Published:Updated:

க்ரவுடு ஃபண்டிங்! - துயரத்தில் கைகொடுக்கும் தொழில்நுட்ப உண்டியல்

க்ரவுடு ஃபண்டிங்! - துயரத்தில் கைகொடுக்கும் தொழில்நுட்ப உண்டியல்
பிரீமியம் ஸ்டோரி
News
க்ரவுடு ஃபண்டிங்! - துயரத்தில் கைகொடுக்கும் தொழில்நுட்ப உண்டியல்

க்ரவுடு ஃபண்டிங்! - துயரத்தில் கைகொடுக்கும் தொழில்நுட்ப உண்டியல்

டெல்லியின் ஒரு குடிசைப் பகுதி அது. நகரவாசிகள் அனைவரும் ஓய்வெடுக்கும் ஞாயிற்றுக்கிழமை; ஆனால், அந்தக் குடும்பத்திற்கு அது ஓய்வு நாளல்ல. பசிக்கு ஓய்வு நாள் கிடையாதல்லவா? எனவே, தந்தையும் தாயும் வேலைக்குச் செல்கின்றனர். அவர்களின் பெண் குழந்தைகள் இருவரையும் உறவினர் ஒருவரின் கவனிப்பில் விட்டுச்செல்கின்றனர். மதியம் பணி முடிந்து வீடு திரும்புகிறார் அம்மா. அந்த மதியம் அவரின் வாழ்வில் மிகக் கொடூரமான ஒரு தருணம்.

வீட்டுக்குத் திரும்பியதும், தன் குழந்தையைப் பார்க்கிறார். அந்தக் காட்சி அவரைத் திடுக்கிட வைக்கிறது. குழந்தை படுத்திருந்த மெத்தையைப் பார்க்கிறார். அந்த சிசுவின் ரத்தம் மெத்தையின் சில இடங்களில் பரவியிருக்கிறது. நம்பமுடியாத அந்தக் காட்சிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத்தொடங்குகிறது அவர் மனம். காலுக்கடியில் பூமி நழுவியது போன்ற உணர்வு எழ, அடிவயிற்றிலிருந்து பெருங்குரலெடுத்து அலறியபடி மயங்கிச் சரிகிறார் அவர். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார்கள். அவர் விழித்ததும், ‘‘என் குழந்தைக்கு என்ன ஆச்சு?’’ எனக் கேட்கிறார்; அழுகிறார்; எதுவுமே சரியாக இல்லை. உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவரின் உறவினரை அழைத்து விசாரிக்கிறார்கள். நீங்கள் நினைப்பது சரிதான். ஆம், அதேதான். காவல்துறையினர் அதை உறுதிசெய்கிறார்கள். ‘மிகமோசமான எதிரிக்கும்கூட இப்படி நிகழக்கூடாது’ என எவரையும் நினைக்க வைக்கும் கொடூரம் அது; ஆனால், அவனால் அதைச் செய்ய முடிந்திருக்கிறது. அவனைக் கைது செய்கிறார்கள்.

க்ரவுடு ஃபண்டிங்! - துயரத்தில் கைகொடுக்கும் தொழில்நுட்ப உண்டியல்

இந்தியாவின் தலைநகரத்தில் மீண்டும் ஒரு கோரம்; ஒரு தேச அவமானம்; ஒரு பாலியல் வன்கொடுமை; இந்தத் தேசத்தில் ஒவ்வொரு நாளும் சிதைக்கப்படும் பெண்களின் பட்டியலில் அந்தப் பெண்ணும் இணைகிறாள். சரி... அந்தப் பெண் குழந்தைக்கு எத்தனை வயதிருக்கும்? அது, வெறும் எட்டு மாதப் பிஞ்சு. உடனே குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கிறார்கள்.  அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய கட்டாயம். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, அரசும் உதவிக்கு ஓடிவருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குற்றவாளிமீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சில நாள்கள் கழிகின்றன. அந்தக் குடும்பத்தின் மீதான தேசத்தின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைகிறது. மீண்டும் அந்தக் குடும்பம் தனித்து விடப்படுகிறது. அவ்வளவுதான்! அந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவத்திலிருந்து முழுமையாக வெளியே வந்துவிட்டது சமூகம். ஆனால், அந்தக் குடும்பத்துக்கு அது சாத்தியமா? பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வரும் போதெல்லாம், அதன் மையச்சரடாக இருப்பது குற்றவாளிகள்மீதான சட்ட நடவடிக்கைகள் மட்டும்தான். நிர்பயா தொடங்கி கத்துவா வரை இதுதான் நிலை. அதுவும் தேசிய ஊடகங்களின் கவனத்துக்கே வராமல் போகும் குற்றங்கள் என்றால், நிலைமை இன்னும் மோசம். அப்படியெனில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான உத்தரவாதம்? மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் வழங்கும் இழப்பீடுதான் இப்போதைக்கு ஒரே வழி. ஆனால், அது போதுமானதா?

