Published:Updated:

‘பத்திரிகையாளர்கள்மீது கிரிமினல் வழக்கா?’

‘பத்திரிகையாளர்கள்மீது கிரிமினல் வழக்கா?’
பிரீமியம் ஸ்டோரி
News
‘பத்திரிகையாளர்கள்மீது கிரிமினல் வழக்கா?’

இது ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி

ரசியலில் ஆயிரத்தெட்டு கூட்டணிகளைப் பார்த்திருக்கிறது தமிழகம். முதல்முறையாக புதியவகைக் கூட்டணியைக் கண்டிருக்கிறது, ஊடகத்துறையில்!

தமிழகத்தில் ஊடகத்துறையினர், ஊடக நிறுவனங்கள்மீது செய்திகளுக்காக வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. செய்தி தொடர்பான வழக்குகள் அல்லாமல், சம்பந்தமில்லாத கிரிமினல் பிரிவுகளிலும் வழக்குகள் பதியப்படுகின்றன. செய்திகளைப் பாரபட்சமின்றி வெளியிடும் குறிப்பிட்ட தொலைக்காட்சி ஊடகங்கள், அரசு கேபிள் நெட்வொர்க்கில் திடீரென இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

ஊடகத்துறைமீது தொடர்ந்துவரும் இந்த நெருக்கடியை எதிர்கொள்வது குறித்துச் செய்தி ஊடக நிறுவனங்கள் சார்பில் ஜூலை 1-ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ‘தி ஹிண்டு’ ஆங்கில நாளிதழ் வெளியீட்டாளர் என்.ரவி, ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ சென்னைப் பதிப்பு ஆசிரியர் அருண் ராம், மக்கள் தொலைக்காட்சியின் ஆலோசகர் சௌமியா அன்புமணி, கலைஞர் தொலைக்காட்சியின் துணைத்தலைவர் ஹூமாயூன், சத்தியம் தொலைக்காட்சியின் பொது மேலாளர் சாமிநாதன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கார்த்திகைச்செல்வன் ஆகியோர் பேசினர்.

‘பத்திரிகையாளர்கள்மீது கிரிமினல் வழக்கா?’

‘‘தமிழகத்தில் கேபிள் தொழில் ஒருசார்பாக இல்லாமல், அனைத்து ஊடகங்களையும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியைச் செய்வதற்காக அரசு கேபிள் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதே அரசு கேபிள் நிறுவனத்தைப் பயன்படுத்தி, அரசுக்கு எதிராக மக்கள் முன்வைக்கும் கருத்துகளை இப்போது இருட்டடிப்பு செய்கிறார்கள்’’ என்று பலரும் மாநில அரசுமீது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தலைமை வகித்துப் பேசிய என்.ராம், ‘‘செய்தி ஊடகங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தத் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களுக்குத் தேவையான செய்திகளை முறைப்படியாக, சட்டப்பூர்வமாக கொண்டுசேர்க்கும் பத்திரிகையாளர்கள்மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்குத்தொடுப்பது தொடர்கிறது. போராட்டங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளுக்கு அரசுத் தரப்பிலிருந்து எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான சட்டவிரோதமான, தன்னிச்சையான நடவடிக்கைகளை அரசு திரும்பப்பெற வேண்டும். ஊடகச் சுதந்திரத்தைக் காப்பதற்கான ஓர் ஏற்பாடாக, அனைத்து ஊடக நிறுவனங்கள், ஊடகத்தினர் அமைப்புகள், ஊடகத்துறையினரைக் கொண்ட ‘ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி’ இயக்கம் உருவாக்கப்படுகிறது. இதில் வெளிப்படையாகச் சேர முன்வராவிட்டாலும், பல ஊடக அதிபர்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அனைவரையும் இணைத்து இந்த முயற்சியை வலுவாக்க வேண்டியது அவசியம்” என்று கூறினார்.

என்.ராம் தலைமையில் ஒரு குழுவாகச் சென்று முதல்வரைச் சந்தித்துப் பிரச்னைகளைப் பற்றிப் பேசுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மூத்த பத்திரிகையாளரான எஸ்.எம்.பாலசுப்ரமணியன் குறுக்கிட்டு, ‘‘பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் நடந்துகொண்ட விதத்தையும் குறிப்பிடவேண்டும்” என்றார். பாதிக்கப்பட்ட அனைத்து ஊடகங்களின் பெயர்களையும் சேர்க்கவேண்டும் எனும் அவரின் கருத்தை ஏற்பதாகவும், ஆளுநர் விவகாரத்தை இந்தப் பிரச்னையுடன் சேர்க்க இயலாது என்றும் என்.ராம் கூறினார்.

கருத்துரிமைத் தடைக்கு எதிராக ஊடகங்கள் பேசாமல் வேறு யார்தான் பேசமுடியும்?

- இரா.தமிழ்க்கனல்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz