Published:Updated:

டீமானிடைசேஷன் சாதகமா... பாதகமா..?! 10 கேள்விகள்... 20 பதில்கள்!

பணமதிப்பிழப்பால் 2 ஆண்டுகளில் விளைவு .... - பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன?

டீமானிடைசேஷன் சாதகமா... பாதகமா..?! 10 கேள்விகள்... 20 பதில்கள்!
டீமானிடைசேஷன் சாதகமா... பாதகமா..?! 10 கேள்விகள்... 20 பதில்கள்!

வம்பர் 8-ம் தேதி 2016 இரவு நான் மைசூரில் இருந்து பெங்களூருக்கு பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. 'இந்தியாவில் டீமானிடைசேஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது'... நான் ஏதோ விளையாட்டு என நினைத்து மீண்டும் உறங்கிவிட்டேன்.

பெங்களூருவில் இறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு 500 ரூபாயை நீட்டுகிறேன், "சாரி மேடம்" எனக் கூறி கடைக்காரர் வாங்க மறுக்கிறார். வாங்கிய தண்ணீரை குடித்தும் விட்டேன். தேடித்தேடி பையில் இருந்த சில்லறைகளைச் சேகரித்து, இருபது ரூபாய் பாட்டிலுக்கு 16 ரூபாய் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். அவர் 4 ரூபாய் இழக்கத் தயாராக இருந்தாரே தவிர, 500 ரூபாயைப் பெற மறுத்துவிட்டார். அவசரமாக நண்பர்களுக்குப் போன்செய்து விஷயத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன். என்னிடம் இருந்ததோ வெறும் இரண்டு 500 ரூபாய் நோட்டுகள்தான். இரவு 10.30 மணி தாண்டியிருக்கும். எனக்குத் தெரியாத ஊர், தெரியாத மொழி, ஆட்டோவில் நண்பர் வீட்டுக்குச் செல்வதற்குள் அந்த 500 ரூபாயை வாங்கிக்கொள்ளச் சொல்லி அழுதே விட்டேன்.

என்னைப்போலவே பெரும்பாலான இந்திய மக்கள் அன்று அதிர்ந்தும், அழுதும் போயிருப்பார்கள். மெத்தப்படித்த பலகோடி பேருக்கும்கூட புதிதாக 'டீமானிடைசேஷன்' (Demonetization) என்ற வார்த்தை அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், மத்திய அரசாங்கத்தின் இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றியா, தோல்வியா? இன்றைய விலையேற்றத்திற்கும், பண மதிப்பிழப்பிற்கும் சம்பந்தம் உண்டா? பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சாதிக்க விரும்பிய கறுப்புப் பண ஒழிப்பு, தீவிரவாதிகளிடையே பணப் புழக்கத்தைக் குறைத்தல் ஆகியவை என்னவாயிற்று? தற்போது இந்தியாவின் பொருளாதார நிலை என்ன என்று பொருளாதாரத் துறை நிபுணர்கள் இருவரிடம் கேட்டேன்.                                                              

மத்திய நிதி அமைச்சகத்தின் கௌரவ ஆலோசகர் சத்யகுமார், பொருளாதார வல்லுநர், பேராசிரியர் ஜோதி சிவஞானம் ஆகியோர்தான் அவர்கள். ஒரே கேள்விக்கு இந்திய பொருளாதாரத்தை அலசும் இருவேறு ஆளுமைகள் மாறுபட்ட பதில்களைத் தந்தனர். மக்கள் தொடர்ந்து தங்களைச் சுற்றி நிகழும் எல்லாவற்றிலும் உண்மைக்கான தேடலை நிகழ்த்திக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்கு மீண்டும் ஓர் ஆதாரம் இந்தப் பதில்கள். அந்தக் 10 கேள்விகளும், அதற்கான 20 பதில்களும் இதோ....

உங்களைப் பொறுத்தவரை 'டீமானிடைசேஷன்' வெற்றியடைந்ததா அல்லது தோல்வி கண்டதா?

சத்யகுமார்: என்னைப் பொறுத்தவரை டீமானிடைசேஷன் என்பது, நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான, வரவேற்கத்தக்க விஷயமே. இது கறுப்புப் பணத்தை ஒழிக்க முதல் படிநிலை மட்டுமே. அந்த வகையில் இது நம் தேசத்தின் பொருளாதாரத்திற்கு உதவி இருக்கிறது.

