Published:Updated:

லட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா

லட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா
பிரீமியம் ஸ்டோரி
லட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா

அவளும் நானும்... நானும் அவளும்ஆர்.வைதேகி

லட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா

அவளும் நானும்... நானும் அவளும்ஆர்.வைதேகி

Published:Updated:
லட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா
பிரீமியம் ஸ்டோரி
லட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா

சையால் இதயங்களை வசப்படுத்தும் கலைஞர் ராஜேஷ் வைத்யா. மேல்தட்டு மக்களால் மட்டுமே ரசிக்க முடிந்த வீணை இசையை, சாமான்யருக்கும் கொண்டு சேர்த்தவர். பெண்மையை மதிப்பவர், போற்றுபவர் என்பதை, பேட்டியின் இறுதியில் புரிந்துகொள்ளலாம்.

காரணம், அவரின் அவள்!


அவள் யார் என்பது பற்றிய ராஜேஷ் வைத்யாவின் பகிர்தலின் பின்னணியில், வீணை இசையில் ஒலிக்கிறது `நினைவோ ஒரு பறவை...’


``பெண்ணின்றி அமையாது உலகு என்பதில், எனக்குத் தீவிரமான நம்பிக்கை உண்டு. ஓர் ஆண், தன் எல்லா உணர்வுகளையும் தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது. சில உணர்வுகளைப் பெண்ணிடம் மட்டுமே பகிர முடியும். அது சிலருக்கு அம்மாவாக இருக்கலாம், சிலருக்கு மகள்... மனைவி.

மனைவி, மகளைத் தாண்டி என் வாழ்க்கையில் ஒரு பெண் இருக்கிறாள். என்னுடைய ஆறாவது வயதிலேயே அவள் எனக்கு அறிமுகமானவள். அப்போது முதல் அவள் என்னுடன்தான் இருக்கிறாள். பள்ளி முடிந்து வந்த பிறகுதான் நான் அவளைப் பார்க்க முடியும். பிறகு, ஒரே பள்ளியில் அவளுடன் அருகருகே இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி 11 வருடங்கள் ஒன்றாக இருந்தோம். அடுத்த ஆறு மாதங்கள், அந்த நெருக்கத்தில் ஓர் இடைவெளி விழுந்தது.

அப்போது நான் புதுச்சேரியில் இருந்தேன். அப்பாவின் வேலை காரணமாக நாங்கள் டெல்லி போகவேண்டிய நிர்பந்தம். அவளைவிட்டுப் பிரிய மனமின்றி, நான் டெல்லி செல்ல மறுத்து புதுச்சேரியிலேயே இருந்துவிட்டேன். அதன்பிறகு பிரியவே இல்லை. நான் எங்கே போனாலும் என்னுடன் இருப்பாள். சதாசர்வகாலமும் நான் அவள் நினைப்பிலேயே இருந்தது என் அம்மா அப்பாவுக்கும் தெரியும். அதைப் புரிந்துகொண்டார்கள், தவறாக நினைக்கவில்லை.

லட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா

இன்னொரு சந்தர்ப்பத்தில் நானும் டெல்லிக்குப் போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த முறை அவளும் என்னுடன் வந்தாள்.

அவள் பேசுவது எனக்கு மட்டும்தான் கேட்கும், புரியும். நான்தான் அவளுடன் நிறைய பேசுவேன், திட்டுவேன், சண்டை போடுவேன்.

சில நேரம் அவளை அடித்திருக்கிறேன். நாளுக்கு நாள் எங்களுக்குள்ளான அன்பு தீவிரமானது. டெல்லியிலிருந்து மீண்டும் சென்னை வரவேண்டிய சூழ்நிலை வந்தது. சென்னை வந்ததும் அப்பா தவறினார். எனக்கு ஆதரவு, அம்மாவும் அவளும் மட்டும்தான்.

