Published:Updated:

நாட்டு மாடுகளுக்கு வேட்டு! - பயமுறுத்தும் பயோபைரஸி

நாட்டு மாடுகளுக்கு வேட்டு! - பயமுறுத்தும் பயோபைரஸி
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டு மாடுகளுக்கு வேட்டு! - பயமுறுத்தும் பயோபைரஸி

நாட்டு மாடுகளுக்கு வேட்டு! - பயமுறுத்தும் பயோபைரஸி

மிழகத்தின் மரபுப் பெருமைகளில் காங்கேயம், உம்பளச்சேரி, புலியகுளம் போன்ற நமது பாரம்பர்ய நாட்டு ரக மாடுகளுக்கு முக்கியமான இடம் உண்டு. தமிழகத்தில் இவை இன்னமும் பெருமிதத்துடன் வளர்க்கப்பட்டு வருகின்றன. பயோ பைரஸி எனப்படும் ‘உயிர்மத் திருட்டு’ முறையில் இந்த மாடுகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லும் கும்பல் தமிழகத்தில் உலவுகிறது. இந்த மாடுகளின் ரத்த மாதிரிகளை மத்திய அரசின் ஆய்வுக்காகச் சேகரிப்பதாகக் கூறி எடுத்துச் சென்று, வெளிநாட்டு மாடுகளைக் கலப்பினமாக உற்பத்தி செய்வதுதான் இந்த கும்பலின் நோக்கம்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு, ஹைதராபாத்தைச் சேர்ந்த கோகலே என்பவர் சில நாள்களுக்கு முன் சென்றுள்ளார். தன்னை நேஷனல் இன்ஸ் டிட்யூட் ஆஃப் அனிமல் நியூட்ரிஷன் அமைப்பைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், அங்கு வளர்க்கப்படும் பாரம்பர்ய காங்கேயம் இன மாடுகளின் ரத்த மாதிரிகளை மத்திய அரசின் கால்நடைத் துறை சார்பில் சேகரிக்க வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மாடுகளுக்கு வேட்டு! - பயமுறுத்தும் பயோபைரஸி

அதன்பிறகு நடந்தவற்றை, காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் கார்த்திகேய சிவ சேனாபதியிடம் கேட்டோம். ‘‘இங்கு வரும் பார்வையாளர்களின் தகவல்களை வருகைப் பதிவேட்டில் பதிவுசெய்த பிறகே அனுமதிக்கிறோம். அண்மையில் இவர் எங்கள் மையத்துக்கு வந்தார். தன்னை மத்திய அரசு அதிகாரி எனக் கூறிக்கொண்டவர், ‘நாட்டு இன மாடுகளின் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதற்காக, உங்களிடம் உள்ள காங்கேயம் இன மாடுகளின் ரத்த மாதிரிகளையும் அதன் மூக்கிலிருந்து வடியும் திரவத்தையும் சேகரிக்க வந்திருக்கிறேன்’ என்றார். அவரிடம் ‘அந்தத் திட்டம் குறித்த அரசின் ஆவணங்கள், மாடுகளின் ரத்த மாதிரிகளைச் சேகரிப்பதற்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்திருந்தால் அதற்கான கடிதம் ஆகியவற்றைக் காண்பியுங்கள்’ என்று கேட்டேன். உடனே வெலவெலத்துப் போனவர், ‘இப்போது நான் மத்திய அரசுப் பணியில் இல்லை. ஒரு தனியார் நிறுவனத்தின் ஆலோசகராக இருக்கிறேன்’ என்று மாற்றிப் பேசினார். ‘எந்த நிறுவனம், யார் அவர்கள் என்று தெளிவாகச் சொல்லுங்கள்’ எனக் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. அவரை எச்சரித்து அனுப்பிவிட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாட்டு மாடுகளை வளர்த்துவரும் நண்பர்களிடம் பின்னர் நான் விசாரித்ததில், தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பகுதிகளில் இதேபோல சிலர் உம்பளச்சேரி, புலியகுளம் இன மாடுகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்துச் சென்றிருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. ‘பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2002’-ன்படி, தேசியப் பல்லுயிர்ப் பாதுகாப்புக் கழகத்திடம் அனுமதி பெறாமல் இத்தகைய சோதனைகளை யாரும் செய்யக் கூடாது” என்றவர், அதனைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்ட சில தகவல்கள் நம்மைத் தூக்கி வாரிப்போட்டன.

நாட்டு மாடுகளுக்கு வேட்டு! - பயமுறுத்தும் பயோபைரஸி

‘‘நம் பாரம்பர்ய நாட்டு இன மாடுகள் எத்தகைய வெயிலையும், எவ்வளவு குளிரையும் தாங்கிக்கொள்ளும் வல்லமை கொண்டவை. ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் போன்ற வெளிநாட்டு ரக மாடுகளுக்கு இந்தத் திறன் கிடையாது. நம் மாடுகளின் மரபணுக்களை அவற்றுக்குச் செலுத்துவதன் மூலம் வெளிநாட்டு மாடுகளின் குணங்களை மாற்ற முடியும். அதற்காகதான் நம் நாட்டு இன மாடுகளின் மரபணுக்களைக் கைப்பற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்த பயோபைரஸி வியாபாரத்தில் உலக அளவில் பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் இந்த நிழல் வணிகத்தில், தற்போது நம் பாரம்பர்ய நாட்டு மாடு இனங்கள் குறிவைக்கப் பட்டுள்ளன. எனவே, நாட்டு இன மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்று எச்சரித்தார்.

இதுகுறித்து தமிழகக் கால்நடைத்துறை இயக்குநர் ஞானசேகரனைத் தொடர்பு கொண்டு விவரித்தோம். “நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதைக் கால்நடைத் துறையின் தலையாயப் பணியாகச் செய்து வருகிறோம். குறிப்பிட்ட காலச் சூழ்நிலைகளில், தேவைப் பட்டால் மட்டுமே எங்கள் கால்நடைத் துறை மருத்துவர்கள் மூலமாக மாடுகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்படுகின்றன. கால்நடைத்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, மாடுகளின் ரத்த மாதிரிகளைச் சேகரிக்க யாராவது வந்தால், அவர்களிடம் அடையாள அட்டையைக் காண்பிக்கும்படி மாட்டின் உரிமையாளர்கள் சொல்ல வேண்டும். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனடியாக அந்தந்த மாவட்டக் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநரைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்’’ என்றார்.

1940-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்த காங்கேயம் இன மாடுகளின் எண்ணிக்கை 34 லட்சம். இப்போது இரண்டு லட்சத்துக்கும் குறைவான மாடுகளே இருக்கின்றன. பால் உற்பத்தி அதிகமாகக் கிடைக்கிறது போன்ற காரணங்களுக்காக வெளிநாட்டு இன மாடுகளை இங்கே பெருக்கிவிட்டோம். வெளிநாட்டவர்களால் விரும்பப்படும் பிரத்யேக குணங்களைக் கொண்ட நம் நாட்டு இன மாடுகளின் பெருமை நம்மில் பலருக்குத் தெரியவில்லை. நாட்டு மாடுகளுக்கு வேட்டு வைக்கும் பயோபைரஸியைத் தடுத்து, அவற்றின் மரபணுக்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

- தி.ஜெயப்பிரகாஷ்
படம்: தி.விஜய்