
சரவணன் சந்திரன் - ஓவியம்: ஹாசிப்கான்
தற்புகழ்ச்சி தவிர்
கோபித்துக்கொண்டு மலைமீது அமர்ந்திருக்கும் முருகனைச் சாட்சியாகவைத்துக் கேட்ட கதை ஒன்றை அப்படியே சொல்கிறேன்.
தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை இரண்டும் முருகன் அமர்ந்திருக்கும் மலையின் கிழக்குப் பக்கம் நன்றாகப் பெய்தன. மேற்குப் பக்கம் நன்றாகப் பெய்யவில்லை.
இதற்கு முன்புவரை மேற்குப் பகுதி செழிப்பாக இருந்தது. தென்னைமர நிழலில் அமர்ந்து செழிப்பான தயிரைக் குடித்துக்கொண்டிருந்தார்கள். `தென்னம்பிள்ளைகள், செழிப்பான சோறுபோடும்!’ என்பது மூத்தவாக்கு. மிகு மழைகளின் காரணமாக ஊற்றெடுக்கும் கிணறு இருப்பது மாதிரியான தோப்பு ஒன்றுக்குச் சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் குதிகால் அளவுக்குத் தேங்கி இருக்கும் தண்ணீரில் நின்று சலித்துக்கொண்டே, ``சனியன், தென்னம்பிள்ளையைத் தவிர வேற எதையும் இங்கே போட முடியாது. ஆனாலும் பாருங்க, தென்னையில போடுற காசும் தங்கத்துல போடுற காசும் ஒண்ணு” என்றார். நிலைமை, இப்போது சடசடவென வானிலை மாதிரி மாறிவிட்டது. `தேங்காய், தேங்காய்மாதிரி காய்க்காமல் மாங்காய் மாதிரி காய்க்கிறது!’ எனப் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். தேங்காய் ஏற்றுமதி வணிகம் அடியோடு பாதித்திருக்கிறது.

சில வருடங்களாகவே அங்கே மழை பொய்த்துவிட்டது. அவர்கள் சொல்லும் கணக்குப்படி வைத்துக்கொண்டாலும்கூட அந்தப் பிராந்தியத்தில் மட்டுமே கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் தென்னைமரங்கள் காய்ந்துவிட்டன. தென்னைக்குப் பேர்போன அந்தப் பிராந்திய நிலம் ஒன்றில் இருந்த இடிந்த சாலை வீட்டில் அமர்ந்துகொண்டு அதன் உரிமையாளர், ``தென்னை இருக்குதுங்கிற கர்வத்துல இருந்தோம். அதை முருகன் அடிச்சுச் சாய்ச்சுட்டார். இப்ப பாருங்க, இந்த உடைஞ்ச சாளையை எடுத்துக் கட்டக்கூட யோசனையா இருக்கு” என்றார்.
கிழக்குப் பக்கம் இருப்பவர்களை, இந்தக் கர்வத்தின் காரணமாக மதிக்கக்கூட மாட்டார்கள். பெண் கொடுக்கத் தயங்குவார்கள். ஒருதடவை இப்படி கிழக்கும் மேற்கும் சந்திக்கும் காதல் திருமணம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பையனை `வேண்டாம்’ என்று சொல்வதற்கு எல்லோரும் பல்வேறு காரணங்களைச் சொன்னார்கள். நடுவீட்டில் குத்தவைத்துக்கொண்டு மணமகளின் உறவினரான பெண் ஒருவர் சொன்ன காரணம் ஒன்று மட்டும் எனக்கு விந்தையாக இருந்தது. காதலிக்கும் எல்லாப் பெண்களின் வீட்டிலும் பையன்கள் பொறுக்கிகள் என்பதுதான் உலக நடப்பு. அந்தப் பெண்மணி அரிசியைக் களைந்துகொண்டே, ``மதுரைப் பக்கம் போகிற டிரெயினெல்லாம் அழுக்கா இருக்குமாமே!” என்றார். இதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. ரயிலையே காரணம் சொல்கிறவர்கள் மற்ற விஷயங்களை எப்படி வீரியமாக அணுகுவார்கள் என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள். ``சோத்துக்குச் செத்த ஊர்கூட எப்படி சம்பந்தம் பண்ண முடியும்? எலையில ஒரு பொரியலைக் கொண்டுவந்து வைக்கிறாங்க. காக்கிலோ கறி எடுத்து, எட்டுப் பேர் சாப்பிடுறதெல்லாம் ஒரு ஊரா?” என என் காதுபடவே கேட்டிருக்கிறேன்.

