Published:Updated:

புளியைக் கரைக்கும் பூடான்! - 500 ரூபாயில் அதிக கள்ளநோட்டு... மீண்டும் பணமதிப்பிழப்பு...

புளியைக் கரைக்கும் பூடான்! - 500 ரூபாயில் அதிக கள்ளநோட்டு... மீண்டும் பணமதிப்பிழப்பு...
பிரீமியம் ஸ்டோரி
News
புளியைக் கரைக்கும் பூடான்! - 500 ரூபாயில் அதிக கள்ளநோட்டு... மீண்டும் பணமதிப்பிழப்பு...

புளியைக் கரைக்கும் பூடான்! - 500 ரூபாயில் அதிக கள்ளநோட்டு... மீண்டும் பணமதிப்பிழப்பு...

மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனுபவித்த துயரங்களின் வடு இன்னும் நீங்காத நிலையில், மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளப்போகிறதோ என்ற அச்சத்தை விதைத்துள்ளது, பூடான் நாட்டின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியை இந்திய மக்களால் மறக்கவே முடியாது. அன்றைய தினம் ‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது’ என்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பால், இந்திய மக்கள் ஒவ்வொருவரின் மடியிலும் இருந்த பணம் செல்லாக்காசாகி, வெறும் காகிதங்களாகின. கறுப்புப் பணத்தையும், தீவிரவாதத்தையும் ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பிரதமர் மோடி கூறினார். ஆனால், அவரது இந்த நடவடிக்கையைப் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்தனர். ‘‘இந்த நடவடிக்கையால் கறுப்புப்பணம் ஒழியாது, தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது’’ என்றனர். அவர்கள் சொன்னதுதான் உண்மை என்பதைத் தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டுவிடவில்லை. தொழில்துறையிலும், வர்த்தகத்திலும் அது ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக விலகிவிடவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம், இந்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்திய மக்கள் மட்டுமல்ல... பூடான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

புளியைக் கரைக்கும் பூடான்! - 500 ரூபாயில் அதிக கள்ளநோட்டு... மீண்டும் பணமதிப்பிழப்பு...

நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லாது என்றாலும், பலரும் பயன்படுத்தி வந்தனர். வங்கிகளும்கூட இந்திய நோட்டுகளை ஏற்றன. பூடானில் இந்திய ரூபாய் நோட்டுகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவை. இரு நாடுகளுக்கும் எல்லை வர்த்தகம் பெரிய அளவில் நடப்பதால், கொடுக்கல் வாங்கலுக்கு ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தினர்.

இந்த ‘செல்லாக்காசு’ நடவடிக்கை அறிவிக்கப் பட்டபோது, இந்த இரு நாடுகளுமே தடுமாறி விட்டன. நேபாளத்தின் மத்திய வங்கியான நேபாள் ராஷ்ட்ர பேங்க் நிர்வாகம், உடனடியாக இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் பேசியது. நேபாளம் வழியாகத்தான் இந்தியாவுக்குள் கள்ள நோட்டு வருகிறது என்பதால், அங்கு பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளைத் தர இந்தியா சம்மதிக்க வில்லை. சுமார் 900 கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளைத் தன் நாட்டு மக்களிடமிருந்து வாங்கி வைத்துக்கொண்டு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது நேபாளம். இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆனால், பூடான் விஷயத்தில் இந்தியா இவ்வளவு பிடிவாதம் காட்டவில்லை. பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு புதிய நோட்டுகளைக் கொடுத்தது. அங்கும் மக்கள் தினமும் க்யூவில் நின்றார்கள். குலுக்கல் முறையில் தினமும் சிலர் தேர்வு செய்யப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகளை ரேஷன் முறையில் பெற்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு சீரடைய கிட்டத்தட்ட ஓராண்டு ஆனது. ஆனால், அந்த அனுபவத்திலிருந்தே பூடான் உஷாராக உள்ளது. 2017 ஆகஸ்ட்டில், ‘புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அதிகம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டாம்’ என அந்த நாட்டின் மத்திய வங்கியான ராயல் மானிட்டரி அத்தாரிட்டி (ஆர்.எம்.ஏ), பூடான் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
புளியைக் கரைக்கும் பூடான்! - 500 ரூபாயில் அதிக கள்ளநோட்டு... மீண்டும் பணமதிப்பிழப்பு...

இப்போது இந்திய மக்களின் அடிவயிற்றில் புளியைக் கரைப்பதைப் போல மீண்டும் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது பூடான் ஆர்.எம்.ஏ வங்கி. அதில், “2016-ல் இந்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்ற கொள்கை மாற்றங்களை எதிர்காலத்தில் அந்நாட்டு அரசு மேற்கொள்ளலாம். எனவே, தங்களிடம் இந்திய ரூபாய் நோட்டுகள் அதிக அளவுக்குக் கையிருப்பாக இருந்தால், அவற்றை இப்போதே வங்கியில் செலுத்தித் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். 500 ரூபாய் நோட்டுகளை 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கையிருப்பாக வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால், இந்திய 500 ரூபாய் நோட்டுகளில்தான், கள்ளநோட்டுகள் அதிகம் புழக்கத்துக்கு வருகின்றன; எனவே, பூடான் மக்கள் கவனமாக இருக்கவும்” என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. இந்த விஷயம் பரபரப்பானதும், பலரும் ஆர்.எம்.ஏ அதிகாரிகளிடம் விசாரித்தார்கள். ஆனால், ‘‘எங்களுக்குப் பண மதிப்பிழப்பு தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும், மக்களை எச்சரிப்பது எங்கள் கடமையல்லவா?’’ என்று மட்டும் பதில் சொன்னார்கள் அவர்கள்.

பூடான் மத்திய வங்கியின் இந்த அறிவிப்புக்கு, இந்திய அரசிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. 2017 மார்ச்சில் ‘எதிர்காலத்தில் மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஈடுபடும் திட்டம் அரசுக்கு உள்ளதா?’ என நாடாளுமன்ற மக்களவை யில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ‘அப்படித் திட்டம் எதுவும் இல்லை’ எனப் பதில் அளித்தார். ஆனால், மீண்டும் ஜூலையில் இதே கேள்வி மாநிலங்களவை யில் எழுப்பப்பட்டது. அப்போது அருண் ஜெட்லி உறுதியாக இப்படி ‘இல்லை’ என பதில் கொடுக்க மறுத்துவிட்டார்.

- ஜெ.அன்பரசன்