Published:Updated:

ஃபர்ஸ்ட் ரேங்க் மாணவர்களை ராணுவத்துக்கு அழைக்கும் சீனா... எதற்கு?

பள்ளி மாணவர்கள் சிலரை ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளது சீனா.

ஃபர்ஸ்ட் ரேங்க் மாணவர்களை ராணுவத்துக்கு அழைக்கும் சீனா... எதற்கு?
ஃபர்ஸ்ட் ரேங்க் மாணவர்களை ராணுவத்துக்கு அழைக்கும் சீனா... எதற்கு?

ராணுவத்திலும் நாட்டின் பிற பாதுகாப்புத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவைப் புகுத்துவதற்கான பணிகள் உலகம் முழுவதும் நடந்துவருகின்றன. அமெரிக்கா, சீனா, பிரிட்டன் போன்றவை இதில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றன. தற்போது இதன் தொடர்ச்சியாக சீனா புதிய விஷயம் ஒன்றைச் செய்திருக்கிறது. அதாவது சீனாவின் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை செயற்கை நுண்ணறிவு தொடர்பான ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முடிவுசெய்துள்ளது. இதற்காக தற்போது 18-க்கும் குறைவான பள்ளி மாணவர்கள் 31 பேரை அடுத்த நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சிக்காகத் தேர்வு செய்துள்ளது சீனா. இவர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ராணுவ ஆயுதங்கள் உருவாக்கும் மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா உள்ளிட்ட பிறநாடுகளும் இதுபோல ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுகின்றன என்றால் பள்ளி மாணவர்களை நேரடியாக ஈடுபடுத்துவது இதுதான் முதல்முறையாக இருக்கும். தற்போது முதல்கட்டமாக 5,000 மாணவர்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதியில், 27 மாணவர்களும், 4 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் சீனாவின் பீஜிங் தொழில்நுட்பக் கல்லூரியில் 4 ஆண்டுகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆயுத ஆராய்ச்சி மற்றும் சோதனையில் ஈடுபடுவர். இந்த பீஜிங் தொழில்நுட்பக் கல்லூரி சீனாவின் தலைசிறந்த ஆயுத ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாகும். தற்போது AI தொடர்பான ஆய்வுகளிலும் அடுத்தகட்டத்தை எட்டிவருகிறது.

இந்தப் புதிய முயற்சி குறித்து, `மாணவர்கள் படிப்பில் மிகவும் திறமைமிக்கவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதுமட்டும் எங்களுக்குப் போதாது. ஆக்கபூர்வமான சிந்தனை, போரில் சண்டையிடும் துணிவு, சவால்களை எதிர்க்கும் பண்பு, நாட்டின் மீதான பற்று, புதிய ஆயுதங்கள் தயாரிக்கும் ஆர்வம். இவைதான் நாங்கள் எதிர்பார்ப்பது’ என்கிறார் இந்தக் கல்லூரியின் பயிற்சியாளர் ஒருவர். ஒவ்வொரு மாணவனும் ஒரு கல்வி வழி ஆய்வாளராலும் ஒரு ராணுவ அதிகாரியாலும் வழிநடத்தப்படுவார். முதல் செமஸ்டர் முடிந்தவுடன் மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த சிறப்புத்துறையாக மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ், ஆயுத வடிவமைப்பு என்று ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுவர். பின் அந்தத் துறைகளில் ஆய்ந்து படிக்க அனுமதிக்கப்படுவர். மிக இளம்வயதிலேயே AI, டெக்னாலஜி, ராணுவம் எனப் புதுப்புது தொழில்நுட்பங்களைக் காண்பதால் மாணவர்களும் இந்தப் பயிற்சிகளில் விரும்பி ஈடுபடுகின்றனர். இதுபோல எதிர்காலத் தலைமுறையினரைப் பயிற்றுவிப்பதன் மூலம், எதிர்காலத்தில் AI தொடர்பான ஆராய்ச்சிகளிலும், பயன்பாடுகளிலும் சிறந்துவிளங்க முடியும் என நம்புகிறது சீன ராணுவம்.

`அடுத்த தலைமுறையை ஆயுத ஆராய்ச்சிக்கு ஊக்குவித்து பயில்விக்கும் இந்த முயற்சி உலகில் முதல் முயற்சி. அமெரிக்காவும் ஆயுத வளர்ச்சிக்கு ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறது. ஆனால் அது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வாளர்களை உள்ளடக்கியது’ என்கின்றனர் அமெரிக்க சைபர் நிபுணர்கள். ஒருபுறம் இதற்கு வரவேற்பு இருந்தாலும், மறுபுறம் இந்த முயற்சிக்கு எதிர்ப்புகளும் கிளம்பியிருக்கின்றன. 

`இது பெரும் சக்திவாய்ந்ததும் ஆபத்தானதும் கூட. மாணவர்கள் தங்கள் சொந்த அறிவையும், திறனையும் செயற்கை நுண்ணறிவை எப்படி ஆயுதங்களுக்குள் உள்ளிடலாம் என்றே சிந்திப்பார்கள். அதன் பின்விளைவுகளையோ, அதனால் ஏற்படும் அழிவுகளையோ பற்றி பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள். அது உணவில் கலந்தாலோ மரபணுவில் மாறுதல் ஏற்படுத்தினாலோ என்ன ஆகும் என்பதையும் அறிந்துகொள்ளச் செய்யவேண்டும்; இது ஒரு புதுவித போர்ச்சங்கிலிக்கு விதைப்போடும். அதில் ஆயுதங்கள்தான் மனிதர்களைக் கொல்ல முடிவெடுக்கும் நிலையில் இருக்கும். இது உள்நாட்டவர்களுக்கே ஆபத்தாகவும் கூட மாறலாம். இந்தத் தொழில்நுட்பம் குறித்த எவ்விதப் புரிதலுமின்றி, வெறும் ஹாலிவுட் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு அவர்கள் கல்லூரிக்குச் சென்றிருப்பார்கள். இது ஆபத்தானது" என எச்சரிக்கின்றனர் அவர்கள்.

செயற்கை நுண்ணறிவு ஆயுத ஆய்வு பற்றி சீன வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் `நாட்டின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்காகவே இந்தத் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளும், பயன்பாட்டுக் கூறுகளும் ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. அதேபோல் அதன் ஆயுதங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புஉணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் AI விஷயத்தில் தலைமை இடத்துக்கு வர சீனா செய்யும் முயற்சிக்கு இது பெரும் உதவியாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் சீனா, எல்லா விமர்சனங்களுக்கும் சொல்லியிருக்கும் பதில் இதுதான்.``முதலில் இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்து வரட்டும். அதற்கு முன்பாகவே அது என்ன செய்யும், எங்குப் பயன்படுத்தப்படும் என்றெல்லாம் அச்சப்பட வேண்டாம்." இப்படியாக மனிதனின் கைமீறிப்போய்க் கொண்டிருக்கிறது AI விளையாட்டு.