ஜோதிசிவஞானம்: பொருளாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படாமல், அங்கீகரிக்கப்படாமல் தன்னிச்சயாக எடுக்கப்பட்ட இந்த முடிவு முற்றிலும் தவறானது. மன்மோகன் சிங், ஐ.ஜி.படேல், அமர்த்தியா சென் ஆகிய பெரும் பொருளாதார வல்லுநர்கள் சொன்னதுபோல, டீமானிடைசேஷன் ஒரு மாபெரும் பிழை.

அரசின் இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா?

சத்யகுமார்: கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் முதல்படி மட்டுமே இது. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் ஏழை மக்களிடம் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் பல்வேறு வழிகளில் டீமானிடைசேஷன் ஒரு கருவியாகப் பயன்பட்டிருக்கிறது எனலாம். ஆனால், அது மட்டும் போதாது.

ஜோதிசிவஞானம் : கறுப்புப் பணம், ரூபாய் நோட்டுகள் வடிவில் பெரும்பாலும் பதுக்கப்பட்டிருக்கும் என்று அரசாங்கம் நினைத்ததே முதல் தவறு. ஏற்கெனவே நடத்தப்பட்ட சோதனையில் வெறும் 5 சதவிகிதம் மட்டுமே ரூபாய் நோட்டுகளாக கறுப்புப் பணம் பிடிபட்டது. எஞ்சியவை தங்கமாகவும், நிலமாகவும்தான் பிடிபட்டன. எனவே, அந்த நடவடிக்கை மாபெரும் பிழை. கறுப்புப் பணத்தை பிடித்ததற்கான புள்ளிவிவரங்களையும் இன்னும் அரசாங்கம் வெளியிடவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது தொடர்பான புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன ?

சத்யகுமார்: டீமானிடைசேஷன் அறிமுகப்படுத்தப்படும்போது, 86% அளவுக்கு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அந்தப் பணம் எல்லாம் யாரிடம் இருந்தது என்று அரசாங்கத்துக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தியாவின் 90% சொத்துகள் 4% மக்களிடம்தான் இருக்கிறது எனும் பட்சத்தில், இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பெரும்பாலும் ஏழை மக்களிடம் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே அந்த நடவடிக்கை ஒரு சரியான படிநிலை ஆகும்.​​​​​​​

ஜோதிசிவஞானம் : இந்தியாவின் கறுப்புப் பண இருப்பில் மிகச் சொற்பமே பணமாகப் பதுக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அந்த 5 சதவிகிதம் பணத்தைப் பிடிப்பதற்காக 86 சதவிகிதம் புழக்கத்தில் உள்ள பணத்தை மதிப்பிழக்கச் செய்தது சரியான முடிவல்ல என்பதே என் கருத்து. மேலும், RBI வெளியிட்ட அறிக்கையின்படி ஏறத்தாழ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்தியாவில் புழங்கும் மொத்த கள்ள நோட்டுகள் 400 கோடி மட்டுமே. இதற்காக 'Demonetization'  கொண்டு வந்து, புதிதாக ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்கு மட்டுமே 20,000 கோடி ரூபாய் செலவழித்தது நியாயமற்றது.

தினசரி வாழ்க்கையைப் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எப்படிப் பாதிக்கிறது?

சத்யகுமார்: பெருவாரியான இந்திய குடிமக்களின் தினசரி வாழ்க்கையை இந்த நடவடிக்கை பாதித்தது. ஆனால், ஒரு முன்னேற்றத்தை, மாற்றத்தை நோக்கி தேசம் பயணிக்கும்போது, மக்கள் அதை ஒரு தியாகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஜோதிசிவஞானம்: இந்திய குடிமக்களை டீமானிடைசேஷன் பெருமளவில் பாதிப்படையச் செய்தது. தேசத்திற்கான தியாகமாக எடுத்துக் கொண்டாலும், பெருவாரியான மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கிய இந்த நடவடிக்கையால் எந்தப் பலனும் இல்லை. மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தத் தியாகம் அவசியமற்றது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி இரண்டு மாற்றங்களும் ஒருசேர நிகழ்ந்தது நன்மையா? தீமையா?

சத்யகுமார் : இரண்டும் அடுத்தடுத்து வந்தது நன்மையே. இந்தியாவிற்குப் பொருளாதார அடிப்படையில் வெற்றியோ, தோல்வியோ எதுவானாலும் உறுதியான, தைரியமான சில கொள்கை முடிவுகள் மிகவும் அவசியம். 

ஜோதிசிவஞானம்: பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்புகள், விவாதங்களைத் திசைதிருப்ப அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டதே ஜி.எஸ்.டி வரி விதிப்புமுறை. சிக்கலான வரியை அறிமுகப்படுத்தியதால் நமது பொருளாதாரம் பாதிப்படைந்து இருக்கிறது. வளர்ச்சிக்கான எந்த முதலீடும் இல்லை. பல பின்னடைவுகள்தான் ஏற்பட்டிருக்கின்றன.

