சினிமா
Published:Updated:

“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்!”

“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்!”

விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: க.பாலாஜி

“அநாதை விடுதியிலதான் தங்கிப் படிச்சேன். அங்கயிருந்து கூப்பிடும் தொலைவுலதான் என் வீடு இருந்தது” - முரணோடு பேசத் தொடங்குகிறார் லட்சுமி அம்மா.

எளிய மனிதர்களின் உரிமைகளுக்காக 40 வருடங்களாக வீதிகளில்  செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த போராளி. 

தஞ்சாவூர் அருகே வல்லம் கிராமத்தில் பிறந்து, வேலை செய்யுமிடத்தில் அறிமுகமான தொழிற்சங்கத்தை இறுகப்பிடித்துக்கொண்டவர். அது அவரை முழுநேர அரசியலில் இறக்கிவிட்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசனின் வாழ்க்கைத் துணையானது,  லட்சுமி அம்மாளின் வாழ்க்கையைப் போராட்டக் களங்களுடன் இன்னும் பிணைத்தது.

“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்!”

“பெண்களைப் படிக்கவைக்க ஆர்வம் காட்டாத காலம் அது. ஆனா, எனக்குப் படிக்கணும்னு ரொம்ப ஆசை. அதான் விடுதியில தங்கி பத்தாவது வரை படிச்சேன். பிறகு, தஞ்சாவூர்ல பனியன் கம்பெனியில வேலை கிடைச்சது. தினம் ரெண்டு ரூபா சம்பளம். அது அப்ப அதிகமான சம்பளம்தான். ஏன்னா, வயல் வேலைக்குப் போறவங்களுக்கெல்லாம் அரையணாதான் கூலி. பனியன் கம்பெனியில தொழிற்சங்க வேலைகளுக்கும்,  அவங்க நடத்துற கூட்டங்களுக்கும் போவேன். ஆண்களுக்கு மத்தியில நான், சரஸ்வதி, லெட்சுமின்னு மூணே பெண்கள்தான் அங்க நிப்போம். நிறைய புத்தகங்கள் அங்கதான் படிக்கக் கிடைச்சது.

 அப்ப எமர்ஜென்ஸி காலம். பல தோழர்கள் தலைமறைவா இருந்தாங்க. அவங்களை ஆதரிச்சு, துண்டறிக்கைகளைக் கொடுக்கப் போவோம். இதெல்லாம் எங்க வீட்டுக்குப் பிடிக்கல. பொம்பளப் புள்ளை இப்படியெல்லாம் இருக்கக்கூடாதுனு சொன்னாங்க. நான் தஞ்சாவூர்லேயே தங்கலாம்னு வீடு தேடினப்போதான், கட்சியிலேருந்து தோழர் டேவிட் (மணியரசன்) என்பவரைப் பற்றிச் சொல்லி, திருமணம் செஞ்சுக்க விருப்பமான்னு கேட்டாங்க. அவர் ‘தோழர்’ என்பதே, கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல முக்கியக் காரணமாக இருந்தது.

கும்பகோணத்துல தோழர்கள் முன்னிலையில, மாலை மாத்திக்கிட்டோம். தாலி இல்லை, மெட்டி இல்லைனு, நான் வேலைபார்த்த இடத்துல கிசுகிசுத்தாங்க. நான் அதையெல்லாம் காதில் வாங்கிக்கலை. முதன்முதலா  குடியிருந்தது சீனிவாசபுரத்தில். அப்புறம் பூக்காரத் தெரு, வண்டிக்காரத் தெருனு பல இடங்களுக்கு மாறினோம். எந்த இடத்துல இருந்தாலும் அந்த ஏரியா பிரச்னைகளைத் தீர்க்க, களத்துல இறங்கிடுவேன். பெரும்பாலும் தண்ணீர்ப் பிரச்னைதான். முனிசிபல் ஆபிஸுக்கு சளைக்காம போவோம். ‘லாரியை அனுப்புறோம் போங்க’னு சொன்னா, ‘சரி’னு வந்துடமாட்டோம். தண்ணீர் லாரியிலேயே ஏறிட்டுதான் வீட்டுக்கு வருவோம். ஒருமுறை, ஏரியால ஒரு தெருவுக்கு மட்டும் தண்ணீர் வரல. நாங்களும் இருக்கிற எல்லா ஆபீஸ்லேயும் மனு கொடுத்தும், பிரச்னை தீரல. என்னன்னா, அதுல ஒரு வீடு தாழ்த்தப்பட்டவங்க வீடாம். இதை விடக் கூடாதுன்னு எல்லாரையும் திரட்டி, தண்ணி விடலைன்னா தண்ணித் தொட்டி மேல ஏறிப் போராடுவோம்னு அறிவிச்சோம். பிரச்னை பெரிசா போகுதுன்னு, அதிகாரிங்க ஒரு வாரத்துல தண்ணி கொடுத்தாங்க.