1996-ம் ஆண்டில் சாருவுடன் காதல் திருமணம். என்னுடன் தொடரும் பால்யகால உறவு பற்றி, திருமணத்துக்கு முன்பே சாருவுக்கும் தெரியும். மனைவியைவிடவும் அவள் எனக்கு நெருக்கமானவள் என்பதையும் சொல்லிவிட்டேன். அந்த நெருக்கம், என் மனைவியைக் கொஞ்சமும் வருத்தப்படவைக்கவில்லை. அதற்காக என்னிடம் கோபப்பட்டதில்லை; சண்டை போட்டதில்லை. எங்களைப் புரிந்துகொண்டார். இன்றுவரை என்னவள் என்னுடனேயே இருக்கிறாள்... என்றென்றும் இருப்பாள்.

நான் என் மனைவியுடனும் மகளுடனும் இருப்பதைவிட அதிக நேரம் என்னவளுடன்தான் இருக்கிறேன். உள்ளூரில் இருந்தால் எங்களுடன் என் மனைவியும் மகளும்கூடச் சேர்ந்துகொள்வார்கள். அரிதான சில வெளிநாட்டுப் பயணங்களிலும் இப்படி நடப்பதுண்டு.

குழந்தையின் நிஜப்பெயரைச் சொல்லி எந்தத் தாயும் எந்த வீட்டிலும் கூப்பிட மாட்டார்கள். அப்படித்தான் அவளும் எனக்கு ஒரு குழந்தை மாதிரி. அவளுக்கென நான் தனியே எந்தப் பெயரும் வைக்கவில்லை. சில நேரம் `லட்டு’, பல நேரம் `செல்லம்’, `தங்கம்’... இப்படி எல்லாமுமாக இருந்திருக்கிறாள். ரொம்ப சமர்த்துக் குழந்தை. ஆனாலும், எப்போதாவது படுத்துவாள். அதற்காக என்னிடம் அடிவாங்குவாள்.  `என்னையா அடிக்கிறே...’ என்கிற அவளது கோபத்தையும் காட்டுவாள். அந்த அடிதடியும் அரவணைப்பும் நாங்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியங்கள்.

அந்த அவள், என்னுடைய வீணை!

`வீணை எப்படி அவளானாள்... ஏன் அவனாக இருக்கக் கூடாதா?’ என்கிற கேள்வி வரலாம்.

சிவன், பார்வதியை வீணையாகப் பார்த்தார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா! அப்படித்தான் என் வீணை எனக்குப் பெண்ணுருவாகத் தெரிகிறாள். நிறைய நடன நிகழ்ச்சிகளில் வேலைபார்த்திருக்கிறேன். நடனக் கலைஞர்கள் எனக்குக் கதையை விவரிக்கும்போது `சிவன், பார்வதியை வீணையாகப் பார்த்தார்’ எனச் சொன்ன கதைகளையும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன்.

என் அப்பாவும் என் குரு சிட்டிபாபு சாரும் தேர்ந்தெடுத்துக் கொடுத்த வீணை என்பதால், அவள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்; சென்டிமென்ட்டானவள். எனக்கென ஓர் அடையாளத்தைத் தந்தவள் அவள்தான். அவளின்றி நானில்லை. அவள் என்னிடம் வந்து சேர்ந்த பிறகுதான், நான் மக்களுக்கு அறிமுகமானேன்; என் உலகம் அழகானது. நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டிருக்கிறது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்டு... செல்லம்... தங்கம் - ராஜேஷ் வைத்யா

நானும் அவளும்

முழுமையானவள்... முதன்மையானவள்!


``ஒருகாலத்தில் நான் தீவிர வாசிப்பாளர். `அவள்’ விகடன் என்னுடைய விருப்பமான பத்திரிகை. ஒரு பக்கத்தைக்கூட விட்டுவிடாமல் வாசித் திருக்கிறேன். கச்சேரியில் பிஸியானதால் வாசிப்பில் இடைவெளி விழுந்துவிட்டது. சீக்கிரமே வாசிப்புக்குத் திரும்ப வேண்டும் என முடிவுசெய்திருக்கிறேன். நான் படித்ததைவைத்தும் கேள்விப்பட்டதைவைத்தும் சொல்கிறேன், `அவள்’ விகடனில், பெண்களுக்குத் தேவையான எல்லா அத்தியா வசியத் தகவல்களும் இருக்கின்றன. அழகு முதல் ஷாப்பிங் வரை. அந்த வகையில், `அவள்’ முழுமையானவள்... முதன்மையானவள்!’’