Published:Updated:

சின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம்! - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்

சின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம்! - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்
சின்னத்தம்பி யானைக்கு ரசிகர் மன்றம்! - ஆச்சர்யப்பட வைத்த கோவை மக்கள்

கோவையில் சின்னத்தம்பி யானைக்காக ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. 

கோவை, தடாகம், சின்னதடாகம், பெரியதடாகம், ஆனைகட்டி போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம். அப்படி வரும் யானைகள், விவசாய நிலங்களையும் வீடுகளையும் சேதப்படுத்துவதாகப் புகார் எழுந்தது. குறிப்பாக அதில் சிலர், அந்த யானைகளை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதில், மோஸ்ட் வான்டட் லிஸ்டில் இருப்பவை, சின்னத்தம்பி மற்றும் விநாயகன் என்ற இரண்டு யானைகள். ``சின்னத்தம்பி எல்லாம், அடிச்சா ஒரு நாளைக்கு 50 பேர அடிக்கலாம். ஆனா, இதுவரை அவன் ஒருத்தரகூட அடிச்சதில்ல. வருவான்... சாப்பிடுவான்... போவான்" என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

பழங்குடி மக்களோ, ``அவரு இந்த உலகத்துக்கே ராஜா. அவரு சாமி. ஒரு ஜான் வயிறு இருக்கற நம்மளே, வக்கனையா சாப்டறப்ப... ஆறு ஜான் வயிறு இருக்கற அவரு சாப்பிட வேண்டாமா" என்கின்றனர். இதனிடையே, இந்த இரண்டு யானைகளையும் விரட்ட முதுமலையில் இருந்து பொம்மன் மற்றும் விஜய் என்ற இரண்டு கும்கிகள் களமிறக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கோவை சாடிவயல் முகாமில் உள்ள ஜான் மற்றும் சேரன் ஆகிய இரண்டு கும்கிகளும் வரப்பாளையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகளைப் பிடிக்கத்தான் இந்த கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன என்றும், இந்த யானைகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ``காட்டு யானைகளை விரட்டுவதற்குதான் கும்கிகளைப் பயன்படுத்த உள்ளோம். அவற்றைப் பிடிக்கும் திட்டம் எல்லாம் இல்லை’’ என்று வனத்துறை அந்தத் தகவலை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, விநாயகன் மற்றும் சின்னத்தம்பி யானைகளை பிடிக்கக் கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, ``வனம் எங்களின் வாழ்விடம்... எங்களையும் வாழவிடுங்கள்" என்று அந்தப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதுத்தவிர, `SaveChinnathambi #SaveVinayagan’ போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில், தற்போது அதே வனம் எங்களது வாழ்விடம் வாசகம் மற்றும் ஹேஷ்டேக்குடன் சின்னதடாகம், சின்னத்தம்பி ரசிகர் மன்றம் (Chinnathadagam Chinnathamabi fans club) என்ற பெயரில் அந்தப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.