Published:Updated:

நேரடி மூலிகைக் கொள்முதல், ₹ 10 விலை... தஞ்சையைக் கலக்கும் மூலிகை சூப் ஸ்டால்!

விகடன் விமர்சனக்குழு
நேரடி மூலிகைக் கொள்முதல், ₹ 10 விலை... தஞ்சையைக் கலக்கும் மூலிகை சூப் ஸ்டால்!
நேரடி மூலிகைக் கொள்முதல், ₹ 10 விலை... தஞ்சையைக் கலக்கும் மூலிகை சூப் ஸ்டால்!

சாலையோரம் ஆங்காங்கே முளைத்துநிற்கும் பாணிபூரி கடைகளைப் போலவே, தற்போது சூப் கடைகளும் முளைக்கத்தொடங்கியிருக்கின்றன. மக்கள் அதிகப்படியாக அளிக்கும் ஆதரவே இதற்குக் காரணம்.

பாணிபூரி கடைகளும், பாஸ்புட் கடைகளும் பரபரக்கும் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பஜாரின் நடுவே இயற்கை மூலிகை சார்ந்த சூப் வகைகளை வழங்கிக் கொண்டு வருகிறார், ஜான் நிக்சன். விதவிதமான ஒளிரும் விளக்குகளுடைய கடைகளுக்கு மத்தியில் பல வித்தியாசமான செடிகளை காட்சிக்கு வைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். பெரும்பாலும் நகர மக்கள் பார்த்திராத செடிகள், சுவைத்திடாத புதிய சுவை சூப் எனக் களைகட்டுகிறது இவரின் சிறு அங்காடி. அதைப்பற்றித் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம்.

``சிறு வயதில் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போது எந்த சிகிச்சையும் என் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது ஒரு சித்த மருத்துவர் என்னைப் பரிசோதித்து குணமடைய வைத்தார், என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். அப்பா தமிழ் ஆசிரியர். ஆனால், இயற்கை சார்ந்து அதிக ஆர்வம் கொண்டவர். திருச்சியில் நான் வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளரும் இயற்கை மருத்துவம் சார்ந்து அதிக ஈடுபாடுடையவர். இப்படி ஆரம்பம் முதலே பசுமையும் அவை சேர்ந்த தேடல்களும் எனக்கு நெருக்கமானவையாக அமைந்தன. நிறுவனம் மூடப்பட்டதால் வேலையிழந்து, என்ன செய்யலாம் என்றபொழுதுதான் இந்த யோசனை தோன்றியது. உடனே நாம் விரும்பிய இயற்கை உணவு சார்ந்து ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றவே சூப் கடை வைக்கலாம் என்று முதலில் தோன்றியது. ஆனால் இதற்கு வரவேற்பு இருக்குமா என்று சிறிய தயக்கம் இருந்தது. பொதுவாகக் கடைத்தெருவில் டீக்கடை, பாணிபூரி போன்ற கடைகள்தான் அதிகம் செயல்படும். ஆனால், முதல் யோசனையை முழு லட்சியமாகக் கொண்டு துணிந்து பலவகை இயற்கை மூலிகைகள் உள்ள சூப் கடை அமைத்தேன். இன்று பலர் இதை வரவேற்கும்போது மன மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆவாரம்பூ, தூதுவளை, பிரண்டை, அறுகம்புல், முடக்கத்தான், வெந்தயக் கீரை, கொள்ளு, வாழைத்தண்டு என பத்துக்கும் மேற்பட்ட மூலிகை வகைகள் கொண்ட சூப் இங்கே வழங்கப்படுகிறது. மேலும், உளுந்தங்கஞ்சி, நாட்டுச் சர்க்கரை கலந்த சுக்கு காபி என மருத்துவக் குணம் உடையப் பொருள்களையும் பயன்படுத்தி உணவுப் பொருள்கள் தயாரித்து வருகிறேன். ஆனால், சூப்புக்குத்தான் இங்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் கூடுகின்றனர். ஒரு நாளைக்குக் குறைந்தது, நான்கு வகை சூப் வீதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையாக சூப்களை தயாரிக்கிறேன். ஒரு வகையை மட்டுமே எல்லா நாளும் கொடுத்தால் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள். சராசரி சில்வர் டம்ளரில் ஒரு சூப் 10 ரூபாய்க்குக் கொடுக்கிறேன்.

மூலிகைச் செடிகள் எதுவும் கடைகளிருந்து வாங்குவதில்லை. அனைத்தும் நேரடியாக விளையும் விவசாயிகளிடம் சென்று வாங்குகிறேன். சுற்றுவட்டார கிராமங்களில் அவரவர் இடத்தில் விளைவதை பெரும்பாலும் வாங்கிவிடுகிறேன். சில சமயம் கிடைக்காத பட்சத்தில் நண்பர்கள் மூலம் திருச்சி போன்ற இடங்களில் பெறுகிறேன். தினமும் காலை நேரங்களில் செடிகளை சேகரிப்பதற்கே நேரங்களைச் செலவிடுகிறேன். மாலை 5 மணி முதல் இரவு 10 வரை கடையில் சூப் வழங்குகிறேன்' என்று செடிகள் பெறுவதற்கான மெனக்கெடலைப் பற்றிச் சொல்லியவர், மேலும் தொடர்ந்தார்.

நான் ஊறுகாய் போன்ற பொருள்களும் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். அதில் கவர்ந்த ஒரு வாடிக்கையாளர்தான் அவரின் கடை ஓரமாக நீங்கள் பயன்படுத்தி்க்கொள்ளுங்கள் என்று இந்தக் கடையை வழங்கினார். ஆரம்பத்திலிருந்தே வாடிக்கையாளர்கள் தொடர்ந்து விரும்பி வருகிறார்கள். பலர் தினமும் வருபவர்களாக உள்ளனர். பலர் சளி, இருமல், தலைவலி என்று சொல்லி அதற்கு மூலிகை சூப் கொடுங்கள் என நம்பிக்கையாகக் கேட்கிறார்கள். அது அவர்களுக்கு நன்றாக இருப்பதால் மீண்டும் மீண்டும் வரக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இப்படிப் பலரின் தொடர் ஆதரவின் மூலம் இயற்கை சார்ந்து பல புதிய உணவுகளை வழங்க ஊக்கம் கிடைக்கிறது' என்கிறார், ஜான் நிக்சன்.

ஜான் நிக்சன் தொடர்ந்து இயற்கை உணவுகள் சார்ந்த தேடல்களிலும் ஈடுபட்டுவருகிறார். 1000-க்கும் மேற்பட்ட இயற்கை சார்ந்த புத்தகங்களைச் சேகரித்தும், இயற்கை சார்ந்த இதழ்களின் தொடர் வாசிப்பிலும், பல கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு வருகிறார். சூப்பைத் தொடர்ந்து மருத்துவக் குணம் தொடர்பாக இயற்கை உணவுகள் வழங்கும் உணவகம் தொடங்கும் லட்சியத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார். வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு