Published:Updated:

டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் தற்கொலை செய்துகொண்ட இளம் தடகள வீரர்!

டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் தற்கொலை செய்துகொண்ட இளம் தடகள வீரர்!
டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் தற்கொலை செய்துகொண்ட இளம் தடகள வீரர்!

டெல்லியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் தங்கியுள்ள தடகள வீரர் ஒருவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள விடுதியில் தங்கி பல வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 18 வயதான பலேந்தர் சௌத்ரி (Palender Chaudhary ) என்ற தடகள வீரர் விடுதி அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரின் நண்பர் அறைக்குச் செல்லும்போது பலேந்தர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. உடனடியாக வீரர்களின் பயிற்சியாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர், பலேந்தரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  பலேந்தரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவரின் நண்பர்கள் கூறும்போது, ``பலேந்தர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தன் தந்தையுடன் தொலைபேசியில் சண்டை போட்டுக்கொண்டிருந்தான். பிறகு, அவனின் சகோதரி நேரில் வந்து அவரிடம் பேசிச் சென்றார். தற்கொலைக்கான சரியான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியாமல்போனது” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பலேந்தர் இருந்த அறையில் சோதனை செய்தபோது அங்கு தற்கொலைக்கான காரணம் எதுவும் கிடைக்கவில்லை என போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த பலேந்திரனின் தந்தை பேசும்போது, “ அவன் என்னிடம் பணம் கேட்டான், நான் விரைவில் தருகிறேன் எனக் கூறியிருந்தேன். பிறகு, என்ன நடந்தது எனத் தெரியவில்லை. நான் விளையாட்டு அரங்கத்தில் உள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார். 

தற்கொலை செய்துகொண்ட பலேந்தர் 2007-ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற இளையோர் ஆசிய போட்டியில் 100 மற்றும் 200 மீட்டர் தடகள பிரிவுகளில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.