Published:Updated:

டிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்!

டிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
டிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்!

சாதனை - ரேஸ்தமிழ்

டிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்!

சாதனை - ரேஸ்தமிழ்

Published:Updated:
டிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
டிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்!

புதிதாக பைக் ஓட்டப் பழகுகிறீர்கள். ரொம்ப ஆர்வமாக இருக்கும். இந்த ஆர்வம், ஆபத்து ஏற்படாதவரைதான். ஒரு தடவை கீழே விழுந்தாலே போதும். அடுத்து பைக்கை எடுக்க லேசாக யோசிப்போம்தானே? ஐஸ்வர்யா இதற்கு அப்படியே நேர்மாறானவர்.

பைக் ஓட்டி, ரேஸிங்கிலும் கலந்து கொண்டு பழகிய ஆரம்ப காலங்களில், பெங்களூருவில் ஒரு தடவை வாடகை டாக்ஸி ஒன்று ஐஸ்வர்யாவின் பைக்கை இடித்துத் தள்ள... தோள்பட்டை எலும்பு இடம் பெயர்ந்து  நான்கு மாதங்கள் மருத்துவச் சிகிச்சையில் இருந்தபோதுதான், ஐஸ்வர்யாவுக்குள் ரேஸிங் வெறி இன்னும்  ஆர்வமாகிவிட்டிருக்கிறது. ‘‘உண்மையில் அந்த விபத்துதான் என்னை இந்தளவு பக்குவப்படுத்தி உள்ளது. நான் சிகிச்சையில் இருந்த காலங்களில் என் நினைவில் இருந்ததெல்லாம், நான் கலந்து கொள்ளப் போகும் ரேஸ் ஈவென்ட் மட்டும்தான். அடுத்த மாதம் நடக்கும் ரேஸில் கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமோ என்பதுதான் எனக்கு தோள்பட்டை வலியைவிடப் பெரிய வலியாக இருந்தது. ஆனால், நான் நம்பிக்கை இழக்கவில்லை. மருத்துவர்களின் அறிவுரையை மீறி மனதளவிலும் உடலளவிலும் என்னைத் தயார்படுத்தினேன். நான் ஜெயிக்க இந்த நம்பிக்கைகூடக் காரணமாக இருந்திருக்கலாம்.’’ என்கிறார் ஐஸ்வர்யா. அதில் கலந்துகொண்டதைத் தாண்டி, அந்த ரேஸில் ஐஸ்வர்யா சாம்பியன்ஷிப் பட்டம் ஜெயித்ததுதான் ‘மெடிக்கல் மிராக்கிள்.

டிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்!

‘‘உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயம்’’ என்ற கேள்விக்குத்தான் இப்படி உணர்ச்சிகரமாகப் பதில் சொன்னார் ஐஸ்வர்யா.

பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பிஸ்ஸே, ஆரம்பத்தில் ஒரு மாடல் டால். ‘ஏய், நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று ஃபேஸ்புக்கில் வந்த கமென்ட்களைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மாடலிங்கில்தான் கண் வைத்தார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு கழுத்து நிறைய நகைகள் பூட்டி.. தலை நிறையப் பூ வைத்து... பட்டுச்சேலை கட்டி... மங்களகரமாய் கேமராவுக்கு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா, இப்போது அப்படியே நேர்எதிர். உடை முழுவதும் அழுக்காகி, முகம் முழுவதும் சேறாகி... வியர்த்து விறுவிறுத்துப் போய்... ஹெல்மெட்டைக் கழற்றியபடி பேசுகிறார். ‘‘இதுதான் இப்போதைக்கு என்னுடைய பேஸன், ஃபேஷன் எல்லாமே!’’

ஆம்! ஆஃப்ரோடு மற்றும் ஆன்ரோடு என்று சாம்பியன்ஷிப் கோப்பைகளாகக் குவிப்பதுதான் ஐஸ்வர்யாவுக்கு இப்போது ஃபுல் டைம் வேலை. மாடலிங்கில் மட்டுமில்லை; ரேஸிங்கிலும் ஐஸுக்கு எக்கச்சக்க அனுபவம். ரோடு ரேஸிங்கில் 3 தடவை நேஷனல் சாம்பியன்ஷிப், ஒரு தடவை ராலியில் நேஷனல் சாம்பியன்ஷிப், க்ராஸ் கன்ட்ரி எண்ட்யூரன்ஸ் ரேஸிங்கில் 3 தடவை போடியம் ஏறியது என்று ஐஸ்வர்யாவுக்கும் ரேஸுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்துகொண்டே இருக்கும். மாடலிங்கில் அழகுதான் மூலதனம்; ஆனால், ரேஸிங் அப்படி இல்லை. இதற்குப் பெரிய மனதிடமும், அனுபவ அறிவும் வேண்டுமே?

டிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்!