பணமதிப்பிழப்பைத் தொடர்ந்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சி பாதுகாப்பானதா, கிராமங்களில் சாத்தியமா?

சத்யகுமார் : முழுவதுமாக இது பாதுகாப்பானது என்று சொல்ல இயலாது, ஆனால் இது மற்ற பண பரிவர்த்தனைகளைக் காட்டிலும் பாதுகாப்பானது. 

ஜோதிசிவஞானம் : பணமற்ற பொருளாதாரம் என்பது முன்னேற்றத்திற்கான குறிக்கோளாகவும், பொருளாதார குறிக்கோளாகவும் இதுவரை எந்த உலக நாடுகளும் சொன்னதில்லை. இந்தக் கொள்கை முடிவுகளால், வங்கிகளில் மக்கள் பணம் இருப்பு வைப்பதே குறைந்துள்ளது. முற்றிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை சாத்தியமான ஒன்று அல்ல.

பண மதிப்பிழப்புக்குப் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட அளவு தீவிரவாதம் குறைந்ததா?

சத்யகுமார் :  நிச்சயமாகத் தீவிரவாதம் குறைந்திருக்கிறது. கள்ள நோட்டுகள் புழக்கத்தைக் குறைத்திருக்கிறது. 

ஜோதிசிவஞானம் : தீவிரவாதத்தைக் குறைப்பதற்கு பொருளாதார கொள்கை முடிவுகள் எடுப்பது நம் நாட்டில் மட்டுமே நிகழும். பணப்புழக்கத்தைக் குறைப்பது தீவிரவாதத்தைக் குறைக்கும் என்று சொல்பவர்களுக்கு அது தேசத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்பது ஏன் தெரியவில்லை?  

பண மதிப்பிழப்பு நடவடிக்கை முழுமையான வெற்றி அடையாததற்கான அல்லது தோல்வி கண்டதற்கான காரணம் என்ன?

சத்யகுமார் : இது ஒரு நல்ல முயற்சி, ஆனால் பிரதமர் எடுத்த முடிவிற்கும், நிதி அமைச்சகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே தேவையான ஒத்துழைப்பு இல்லாமல் போனதே சில சிக்கல்களுக்குக் காரணம்.

ஜோதிசிவஞானம் : இப்படி ஒரு முடிவை எடுக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே உள்ளது. ஆனால் நிதி அமைச்சகத்துக்கும், ஆர்.பி.ஐ-க்கும் அறிவிக்காமல் பிரதமர் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இது ஒரு பிழை அவ்வளவே.

இன்றைய விலைவாசி உயர்வுக்கும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் தொடர்பு இருக்கிறதா?

சத்யகுமார் : நிச்சயமாக இல்லை. பெட்ரோல் விலையேற்றம் என்பது சர்வதேச சந்தையின் விலையேற்றத்தைப் பொறுத்தது. பருப்பு, காய்கறிகள் விலைகளைப் பொறுத்தவரை குறைந்ததுதான் இருக்கிறது. பொருட்களின் விலையேற்றத்திற்கும், பண மதிப்பிழப்புக்கும் சம்பந்தம் இல்லை. 

ஜோதிசிவஞானம் : ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பாதித்திருக்கிறது. இந்திய ரூபாயின் மீது ஏற்பட்ட நம்பிக்கை இழப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைப் பெருமளவு வீழ்ச்சியடையச் செய்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை. 

டீமானிடைசேஷன் நடவடிக்கையின் மிகப்பெரும் பின்னடைவாகக் கருதப்படுவது, அதை நடைமுறைப்படுத்தியவிதம் மட்டும்தானா?

சத்யகுமார் : ஆம். இன்னும் செயல்படுத்துதலில் சற்று முன்னேற்பாடுகளும், வருமான வரித்துறையினர், ஆர்.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளின் ஒத்துழைப்பும், இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

ஜோதிசிவஞானம் : பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் சில மாதங்கள் கால அவகாசம் கொடுத்து, முறையாக இதுபோன்ற பண மதிப்பிழப்பை அமல்படுத்தின. ஆனால், இந்தியாவில் மட்டும் ஒரே இரவில், தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பதில் தொடங்கி, அதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள் வரை அனைத்துமே தவறாக உள்ள நிலையில் நடைமுறைப்படுத்தியது மட்டுமே பின்னடைவு என்று எடுத்துக்கொள்ள முடியாது.