கழிவுகளும் இருப்பதாக மத்திய நிலத்தடி நீர் வாரியமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் கூறுகிறது. மேற்கண்ட மறுப்பில் அந்நிறுவனம் குறிப்பிடுவது 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டதன் ஆய்வறிக்கை. அந்தக் காலகட்டத்தில் ஸ்டெர்லைட் விரிவாக்கம் செய்யப்பட்டது. எனில் அதன்பிறகு 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ள இந்த மாசுக் காரணிகள் இந்நிறுவனத்திலிருந்துதான் வந்ததா?

2001 NEERI ஆய்வறிக்கையில் நிலத்தடி நீரில் ஆர்சனிக், இரும்பு, தாமிரம் போன்ற தனிமங்கள் கடல்நீர் மூலமாகக் கலக்க 'வாய்ப்புகள்' உண்டென்றுதான் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இது ஊகங்களின் அடிப்படையிலான வாதம். அப்படி மட்டும்தான் கலந்துள்ளது என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா? நிலத்தடி நீரில் கலந்துள்ள ஆர்சனிக் போன்ற தனிமங்களின் அளவையும் அதில் கடல்நீர் மூலமாகக் கலந்துள்ள அளவையும் ஸ்டெர்லைட்டால் குறிப்பிட முடியுமா? அப்படி கடல்நீர் மூலமாகத்தான் வந்துள்ளதென்றால் நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சென்னை போன்ற தமிழகத்தின் அனைத்து கடலோரப் பகுதிகளிலும் நிலத்தடி நீரில் இந்தத் தனிமங்கள் கண்டறியப் பட்டிருக்க வேண்டுமே? ஏன் இந்த முரண்பாடு?

குழப்பங்கள் நீள்கின்றன.