2012-ல் டெல்லியில் நிர்பயா துயரச்சம்பவத்தின் போது நாடே கொந்தளித்தது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் தொடர்பாக அதிக விவாதங்கள் எழுந்தன. 2013 பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெண்களின் பாதுகாப்புக்கான வசதிகளை உண்டாக்க ‘நிர்பயா நிதி’யை அறிவித்தார். அதற்காக, ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதேபோல மத்திய அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த நிதி முறையாகவோ, முழுமையாகவோ பயன்படுத்தப்படவே இல்லை. இதை எதிர்த்து வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, நீதிபதிகளே இதுகுறித்து கண்டனம் தெரிவித்தனர். சமீபத்தில்தான், மத்திய அரசு இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கண்டது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு ஐந்து லட்சம் ரூபாயும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏழு லட்சம் ரூபாயும் வழங்குவதற்கான சட்ட ஒப்புதலை உச்ச நீதிமன்றத்திடம் பெற்றது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வில் அரசின் பங்களிப்பு என்பது இவ்வளவுதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
க்ரவுடு ஃபண்டிங்! - துயரத்தில் கைகொடுக்கும் தொழில்நுட்ப உண்டியல்

ஆனால், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கை, அந்தச் செய்தியுடன் முடிந்துவிடுவதில்லை. அந்தச் சம்பவத்தால் உடலளவிலும் மனதளவிலும் கடுமையாகப் பாதிக்கப்படும் பெண்கள், அதிலிருந்து மீண்டுவருவதற்கு நீண்ட நாள்கள் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும். குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித்தருவதற்கு உறுதியான சட்டப்போராட்டம் நடத்தவேண்டும். பொருளாதாரரீதியாக ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்ய வேண்டும். இந்தத் சமூகத்தில் மீண்டும் சகஜமாக உலவ, மனரீதியாகத் தயாராக வேண்டும். பொருளாதார பலம் இருப்பவர்களுக்கு இதெல்லாம் சாத்தியம். மற்றவர்களுக்கு? இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்த டெல்லி பெண் குழந்தையின் குடும்பத்தில் இதுதான் நிலை. அந்தக் குழந்தையின் அப்பா, கூலி வேலை செய்பவர்; அம்மா, வீட்டு வேலை செய்பவர். இவர்களால் எப்படி பல லட்சங்கள் செலவு செய்ய முடியும்?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் இருக்கிறது, க்ரவுடு ஃபண்டிங் நடைமுறை. பிட்விங் என்ற இணையதளம் இதற்காக முயற்சி எடுத்தது. இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வரவே, நிதி குவியத்தொடங்கியது. சில வாரங்களிலேயே சிகிச்சைக்குத் தேவையான ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்தது. இந்தப் பணம் அந்தக் குழந்தையின் குடும்பத்திடம் ஒப்படைக்கப் பட்டது. இதுதவிர அந்தக் குடும்பத்தின் மறுவாழ்விற்காகக் கூடுதல் நிதியும் திரட்டிக் கொடுத்துள்ளது அந்த இணையதளம்.

இதேபோல, சமீபத்தில் இந்தியாவின் எல்லா ஊடகங்களிலும் தலைப்புச்செய்தியாக வந்த கத்துவா மற்றும் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் க்ரவுடு ஃபண்டிங் மூலம் நிதி திரட்டப்பட்டுள்ளது. க்ரவுடு நியூஸ் மற்றும் கீட்டோ என்ற இரு இணையதளங்கள் இதற்கான முயற்சிகளை எடுத்தன. 1,575 பேர் பங்கேற்று நிதியுதவி செய்தனர். இவர்கள் மூலமாக 40,62,970 ரூபாய் நிதி திரண்டது. இது இரு குடும்பங்களுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. கத்துவா சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பம், இந்தப் பணத்தைக் கொண்டு தங்களின் நாடோடி இனமான பக்கர்வால் சமூகத்துக்கு பள்ளி ஒன்றைக் கட்டப்போவதாக அறிவித்துள்ளது. உன்னாவ் பெண்ணின் குடும்பம், தங்கள் வழக்குக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது.

க்ரவுடு ஃபண்டிங்! - துயரத்தில் கைகொடுக்கும் தொழில்நுட்ப உண்டியல்

க்ரவுடு ஃபண்டிங் என்பது பல காலமாகவே இருந்துவரும் ஒரு விஷயம்தான். பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்குக் கடைக்காரர்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு உதவி செய்வது இங்கே நடைமுறையில் இருந்திருக்கிறது. வழிதெரியாமல் எங்கோ வந்து சிக்கிக்கொள்ளும் வெளியூர்க்காரர்களுக்கு, நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் இணைந்து பணம் வசூலித்து உதவி செய்வார்கள். தொழில்நுட்பம் இதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. யாரோ ஒருவருக்கு அறுவை சிகிச்சைக்கான பணத்தைக்கூட நம்மால் இங்கிருந்தே அனுப்ப முடிகிறது. மருத்துவச் சிகிச்சைகள், சொந்தத் தொழிலுக்கான முதலீடு, திரைப்படம் தயாரிப்பதற்கான பணம் என எத்தனையோ விஷயங்களுக்கு இதேபோல க்ரவுடு ஃபண்டிங் மூலம் நிதி திரட்டப்படுகிறது. இதற்குப் பக்கபலமாக இருப்பவை, க்ரவுடு ஃபண்டிங் இணையதளங்கள். 

2015-ம் ஆண்டு இந்திய ஐஸ் ஹாக்கி அணி, குவைத்தில் நடந்த சர்வதேசப் போட்டிக்குச் செல்வதற்கு நிதியின்றி தவித்தபோது, க்ரவுடு ஃபண்டிங்தான் கைகொடுத்தது. ஐஸ் ஹாக்கி வீரர்கள் அனைவரும் இணையதளத்தில் கோரிக்கை வைக்க, உடனே அமிதாப் பச்சன், ஆனந்த் மஹிந்திரா என நிறையப் பிரபலங்கள் இவர்களுக்கு உதவ முன்வந்தனர். நிதியும் குவிந்தது. ஆறு முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட லூஜ் வீரர் சிவா கேசவன், துப்பாக்கி சுடும் வீராங்கனை அயோனிகா பால், தட்டு எறியும் வீரர் விகாஸ் கவுடா, பாரா ஒலிம்பிக் வீரர் மார்க் தர்மாய் என எத்தனையோ பேருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது இந்த க்ரவுடு ஃபண்டிங்தான். தேவையிருக்கும் மனிதர்களையும், அவர்களுக்கு உதவும் உள்ளங்களையும் ஒருங்கிணைப்பதுதான் க்ரவுடு ஃபண்டிங் தளங்களின் வெற்றி.

சமூக நலப்பணிகளுக்காக உண்டியல் ஏந்தி நிதிதிரட்டுவது பலகாலமாக இங்கே நடைமுறையில் இருக்கும் விஷயம்தான். க்ரவுடு ஃபண்டிங்கில், தொழில்நுட்பம் உண்டியல் ஏந்துகிறது; இணையத் தோழர்கள் தோள்கொடுக்கிறார்கள்.

- ஞா.சுதாகர்