Published:Updated:

வேலன்டினோ ராஸி... அராத்து இளைஞன்... மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் மாவீரன்! 

வேலன்டினோ ராஸி... அராத்து இளைஞன்... மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் மாவீரன்! 
வேலன்டினோ ராஸி... அராத்து இளைஞன்... மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகின் மாவீரன்! 

டுகாட்டி முதல் ஸ்கூட்டி வரை 46 என்ற எண் இல்லாத பைக்குகளையே பார்க்கமுடியாது. ஸ்கூல் பேக்குகளில், நோட்புக்கில், காபி கப்பில், செருப்பில், கண்ணாடியில், உள்ளாடையில் கூட 46 என்ற நம்பர் வைத்தவை கொஞ்சம் காஸ்ட்லி. 10-டெண்டுல்கர், 07-ரொனால்டோ, 23-மைக்கேல் ஜோர்டன் போல 46 என்றால் வேலன்டினோ ராஸி. சாலையில் உங்களைச் சுற்றி பாருங்கள். 46 என்ற எண் கொண்ட பைக்கை தினமும் ஒரு முறையாவது கடந்து வருவீர்கள். பைக் ரேஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு கூட ராஸியை தெரிந்திருக்கும். உலகில் உள்ள பைக்கர்கள் எல்லோரும் விரும்பும் இந்த வேலன்டினோ ராஸி யார்?

மாவீரன்!

"தூதுவன் வருவான் மாரி பொழியும்" என்பதுபோல ஒவ்வொரு ஸ்போர்ட்டிலும் அந்த ஸ்போர்ட்டின் பக்கம் உலகத்தின் பார்வையைத் திருப்ப ஒருவன் உருவெடுப்பான். அவன் இல்லாமல் அந்த விளையாட்டைப் பற்றி குறிப்பிடவே முடியாது என்றொரு காலம் வரும். திறமையான போட்டியாளர்கள் எல்லோரையும் தோற்றகடித்து கிரேட்டஸ்ட் ப்ளேயர் என்ற பெயர்வாங்குவான். அவன், மனிதர்களுக்கு மத்தியில் ஒரு ராட்சஸனாக இருப்பான். 

பீலே போல, சச்சின் டெண்டுல்கர் போல, மைக்கேல் ஜோர்டன் போல, முகமது அலி போல, மைக்கேல் ஷூமேக்கர் போல தன் நாட்டின் பெருமையை தோள்களில் சுமப்பான். இவர்களை லெஜண்டு என்று ஒரு வார்த்தையில் அடக்கிவிடலாம். மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் அப்படியொரு மாவீரன் வேலன்டினோ ராஸி.

சாதனைகளுக்கே சறுக்கும்!

மோட்டோ ஜீபியில் ராஸியிடம் இல்லாத உலக சாதனைகளே கிடையாது. 24 நாடுகளில் போட்டியிட்ட ஒரே பைக் ரேஸர் வேலன்டினோ ராஸிதான். இதுவரை கலந்துகொண்ட 375 ரேஸில் 232 ரேஸில் போடியம் (முதல் மூன்று இடங்கள்) ஏறியிருக்கிறார். 62 சதவிகிதம் வெற்றி. 1949, மோட்டோ ஜீபி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை நடைபெற்ற போட்டியில் 50 சதவிகிதத்துக்கும் அதிக போட்டியில் பங்கேற்ற ஒரே ரேஸர் வேலன்டினோ ராஸிதான். 375 போட்டியில் 95 ரேஸில் வேகமான லேப் ரெக்கார்டு வைத்துள்ளார். 2003-ம் ஆண்டு போட்டியிட்ட எல்லா ரேஸ்களையும் போடியத்தில் முடித்து 100 சதவிகித போடியம் ஃபினிஷ் வைத்திருக்கும் ஒரே ரேஸர். மோட்டோ ஜீபி-யில் 5000 பாயின்ட்டுகளை எடுத்த ஒரே ரேஸரும் ராஸிதான். இதுவரை 112 ரேஸ்களில் ஜெயித்துள்ள ராஸி இன்னும் 10 ரேஸ்களில் வென்றால் போதும். உலகிலேயே அதிக பைக் ரேஸ்களை வென்ற ஜியாகோமோ அகோஸ்டினியின் ரெக்கார்ட்டை முறியடித்துவிடுவார்.

உலகக் காதலன்!

ராஸியின் ஃபேஸ்புக் பக்கத்தை 1.3 கோடி ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். உலகில் அதிகம் பேர் பின்தொடரும் ஒரே ரேஸர் ராஸி. செபாஸ்டியன் வெட்டலையும், லூயில் ஹாமில்ட்டனையும் சேர்த்தால் கூட இவ்வளவு வராது. 39 வயதில் ராஸிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பார்த்தால் எல்லா ரேஸர்களுக்குமே பொறாமை வந்துவிடும். 

குச்சியான உடம்பு, மண்டையில் அடர்ந்த சுருள் முடி என தூரத்தில் இருந்து பார்த்தால் தீக்குச்சி போல இருக்கும் ராஸி ஹெல்மட்டை போட்டு பைக்கில் ஏறினால் எரிமலையாகிவிடுவார். 125சிசி, 250சிசி, 500சிசி, 1000சிசி என மோட்டோ ஜீபி-யின் எல்லா கேட்டகரியிலும் சாம்பியன்ஷிப் வெற்ற ஒரே ரேஸர் ராஸி. அதுமட்டுமல்ல, ஹோண்டா-யமஹா என இரண்டு வெவ்வேறு தயாரிப்பார்களுடன் தொடர்ந்த வென்ற ரேஸர். இதுவரையில் 40,075 கி.மீ ரேஸ் டிராக்கில் மட்டுமே பயணித்திருக்கிறார். இந்த தூரம் உலகை ஒரு லேப் அடித்து வந்ததற்குச் சமம்.

ஓவர்டேக்கிங் கிங்!

ஸ்ட்ரேடர்ஜி என்பது முன்கூட்டியே திட்டமிட்டு வேலையை செய்வது, டேக்டிக்கல் என்பது அந்த நேரத்தில் திட்டமிட்டு விரைவாக வேலையைச் செய்து முடிப்பது. டேனி பெட்ரோஸா, டொவிசியோஸோ போன்ற ரேஸர்கள் ஸ்ட்ரேட்டஜிக்கலாக பெஸ்ட்டாக இருப்பார்கள், லொரன்ஸோ, கேஸி ஸ்டோனர் போன்ற ரேஸர்கள் டேக்டிக்கலாக பெஸ்ட்டாக இருப்பார்கள். ஆனால், ராஸி இரண்டிலுமே கெத்து. ஓவர்டேக் செய்ய பல வாய்ப்புகள் இருந்தாலும் ஓவர்டேக் செய்தவுடன் டிஃபெண்டு செய்ய நேரம் கிடைக்குமா என்று யோசித்துச் சரியான நேரத்தில் ஓவர்டேக் செய்து தனது பொசிஷனை டிஃபெண்ட் செய்து ரேஸை முடிப்பார் ராஸி. 

அராத்து!

மோட்டோ ஜீபி ரசிகர்களுக்கு ராஸியை பிடிப்பதற்கு காரணம் ராஸி டிராக்கிலும் சரி, டிராக்குக்கு வெளியேவும் சரி ஒரு அராத்து இளைஞன். ஃப்ளோரசென்ட் பச்சை நிறம், குழந்தையைப் போன்ற கீச் குரல், இத்தாலி ஸ்டைலில் அரைகுறை ஆங்கிலம், சிரிக்கத்தூண்டும் ஹெம்மெட் டிசைன், கோழி உடையில், போலீஸ் உடையில், கைதி உடையில் என டிசைன் டிசைனாக கொண்டாட்டங்கள் என கிறுக்குத்தனம் மாறாத குழந்தையாக இருப்பதால்தான் ராஸிக்கு அவ்வளவு பிரியர்கள். டாக்டர் என்பது அவருக்கு அவரே சூட்டிக்கொண்ட செல்லப்பெயர்.

குழந்தைத்தனம் மட்டுமில்லாமல் முழுமையான ஸ்போர்ட்ஸ்மேனாகவும் நடந்துகொள்வார் ராஸி. ராஸிக்கும், மார்க்கஸுக்கும் ரேஸ் டிராக்கில் பல முறை மோதல்கள் ஏற்பட்டதுண்டு. ஆனால், எல்லமே டிராக்கில் மட்டும்தான். அந்த ரேஸ் முடிந்துவிட்டால் போதும் ராஸி மீண்டும் நண்பராகி விடுவார். கைகுலுக்குவார், உதவி செய்வார், கட்டியணைத்துக்கொள்வார், கொண்டாடுவார். இத்தாலியில் தனது கிராமத்தில் இளம் வயதில் ரேஸராக துடிக்கும் இளைஞர்களுக்காக ரேஸ் டிரெய்னிங் சென்டரை நடத்திவருகிறார் ராஸி. 2010 மோட்டோ 2 சாம்பியன் மார்க்கோ சைமன்செல்லி 2012, மலேசிய ரேஸில் இறந்த பிறகு ராஸியின் ஹோம் ட்ராக்கான மிஸானோவுக்கு சைமென்செல்லி பெயரை வைக்க பரிந்துரைத்தவர் ராஸி.

பைக் முத்தம்!

ராஸிக்கும் பைக்குகளுக்கும் இருக்கும் இணைப்பு வேறு எந்த ரேஸரிடமும் பார்க்கமுடியாது. பைக்கோடு பேசுவது, பைக்குக்கு முத்தம் கொடுப்பது போன்ற கலாசாரத்தை உருவாக்கியவர் ராஸிதான். அதனால்தான் என்னவோ முதல் ஆண்டு யமஹாவிலும், அடுத்த ஆண்டு ஹோண்டாவிலும் அவரால் சாம்பின்ஷிப்பை ஜெயிக்க முடிகிறது. எந்த தொழில்நுட்பமாக இருந்தாலும் உடனே அதை பழகிவிடுவார்.

ராஸி கடைசியாக சாம்பியன்ஷிப் வென்று பத்து ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனாலும், விடாமல் தனது 10-வது சாம்பியன்ஷிப்புக்காக போட்டி போட்டுக் கொண்டேதான் இருக்கிறார். மலேசிய மோட்டோ ஜீபியில் முதலிடத்தில் இருந்த ராஸி ஜெயிக்க நான்கு லாப்களே இருந்த நிலையில் கீழே விழுந்தது எல்லோரையுமே அமைதியில் ஆழ்த்திவிட்டது. ஹோண்டா ரசிகர்கள் முதற்கொண்டு எல்லோருக்குமே பெரிய ஷாக். ராஸியை தோற்கடிக்க மார்க் மார்க்கஸ் வந்துவிட்டார். ராஸி 26 வயதில் வாங்கிய 7 சாம்பியன்ஷிப்பை மார்க்கஸ் 25 வயதில் வாங்கியிருக்கிறார். சச்சின் சாதனையை கோலி முறியடிப்பதுபோல மார்க்கஸ் ராஸியின் சாம்பியன்ஷிப் சாதனைகளை முறியடிக்கலாம்.

ஆனால் விதை ராஸி போட்டது!