என் பையன் செந்தமிழன் பொறந்தன்னிக்குப் போராட்டத்துல கலந்துகிட்டு கைதாகியிருந்தார் மணியரசன். செந்தமிழன் வளர்ந்தப்போ, அவனோட விளையாடின வளர்மதியும் மலர்க்கொடியும் பட்டு நூல் தயாரிக்கிற இடத்துல கொத்தடிமைகளா இருந்தாங்கன்னு தெரியவந்தது. பத்து, பதினொண்ணு வயசுப் புள்ளைங்க, பாவம். அந்த முதலாளி வீட்டுக்கு நானும் இந்திராணிங்கிற பொண்ணும் நடையா நடந்து எப்படியோ போராடி, குழந்தைகள மீட்டுட்டோம். இப்போ அவங்க எல்லாம் கல்யாணம் முடிஞ்சு நல்லபடியா இருக்காங்க.

பெரிய பெரிய போராட்டங்கள் செய்றது ஒரு பக்கம்னா, உள்ளூர்ச் சிக்கல்களைத் தீர்ப்பதிலேயும் செயல்பட வேண்டியது அவசியம். அப்போதான் மக்கள் மற்ற போராட்டங்களிலும் கலந்துக்க முன்வருவாங்க.

போராட்டத்துக்குப் போறதுன்னா ஒரு ஆண் டக்குனு கிளம்பிப் போயிடலாம். அதுவே ஒரு பொண்ணு, முதல் நாளே அடுத்த நாள் சமையலுக்கானதை வாங்கி வைக்கிறதுல ஆரம்பிச்சு, குழந்தைகளை யாருகிட்ட விட்டுட்டுப் போறதுன்னு பல விஷயங்களைப் பார்க்க வேண்டியிருக்கும். போராட்டத்து அன்னிக்கும் காலையில வீட்டு வேலைகள், பள்ளிக்கூடம் போற புள்ளைங்க இருந்தா அதுங்களைத் தயார் செய்து அனுப்புறதுன்னு எல்லாத்தையும் முடிச்சுட்டுதான் போராட்டத்துக்கு வரணும். அப்படியிருந்தும், சில தீவிரப் போராட்டங்களுக்குப் போறப்போ, ‘ஒருவேளை கைது செய்யப்பட்டா..?’னு ஜெயிலுக்குப் போறதுக்கு மாத்து உடுப்பையும் கையோட எடுத்துட்டுப் போயிடுவேன் நான்.

வீட்டைப் பொறுத்தவரை பெ.ம (பெ.மணியரசன்) தன் வேலைகளைத் தானே பார்த்துக்குவார், ஊரு வேலைகளை நான் பார்க்கிறதுக்கு வசதியா என்னைப் பார்த்துக்குவார். கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா, நல்ல விஷயங்கள் சிந்தனையில் இருந்தா அதுவே நடக்கும்னு நம்புவேன். பேரன்களோடு இருக்கிற நேரம் சந்தோஷம் கூடிடும்.

ஒரு வழக்கு தொடர்பாக ரயில்நிலையத்துக்குத் தோழர் ஒருத்தரோடு டூ வீலர்ல  போய்ட்டிருந்தபோது, சிலர் கடுமையாக பெ.ம., வைத் தாக்கியிருக்காங்க. முதலமைச்சர், இதை ஏதோ விபத்துபோல சொல்றார். ஆனா, இது தமிழக நலன்களை முன்னெடுப்பதற்கு எதிரான சக்திகள் இவர்மீது தொடுத்த தாக்குதல். இதற்கு முன் இரண்டு முறை இப்படியான சம்பவங்கள் நடந்திருக்கு. தொழிற்சங்கப் போராட்டம் ஒன்றின்போது கொலை செய்வதற்கு அனுப்பிய நபர் இவருக்கு நல்லா தெரிஞ்சவர் என்பதால் அந்த அசம்பாவிதம் நடக்கல. இன்னொரு முறை இரட்டைக் குவளைக்கு எதிரான போராட்டத்துக்குப் போய்ட்டு வரும்போது சிலரால் தாக்கப்பட்டார். அதனால், இந்தத் தாக்குதல் அரசியல் ரீதியான ஒன்றுதான்.

 நான் போராளியெல்லாம் இல்ல. சாதாரண மக்களோட பிரச்னைகளைக் கேட்டு, அதையெல்லாம் தீர்க்க அவங்க கூட நிக்கிறதைத்தான் இதுவரை செஞ்சிட்டிருக்கேன், இனிமேலும் அப்படித்தான். அதனாலேயே சின்ன வயசிலேயே எல்லாரும் என்னை அம்மா, அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இந்தப் பாசம்தான் நான் சம்பாதிச்சது!’’

புகைப்படக்கலைஞர், இருவரையும் புகைப்படம் எடுத்ததும் சொன்னார் லட்சுமி அம்மாள்:

“எங்க கல்யாணப் போட்டோலகூட கூட்டமாதான் இருப்போம். இத்தனை வருஷத்துல நாங்க ரெண்டுபேரு மட்டும் சேர்ந்து நிக்கற போட்டோ இதுதான்.”

 ஒரு போராளியின் வாழ்வு அப்படித்தான்!

“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்!”

‘லட்சுமி என்னும் பயணி!’

எமர்ஜென்ஸி காலத்தில் தொடங்கிய லட்சுமி அம்மாவின் போராட்ட வாழ்க்கை, காவிரிக்காக ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டம் வரை நீண்டுகொண்டிருக்கிறது.  ‘லட்சுமி என்னும் பயணி’ என்ற இவரின் தன் வரலாற்று நூல் மும்பையின் ஸ்பேரோ விருது, ‘திருப்பூர் சக்தி விருது’ ஆகியவற்றைப் பெற்றுள்ளது.