Published:Updated:

விபத்துக்குப் பிறகு முதல் பயணம்... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சோயுஸ் ராக்கெட்

விபத்துக்குப் பிறகு முதல் பயணம்... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சோயுஸ் ராக்கெட்
விபத்துக்குப் பிறகு முதல் பயணம்... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த சோயுஸ் ராக்கெட்

கடந்த மாதம் நடைபெற்ற விபத்துக்குப் பிறகு தனது முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியிருக்கிறது ரஷ்யா. இந்திய நேரப்படி நேற்று இரவு 11:44 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவு தளத்திலிருந்து Soyuz-FG திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது. கடந்த மாதம் 11-ம் தேதி இரண்டு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற சோயுஸ் ராக்கெட்டில் விபத்து ஏற்பட்டது. ஏவப்பட்டு சில நிமிடங்கள் கழித்து ராக்கெட்டின் பூஸ்டர்களில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த மொத்தம் நான்கு பூஸ்டர்களில் ஒன்று பிரியாமல் போனதுதான் விபத்துக்குக் காரணமாக இருந்தது.

உடனடியாக அதில் பயணித்த இரண்டு விண்வெளி வீரர்களும் அவசரக் கால கேப்ஸ்யூல் மூலமாகப் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். சோவியத் யூனியனின் பிரிவுக்குப் பின்னால் இது போல ஒரு சம்பவம் நடப்பது முதல் முறையாகக் கருதப்பட்டது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சோயுஸ் ராக்கெட் ஏவும் திட்டங்களை தற்காலிகமாக ரஷ்யா நிறுத்தி வைத்தது. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து Soyuz-FG விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. மூன்று டன் எடை கொண்ட இந்த விண்கலம் எரிபொருள், ஆக்சிஜன், நீர் மற்றும் அறிவியல் சாதனங்கள் ஆகியவற்றை ராக்கெட்டில் உள்ள விண்கலம் எடுத்துச் சென்றுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடையும்.