Election bannerElection banner
Published:Updated:

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்த `பூமியின் தந்தை!’ - பிர்சா முண்டா பிறந்த தினப் பகிர்வு

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்த `பூமியின் தந்தை!’ - பிர்சா முண்டா பிறந்த தினப் பகிர்வு
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்த `பூமியின் தந்தை!’ - பிர்சா முண்டா பிறந்த தினப் பகிர்வு

தங்களின் மதநம்பிக்கைகளையும் கலாசாரங்களையும் மறக்கக் கூடாது என வலியுறுத்தினார். நிலம் மீதான உரிமையையும் அதை அழுத்திக் கேட்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தினார். இவரை, `பூமியின் தந்தை' என்று பழங்குடியின மக்கள் அழைத்தனர். 

பிர்சா முண்டா, தற்போது அதிகமானோரால் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பெயர். காரணம், அவரைப் பற்றி இயக்குநர் பா.இரஞ்சித் திரைப்படம் இயக்கவுள்ளதாக அறிவித்ததுதான். தன் இன மக்களின் சமூக/பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் சுதந்திரப் போராட்டத்துக்காகவும் மிகத் தீவிரமாகப் போராடிய பிர்சா முண்டாவைப் பற்றித் திரைப்படம் வரப்போகிறது என்பதற்காக மட்டுமல்ல, இன்று அவரது பிறந்த நாள் என்பதற்காகவும் அவர் யார் என்று தெரிந்துகொள்வோம்...

`சுதந்திரப் போராட்டம்' என்றவுடன், பிரிட்டிஷாருக்கு எதிரான பெரிய, நீண்ட போராட்டத்தைத்தான் நினைத்துக்கொள்கிறோம். பல்வேறு கலாசாரப் பின்னணிகளைச் சேர்ந்த இந்தியர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் இணைத்தது இந்தப் போராட்டம்தான் என்பதால்கூட இருக்கலாம். சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக, தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமும் இதுதான்.  

சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அது சென்ற திசை பற்றியும் விமர்சனம் வைத்தவர்கள்கூட, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்பதை மிகப்பெரிய வெற்றியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், `சமூக/பொருளாதாரச் சுரண்டலிலிருந்து எப்போது விடுதலை?' என, சுதந்திரப் போராட்ட காலத்திலேயே உறக்கக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர்கள் பெரியார், அம்பேத்கர் போன்றோர்.

சுதந்திரப் போராட்டத்தின் மூலம் பகத்சிங்கும் காந்தியும் பிரபலமாவதற்கு முன்னரே பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை நடுங்கவைத்தவர் பிர்சா முண்டா. சோட்டா நாக்பூர் பீடபூமியில் உள்ள காடுகளிலிருந்து (இப்போது ஜார்க்கண்ட் மாநிலம்) வந்த பழங்குடிப் போராளி பிர்சா முண்டா. பார்லிமென்ட்டில் இருக்கும் ஒரே ஒரு பழங்குடி ஆளுமையின் ஓவியம் இவருடையதுதான்.

நவம்பர் 15, 1875 குந்தி மாவட்டம் உல்லிஹட்டூவில் பிறந்தவர். கொஞ்சகாலம் மிஷனரிப் பள்ளியில் படித்தார். தனது ஆசிரியர் ஜெய்பால் நாகின் வார்த்தைகளைக் கேட்டு கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார். அதனால், ஜெர்மன் மிஷன் பள்ளியில் படித்தார். அந்தப் படிப்புதான், பின்னாளில் அவர் வாழ்வில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தது.

மதம் என்பதன் மீதான அவரது புரிதலை கிறிஸ்துவ மதமாற்றம் வடிவமைத்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் பற்றிய விழிப்புஉணர்வும், பழங்குடியினரைக் கிறிஸ்துவர்களாக மாற்றும் முயற்சிகள் பற்றிய அறிவும் கைகொடுக்க, `பிர்ஸைத்' என்கிற நம்பிக்கையைத் தோற்றுவித்தார். முண்டா மற்றும் ஒரோன் பழங்குடியினரும் அந்த நம்பிக்கையில் இணைந்துகொண்டனர். இது பிரிட்டிஷாரின் மதமாற்ற முயற்சிகளுக்குப் பெரிய சவாலாக அமைந்தது.

மேற்கு சிங்க்பம் மாவட்டத்தின் சைபாஸா நகரில் (ஜார்க்கண்ட்) ஐந்தாண்டுகள் இருந்தார். அப்போது சர்தார்களின் கலவரத்தின் மூலம் பிரிட்டிஷார்கள் எப்படியெல்லாம் பழங்குடியினரை அடக்கியாள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டார். அரசாங்கத்தால் நிதியுதவி செய்யப்படும் மிஷனரிகளும் இதற்குக் கருவிகளாக இருக்கின்றன என்பதையும் உணர்ந்தார். அது அவரது மனதில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. 

இதனால் 1890-ல் ஜெர்மன் மிஷன் பள்ளியைவிட்டு வெளியேறினார் பிர்சா. கிறிஸ்தவ மதத்தையும் கைவிட்டுவிட்டு தனது பழங்குடியின மத நம்பிக்கைக்கு மாறினார். இதே நேரத்தில் சைபாஸாவைவிட்டும் வெளியேறிய அவர், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராக முழு நேரமாகப் போராடினார். விளைபொருள்களுக்கும் நிலத்துக்கும் தீவிர வரிகளை வசூலிப்பதன்மூலம் சந்தாள் மற்றும் முண்டா பழங்குடியினரையும் பிரிட்டிஷ் அரசு சுரண்டுகிறது என்பதைக் கண்டு கொதிப்படைந்தார். 

இதற்கெல்லாம் உள்ளூர் ஜமீன்தார்களே உடந்தையாக இருந்தார்கள் என்பதும், அதற்குக் கூலியாக அதிக அளவில் பழங்குடி நிலங்களையும் வளைத்துக்கொண்டார்கள் என்பதும், ஒருசிலருக்கெல்லாம் 150 கிராமங்கள் வரை சொந்தமாகின என்பதும், நிலத்தை முதலில் வைத்திருந்த பழங்குடியினரையே கூலிக்கு வேலைக்கும் வைத்துக்கொண்டார்கள் என்பதும் அவரது கோபத்தை மேலும் மேலும் அதிகமாக்கியது.  

இந்த எல்லாச் சுரண்டல்களையும் எதிர்க்கவும் பழங்குடியினரைக் காக்கவும் `உல்குலான்’ என்ற ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். ஆதிவாசிகளின் நில உரிமைகளை அழுத்திச் சொல்வதாக இந்தப் போராட்டம் அமைந்தது. அவர்களே நிலத்தின் முழு உரிமையாளர்கள் என்பதை இது வலியுறுத்தியது. பிரிட்டிஷார்கள், ஜமீன்தார்கள் ஆகியவர்களை வெளியேற்றுவதும் இதன் நோக்கமாக அமைந்திருந்தது. கொரில்லா முறையில் போரிட்டு பல பிரிட்டிஷ் அரசாங்கப் போலீஸார்களைக் கொன்றனர். 1894 அக்டோபரில் ஜமீன்தார்கள் வசூலித்த காட்டுவரியை ரத்துசெய்ய பிர்சா போராட்டம் நடத்தினார். காடுகளின் பொருள்கள் ஆதிவாசிகளுக்கே சொந்தமானது என்று வலியுறுத்தினார். 

போராட்டத்தின் அவசியத்தை உணர்ந்துகொண்ட ஒரான், முண்டா, கரியா போன்ற பழங்குடியினர் அனைவரும் இவருடன் இணைந்துகொண்டனர். அவர்களிடம் ஜமீன்தார்கள், பிரிட்டிஷ் அரசாங்கம் ஆகியோரின் சுரண்டலை எதிர்க்குமாறு பிர்சா வலியுறுத்தினார். இதற்காக ஹசாரிபாக் சென்ட்ரல் ஜெயிலில் இரண்டு வருடம் சிறைவைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்து இன்னும் தீவிரமாகப் போராடினார். 