இப்படி ஒருமுறை நண்பன் ஒருவனிடம் விளையாட்டாய் ஒருவர் சொல்ல, இவன் கிளம்பிப் போய் நான்கு கிலோ மட்டன் எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். அதைச் சுக்கா செய்துகொண்டு போய், தாமிரபரணித் தண்ணீர் குடித்து வளர்ந்து ஏகடியம் பேசிய அவரின் வீட்டுவாசலில் நின்றுகொண்டு, ``இந்தா, வெளிய வா. எங்காளுக ஒருகாலத்துல ஒரு ஆட்ட தனியா வெட்டிச் சாப்புடுவோம். என்ன பண்றது, எங்களைப் பிடிச்ச கெரகம்... மழை மாரியில்லாம கெறங்கிப்போயிட்டோம். ஊருக்கே சாப்பாடு போட்டவங்கதான் நாங்களும். நாக்கைத் தடம் புரளவிடாத. உனக்கும் வாழ்க்கை ஒருநாள் தடம் புரண்டிரும்” என்றான் கோபமாக. எளிய மனிதர்களுக்கும் அறம்பாட உரிமையுண்டு. அது என்ன, கவிஞர்களின் தனிச்சொத்தா?
இத்தனைக்கும் ஏகடியம் பேசியவர் நிலமும் ஒருகாலத்தில் சந்தைமதிப்பு இல்லாமல் கிடந்ததுதான். பருத்தியைத் தவிர எதுவும் விளையாது என்ற நிலையில் இருந்ததுதான். கால மாற்றம், நிலத்தைப் பக்குவப்படுத்திவிட்டது. செல்வத்தையும் அள்ளிக் காய்த்துவிட்டது. நிலம் வழியாகத் திரள்கிற கர்வத்தைத்தான் முருகன் அடித்துச் சாய்த்துவிட்டார் என்று சூசகமாகக் குறிப்பிட்டார் அவர். வரலாற்றில் வறுமையைப் பார்க்காத சமூகம் எங்கும் இல்லை. மெள்ள படிப்படியாகத்தான் அவர்கள் மேலேறி வந்திருக்கிறார்கள். இதைத் தவறாகச் சொல்லவில்லை. ஊர்ப் பெருமிதங்கள் ஒருவகையில் தவிர்க்கப்பட வேண்டியவை. நான்கைந்து ஊரில் நட்டு வளர்த்த செடி நான் என்பதால், இதை நெருங்கிப் பார்த்துவிட்டே சொல்கிறேன்.
தேனிக்காரர்கள், மதுரைக்காரர்களை மதிக்க மாட்டார்கள். மதுரைக்காரர்கள், உசிலம்பட்டிக்காரர்களை மதிக்க மாட்டார்கள். ``பொட்டல் காட்டுல போயி எவனாவது பொண்ணு எடுப்பானா?’’ என்பார்கள் மீசையை நீவியபடி. மதுரைக்கே இப்படியென்றால், ராமநாதபுரத்துக்காரர்களின் பாட்டையும் கோவில்பட்டிக்காரர்களின் தவிப்பையும் கேட்கவே வேண்டியதில்லை. ``தண்ணி தூக்கவா நாங்க பொண்ணப் பெத்துப் போட்டிருக்கோம்!” என்பார்கள் கோவில்பட்டிக்காரர்களைப் பார்த்து. வேலூர்க்காரர்களெல்லாம் இந்த விஷயத்தில் ரொம்பப் பாவம். இப்படி எல்லா ஊர்களையும் இந்தக் குப்பியில் அடக்கிவிட முடியும்.
நிலத்தையும் செழிப்பையும் முன்னிறுத்தி மக்கள் தங்களுக்குத் தாங்களே மனதிலும் நிலத்திலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டைப் போட்டுவிடுகின்றனர். சபைகளிலும் அதை முன்னிறுத்துகின்றனர்.
ராமநாதபுரம், கமுதிக்குப் பக்கத்தில் ஒருவருக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கிறது. பொள்ளாச்சியில் 20 ஏக்கர் நிலம் வைத்திருப்பவரும் அவரும் ஒருவகையில் ஒன்றுதானே! இதில் என்ன ஏற்றத்தாழ்வுகள் வந்துவிட்டன? செழிப்பின் 20 ஏக்கர் நிலம் இப்போது கோடிக்கணக்கான ரூபாயைக் கொட்டிக் கொடுக்கிறது. வெக்கை வழிந்த மேற்படி 20 ஏக்கர் நிலத்தை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் கருவேலஞ்செடிகள் மண்டிக்கொண்டிருக்கின்றன. இது, காலம் செய்த தவறில்லாமல் வேறென்ன?
``அடித்துப் பெய்தால் நாங்களும்கூட செழித்துப் பரந்திருப்போமே! எல்லாப் பக்கங்களிலும் தொழிற்சாலைகள் வந்திருந்தால், அவருடைய நிலத்தின் செழிப்பும் காட்டு முயலைப்போல எகிறியிருக்கத்தானே செய்யும்! செழிப்பை ஓர் அடையாளமாக முன்வைத்தால், அது நம் கையில் இல்லை என்பதுதான் முருகன் அளித்த பதில்’’ என்றார் அந்த நண்பர்.

