Published:Updated:

``தம்பதிகளே... தாம்பத்தியத்தை ரீ டிசைன் செய்ய வேண்டும்!'' உளவியல் வழிகாட்டல்

``தம்பதிகளே... தாம்பத்தியத்தை ரீ டிசைன் செய்ய வேண்டும்!'' உளவியல் வழிகாட்டல்
``தம்பதிகளே... தாம்பத்தியத்தை ரீ டிசைன் செய்ய வேண்டும்!'' உளவியல் வழிகாட்டல்

'தாம்பத்தியத்தை 'ரீ டிசைன்' செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்'' - உளவியல் நிபுணர் அசோகனின், இந்தக் கருத்தை சமூக வலைதளத்தில் படித்தவுடன் அவரைத் தொடர்புகொண்டோம். 

``யெஸ், நம்முடைய திருமண அமைப்பை ரீ டிசைன் செய்ய வேண்டிய காலம்தான் இது!'' என்றவர் அழுத்தம் திருத்தமாக பேச ஆரம்பித்தார். ``சமீபத்தில் வெளியான '96' திரைப்படம் பார்த்தீர்களா? இன்றைய தாம்பத்தியம் கிட்டத்தட்ட அப்படித்தான் டிரெண்ட் மாறிக் கொண்டிருக்கிறது. கடந்தகால காதலுக்கு விசிட் செய்துவிட்டு, ராம் போன்ற நல்ல காதலர்களைக் கொண்ட ஜானுக்கள் எந்த சேதாரமும் இல்லாமல், மறுபடியும் தங்களுடைய எதிர்காலத்துக்கு கடந்துவிடுகிறார்கள். ராமும் கிடைக்காமல், நல்ல நண்பனாக கணவனும் கிடைக்காத ஜானுக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எல்லா மனிதர்களுக்கும் கடந்த காலம் இருக்கிறது. ரகசிய ஆசைகள் இருக்கின்றன. அந்தப் படத்தின் கிளைமாக்ஸில் த்ரிஷாவின் மனது 1996- வருடத்துக்கே வந்துவிடுவதைக் கவனித்தீர்களா? ஆனால், கதாநாயகனின் கண்களை மூடிவிட்டு, அடுத்த நிமிஷம் தன் எதிர்காலத்துக்குள் கடந்து விடுகிறார் கதாநாயகி. அந்த கன நேர தடுமாற்றத்தில்தான் இன்றைய தாம்பத்தியங்கள் இன்று நின்றுகொண்டிருக்கின்றன.   

  ஒரு காலத்தில் உறவுகள் சேர்ந்து ஒரு தாம்பத்தியத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தன. இப்போது உறவுகளை அஞ்சறைப் பெட்டி போல, அதாவது கிட்டத்தட்ட எல்லா உறவுகளையும் தனித்தனி கம்பார்ட்மெண்ட்களாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், உறவுகளிடம் இருந்து தாம்பத்தியம் கை மீறிப் போய்விட்டது. 

தாம்பத்தியத்தில் நெகட்டிவே இல்லாத ஒரு காலகட்டமும் இருந்தது. அதன் பிறகு பாசிட்டிவ் அதிகமாகவும், நெகட்டிவ் குறைவாகவும் இருந்த காலகட்டம் வந்தது. அதன்பிறகு, பல காலங்களாகக் குழந்தைகள் தாம்பத்தியங்களைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். இனிமேல், தாம்பத்தியத்தைக் குழந்தைகளால்கூட காப்பாற்ற முடியாது. இதைச் சமீபகாலமாக நாமெல்லாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இதுபோன்ற இடங்களில், சகிப்புத்தன்மையால் மட்டும்தான் ஒரு தாம்பத்தியத்தைப் பிரியாமல் காப்பாற்ற முடியும். 

ஒரு கல்வி நிறுவனத்தில் மன அமைதிப் பற்றிப் பேசப் போயிருந்தேன். ஆனால், அங்கே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம், 'திருமணத்துக்கு முன் செக்ஸ்' குறித்துத்தான் மாணவர்கள் என்னிடம் விவாதித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில், 'திருமணத்துக்கு முந்தைய அல்லது திருமணம் தாண்டிய உறவுகளை முடிந்த அளவுக்கு அதைத் தள்ளிப் போடுங்கள். அதுவாக நிகழ்ந்தால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நீங்களாக அதை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்' என்று முடித்தேன். 

தாம்பத்தியம் என்பது இன்று குழந்தை வளர்ப்பு போலாகிவிட்டது. சரியாக வளர்ந்துவிட்டால் அதற்கான கிரெடிட்டை நாம் எடுத்துக்கொள்கிறோம். தவறாக வளர்ந்துவிட்டால், அடுத்தவர் மேல் பழியைத் தூக்கிப் போட்டு விடுகிறோம். திருமணத்தின் உண்மையான அடிப்படையே லீகல் ஒப்பந்தம்தான். இருவரிடமும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் தாம்பத்தியங்களின் ஆயுள் நீட்டிக்கும். இல்லையென்றால் முறிந்துபோகும். 

செக்ஸ் தாம்பத்தியத்தின் அடிப்படையாக இருந்தது. அது, தற்போது போய்விட்டது. செக்ஸில், பிரச்னைகளே இல்லாதபோதுகூட திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்பட்டு விடுகின்றன. புகழ்பெற்ற ஆங்கிலப் பத்திரிகை ஒன்று, வருடந்தோறும் திருமண வாழ்க்கைத் தொடர்பான சர்வே ஒன்றை எடுக்கும். அதில், 2003-ல் கணவருக்கு ஆண்மைக்குறைபாடு இருந்தாலும் அவருடன்தான் வாழ்வேன் என்ற பெண்கள் அதிகம். அதே பத்திரிகை 2017-ல் எடுத்த சர்வேயில், 29% பெண்களும் 41% ஆண்களும் ஒன் நைட் ஸ்டாண்டில் இருந்திருக்கிறார்கள். அதாவது, பெரிய அளவில் அறிமுகமில்லாத நபருடன் வரப்போகும் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படாமல் உறவு வைத்துக்கொள்வதுதான் ஒன் நைட் ஸ்டாண்ட். இதைப் படித்தவுடனே இன்றைக்கு இருக்கிற தாம்பத்திய தள்ளாட்டங்களுக்குக் காரணம், பெண்கள் தங்கள் சுயவிருப்பு, வெறுப்புடன் வாழ்வதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களென்றால், அது 100 சதவிகிதம் தவறு. பெண்கள், ஆண்டான் - அடிமை தாம்பத்திய உறவில் இருந்து, நல்ல நண்பர்களாக வாழ்கிற தாம்பத்திய வாழ்க்கையை எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். 

இனிமேல், கணவனும் மனைவியும் நல்ல நண்பர்களாக இருப்பது மட்டும்தான் தாம்பத்தியத்தைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி. இந்த நட்புதான் தாம்பத்தியத்தின் ரீ டிசைன்'' என்று முடித்தார் உளவியல் நிபுணர் அசோகன்.