‘‘ஆம். மாடலிங்கில் பெண்கள் ஜொலிக்க, அழகாய் இருக்கும் ஒரு தகுதி போதும். ஆனால், ரேஸிங் அப்படி இல்லை. வேகமும், திறமையும், தன்னம்பிக்கையும் கொண்ட துறை ரேஸிங். பெண்கள் பைக்கில் போனாலே வியப்பாகப் பார்க்கும் காலம் இது. அப்படி இருக்க, ரேஸ் பைக்குகள் ஓட்டுவது பெண்களுக்கு இன்னும் தன்னம்பிக்கையை வளர்க்கும் என்பது என் கருத்து’’ என்கிறார் 22 வயது ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவுக்கு ரேஸில் இத்தனை ஆர்வம் வந்தது போகிற போக்கில் நடந்த ஒரு விஷயம். சின்ன வயசில் இருந்தே பைக்குகளின் மேல் தீராக் காதல் கொண்டெல்லாம் வளரவில்லை அவர். எதேச்சையாக டி.வி சேனலில் மோட்டோ ஜீபி பைக் ரேஸ் பார்க்க, புல்லரித்துப் போய் உதித்ததுதான் இந்த ஐடியாவாம். ‘‘மோட்டோ ஜீபி ரேஸ் அத்தனை த்ரில்லிங்காக இருக்கும். நாமும் இதே மாதிரி பைக் ஓட்ட முடியுமா என்று எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். ஆனால், இதைப் பற்றி யாரிடமும் நான் கலந்துகொள்ளவில்லை. ஏனென்றால், ரேஸிங் என்பது ஆண்களுக்கான துறை என்னும் கருத்துதான் இங்கே பொதுவாக இருக்கிறது.  இந்தக் கவலையிலேயே +2-வில் பெரிதாகக் கோட்டைவிட்டேன். யாரும் எனக்கு அட்வைஸ் செய்யவிடாமல் என் மனம் தளராமல் பார்த்துக்கொண்டேன்.’’ எனும் ஐஸ்வர்யா, வீட்டுக்குத் தெரியாமல் பைக் ஓட்டப் பழகி, 18-வது வயதில் லைசென்ஸும் எடுத்துவிட்டார்.

‘‘நந்தி ஹில்ஸில்தான் என் முதல் பைக் ரைடு. ஹெல்மெட்டைத் திறந்துவிட்டு, வெளிக்காற்று முகத்தில் பட நான் பைக்கில் பறந்தது இன்னும்கூட நன்றாக நினைவில் இருக்கிறது.’’ என்று புல்லரிக்கிறார். அதற்கப்புறம் வீக்-எண்ட் ட்ரிப் அடிப்பது, குட்டிக் குட்டி ரேஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று செம உற்சாகமாகத் தன்னை வைத்துக்கொண்டார் ஐஸ்வர்யா. 36 மணி நேரத்தில் 2,500 கி.மீ பைக்கில் பறந்ததுதான் ஐஸ்வர்யாவின் நீண்ட பயணம். ‘‘ரேஸிங்கில் எனக்குத் தன்னம்பிக்கை வரக் காரணம், அபெக்ஸ் ரேஸிங்கின் ஜீவா மற்றும் விஷ்வாஸ்... இரண்டு கோச்களுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்’’ என்கிறார்.

டிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்!

பழகிப் பார்க்க சாஃப்ட்டாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு, ரஃப் அண்டு டஃப் பயணங்கள்தான் பிடிக்கும். ரேஸும் அப்படித்தான். அதற்காகவே டர்ட் ரேஸ், மோட்டோ க்ராஸ் போன்ற ரேஸ்களிலும் கலந்துகொண்டு, வரிசையாக சாம்பியன்ஷிப் அடித்தார் ஐஸ்வர்யா. சர்க்யூட் ரேஸ் ஓட்டுவதுகூட ஓகே... ராலி, மோட்டோ க்ராஸ் போன்ற விஷயங்கள் பெண்களுக்கு மிகவும் சிக்கலான விஷயம். காரணம், ராலி நாள்கணக்கில் நடக்கும். டர்ட் ரேஸில் சீட்டில் உட்கார்ந்து பைக் ஓட்டவே வாய்ப்பு கிடைக்காது. மோட்டோ க்ராஸ் ரேஸ்கள் அதையும் தாண்டி. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தானவையும்கூட. அதற்கும் அனுபவத்தைச் சேர்த்து வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. டிவிஎஸ் ரேஸிங்கில் சேர்வதற்கு முன் ‘ரைடு தி ஹிமாலயா’வில் பைக் ஓட்டி, உயிருக்குப் போராடி அந்த டெத் ரேஸை ஃபினிஷ் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா. ‘‘அதில் உயிர் பிழைத்தால் போதும் என்று பலர் வழி தவறி அல்லாடிக் கொண்டிருந்ததை நேரில் பார்த்தேன். ஆனால், எனக்கு அதெல்லாம் கவலையில்லை. ரேஸை ஃபினிஷ் செய்ய வேண்டும் என்பதில்தான் குறியாக இருந்தேன்’’ என்கிறார். 2021-ல் நடக்கப் போகும் டக்கார் ராலிதான் இப்போதைக்குக் குறிக்கோளாம் ஐஸ்வர்யாவுக்கு. ஆண்கள் மட்டுமே கோலோச்சி வரும் டக்கார் ராலி எத்தனை கஷ்டமானது என்பதை கூகுளில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இது தவிர, இந்தியா சார்பாக தாய்லாந்து மற்றும் தைவான் ரேஸ்களில் கலந்துகொண்டு, 2-வது இடம் பிடித்த பெருமையும் ஐஸ்வர்யாவுக்கு உண்டு.

ஆரம்பத்தில் ‘பொண்ணு பைக் ஓட்டினா ரேஸர் ஆயிட முடியுமா’ என்று கிண்டலடித்தவர்கள், இப்போது ஐஸ்வர்யாவை மரியாதையாகப் பார்க்கிறார்கள். ‘‘என்னுடைய திறமையைக் கண்டு டிவிஎஸ் நிறுவனம் என்னை அவர்கள் ரேஸிங் டீமில் சேர்த்துக்கொண்டார்கள். இந்த மரியாதை கிடைக்க டிவிஎஸ்-ம் ஒரு முக்கியக் காரணம். தேங்க்ஸ் டு டிவிஎஸ்’’ எனும் ஐஸ்வர்யா, இப்போது டிவிஎஸ் ரேஸிங்கின் செல்லம்.

இனி ரேஸ் உலகத்துக்கும்தான்!