ஆகஸ்ட் 1897-ம் ஆண்டில் குந்திக் காவல்நிலையைத்தை, வில்-அம்புகளால் தாக்கினார் பிர்சா. அவரோடு 400 பேர் இணைந்து தாக்குதல் நடத்தினர். 1898-ம் ஆண்டில் தனகா நதியின் கரையில் முண்டாக்களுக்கும் பிரிட்டிஷார்களுக்கும் நடந்த தாக்குதலில் பிரிட்டிஷாரைத் தோற்கடித்தார். இதனால், பிரிட்டிஷ் அரசு பல பழங்குடி ஆண்களையும் பெண்களையும் கைதுசெய்தது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமல்லாமல், தன் இனக் குழுவிலேயே இருந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடினார் பிர்சா. மூடநம்பிக்கை, பலி, குடிப்பழக்கம் என, தன் பழங்குடி மக்களிடையே இருந்த பழக்கங்களை எதிர்த்தார். அதேநேரத்தில் தங்களின் மதநம்பிக்கைகளையும் கலாசாரங்களையும் மறக்கக் கூடாது என வலியுறுத்தினார். நிலம் மீதான உரிமையையும் அதை அழுத்திக் கேட்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்தினார். இவரை, `பூமியின் தந்தை' என்று பழங்குடியின மக்கள் அழைத்தனர். 

இவரது போராட்டங்களை, பிரிட்டிஷார் மிகவும் கொடூரமாக எதிர்கொண்டனர். சுரண்டலையும் பிரிவினைவாதத்தையும் மேலும் மேலும் அதிகரித்தனர். 1900-ம் ஆண்டில் தும்பாரி மலைகளில் தங்கியிருந்த பிர்சா ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நூற்றுக்கணக்கானோரைக் கொலைசெய்தனர். அந்த நிகழ்வு நடைபெற்ற சில மாதத்துக்குள்ளேயே சக்ரதர்பூர் அருகே இருக்கும் ஜம்கோபாய் காட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது பிரிட்டிஷார் இவரை வளைத்துப் பிடித்து கைதுசெய்தனர்.

கேட்கவே முடியாத பல சித்ரவதைகளை அனுபவித்த பிறகு, ஜூன் 9, 1900-ம் ஆண்டில் பிர்சா உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 25! இவரது மரணத்துக்கு, காலரா நோயே காரணம் எனச் சொல்லப்பட்டது. இவர் இறந்து எட்டு வருடத்துக்குப் பிறகு, ஆதிவாசி நிலங்களை பிறர் வாங்குவதைக் குறைக்க, சோட்டா நாக்பூர் சட்டம் இயற்றப்பட்டது. 

இவர் விட்டுச்சென்ற வரலாற்றைச் சொல்லி முடிப்பது கடினம். ஜார்க்கண்டில் கிட்டத்தட்ட எல்லாக் கல்வி நிறுவனங்களுக்கும் இவர் பெயர்தான் சூட்டப்பட்டிருக்கும். அதுமட்டுமல்ல, ஏர்போர்ட், ஸ்டேடியம், ஏன் மத்திய சிறைக்குக்கூட இவர் பெயர்தான்!

இவர் பிறந்த உலிகட்டூ கிராமம் ஒரு புனிதத்தலமாக மாறியிருக்கிறது. பீகாரிலிருந்து ஜார்க்கண்ட் பிரி(ற)ந்த தினமும் நவம்பர் 15-தான். 

பிரிட்டிஷாரை மட்டுமல்ல, தன் மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், அவர்கள் சமூக/பொருளாதார நிலையில் சமத்துவம் பெற வேண்டும் என்பதற்காகவும் போராடியவர் பிர்சா. ஆனால், இன்றும் சுரண்டலுக்கும் அடிப்படை வாழ்வாதாரத்துக்கும் பழங்குடி மக்கள் போராடவேண்டிய சூழலே இருக்கிறது. பிர்சாவை மட்டுமல்ல, அவர் எதற்கு எதிராகப் போராடினாரோ அதையும் நாம் தெரிந்துகொண்டு செயல்படவேண்டியது அவசியம். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு