Published:Updated:

உலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா?

ஓர் எலும்பில் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்தது பல்லாண்டு காலமாக அறிஞர்கள் மனதில் எழுந்து கொண்டிருந்த கேள்விக்கான விடை. அந்தக் கேள்விதான், ``யார் அந்த முதல் அமெரிக்கர்?"

உலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா?
உலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா?

ல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் அங்கு மனிதர்கள் யாரும் வாழ்ந்திருக்கவில்லை. அந்த நிலை கடைசிப் பனிக்காலத்துக்குப் பின்னர்தான் மாறத்தொடங்கியது. 

உலகின் மற்ற கண்டங்களோடு நிலவழித் தொடர்பே இன்றி தனித்து நிற்கிறது அமெரிக்கக் கண்டம். அத்தகைய பகுதியில் மனித இனம் எப்படிப் பரவியிருக்கும். அமெரிக்காவுக்குச் சென்ற முதல் மனிதன் எப்படிச் சென்றிருப்பான்?

அப்போது வட அமெரிக்கா முழுவதும் பனிக்கட்டிகளால் படர்ந்திருந்தது. அதனால் அந்தப் பகுதியில் குடியேறுவது சாத்தியமில்லாமலே இருந்தது. எல்லாம் சில ஆயிரம் வருடங்களுக்குத்தான். துணிச்சலான சில மனிதக் கூட்டங்கள் தங்கள் சாகசப் பயணங்களைத் தொடங்கினார்கள். புதிய உலகைத் தேடி...

அவர்கள் சைபீரியாவிலிருந்து பெரிங் (Bering) நிலப்பகுதி வரை நடந்தே பயணித்தார்கள். இன்று பெரிங் ஜலசந்தியே அன்றைய பெரிங் நிலப்பகுதி. அந்தப் பகுதி கடலால் சூழப்பட்டு இன்று அலாஸ்காவுக்கும் ஆசியக் கண்டத்துக்குமான நிலத்தொடர்பு அறுந்துவிட்டது. அன்றைய யூரேஷியா அலாஸ்காவோடு நிலவழித் தொடர்புடையதாக இருந்தது. அதாவது பனிக்காலத்தின் இறுதிக்கட்டமான 20,000 வருடங்களுக்கு முன்னர். அந்தச் சமயத்தில் நிலவழியும் கடலின் பெரும்பகுதியும் பனி படர்ந்து உறைந்திருந்தது. அப்போது ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்வது அவ்வளவு எளிமையானதாக இல்லை. ஒருவர் விரும்பிச் சென்று மரணத்தைத் தழுவுவதற்குச் சமமான காரியமாகக் கருதுமளவுக்கு ஆபத்தான பயணமாக இருந்திருக்க வேண்டும். அதற்குக் காரணம் வட அமெரிக்கா முழுவதும் அப்போது மிகப்பெரிய பனி மலைகளாலும் பனிப்பாறைகளாலும் சூழ்ந்திருந்தது. ஆனால், அதுவே அவர்களுக்குச் சாதகமான ஒரு வழியாகவும் இருந்திருக்கும். அதிகமாகவே பனி படர்ந்திருந்ததால் சைபீரியாவுக்கும் அலாஸ்காவுக்கும் இடையில் சிறிய நிலப்பாலம் மட்டுமன்றி அகன்று விரிந்த பனி படர்ந்த பாதையே கிடைத்தது. அதன்வழியாக அவர்கள் புதிய உலகத்தை நோக்கிப் பயணித்தார்கள். இந்தப் பாதை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆசியாவிலிருந்து வட அமெரிக்காவுக்குப் போக உதவியாக இருந்துள்ளது. அந்த நிலப்பாலத்தின் பெயர்தான் பெரிஞ்சியா (Beringia).