எத்தியோப்பியாவில் இருக்கும் எலும்பும் தோலையும் பார்த்து `உச்’கொட்டுகிறோம். அந்த ‘உச்’சில் கவலை மட்டும் இருக்காது. ஏளனமும் ஒரு சிட்டிகை அளவுக்காவது கலந்திருக்கும். `தாது வருஷப் பஞ்சம்’ என இணையத்தில் தேடிப்பாருங்கள். எலும்பும் தோலுமான புகைப்படங்கள் கொட்டும். ஒருதடவை அந்தப் படங்கள் எல்லாவற்றையும் பார்த்தேன். என் தாத்தாக்களும் பாட்டிகளும் ஏனோ உடனடியாக நினைவுக்கு வந்தனர். அப்படி இருந்துதான் எல்லோரும் வளர்ந்துவந்திருக்கிறோம். எல்லாக் கூட்டங்களிலும் சொல்வதற்கென்று பெருமிதங்களைச் சேர்த்துதான் வைத்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்தும் விதத்தில்தான் மனிதர்கள் கடந்த பருவங்களை மறந்து தோற்றுவிடுகிறார்கள். மழை நினைத்தால் எதையும் அடித்துக்கொண்டு போய் கடலில் போட்டுவிடும் என்பதை இப்போதுகூட உணராதவர்களாக இருந்தார்கள்.
சென்னையில் கடலையொட்டிய பங்களா ஒன்றை வைத்திருப்பதாக எல்லா பார்ட்டிகளிலும் ஒரு நண்பன் புகழ் பேசித் திரிவான். ``கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை யாருக்கும் கொடுக்க மாட்டேன். என் குடும்பத்தின் அடையாளமாய் அது என்றென்றும் நீடிக்கும்” என்றான். சுனாமி சுழன்றடித்த பிறகு அதை விற்க வழி தெரியாமல் விழி பிதுங்கி அலைகிறான். ``முன்னால சொன்னது தப்புதான்” என ஒருதடவை மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டான்.
`மனிதர்கள், மன்னிப்பில் கிடைக்கும் தேவ சுகத்துக்காகவே தவறுகளைத் தொடர்ந்து செய்கிறார்களோ!’ என்றுகூட எனக்குச் சில சமயம் தோன்றும். ஓர் அடையாளத்துக்குச் சொல்வதென்றால், இப்போது கிழக்குப் பக்கமாக பருவக்காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. தலைதெறிக்க ஆட மனிதக்கூட்டம் மறுபடியும் தயாராகிவிட்டது. கூடவே மேற்கில் இதுவரை இருந்த கர்வத்தையும் துணைக்கு இப்போதே அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு நேர் வடக்கே இருப்பவர்களை இப்போதெல்லாம் ஏளனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
அப்படி வடக்கே இருப்பவர்கள் யார் தெரியுமா? ஒருகாலத்தில் அவர்களுடைய மன்னர் சுற்றியிருக்கும் எல்லாப் பக்கங்களுக்கும் படியளந்தவர். காலம் எல்லாவற்றையும் கருணையில்லாமல் தூக்கிப் புரட்டிப்போட்டுவிடும். இந்தக் கதையையே எடுத்துக்கொண்டாலும்கூட ஒரே மழை எல்லாவற்றையும் அடித்துச் சாய்த்துவிட்டதே! இந்த நிலை நீடித்தால் என்னாகும்? வரைபடத்தில் முன்னே இருப்பவர் கடைசி இடத்துக்கு நகர்ந்துவிடுவார். ``நம்ம கையில எதுவுமே இல்லை. இப்படி மழை இல்லாம இருந்துச்சுன்னா, தோட்டம் உட்பட எல்லாத்தையும் வித்துட்டு வேற வேலைக்குப் போகவேண்டியதுதான். என்ன பெரிய கர்வம் வேண்டிக்கிடக்கு? முருகன் முறைச்சா தொலைஞ்சோம். ஏற்கெனவே அவன் கோவிச்சுக்கிட்டுதான் அங்க வந்து உட்கார்ந்திருக்கான்” என இதுவரை செழிப்பைப் பார்த்தவர் சொன்னது எல்லோருக்குமான எச்சரிக்கைதான்.
அது எப்போதும் ஒரே மாதிரி பெய்யாது. காற்று எப்போதும் ஒரே பக்கம் மட்டுமே அடிக்காது; மாறி மாறித்தான் அடிக்கும். காற்றின் சுழற்சிக்கு ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. பருவமழைகள் பலவிதம்; அது ஒவ்வொன்றும் ஒருவிதம். மலைமீது அமர்ந்து நம்மைக் காக்கிறவர்களுக்கு மட்டுமே அதன் திசைப்போக்கு தெரியும். காற்றின் திசையில், மரங்கள் ஆடலாம்... மனிதர்கள் ஆடிவிடக் கூடாது!
- அறம் பேசுவோம்!