Published:Updated:

“நான் மக்களில் ஒருத்தி!” - நிரஞ்ஜனா

“நான் மக்களில் ஒருத்தி!” - நிரஞ்ஜனா
பிரீமியம் ஸ்டோரி
“நான் மக்களில் ஒருத்தி!” - நிரஞ்ஜனா

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா, படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

“நான் மக்களில் ஒருத்தி!” - நிரஞ்ஜனா

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா, படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
“நான் மக்களில் ஒருத்தி!” - நிரஞ்ஜனா
பிரீமியம் ஸ்டோரி
“நான் மக்களில் ஒருத்தி!” - நிரஞ்ஜனா

வென்ட்ரிலாக்விஸ்ட் நிரஞ்ஜனா மேடை ஏறினால் பார்வையாளர்களின் கவனம், கணம்கூடப் பிசகாது. `இசை எங்கிருந்து வருகிறது’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, வசனங்கள் எங்கிருந்து வருகின்றன என்று தேடித் தோற்றுப்போவார்கள் பார்வையாளர்கள்!

நிரஞ்ஜனாவின் கைகளில் உள்ள பொம்மைகள் தான் பேசுகின்றன எனக் குழந்தைகளும், அது நிரஞ்ஜனாவின் குரல்தான் எனத் தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் பெரியவர்களும் அரங்கை விட்டு வெளியேறுவார்கள்.

வென்ட்ரிலாக்விஸம்... ரொம்பவே பழைய கலைதான். ஆனாலும், நம்மூரில் அதிகம் பிரபலமாகாத கலை.

கையில் பொம்மைகளை மாட்டிக்கொண்டு, உதடுகள் அசைவது தெரியாமல் அந்த பொம்மையே பேசுவதுபோல நம்பவைக்கிற மாய வித்தைதான் ‘வென்ட்ரிலாக்விஸம்’.

உலகம் முழுவதும் பிரபலமான இந்தக் கலையில், திரும்பின திசைகளில் எல்லாம் ஆண் முகங்களே தெரிகின்றன. அரிதான பெண் முகங்களில் தமிழகத்துக்குப் பெருமை சேர்ப்பவர் நிரஞ்ஜனா. பிரபல வென்ட்ரிலாக்விஸ்ட் வெங்கி மங்கியின் மகள்.

“நான் மக்களில் ஒருத்தி!” - நிரஞ்ஜனா

‘`வென்ட்ரிலாக்விஸம் என்பது லத்தீன் வார்த்தை. ‘வென்ட்டெர்’னா வயிறுனு அர்த்தம். ‘லாக்கி’ன்னா பேச்சு. வயிற்றிலிருந்து ஒலி எழுப்பிப் பேசுறதுனு வெச்சுக்கலாம்...’’ -  அறிமுக வரிகளையே அடிவயிற்றிலிருந்து பேசி அசத்தலாக ஆரம்பிக்கிறார் நிரஞ்ஜனா.

‘`இது, கடவுள் எனக்குக் கொடுத்த கலை. அதை வெறுமனே பொழுதுபோக்கவும், காசு பார்க்கவும் மட்டும் பயன்படுத்திக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. அதனாலதான் ஒவ்வொரு ஷோவிலும் ஏதாவது ஒரு மெசேஜ் சொல்ற மாதிரி பிளான் பண்ணிக்கிறேன். குழந்தைகள்தான் என் நிகழ்ச்சிக்கான பெரும்பான்மை பார்வையாளர்கள் என்பதால், எனக்கு ஒரு பொறுப்பு உணர்வு இருக்கணும்னு நினைக்கிறேன். குட் டச் பேட் டச், படிப்பின் அவசியம், போக்குவரத்து விதிகள்னு குழந்தைகளுக்கு அவசியம் சொல்லித் தர வேண்டிய விஷயங்களை வென்ட்ரிலாக்விஸம் மூலமா சொல்லும்போது சீக்கிரம் புரிஞ்சுக்கிறாங்க. குழந்தைகளுக்கு யூஸ் பண்ற அதே டெக்னிக்கைப் பெரியவங்க பார்வையாளர்களா இருக்கிற ஷோக்களில் செய்ய முடியாது. அங்கே வேறுவிதமான திறமைகள் தேவைப்படும். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் நையாண்டி, கொஞ்சம் அரசியல்னு அதுக்கு வேற மாதிரியான பிளானிங் வேணும். என்னுடைய ஸ்கிரிப்ட் ரைட்டர் எங்கம்மாதான்...’’ - பெரிய மனுஷியாகப் பேசுகிற நிரஞ்ஜனா, பொம்மை வைத்து விளையாடும் வயதிலேயே இந்தத் துறைக்கு வந்தவர்.

 ‘`அப்பா வெங்கி மங்கி, பிரபல வென்ட்ரிலாக்விஸ்ட். அப்பா ஷோவுக்கு யூஸ் பண்ணின பொம்மைகளை வெச்சுதான் நான் விளையாடி, வளர்ந்திருக்கேன். அதனால இந்தக் கலை என் ரத்தத்துலயே இருக்கு. அப்பா வென்ட்ரிலாக்விஸம் பண்றதைப் பார்த்துட்டு, நானும் விளையாடும்போது என் பொம்மைகள் பேசற மாதிரியே முயற்சி பண்ணுவேனாம். அப்பாகூட நிறைய ஷோஸ் போயிருக்கேன். என்னுடைய 6-வது வயசுல நானும் ஷோ பண்ண ஆரம்பிச்சிட்டேன்.

அம்மாவோட ஃப்ரெண்டு குழந்தைக்கு பர்த் டே பார்ட்டி. ஏதோ ஒரு தைரியத்துல அந்த பார்ட்டியில நான் வென்ட்ரிலாக்விஸம் பண்ணுவேன்னு அம்மா அவங்களுக்கு வாக்கு கொடுத்துட்டாங்க. அதுதான் எனக்கு முதல் ஷோ. சின்னக் குழந்தையில்லையா... எந்தத் தயக்கமும் பயமும் இல்லாம என் ஃபேவரைட் பொம்மையை வெச்சுக்கிட்டு ஷோ பண்ணிட்டேன். அந்த பார்ட்டிக்கு வந்திருந்த வி.ஐ.பி அத்தனை பேரும் பாராட்டினாங்க. இதோ, போன மாசம்கூட சினிமா பிரபலம் ஒருத்தங்க வீட்டு விசேஷத்துல ஷோ பண்ணினேன்.  அதே பாராட்டுகளும் ஆசீர்வாதமும் இன்னிக்கும் தொடருது...’’ - ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்பவர், ஒரே நேரத்தில் இரண்டு பொம்மைகளை வைத்து நிகழ்ச்சிகள் செய்வதிலும் எக்ஸ்பெர்ட்!

‘` `அவர்கள்’ படத்துல கமல் சார் யூஸ் பண்ணிய புரஃபஷனல் பப்பெட் வெச்சு இப்போ ப்ராக்டீஸ் பண்ணிட்டிருக்கேன். ரெகுலர் பொம்மைகள்ல வாய் மற்றும் கைகளை மட்டும்தான் அசைக்க முடியும். இப்போ நான் பயிற்சி எடுத்திட்டிருக்கிற பொம்மையில கண்களைக்கூட அசைய வைக்கலாம். ஆனா, அதைப் பண்றது கொஞ்சம் கஷ்டம். ஒவ்வொரு ஷோவையும் முன்னதைவிட சுவாரஸ்யமா மாத்தணுமே... புதுசு புதுசா யோசிச்சிட்டே இருப்பேன்.  நடிகர்களை வெச்சு மிமிக்ரி செய்றது ஓல்டு ஸ்டைல்.  நான் கொஞ்சம் புதுமையா பாடகர்களுடைய பாடி லேங்வேஜை வெச்சு காமெடி பண்ண ஆரம்பிச்சிருக்கேன். வென்ட்ரிலாக்விஸம் ஷோ முடிஞ்சதும் இதையும் கொஞ்ச நேரம் பண்றேன்...’’ என்கிற நிரஞ்ஜனா வென்ட்ரிலாக்விஸம் செய்கிற இளம் கலைஞர் என்ற பெருமைக்கும் உரியவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நான் மக்களில் ஒருத்தி!” - நிரஞ்ஜனா