விலங்குகளின் இடப்பெயர்வு வேட்டையாடிகளையும் அதன் மிச்சங்களைச் சேகரிப்பவர்களையும் சேர்த்து வட அமெரிக்காவை நோக்கி ஈர்க்கத் தொடங்கியது. முதலில் பெரிஞ்சியாவுக்கு வந்த மனிதக் கூட்டம் இன்றையவர்களைப் போல் இல்லை. அவர்கள் குள்ளமாகவும் கட்டையாகவும் ஓரிடத்தில் இருக்காமல் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர்களாகவே இருந்துள்ளார்கள். அதற்குக் காரணமும் இருக்கத்தான் செய்தது. அவர்களுக்கு அனைத்தும் ஓரிடத்திலேயே கிடைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் ஒரு பகுதியில் கிடைத்தால் அடுத்த காலகட்டத்தில் அதே பகுதியில் அவை கிடைக்கவில்லை. அதனால் காலநிலை மாற்றத்துக்குத் தகுந்தவாறு அவர்கள் இடத்தை மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டிய கட்டாயமிருந்தது. இப்படியான தொடர் பயணத்தில் வட அமெரிக்காவை வந்தடைந்த அந்த மனிதக் கூட்டம் யார். உலகின் அந்த முதல் அமெரிக்கர் யார்?

சுமார் 12,000 வருடங்களுக்கு முன்னர் ஒரு பதின்ம வயதுப் பெண் வாழ்ந்துள்ளார். இன்று யூகாடன் தீபகற்பம் என்று அழைக்கப்படும் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது 190 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து உயிரிழந்துவிட்டார். காலப்போக்கில் பனிக்காலம் முடிவடைந்தது. கடல் மட்டம் உயர்ந்தது. அங்குச் சூழ்ந்த தண்ணீர் அவருக்குச் சமாதியானது. அவரைச் சுற்றிச் சுண்ணாம்புப் பாறைகள் உருவாகத் தொடங்கின. அதற்குள் அவரது மரபணுக்கள் எலும்புகளிலும் பற்களிலும் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தப்பட்டது. 2007-ம் ஆண்டு கடலுக்குள்ளிருந்த அதே குகைக்குள் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த தொல்லியல் ஆய்வாளர்களின் கண்ணில் அந்த எலும்புகள் பட்டன. பார்த்தவுடனே அது மனித எலும்புதான் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அதைப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து ஆய்வுசெய்யத் தொடங்கினார்கள். அந்த எலும்பில் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்தது பல்லாண்டு காலமாக அறிஞர்கள் மனதில் எழுந்து கொண்டிருந்த கேள்விக்கான விடை. அந்தக் கேள்விதான், ``யார் அந்த முதல் அமெரிக்கர்?"

அந்தப் பெண்மணியின் மரபணுக்களில் நடத்திய ஆராய்ச்சிகளே முதன்முதலில் அமெரிக்கக் கண்டத்தைச் சென்றடைந்த ஆதி அமெரிக்கர்கள் யார் என்பதற்கான விடையைத் தந்தது. சுமார் 26,000 வருடங்களுக்கு முன்பிருந்து 18,000 வருடங்களுக்கு முன்பு வரையிலான காலகட்டம். அப்போது ஆசியாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் இடையே பாலமாக விளங்கிய பெரிங் நிலப்பகுதியைக் கடந்து சென்ற அந்த ஆதி மூதாதையர்கள் சைபீரியாவிலிருந்து சென்றுள்ளார்கள். காலப்போக்கில் அவர்கள் மேலும் தெற்கு நோக்கிப் பயணித்தார்கள். அப்படியாக வட தென் அமெரிக்கக் கண்டங்கள் முழுவதும் பரவியிருந்த அவர்களே சில நூற்றாண்டுகளுக்குமுன் ஐரோப்பியர்கள் சந்தித்த அமெரிக்கப் பூர்வகுடிகளின் ஆதி மூதாதையர்கள். ஆனால் இங்கு ஒரு புதிரும் மறைந்துள்ளது. இப்போது வாழும் அந்த மூதாதையர்கள் சீனா, ஜப்பான் நாட்டவர்களைப் போன்ற உடல் உருவ அமைப்பு கொண்டவர்கள். ஆனால், ஆய்வாளர்கள் கண்டுபிடித்த அந்தப் பெண் அத்தகைய அமைப்பு கொண்டவரில்லை.

Photo Courtesy: Roberto Chavez Arce

நையாவின் மண்டையோடு

அவருடைய எலும்புக்கூடுகளைப் போலத்தான் இதுவரை கிடைத்த தொல்லெச்சங்களும் உள்ளன. அவையனைத்துமே ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய மக்களைப் போன்ற உருவ அமைப்பு கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். ஒருவேளை ஆதி அமெரிக்கர்கள் பல நிலப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்த பலதரப்பட்ட மனித இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ. ஒருவேளை ஆசியாவிலிருந்தே ஒவ்வொரு விதமான பரிணாம வளர்ச்சி காலகட்டத்துக்குப் பிறகு வந்திருப்பார்களோ?

2007-ம் ஆண்டு கண்டெடுத்த மூதாதைப் பெண்ணின் எலும்புக்கூடு அதற்குப் பதில் சொல்லலாம். ஏனென்றால் மற்ற ஆதி அமெரிக்க மனிதர்களின் தொல்லெச்சங்களைப் போலவே இவரின் உடலமைப்பும் இருந்தாலும் ஓர் ஒற்றுமை உள்ளது. அவரது மரபணுக்கள் இப்போதைய அமெரிக்க வாழ் மூதாதைகளோடு ஓரளவு ஒத்துப்போகின்றன. ஒருவேளை அவர் இவர்களின் மூத்த தாயாக இருக்கலாம். அவர் இவர் என்று அழைப்பதைவிட அவரைப் பெயர் சொல்லி அழைப்பது சற்று வசதியாக இருக்கும். ஆய்வாளர்கள் அவருக்கு வைத்த பெயர் நையா (Naia). ஹவாய் மொழியில் அதற்குக் கடல் அலை என்று அர்த்தம். 

கடலுக்கடியில் அந்தக் கரும் குகை இருந்த இடம் ஆழ்கடலில் 200 அடி நீளம் கொண்டது. அதில் 100 அடி பயணித்த பிறகே அவர் கிடைத்துள்ளார். மேல்மட்டத்திலிருந்து சுமார் 130 அடி ஆழத்திலிருக்கும் அங்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதி சுமார் 9,700 ஆண்டுகளுக்குமுன் கடல் உட்புகுந்து நீரால் சூழப்பட்டிருக்க வேண்டும். ஆக, அதற்கும் முன்பாகவே நையா அங்கு விழுந்து இறந்துள்ளார். மற்ற தொல்லெச்சங்களைவிட நையா சற்று அதிக முக்கியமானவள். ஏனென்றால் அவளது பல் சேதமடையாமல் இருந்துள்ளது. அதை ஆய்வு செய்ததில் சுமார் 12,900 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரிந்தது. கடல்நீரில் ஊறிப் போனதால் நையாவின் எலும்புகளும் பற்களும் கனிமப்படுத்தப்பட்டுவிட்டன. அதில் யுரேனியம், தோரியம் போன்ற கதிர்வீச்சுத் திறன்கொண்ட கனிமங்களும் படிந்திருந்தன. இவற்றால் எலும்புகளில் உருவாகியிருந்த சிறு பூக்களின் அமைப்புகொண்ட அச்சுகள் நையாவின் வயதைக் கணக்கிட உதவியது. அவள் இறந்ததிலிருந்து சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான இடைப்பட்ட காலத்தில்தான் இந்த அமைப்பு உருவாகியிருக்க வேண்டும்.

