Published:Updated:

கோயில்கள் தொடர்பான கோரிக்கைகளைத் தீர்க்க புதிய செயலி! - அறநிலையத்துறை

கோயில்கள் தொடர்பான கோரிக்கைகளைத் தீர்க்க புதிய செயலி! - அறநிலையத்துறை
கோயில்கள் தொடர்பான கோரிக்கைகளைத் தீர்க்க புதிய செயலி! - அறநிலையத்துறை

மிழக கோயில்கள் குறித்துப் பெறப்படும் இணையதள மனுக்களைக் கண்காணிக்க புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயில்கள் மற்றும் அவற்றின் நிலங்களுக்கான புவிசார் தகவல் அமைப்பு அறநிலையத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக வரும் கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் அலுவலகம், துணை முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் ஆணையர் அலுவலகம் மூலம் பெறப்படும் மனுக்களை இணையதளம் மூலம் பதிவுசெய்து கண்காணிப்பதற்கானப் பயன்பாட்டுச் செயலியை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியிருக்கிறது. 

தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. கோயில்கள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் தலைமையிடத்துக்குப் பெறப்பட்டுத் தீர்வுகள் காணப்படுகின்றன. மேலும் பொதுமக்களும் கோயில்கள் தொடர்பான தகவல் மற்றும் கோரிக்கை மனுக்களை அளித்தும் வருகின்றனர். இதைக் கண்காணிப்பதற்கும் அவற்றின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் மின்னணு மூலமாகக் கண்காணிக்கும் தனிப்பட்ட வசதி அறநிலையத்துறையில் இதுவரை இல்லாமல் இருந்தது. தற்போது மின்னணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் தேசிய தகவலியல் மையம் மூலம் வலைதளப் பயன்பாட்டுச் செயலி, (http://gdp.tn.gov.in/hrce) உருவாக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாகப் பெறப்படும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், துரிதப்படுத்தி தீர்வு காணவும் ஏதுவாக அனைத்துக் கோரிக்கை மனுக்களும் இந்த வலைதளப் பயன்பாட்டின் மூலம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்படும். இம்முறையில் பெறப்படும் மனுக்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் உடனடியாக ஒப்புகையும் வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் நிலையை அவ்வப்போது இணையதளத்தில் தெரிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் மீதான தீர்வை மனுதாரருக்குக் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இப்புதிய இணையதளத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் விரைவாகவும் உரிய முறையிலும் தீர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்படும்'' என்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அனைத்துத் திருக்கோயில்கள், குறிப்பாக 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயில்களின் அளவிடங்களை புவிசார் தகவல் குறியீடு மூலம் துல்லியமாக அறியும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 44 ஆயிரம் திருக்கோயில்களின் அமைவிடங்களும், இருப்பிடங்களும் இந்த மென்பொருள் மூலமாக வரைபடத்துடன் இணையதளத்தில் கண்டறிய ஏதுவாக இது அமையும்.

மேலும், கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளின் அமைவிடங்கள் பற்றிய அளவீடுகள், வகைப்பாடுகள் மற்றும் பயன்பாட்டுடன் துல்லியமாகக் கண்டறியும் வகையில் இதற்கான பட்டியல் தயார் செய்து, தொழில்நுட்பத்தின் மூலமும் பூகோள அமைவிடக் குறியீடு மூலமும் தகவல் எடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் தேசிய தகவலியல் மையம் மூலம் புவியியல் தகவமைப்பு மென்பொருள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. 

திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 'தமிழ் நிலம்' என்ற மென்பொருளை உபயோகித்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்டமாகச் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்துத் திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் திருக்கோயில்களின் சொத்துகள் விவரத்தையும் பதிவேற்றம் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (16.11.2018) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத் தலைமையிடத்தில் இந்த இணையதள வசதி பயன்பாட்டை மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தமிழக அறநிலையத்துறைமீது தொடர்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, முதற்கட்ட நடவடிக்கையாக இவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.