‘`எனக்கு இது பிறவியிலேயே ஒட்டிக்கிட்ட கலை. அதனால கத்துக்கிறதும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்வதும் சுலபமா சாத்தியமாயிடுச்சு. அதீத ஆர்வமிருந்தா மட்டும்தான் இதைக் கத்துக்க முடியும். பார்வையாளருக்கு இந்தக் கலை ரொம்ப ஈஸியானதா தெரியலாம். ஆனா, குரலைக் கட்டுப்படுத்துற டெக்னிக் இதுக்கு ரொம்ப முக்கியம். குரலுக்கான தொடர் பயிற்சிகள் அவசியம். சுவாசத்தைக் கட்டுப்படுத்துற பயிற்சியும் முக்கியம். இது எல்லாத்தையும்விட முக்கியம் ஸ்கிரிப்ட். உலக நடப்புகளை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும். மேடைக்கும் பார்வையாளர்களுக்கும் ஏற்ற வகையில ஆன் தி ஸ்பாட் ஸ்கிரிப்ட்டை இம்ப்ரூவ் பண்ணிப் பேசத் தெரியணும். கொஞ்சம் பாடவும் மிமிக்ரி பண்ணவும் தெரிஞ்சிருக்கிறது நல்லது. ஒரு ஷோவுக்கும் அடுத்த ஷோவுக்கும் வித்தியாசம் காட்டியாகணும். இந்த ரேஸ்ல ஓடுறதும் ஜெயிக்கிறதும் சாதாரண மானதில்லை. இத்தனை சவால்களோடு இந்தக் கலையில பயிற்சிகள் எடுத்துக்கிறதைவிடவும் ஸ்டாண்ட் அப் காமெடி மாதிரியான விஷயங்கள் பொண்ணுங்களுக்கு ஈஸியா இருக்கிறதா சொல்றாங்க. பெண்களின் எண்ணிக்கை குறைவா இருக்க இதுவும் ஒரு காரணம்...’’ - நிதர்சனம்  சொல்பவருக்கு நெஞ்சம் நிறைய கனவுகள் உண்டு.

‘`வென்ட்ரிலாக்விஸம் செய்றபோது நான் மக்களில் ஒருத்தியா அங்கீகரிக்கப்படுறதா நினைக்கிறேன். வெறுமனே ஸ்டேஜ்ல நின்னுக்கிட்டு ஜோக்ஸ் சொல்லி, ஸ்டாண்ட் அப் காமெடி பண்றவங்களைவிடவும் நான் பார்வையாளர்கள் மனசுக்கு இன்னும் நெருக்கமாகிறதா ஃபீல் பண்றேன். அந்த ஃபீல் ரொம்ப ஸ்பெஷல்.

நான் அம்மா அப்பாவுக்கு ஒரே பெண். விளையாடவோ, சண்டை போடவே துணையில்லாம வளர்ந்த எனக்கு எல்லாமாகவும் இருந்தது வென்ட்ரிலாக்விஸம் தான். தனிமை உணர்விலேருந்து என்னைக் காப்பாத்தினதும் இந்தக் கலைதான். எனக்கு எத்தனையோ வழிகளில் உதவியா இருந்த இந்தக் கலையை அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக்கொடுத்து வளர்க்கணும்கிற ஆசை இருக்கு. அதுக்கு என்னை நான் தகுதிப்படுத்திக்கணும்னு நினைக்கிறேன்.’’

பொம்மைக் காதலிக்குப் பெருமைகள் சேரட்டும்!