பதின்வயதுப் பெண்மணியான நையாவின் கடைவாய்ப் பற்களில் அவளது மரபணு மாதிரிகள் கிடைத்தன. மனித இனங்களுக்கு இடையிலிருக்கும் தொடர்புகளைக் கண்டறிய உதவும் இழைமணிக்குரிய மரபணுக்கள் (Mitochondrial DNA) அந்தப் பற்களில் அதிகமாகவே கிடைத்தன. அதிலிருந்துதான் இப்போதைய பூர்வகுடிகளின் மரபணுத் தொகுதிகளோடு அவளின் மரபணு ஒத்துப் போவதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அது மட்டுமன்றி அத்தகைய மாதிரிகள் அமெரிக்காவிலும் தற்போதைய பெரிங் ஜலசந்தியிலும் மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றிலிருந்து நையாதான் தற்போதைய பூர்வகுடிகளின் மூதாதை என்பது நிரூபிக்கப்பட்டது. நையாவோடு வந்த கூட்டம்தான் பெரிஞ்சியாவில் தொடங்கி தெற்கு மெக்சிகோ வரை பயணித்துள்ளார்கள். எல்லாம் சரி, ஆனால் நையாவின் உருவ அமைப்பு இவர்களோடு ஏன் ஒத்துப் போகவில்லை. அவள்தான் இவர்களின் மூதாதை என்றால் ஏன் இவர்களின் உருவ அமைப்பு மாறிவிட்டது?

பெரிஞ்சியாவிலும் அமெரிக்கக் கண்டத்திலும் 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த மாற்றங்களே அதற்கும் காரணம். அங்குத் தொடர்ச்சியாக ஏற்பட்டுக்கொண்டிருந்த காலநிலை மாற்றங்களும், கடல்நீர் உட்புகுதலும் நிலப்பகுதியையும் வளிமண்டலத்தையும் மாற்றியமைத்துக் கொண்டே இருந்துள்ளன. அதில் உயிர்ப்பித்து வாழத்தகுந்த மாதிரி அவர்களின் உடலமைப்பை இயற்கை மாற்றியது. 

தற்போதைய அமெரிக்கப் பூர்வகுடிகளோடு மரபணுத் தொடர்புகொண்ட மனிதக் கூட்டத்தின் ஆதிக் கலாசாரம் க்ளோவிஸ் (Clovis culture). பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்தக் கலாசாரத்தைச் சேர்ந்த மக்களில் ஒருவராகத்தான் நையாவும் இருக்கவேண்டும். அவர்கள் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே தென் அமெரிக்கக் கண்டம் வரை பயணித்துள்ளார்கள். ஆனால், அவர்களின் தொல்லெச்சங்கள் 9,000 ஆண்டுகளுக்கும் முன்பு வரைதான் கிடைக்கின்றன. அதன் பிறகான காலகட்டத்தைச் சேர்ந்த எந்தப் படிமங்களோடும் அவர்களின் மரபணு மாதிரிகள் ஒத்துப் போகவில்லை. அதற்குப்பின் அவர்கள் எங்குப் போயிருப்பார்கள்?

வேறு ஏதேனும் கலாசாரம் அல்லது வேறு ஏதேனும் மனிதக் கூட்டம் அவர்களுக்குப் பதிலாக அங்கு வந்திருக்கலாம். வளர்ச்சி அடைந்திருக்கலாம். இல்லையேல் மேற்கூறியதுபோல் இப்போதிருக்கும் பூர்வகுடிகளைப் போலவே க்ளோவிஸ் மக்களே பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம். அப்படியிருந்தாலும் அவர்களின் மரபணு மாதிரிகள் சிறிதளவேனும் ஒத்துப் போயிருக்க வேண்டுமே? மனித வரலாற்றின் மர்மங்களும் குழப்பங்களும் நீண்டுகொண்டேதான் போகும். தோண்டத் தோண்ட விடைகளோடு புதுப்புது கேள்விகளும் முளைத்துக் கொண்டேதானிருக்கும். கேள்விகள் இருந்தாலும் இப்போது நமக்குக் கிடைத்துள்ள விடை, உலகின் முதல் அமெரிக்கர்கள் நையாவும் அவரது மக்களும்.