Published:Updated:

மார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee

அந்தச் சமயத்தில் லீ-க்கு ஓர் இலக்கு கொடுக்கப்பட்டது. DC ஜஸ்டிஸ் லீக் காமிக்ஸ்களைவிடச் சிறப்பான ஒன்றை உருவாக்க வேண்டும். அவர் அதைவிடப் புரட்சிகரமான ஒன்றை உருவாக்கினார்.

மார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee
மார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee

சூப்பர் ஹீரோ சகாப்தத்தின் பிதாமகர். சினிமா வரலாற்றையே மாற்றியவர். மார்வெல் நிறுவனத்தில் காமிக்ஸ் கதைகள் மூலமாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ.

1939-ம் ஆண்டு டைம்லி காமிக்ஸ் என்ற நிறுவனத்தில் தன் வரலாற்றுப் பயணத்தைத் தொடங்கியவர். அதன்பின் எழுத்தாளர், ஆசிரியர் என்று பல பொறுப்புகளை வகித்தார். ஆனால், எப்போதும் ஒரே மாதிரியான வேலையைச் செய்துகொண்டிருந்ததால் வாழ்க்கையின் மீது அலுப்பு தட்டியது. டைம்லி காமிக்ஸ் நிறுவனத்தைவிட்டு வெளியேறினார். வரலாறு மாறத் தொடங்கியது. பல வருடங்களாக DC காமிக்ஸ் நிறுவனமே காமிக்ஸ் உலகில் சிறந்து விளங்கிக் கொண்டிருந்த சமயம். சூப்பர் மேன், பேட் மேன், வொன்டர் வுமன் என்று புகழ்பெற்ற காமிக்ஸ்களை உருவாக்கியிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில் லீ-க்கு ஓர் இலக்கு கொடுக்கப்பட்டது. DC-யின் ஜஸ்டிஸ் லீக் காமிக்களைவிடச் சிறப்பான ஒன்றை உருவாக்க வேண்டும். அவர் அதைவிடப் புரட்சிகரமான ஒன்றை உருவாக்கினார். 

``என் பதிப்பாசிரியர் சூப்பர் ஹீரோ கதைகளை எழுதச் சொல்லாமல் இருந்திருந்தால் நான் இன்றும் சாதாரண ஆளாகவே இருந்திருப்பேன்" என்று ஸ்டான் லீ ஒருமுறை சி.என்.என் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார். ஸ்டான் லீயின் உதவியோடு மார்வெல் காமிக்ஸ் உலகில் சூப்பர் ஹீரோக்களுக்கு புத்துணர்வை வழங்கியது. அன்றாட வாழ்வுக்கே கஷ்டப்படும் ஓர் இளைஞனை, மக்களைக் காக்கும் சூப்பர் ஹீரோவாகச் சித்திரித்தார் லீ. அது புதுமையாக இருந்தது. தனக்கு எதுமில்லாத சமயத்தில்கூட நேர்மையாகவும் சுயநலமற்றவனாகவும் இருப்பவனே சிறந்த தலைவனாக இருக்கமுடியும் என்பதை உணரவைத்தது அவருடைய சூப்பர் ஹீரோக்களே. அப்படி உருவான ஸ்பைடர் மேன் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து தி ஹல்க் கதையும் அவரைப் புகழின் உச்சியில் அமர வைத்தது. அதன்பின் உருவான ஐயர்ன் மேன், டேர் டெவில் போன்றவை முற்றிலும் வேறானது. 1950-கள்  DC-ன் கைகளில் இருந்த காமிக்ஸ் உலகம் 1960-கள் மார்வெல் கைக்குச் செல்ல லீ தான் முக்கியக் காரணம்.

ஸ்பைடர் மேன், எக்ஸ் மேன், அவெஞ்சர்ஸ் போன்றவற்றின் மூலம் மார்வெல்லை உலகம் முழுவதும் கொண்டுசென்றவர் ஸ்டான் லீ. 95 வயதான அவரின் உடல்நிலை மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டதால், நேற்று (12.11.2018) காலை சிடார்'ஸ் சினாய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என்பதை அவரது மகளுடைய வழக்கறிஞர் கிர்க் ஷ்னெக் மூலம் அறிவிக்கப்பட்டது. பழைய, புதிய தலைமுறைகள் அனைவருக்கும் அன்பு, பண்பு, ஆச்சர்யம், நம்பிக்கை, சாகசம் என்று அனைத்தையும் நல்க இனி மீண்டுமொரு ஸ்டான் லீ வரவே முடியாது. சூப்பர் ஹீரோ வரலாற்றில் அவரின் இடம் என்றும் அவருக்கு மட்டுமே.