தற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.

எம் கிஸான் இந்தியா (m Kisan India)
இது மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் செயலி. அதனால், இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்கள் குறித்த தகவல்களையும் இச்செயலியின் மூலம் அறிந்துகொள்ள முடியும். தகவல்கள், மாவட்ட வாரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகளுக்குத் தேவையான பல தகவல்கள் உள்ளன. ‘Agriculture & Horticulture Corner’ என்ற பகுதியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆகியவை பற்றிய தகவல்கள் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விதைகள் குறித்த தகவல்கள் மற்றும் விதை விற்பனையாளர்களின் முகவரிகள் குறித்தும் இச்செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவசாய இயந்திரங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விற்பனையாளர்கள் குறித்த தகவல்களும் உள்ளன. விளைபொருள்களுக்கான அடிப்படை ஆதார விலை, சந்தை விலை, சேமிப்புக் கிடங்குகள் ஆகியவை குறித்த தகவல்களும் உள்ளன.
‘Animal Husbandry Corner’ என்ற பகுதியில் கால்நடைகள் தொடர்பான தகவல்கள் உள்ளன. கால்நடை மருத்துவமனைகளின் இருப்பிடங்கள், கால்நடைகளைத் தாக்கும் நோய்களுக்கான அறிகுறிகள் போன்ற தகவல்கள் உள்ளன.
இச்செயலியை http://bit.ly/2IJT30y என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.


கரும்பு வல்லுநர் அமைப்பு (Sugarcane Expert System)
கரும்பு விவசாயிகளுக்கு இச்செயலி பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆலோசகர், பயிர் மருத்துவர் மற்றும் தகவலகம் என்ற பகுதிகள் உள்ளன. தாவர அமைப்பு என்ற பகுதியில் கரும்பைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள், பயிரிடுவதற்கு ஏற்ற வானிலை, பருவத்துக்கேற்ற ரகங்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
நாற்றங்கால் மேலாண்மை, பாசன மேலாண்மை, ஊட்டச்சத்து மேலாண்மை, கருவிகள், அறுவடைப்பின்சார் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்தும் தகவல்கள் உள்ளன. கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்களின் தொடர்பு முகவரிகளும் தரப்பட்டுள்ளன. அவ்வப்போது எழும் பொதுவான சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் கேள்வி-பதில் பகுதியில் உள்ளன.
இச்செயலியை http://bit.ly/2z3SPle என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.


நார்ப்பயிர்கள் (தமிழ்) (Fibre Crops Tamil)
நார்ப்பயிர்கள் என்று பொதுவாகக் குறிப்பிட்டிருந்தாலும், இச்செயலியில் தற்போது பருத்தியைப் பற்றிய தகவல்கள் மட்டுமே உள்ளன. இதை இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்தலாம். வீரிய ஒட்டு ரகப் பருத்தியை விதை உற்பத்தி, விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத்தேர்வு, விதைப்பு, அறுவடை, விதைச் சேமிப்பு போன்ற தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. சில பருத்தி ரகங்களின் குணாதிசயங்களும் இதில் கொடுக்கப் பட்டுள்ளன.

இச்செயலியை http://bit.ly/2tVIQIL என்ற முகவரியிலும், கூகுள் பிளே ஸ்டோர் மூலமும் தரவிறக்கம் செய்யலாம்.