Published:Updated:

``கடவுள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையே எனது ஆன்மிகம்!" - பாரதி பாஸ்கர் #WhatSpiritualityMeansTome

``கடவுள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையே எனது ஆன்மிகம்!" - பாரதி பாஸ்கர் #WhatSpiritualityMeansTome
``கடவுள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையே எனது ஆன்மிகம்!" - பாரதி பாஸ்கர் #WhatSpiritualityMeansTome

``கடவுள் மீதான ஆழ்ந்த நம்பிக்கையே எனது ஆன்மிகம்!" - பாரதி பாஸ்கர் #WhatSpiritualityMeansTome

``பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எதுவுமே இல்லாத ஒரு சிறுதுளி. இந்தப் பிரபஞ்ச சக்தியை வணங்குவதும், அதற்கு நாம் அடிபணிவதும் அதனோடு நாம் ஒன்றுபடுவதும்தான் இந்த வாழ்க்கையாக இருக்கிறது. இந்த வாழ்க்கையை வாழ, புறச்சூழல்களுக்கு மத்தியில் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள ஒரு போராட்டமும் தேவைப்படுகிறது. அதை நாம் அறத்துடன் எப்படிக் கடந்து போகின்றோம் என்பது மிகவும் முக்கியம்..." நிதானமும் தெளிவாகவும் பேசுகிறார் பாரதி பாஸ்கர். அறிமுகம் தேவையில்லை. பட்டிமன்றங்களில் ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் கருத்துகளைப் பதிவு செய்பவர். ஆன்மிகம் பற்றிக் கேட்டதும் தத்துவார்த்தமாகப் பேசுகிறார். 

``தடையைத் தாண்டி நம்மை நிலை நிறுத்திக்கொள்வதற்கு, நமக்கு ஆற்றலும் சக்தியும் தேவைப்படுகின்றது. நம்முடைய ஆற்றலைப்  பிரபஞ்ச சக்தியுடன் இணைக்கும்போது நமக்கு ஒரு உத்வேகம் பிறக்கின்றது.

ஒவ்வொருவரும் அவரவர்கள் வளரும் சூழ்நிலையைப் பொறுத்தே அந்தப் பிரபஞ்ச சக்தியுடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். 

என்னைப் பொறுத்தவரை என்னுடைய தாய், தந்தையர் எந்தவித வழிபாட்டுமுறைகளைக் கையாண்டார்களோ அதைத்தான் நான் இன்றளவும் கடைப்பிடிக்கிறேன். 

`வாழ்க்கையில என்ன கஷ்டம் வந்தாலும் துன்பம் வந்தாலும் நாம கும்பிடுற கடவுள் நம்மைக் காப்பாத்துவார்'னு என் அம்மா, அப்பா இருவரும் அவர்கள் உயிரோடிருந்தவரை அடிக்கடிச் சொல்வார்கள். அந்த வார்த்தைகள் மந்திரச்சொல் மாதிரி என் மனத்தில் தங்கிவிட்டன.

எனக்குச் சடங்கு சம்பிரதாயங்களிலெல்லாம்  நம்பிக்கை கிடையாது. மேலும் நான் தேர்வு செய்த என்னுடைய வாழ்க்கை முறைக்கு அவற்றை என்னால் கடைப்பிடிக்கவும் முடியாது. வழக்கம்போல் தினமும் காலையில் குளித்து முடித்ததும் சுவாமிக்கு முன்னால் நின்று ஆழ்வாரின் பாசுரங்களில் ஏதேனும் ஒன்றையோ, தேவாரம், திருவாசகத்திலிருந்து ஏதேனும் ஒரு பாடலையோ பாடி வழிபடுவேன். குறிப்பாக, திருப்பதி வேங்கடேசப் பெருமாள் எனக்கும் மிகவும் பிரியமான கடவுள். அவரை நினைத்து,

``செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்

அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே''

என்னும் குலசேக ஆழ்வாரின் பாடலை அடிக்கடிப் பாடி வழிபடுவேன்.

சில சமயங்களில் மயிலை கற்பகாம்பாள் சந்நிதிக்குச் சென்று வழிபடுவேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என்பதால் அவரைச் சென்று வணங்குவேன். திருச்சிக்குப் போனால் தாயுமானவர் சுவாமியையும், திருவரங்கம் ரங்கநாதப் பெருமாளையும் கட்டாயம் வணங்கி வருவேன்.

ஒரு நெருக்கடியான நேரம்... எனக்கு இரண்டாவது குழந்தை பிரசவத்தின் போது வலி பொறுக்க முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். டாக்டர் என்னைப் பரிசோதித்து விட்டு, ``இன்னும் 24 மணி நேரம் ஆகும்''என்றார் எனக்கோ மிகுந்த வலி. எனது தாயார் வெளியில்தான் இருந்தார். அந்த வேளையில்,  திருச்சி தாயுமானவர் சுவாமியை நினைத்துக்கொண்டேன். 

அந்தக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து திருச்சிக்கு மணம் முடித்துப் புகுந்த வீட்டுக்கு வந்த ரத்னாவதி என்ற பெண் கர்ப்பமடைகிறாள். பிரசவத்துக்கு தாய் வீட்டுக்குச் செல்லலாம் எனப் புறப்பட்டுவிட்டாள். மகளுக்குப் பிரசவத்துக்குத் துணையாயிருக்க தாயும் கிளம்பிவருகிறாள். ஆனால், காவிரியிலோ வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. 

மகள் இக்கரையிலும் தாய் அக்கரையிலும் இருக்கவேண்டிய நிலை. மகளுக்கோ பிரசவ வலி வந்துவிட்டது. எவரும் உதவிக்கு அருகில் இல்லை. தாளாத வலியில் சிவபெருமானை எண்ணி வணங்குகிறாள். சிவபெருமானே அவளது தாயின் வடிவில் வந்து மருத்துவம் பார்க்கிறார். சுகப்பிரசவம் ஆகிறது. அதனால்தான் மலைக்கோட்டையிலிருக்கும் சிவனுக்கு தாயுமானவ சுவாமி என்று பெயர்.

இதேபோல் என்ன நடந்ததோ தெரியவில்லை, என்னுடைய படுக்கைக்கு அருகில் இருந்த பெண்ணைப் பரிசோதிக்க வந்த மற்றொரு டாக்டர் உடனடியாக என்னை லேபர் வார்டில் அனுமதிக்கச் சொன்னார். சில நிமிடங்களில் குழந்தை பிறந்தது. 

தாயுமானவனின் கருணையை எண்ணி, எனது கண்கள் பனித்தன. இப்படிப் பல சம்பவங்கள். எந்தச் சூழ்நிலையிலும் கடவுள் நம்மைக் கைவிடமாட்டார் எனும் ஆழ்ந்த நம்பிக்கையே எனது ஆன்மிகம்'' எனக் கூறி விடை கொடுத்தார். 

அடுத்த கட்டுரைக்கு