Published:Updated:

பொருத்தம் - முக்கியமானவை எவை?

பொருத்தம் - முக்கியமானவை எவை?
பொருத்தம் - முக்கியமானவை எவை?

ஜாதகம்ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் - படம்: அசோக் அர்ஸ்

திருமணம் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதோடு, இரண்டு குடும்பங்களின் உறவுச் சங்கமமாகவும்  இருக்கிறது. திருமணப் பேச்சுவார்த்தையின்போது குடும்பம், வயது, படிப்பு, அழகு, ஜாதகம் ஆகிய ஐந்து விஷயங்களையும் பார்க்க எவரும் தவறுவதில்லை. முதல் நான்கும் சரியாக இருந்தாலும், ஜாதகப் பொருத்தம் பார்ப்பதுதான் அந்தத் திருமணப் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. 

பொருத்தம் - முக்கியமானவை எவை?

ஜாதகம் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்ய மாட்டார்கள். அதுவும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில், ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்வார்கள்.

ஏனென்றால், திருமணத்தை அள்ளித்தெளித்த அவசரகோலமாக அத்தனை எளிதாகச் செய்துவிட முடியாது. அதில்தானே இருமனங்களின் மகிழ்வான எதிர்காலம் அடங்கி இருக்கிறது?

ஜோதிட ரீதியாக, திருமணத்துக்குப் பொருத்தம் பார்க்கும்போது மணமகளுக்கும் வரனுக்கும் 21 பொருத்தங்கள் பார்க்கின்ற வழக்கம் முற்காலத்தில் இருந்தது. முக்கியமாக பத்துப் பொருத்தங்கள் பார்ப்பது இப்போதும் நடைமுறையில் இருந்துவருகிறது. பத்துக்கு ஒன்பது பொருத்தங்கள் அமைவதே அபூர்வம். அதனால் பத்துக்கு ஆறு அல்லது அதற்கு மேல் பொருத்தங்கள் இருந்தால் அந்தத் திருமணத்தைப் பேசி முடிக்கலாம். எந்தெந்தப் பொருத்தங்கள் மிகவும் முக்கியமானவை எனப் பார்ப்போம். 

1. ராசி அதிபதி பொருத்தம்:

நவகிரகங்களில்  நிழல் கிரகங்களான  ராகு, கேது நீங்கலாக, மீதம் உள்ள ஏழு கிரகங்கள், 12 ராசிகளுக்கு அதிபதிகளாவார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நட்பு நிலை, சமநிலை, பகை நிலை உள்ளவர்களாக இருப்பார்கள்.  ஆண் பெண் இருவரின் ராசி அதிபதிகளின் உறவு நட்பு நிலை - சம நிலை  என்றால் திருமணப் பொருத்தம் உத்தமம்

ராசி அதிபதிகள் பொருத்தம் சேர்ந்திருந்தால், ராசிப் பொருத்தமும் சேர்ந்துவிடும். கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வார்கள்.

2. ஸ்திரீ தீர்க்கம்

பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் வரை உள்ள  எண்ணிக்கை 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் ஆகும். ‘உத்தியோகம் புருஷ லட்சணம்’ என்பார்கள். கணவன் தன் உத்தியோகத்தை இழக்கும் சூழல் வந்தாலோ, தான் செய்த தொழிலில் நஷ்டமடையும் நிலையை அடைந்தாலோ, அப்படிப்பட்ட நேரங்களில் பக்க துணையாகத் தீர்க்கமாக இருந்து தெம்பும் துணையுமாக மனைவி இருப்பார். ஸ்திரீ தீர்க்கப் பொருத்தமிருந்தால் அத்தகைய மனைவி அவர்களுக்கு வாய்ப்பார்.

3. கணப் பொருத்தம்

27  நட்சத்திரங்களையும் ‘தேவ கணம்’, ‘மனித கணம்’, ‘ராக்ஷஸ கணம்’ என மூன்று இனங்களாகப் பிரித்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு கணத்திலும் ஒன்பது நட்சத்திரங்கள் இருக்கும். 

தேவ கணம்: அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம் மற்றும்  ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் தேவ கணம். 

மனித கணம்: பரணி, ரோகிணி,  திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மனித கணம்.     
 
ராக்ஷஸ கணம்: கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம் மற்றும் சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ராக்ஷஸ கணம்.

மணமகள், மணமகள் ஆகிய இருவரின் நட்சத்திரங்களும் ஒரே கணமாக இருந்தால் இருவரையும் இணையாகச்  சேர்க்கலாம். கணப் பொருத்தம் நன்றாக அமைந்துள்ளதெனக் கொள்ளலாம். தேவ கணத்துடன், மனித கணம் உள்ள நட்சத்திரத்தைச் சேர்க்கலாம். தேவ கணத்துடன் ராக்ஷஸ கணத்தைச் சேர்க்கக் கூடாது. நட்சத்திரங்கள் பொருந்தாது. ராக்ஷஸ குணமென்றால், அசுர குணம் உள்ளவர்கள் என நினைக்க வேண்டாம். தான்கொண்ட கொள்கையில் பிடிவாத குணம் உள்ளவர்களாக இருப்பார்கள். ராக்ஷஸ கண நட்சத்திரத்துக்கு ராக்ஷஸ கண நட்சத்திரத்தைத்தான் சேர்க்க வேண்டும்.

4. மகேந்திரப் பொருத்தம்!

இல்லற வாழ்வில் ஈடுபடும் தம்பதிக்கு ஏற்படும் குழந்தை பாக்கியம் பற்றி கூறும் பொருத்தம்தான் மகேந்திரப் பொருத்தம். பெண் நட்சத்திரத்திலிருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணினால், அந்த எண்ணிக்கை 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வர வேண்டும். அப்படி வந்தால் அவர்களுக்கு மகேந்திரப் பொருத்தம் அமைந்துள்ளதெனக் கொள்ளலாம். இந்தப் பொருத்தம் உள்ள தம்பதிக்குப் பிறக்கும் குழந்தைகள் நல்ல புத்திசாலிகளாகவும் சுயமரியாதைமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

5. யோனிப் பொருத்தம்

திருமணத்தில் இணையும் மணமகன், மணமகளின் தாம்பத்ய வாழ்க்கையைப்பற்றி கூறும் பொருத்தம் இது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குரியவர்களுக்கும் அவர்களது இல்லற வாழ்வின் தாம்பத்ய சுகத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலங்குடன் பொருத்தி, குறியீடாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று பகையான விலங்குகளைச் சேர்க்கக்கூடாது. அப்படிச் சேர்த்தால் அவர்களுக்குள் அந்நியோன்யம் இல்லாமல் போகும். இது திருமணப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமான பொருத்தமாகும்.

6. ராசிப் பொருத்தம்

இன்றும் பல சமூகங்களில் ராசிப் பொருத்தம் மட்டுமே பார்த்து மனம் முடிக்கும் வழக்கம் உள்ளது. ராசிப் பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசி வரைக்கும் எண்ணினால்  வரும் எண்ணிக்கை 6-க்கு மேல் இருந்தால் ராசிப் பொருத்தம் உண்டு.

7. தினப் பொருத்தம்

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய முதல் பொருத்தம் தினப் பொருத்தம். இதை ‘நட்சத்திரப் பொருத்தம்’ என்றும் அழைப்பார்கள். பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம்  2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24-வது நட்சத்திரமாக இருந்தால், தினப் பொருத்தம் இருக்கிறதெனக் கொள்ள வேண்டும்.

8. வசியப் பொருத்தம்:

திருமணம் முடித்த கணவன் மனைவி இருவருக்கும் அன்புமயமான வாழ்க்கை அமைய வசியப் பொருத்தம் மிகவும் முக்கியம். வசியப் பொருத்தம்  உள்ள தம்பதிகளுக்குப் புத்தி சாலிகளான குழந்தைகள் பிறப்பார்கள்.

9. ரஜ்ஜூப் பொருத்தம்

ரஜ்ஜூப் பொருத்தம் என்பதை கயிறுப் பொருத்தம் என்றும் சொல்வார்கள். ‘சிரசு ரஜ்ஜூ’, ‘கழுத்து ரஜ்ஜூ’, ‘உதிர ரஜ்ஜூ’, ‘தொடை ரஜ்ஜூ’, ‘பாத ரஜ்ஜூ’ என ஐந்து வகை ரஜ்ஜூகள் உள்ளன. இவை ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் மாறுபடும். ரஜ்ஜூ தாக்குதல் இல்லாத இரு நட்சத்திரங்களைச் சேர்க்க வேண்டும். இருவரின் நட்சத்திரங்களும் ஒரே ரஜ்ஜூவில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

10. வேதைப் பொருத்தம்

‘வேதை’ என்றால் ஒன்றுக்கு ஒன்று எதிர்மறையாக இருப்பது என்று பொருள். ஒருவருக்குப் பிடித்தமான நபராக இருப்பவர் இன்னொருவருக்குப் பிடித்தமானவராக இல்லாமலும் போவார். ஒன்றுக்கு ஒன்று வேதையில் இருக்கும் நட்சத்திரம் பொருத்தமாக அமையாது. எந்த நட்சத்திரத்துக்கு எந்த நட்சத்திரம் வேதை என்பதை கவனத்தில் கொண்டு இருவருக்கும் மணம் முடிக்க வேண்டும்.

 திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமான பொருத்தங்களான, தினப் பொருத்தம், கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், வேதைப் பொருத்தம் மற்றும் ரஜ்ஜூப் பொருத்தம் ஆகிய முக்கியப் பொருத்தங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து, அதன் பிறகே திருமணம் செய்யவேண்டும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பத்துப் பொருத்தங்கள் மட்டும் பார்த்தால் போதுமா? பத்துப் பொருத்தங்கள் மட்டும் பார்ப்பது சரியில்லை. மேலும் சில அம்சங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆண் பெண் இருவரது ஜாதகங்களிலும் உள்ள முக்கியமான அம்சங்களையும் தனித்தனியே ஆய்வு செய்து, அதன்பிறகே பொருத்தம் பார்க்க வேண்டும். தனித்தனியே அந்த ஜாதகங்கள் பலம் வாய்ந்த ஜாதகங்களாக இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். அதற்கு அடுத்ததாக, அந்த ஜாதகர்களின் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்க இருக்கும் தசா புக்திகளைப் பார்க்க வேண்டும்.

இரண்டு பேருடைய ஜாதகங்களுக்கும் ஒரே மாதிரியான ஆயுள் பாவம் இருக்க வேண்டும். ஒருவருக்குக் குறைந்த கால வாழ்க்கையும் மற்றொருவருடைய  ஜாதகத்தில் நீண்ட ஆயுள் பாவமும் இருந்தால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது.

இல்லறம் சிறப்பாக இருக்கவேண்டுமானால், தாம்பத்ய உறவு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். அதற்கு இருவருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.

செவ்வாய் தோஷம் இருக்கிறதா, இல்லையா... இருந்தால் தோஷம் நிவர்த்தியாகி இருக்கிறதா என்ற கோணத்தில் இருவருடைய ஜாதகத்தையும் பரிசீலிக்கவேண்டும்.

நாகதோஷம் இருக்கிறதா என்பது பற்றியும்  பார்க்க வேண்டும். ஒருவேளை நாகதோஷம் இருந்து, அந்த தோஷம் பாதிக்காதபடி ஏதேனும் விதிவிலக்கான கிரக அமைப்புகள் இருக்கின்றதா என்றும் பார்க்க வேண்டும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது அடுத்த அடுத்த ராசிகளில் உள்ளவர்களுக்கு மணமுடிக்கக் கூடாது. ஏனென்றால், ஏழரைச்சனி, கண்டகச்சனி, அஷ்டமச்சனி ஆகிய காலகட்டங்களில் இருவருமே மிகவும் சிரமப்படுவார்கள். ஒருவருக்கொருவர் சண்டைச் சச்சரவு மற்றும் மனமாச்சர்யங்கள் ஏற்படும்.

குறிப்பாக, ஜாதகக்கட்டத்தில், 2, 5, 7, 8, 9 ஆகிய ஐந்து இடங்களையும் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும். 2-ம் இடம் தனம், குடும்பம், வாக்குஸ்தானத்துக்கு உரியதாகவும், 5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானமாகி வம்ச விருத்திக்கும் 7-ம் இடம் கணவன் மனைவி அந்நியோன்யத்துக்கும், 8-ம் இடம் ஆயுள் பாவத்துக்கும், 9-ம் இடம் சுகங்களை அனுபவிப்பதற்கும் காரகத்துவம் பெறுவதால், அவற்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

ஆண் பெண் இருவரின் ஜாதகங்களிலும் குரு வலுப்பெற்று இருப்பதுடன் சுக்கிரன், செவ்வாய் ஆகியோரும் நல்ல நிலையில் அமைந்திருக்க வேண்டும்.

7-ம் இடத்தின் மீது அல்லது 7-ம் இடத்து அதிபதி மீது குருவின் பார்வை இருப்பது ஒரு சந்தோஷமான, நிரந்தரமான திருமண வாழ்க்கைக்கு உறுதி அளிக்கும். சனியும் செவ்வாயும் லக்னாதிபதிகளாக அல்லது யோகக்காரகர்களாக இருப்பதும் திருமண வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தரும்.

அடுத்த கட்டுரைக்கு