Published:Updated:

எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்!

எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்!

நேற்று இல்லாத மாற்றம்கி.ச.திலீபன், படங்கள் : ப.பிரியங்கா

எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்!

நேற்று இல்லாத மாற்றம்கி.ச.திலீபன், படங்கள் : ப.பிரியங்கா

Published:Updated:
எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்!
பிரீமியம் ஸ்டோரி
எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்!

குழந்தைகளின் உலகம் எல்லையற்று விரிந்திருக்கும். வரையறைகளற்ற கற்பனைகளுடனும் குறும்புத்தனத்துடனும் அவ்வெளியில் அவர்கள் பயணப்படுவார்கள். நமது அனுபவங்களையும் அறிவுஜீவித்தனத்தையும் அவர்களுக்குப் புகட்ட முற்படும்போதுதான் நாம் தோல்வியைச் சந்திக்கிறோம். குழந்தைகளுக்கு எதையும் கற்பிக்க முயற்சி செய்யக் கூடாது. சக பயணியாக அவர்களின் போக்கில் பயணப்பட்டால்தான் நாம் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது வெரோனிகா ஏஞ்சலிடம் பேசும்போது புரிகிறது.

முதுகலை சமூகப்பணி படித்திருக்கும் வெரோனிகா, குழந்தைகளுக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கிறார். `வில்லுப்பாட்டு’ என்ற பாரம்பர்யக் கலை வடிவத்தின் மூலம் சமூகப் பிரச்னைகளுக்கான பாடல்களை இயற்றி, குழந்தைகளைப் பாடவைக்கிறார். சூழலியல் சார்ந்து இயங்குவதோடு. திரைத் துறையிலும் பணியாற்றிவருகிறார்.

எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்!

``பிறந்த ஊர் சென்னை என்றாலும் பள்ளிப் படிப்பெல்லாம் ராஜபாளையத்தில்தான். பள்ளிக் காலத்திலிருந்தே நான் டேபிள் டென்னிஸ் பிளேயர். விளையாடுறதுக்காகவே சென்னைக்கு வந்தேன். பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் படிச்சேன். அந்த மூணு வருஷத்துல எனக்குக் கிடைச்ச அனுபவம், சமூகம் பற்றிய பார்வையைத் தொடர்ந்து சமூகப்பணி செய்யணும்கிற உள்ளுணர்வு ஏற்பட்டது. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில் முதுகலை சமூகப்பணியில் சேர்ந்தேன்.

இன்டர்ன்ஷிப் பண்றதுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்குப் (NGO) போக எனக்குப் பிடிக்கலை. ஏன்னா, அங்கே எல்லாமே புராஜெக்டாவே பார்க்கப்படும். அதனால், மாற்றுச் சிந்தனை உடையவர்களோடு இணைஞ்சு செயல்பட விரும்பினேன். கூடங்குளத்தில் சுப.உதயகுமாருடன் சேர்ந்து அந்தப் போராட்டத்துக்குத் தேவையான மொழிபெயர்ப்புகளைச் செஞ்சுகொடுத்தேன். குழந்தைகள் மத்தியில் வேலை செய்ற `குக்கூ’ அமைப்புடன் சில வேலைகள் செஞ்சேன். எப்படியான சமூகத்தை உருவாக்க நாம விரும்புறமோ, அதை குழந்தைகள்கிட்ட இருந்துதான் எடுத்துட்டு வரணும். குழந்தைகளுக்காக வேலை செய்யணும்னு தீர்மானிச்சது அங்கேதான்.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சம்பாவனா என்கிற மாற்றுச் சிந்தனை பயிற்சி மையத்துக்குப் போனேன். அங்கே பயிற்சி எடுத்துக்கிட்டது போக, மற்ற நேரங்கள்ல அந்த ஊரில் இருந்தவர்களுடைய மாடுகளை மேய்ச்சேன். `ஸ்கொயர் ஃபுட் கார்டன்' முறையில் காய்கறிகளை விளைவிச்சேன். சின்ன இடத்துல அதிக அளவிலான காய்கறிகளை விளைவிக்கிறதுதான் அந்த முறை. ஹிமாச்சலில் பரவலாக இந்த முறையில்தான் விவசாயம் பண்ணிக்கிட்டிருந்தாங்க. அந்த ரெண்டு மாத காலம் இயற்கையைப் புரிஞ்சுக்க உதவியா இருந்தது” என்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்!

`வில்லுப்பாட்டை ஒரு போராட்ட வடிவமாகக் கையிலெடுக்கத் தூண்டுதலாக இருந்தது எது?'

``பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் படிச்சுக்கிட்டிருந்தப்ப, பிளாஸ்டிக் விழிப்புஉணர்வுப் பிரசாரத்தை வில்லுப்பாட்டு வடிவில் பாடணும்னு சொன்னாங்க. அங்கே படிக்கிற நிறைய பேருக்கு தமிழ் சரளமா வராது. எனக்கு எழுத்தார்வம் இயல்பிலேயே இருந்ததால, `நான் அதைப் பண்றேன்’னு பொறுப்பெடுத்துக்கிட்டேன்.

செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன், ஊரூர் ஆல்காட் குப்பத்தை அறிமுகப்படுத்தினார். அந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வில்லுப்பாட்டு பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்குப் போகாத குழந்தைகள்கிட்ட அதிக கவனம் எடுத்துக்கிட்டேன். நானும் அவங்கள்ல ஒருத்தியா கலந்துக்குவேன். `பள்ளிக்கூடத்துக்குப் போ’னு நான் யாரையும் சொல்ல மாட்டேன். அப்படிச் சொன்னா, அவங்க எங்கிட்ட பேசவே மாட்டாங்க. அவங்களுக்கான நேரத்தையும் வெளியையும் கொடுக்கணும். அப்ப, அவங்களாகவே அவங்க பிரச்னையைப் பற்றி நம்மகிட்ட பேசுவாங்க. வில்லுப்பாட்டு பயிற்சின்னாலும் ஒரு பயிற்சியாளரா நான் அவங்களை அணுக மாட்டேன். ஒரு மணி நேரம் வகுப்புனா ஐம்பது நிமிஷம் அவங்க இஷ்டத்துக்கு விளையாடிட்டு இருப்பாங்க. மிச்சம் இருக்கிற பத்து நிமிஷத்தை அவங்ககிட்ட இருந்து போராடி வாங்கி, சொல்லிக்கொடுப்பேன்.

பண மதிப்பிழப்பு நடத்தப்பட்ட நேரத்துல, பிரதமர் மோடியைப் பகடிசெய்து வில்லுப்பாட்டு எழுதி, அவர்களைப் பாடவெச்சேன். அரசியல் நையாண்டி எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இதன் மூலமா குழந்தைகள் மத்தியிலும் அரசியல் புரிதலை ஏற்படுத்த முடியும்னு நம்புறேன்.  சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்துக்கும் கேடு விளைவிக்கக்கூடிய பெரிய நிறுவனங்களை எதிர்த்து ஒரு பாட்டு எழுதினா, அதன் மூலமா அவங்க அந்த நிறுவனங்கள் செய்ற நாச வேலைகள் பற்றித் தெரிஞ்சுக்குறாங்க. நெய்தல் நில மக்களின் வாழ்க்கை, முன்பு எப்படியிருந்தது? இப்போது எப்படியிருக்கிறது? எதனால் இப்படி யானது என்பதைக்கூட வில்லுப்பாட்டின் வழியே சொல்கிறோம். இந்த வடிவம் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு” என்கிறவரிடம், அந்தக் குழந்தை களிடமிருந்து கற்றுக்கொண்டது குறித்துக் கேட்டோம்.

``ஆறு ஆண்டுகளா இந்தக் குழந்தைகளோடு வேலை செஞ்சுக்கிட்டிருக்கேன். எந்தத் தவற்றையும் மன்னிச்சுடணும்கிறதை அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன். எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன். குழந்தைகளுக்குக் கத்துக்கொடுக்கக் கூடாது. எப்படியான வாழ்க்கையை அவங்க வாழணும்னு நினைக்கிறோமோ, அதன்படி நாம வாழ்ந்தாலே போதும்கிறதை உணர்ந்துகிட்டேன். குழந்தைகள்கிட்ட நாமளே பேசிக்கிட்டிருக்கக் கூடாது. அவங்களையும் பேசவிடணும். அப்பதான் அவங்க பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையா சொல்வாங்க. இந்த மாதிரி அனுபவத்தின் வழியா குழந்தைகளைக் கொஞ்சம் புரிஞ்சுக்க முடிஞ்சதுல எனக்கு மகிழ்ச்சி” என்கிறார்.

குருசோமசுந்தரம் நடிக்கவிருக்கும் திரைப்படத் துக்கான திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார் வெரோனிகா. கலை வழியிலான சமூகச் செயல் பாட்டையே தொடர்ந்து மேற்கொள்ள விரும்புகிறார்.

``ஞாநியின் `பரிக் ஷா நாடகக் குழு’வில் இணைஞ்சு நாடகம் கத்துக்கிட்டேன். நாடகம், வில்லுப் பாட்டு மாதிரியான கலைகள் மூலமா அரசியல் பகடி செய்றது எனக்குப் பிடிச்சிருக்கு. கலையும் சரி, பகடியும் சரி ரெண்டும் பெரிய போராட்ட வடிவங்கள்தான்” என்கிறார் வெரோனிகா ஏஞ்சல்.